Saturday, August 31, 2013

எழுதிய பாடல் 3: பட்டீஸ்வர துர்க்கையே...

பாடியவர்: ஹரிணி
ஆல்பம்: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி
இசை: மண்ணச்சநல்லூர் கிரிதரன்

பள்ளிப் பருவத்தில் பொன்னியின் செல்வன் படித்த நாள் முதலாக, சோழன், அருள்மொழி வர்மன் போன்ற பெயர்களைக் கேட்டாலோ, கும்பகோணம், பழையாறு போன்ற இடங்களுக்குச் சென்றாலோ நம்மையும் ஒரு சோழனாய்க் கற்பித்துக் கொண்டு மனம் கிளர்ச்சியடையும். அதற்கு அமரர் கல்கியின் எழுத்து வன்மையே காரணம்.

அப்படியிருக்க, பழையாறில் சோழன் மாளிகை அரணில் குடிகொண்டிருந்த துர்க்கைக்கு, ராஜராஜன் உட்பட பல சோழ மாமன்னர்கள் காவல் தெய்வமாய் வழிபட்ட துர்க்கைக்குப் பாட்டெழுதத் தொடங்கியபோது மனம் கொண்ட உணர்ச்சிகளை, சொந்த அனுபவங்களை வரிகளாய் வடித்து விட்டேன்.

துர்க்கையை ஏன் காவல் தெய்வமாய் வழிபடுகிறார்கள்?

துர்கம் என்பது மலை, அரண், மலைக் கோட்டை, அகழி என்றெல்லாம் பொருள் தரும். பகைவனிடமிருந்து காக்கும் இதற்கு சக்தி வடிவம் கொடுக்க அது துர்க்கை தெய்வமானது. காளியும் அது போலவே. ஆனால் அவள் அமர்ந்த நிலையிலிருப்பாள். துர்க்கை நின்ற நிலையிலிருப்பாள்.

இந்த துர்க்கை, வழக்கமான உக்கிர வடிவிலிருந்து வேறுபட்டு, சாந்த சொரூபியாக காட்சியளிக்கிறாள். சோழர் காலத்திற்குப் பின், தஞ்சை நாயக்கர்கள், பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர் சிவாலய வளாகத்தில் அழகிய யாளி தூண்களுடன் தனிக் கோவில் அமைத்து அங்கே இத்த துர்க்கையைப் பிரதிஷ்டை செய்தனர்.

பாடலை எழுதி முடித்த பின், துர்க்கையின் பிற பெயர்களை சரிபார்க்க நவதுர்க்கை என்ற புத்தகத்தைப் பிரித்தேன். துர்க்கைக்கு வடமொழி பதம் துர்கா. அதை த + உ + ர + க + ஆ பிரித்து பொருள் விளக்கப்பட்டிருந்தது.

த - அசுரர்களை (அ) அசுர எண்ணங்களை அழித்தல்
உ - இடையூறுகளைப் போக்குதல்
ர - வியாதிகளை நிவர்த்தி செய்தல்
க - பாவங்களை நசிக்கச் செய்தல்
ஆ - பயம் மற்றும் சத்ருக்களை அழித்தல்

பாடலின் சரணங்கள், கிட்டதட்ட இதே அர்த்தத்தில், இதே வரிசையில் அமைந்ததைக் கண்டு திகைத்தேன். பின் உணர்ந்தேன். என் கையைப் பிடித்து எழுதியது துர்க்கை.

பல்லவி:
பட்டீஸ்வர துர்க்கையே பட்டத்துன்பம் போதுமே
மனதினில் நீயே குடிகொண்டாயே கருணை செய்வாய் தாயே

சரணம் 1: 
சந்தன ருபீ நீயம்மா என் நொந்திடும் மனதை பாரம்மா
அக்கிரமங்கள் எங்கும்மா உன் சாந்தத்த கலைச்சு காக்கணும்மா
பராசக்தி நீ மகிஷமர்த்தினீ சோழனின் வீரத் தாய் நீ
சிவனின் கோபம் காட்டி பகைவன் போக்க வேண்டும் (மனதினில்)

ராகுவின் தேவி நீயம்மா எனை பிடித்திடும் தோஷம் நீக்கம்மா
அங்காரகனோ தொடருதம்மா உன் சூலத்த வளைச்சு விரட்டம்மா
பஞ்சசக்தி நீ விந்தியவாசினீ கண்ணனின் நாபித் தாய் நீ
விஷ்ணுவின் பாசம் கூட்டி நல்வினை காக்க வேண்டும் (மனதினில்)

