Friday, April 1, 2011

இரா. முருகனின் “மூன்று விரல்”


கணினித்துறையில் இருந்தபடியே எழுத்துலகில் கோலோச்சும் இரா. முருகன் அவர்களின், அத்துறையின் வாழ்வு தழுவிய நாவலே “மூன்று விரல்”.

மென்பொருள் உலகின் மாயைகளை, நிலையற்ற தன்மைகளை, குறுகிய கால ஏற்றங்களை, படுபாதாள வீழ்ச்சிகளை, கூடிப் பிரியும் நட்புகளை, ஈரமற்ற மனங்களை, நாயகன் சுதர்சனனின் பயணத்தில் கோர்வையான நிகழ்ச்சிகளாகத் தொகுத்திருக்கிறார்.

முதல் பக்கமே மென்பொருள் உலகின் பாதக முகத்தை, அதன் ஒப்பனையை பட்டவர்த்தனமாக வெளுக்க வைக்கிறது. நாய் வளர்ப்போர் சங்கத்துக்கான சாஃப்ட்வேரில் துவங்கும் கதை, பாத்திரங்களை விற்பவர்கள் கூட தங்களுக்கும் ஒரு சாஃப்ட்வேர் வேண்டுமென்பதும், அதையே சாக்கிட்டு பெட்டிக்கடைகள் கூட, சில கம்ப்யூட்டர்களை வைத்தே சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் கம்பெனியென சுயபட்டம் சூட்டிக் கொண்ட காலகட்டத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.

கதையின் களமும் போக்கும் கச்சிதமாக அமைந்திருக்கிறது. மென்பொருள் துறையைச் சார்ந்ததென்றாலும், ஒரு மென்பொருளாளன் (சுருக்கமாக... மென்னவன்!) அனுதினமும் கணினியே கதியெனக் கிடப்பது போல், அத்துறையின் வலைகளிலேயே சிக்கிவிடாமல், கிராமம், காதல், பல மனிதர்களின் முகங்கள்/மனங்கள் எனப் பல துடுப்புகளுடன் பயணிக்கிறது கதை. அதே கணம் அத்துறையின் கீழ் நிலைகளை கோடிட்டுக் காட்டவும் அது தவறவில்லை.

ஒரு உதாரணம். சுதர்சன் தன் கிராமத்து வீட்டில் நுழையுமிடம். வாழ்வு முழுவதும் ஆனந்தமாக இருக்கத்தான், சீரான இடைவெளியில் பண்டிகைகளைக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். பெற்றவரை, பிறந்த மண்ணை விட்டு வெகு தொலைவு சென்றுவிடும் மென்னவன் இவற்றை முற்றிலும் இழக்கிறான். அவன் காலண்டரில், சிகப்பில் தேதி ஒளிர்வது புராஜெக்ட் டெட்லைன் மட்டுமே. இவ்வவல நிலையைத்தான் வீட்டினுள் நுழையும் சுதர்சன் மாக்கோலக் கால்களைக் கண்டு “எப்போது கிருஷ்ண ஜெயந்தி வந்து போனது?” எனக் கேட்கும் கேள்வி கோலத்தால் கோடிட்டுக் காட்டுகிறது.

நாவல் நெடுகிலும் வரும் உவமைகள் அழகு. நாயகிகள் சந்தியாவும் புஷ்பாவும் ஒருசேர தன்னை கேலி செய்வதாய் சுதர்சன் நினைக்குமிடத்தில், எந்தவொரு பூடகமும் இன்றி நுழையும் ஒற்றை வரி; “இவன் இளைய பல்லவனும் அல்ல. இது சாண்டில்யன் கதையும் அல்ல.” இந்த அட்டகாச சரித்திர உவமை தந்த பாதிப்பிலிருந்து விடுபடவே எனக்கு பல நாழிகை(!) பிடித்தது.

ஆங்காங்கே சில விசயங்களை ஆசிரியரின் பேனா உரசுகிறது. அப்துல் கலாமிற்கு வைத்தியம் பார்த்து, அவருடன் எடுத்த படத்தை சுவரில் மாட்டி, தன் சன்மானத்தை உயர்த்தும் டாக்டரைப் போல, பில்கேட்ஸுடன் எடுத்த போட்டோவை வைத்து ட்ரெயினிங் கம்பெனி நடத்துபவர்களை நோக்கி மறைமுகமாகச் சொடுக்கிய சாட்டை சபாஷ். ATL COM கோர்ஸூக்காக நிலங்களை விற்ற நபர்களை நான் கண்டிருக்கிறேன்.

பாத்திரங்கள் வெகு நுணுக்கமாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன. துறைமாட்சி இல்லாமல் சண்டித்தனம் செய்யும் ரங்கா, மனிதர்களை கத்திரிக்காய் கூறாய் விற்கும் கன்சல்டென்சி பலா, அபூர்வ புரொபஷலனாய் ஒளிவிடும் அவ்தார் சிங், மாற்றங்களை இழப்புகளை முறுவலித்து ஏற்கும் லண்டன் ஜெப்ரி, கிளையண்டாக இருந்தும் இக்கட்டில் முதல் நபராய் ஆதரவு நல்கும் தாய்லாந்து குன் தாங்க்லோர்... ம்ஹீம்... எவரையும் விட்டுவிட முடியவில்லை. உடல் பாதிக்கப்பட்டும் உழைக்கும் ராவை, ஒரு இரவில் பணத்தை மட்டும் பிரதானமாகக் கருதும் நீரஜ் மறந்து போகலாம். ஆனால் குழந்தை முக கண்ணாத்தா உட்பட எந்தப் பாத்திரத்தையும் படிப்பவரால் மறக்க முடியாது.

நிலம் விட்டு நடுங்கடலில் தத்தளிக்கும் படகைப்போல், தன் புலம் விட்டு, தன் வாழ்வாதாரம் விட்டு விழி பிதுங்கும் மென்னவர்களின் வாழ்க்கையை, இந்த நூல் தெளிவாகக் காட்சிப் படுத்துகிறது. கதையின் முடிவைப் போல் நடந்தவை ஏராளம். ஆனால், இந்நூற்றாண்டின் துவக்கத்தில் நடந்ததை பார்த்தறியாத மென்னவர்கள், முடிவை ஏற்க மறுக்கலாம்.

இவர்களின் வாழ்வைக் காக்கவும், இத்துறையின் அபரிமித வளர்ச்சியால் வேறு ரூபங்களில் பாதிக்கப்படும் சமுதாயத்தைக் காக்கவும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

நூல்: மூன்று விரல்.
ஆசிரியர்: இரா. முருகன்.
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், சென்னை.
URL: https://www.nhm.in/shop/978-81-8368-073-8.html

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...