சரணம் 2:
கௌசிகன் திரியை போலம்மா என் வெந்திடும் தேகம் ஆற்றம்மா
மருத்துவங்கள் இனி இல்லையம்மா என் நாடிய புடிச்சு காக்கணும்மா
மூலசக்தி நீ சிம்மவாகினீ உயிரின் தீபத் தாய் நீ
எமனின் வாசம் ஓட்டி செய்வினை போக்க வேண்டும் (மனதினில்)

அரக்கனின் கைதி போலம்மா எனை வாட்டிடும் துன்பம் ஏனம்மா
துர்கணங்கள் எனை தொடருதம்மா உன் நெஞ்சில் அணைச்சு காக்கணும்மா
ஆதிசக்தி நீ துர்கநாசினீ தேவர்கள் காவல் தாய் நீ
துர்க்கன் நாசம் காட்டி தீவினை போக்க வேண்டும் (மனதினில்)

ராகாவில் இந்த ஆல்பத்தின் சுட்டி: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி

Tuesday, August 20, 2013

ரயிலில் செயினை இழுக்கலாமா?

சென்னை சென்ட்ரல்.

பொய்ங்ங்...

‘ஐயோ ரகு, நம்ம ட்ரெய்ன் கிளம்புது’ - நண்பன் மகேஷ் அலறினான்.

‘இல்லடா. அந்தப் பிளாட்ஃபார்ம் ட்ரெய்ன் தான் கிளம்புது. நமக்கு இன்னும் ஐஞ்சு நிமிஷம் இருக்...’ திகைத்தேன்.

நாங்கள் செல்ல வேண்டிய மங்களூர் எக்ஸ்பிரஸ் மெல்ல நகரத் தொடங்கியது. அதுவரை பிளாட்ஃபார்மில் நின்றிருந்த மகேஷூம் நானும் பதட்டத்துடன் ட்ரெய்னில் தாவி ஏறினோம். உள்ளே நண்பர்கள் அனைவரின் முகத்திலும் கலவரம்.

ஆபீஸ் நண்பன் ஆனந்துக்குக் கோயம்பத்தூரில் கல்யாணம். சக நண்ப நண்பிகளாய் 20 பேர் கிளம்பிவிட்டோம். முதலில் கேரளக் கோட்டம். அங்கு இரண்டு நாள் எங்க கோட்டம். பின்தான் கோயம்பத்தூர் கல்யாணம்.

காலேஜ் முடித்து, ஐ.டி கம்பெனியில் சேர்ந்த காலம். இளமை எனர்ஜியெல்லாம் (பாஸிடிவ் எனர்ஜி சார்) தளும்பிக் கொட்டிய காலம். யாருக்காவது கல்யாணம் என்றால், இராப்பகல் பாராது, கண் துஞ்சாது, வேலைகளை முடித்துக் கொடுத்து காம்ப்-ஆஃப் லீவு பெற்றுக் கூட்டமாய் ஊர் சுற்றப் படையெடுப்போம்.

அப்படிக் கிளம்பியதில்தான் இன்று கலவரம்.

கேரளாவில் யார் வீட்டுக்கு முதலில் செல்கிறோமோ, அந்த அஜய் நாயர் இன்னும் வந்தபாடில்லை. அதைவிட...

இந்த இ-டிக்கெட்டும், அதை புக் செய்வதற்குள் நமக்குத் தண்ணி காட்டும் அந்த இரயில்வே ஜால வெப்சைட் எல்லாம் அப்போ ஏது சார். மேற்கு மாம்பலம் ரிசர்வேஷன் கவுண்டரில் காலை 6 மணிக்கே வந்து ஹிண்டு பேப்பர் படிக்கும் பெரியவர்களின் வரிசையில் கால் கடுக்க நின்று எங்களுக்கெல்லாம் டிக்கெட் எடுத்த புண்ணியவான் பிரதீப் ஷெனாயைக் காணோம். டிக்கட்டையும்தான் சார்.

நெஞ்சில் பல்ஸ் எகிறியது. எங்கள் யாரிடமும் செல்போன் கிடையாது. ஆனால் பிரதீப்பிடம் மட்டும் உண்டு. கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்டாக ஓடினோம்.

‘சரி ட்ரெய்ன் கிளம்பிடிச்சி, போனை வெச்சுடவா...’ குரல் கேட்ட திசையில் பாய்ந்து அந்த மனிதரைச் சூழ்ந்துக் கொண்டு, நிலவரத்தை படபடவெனச் செப்பி, பிரதீப் நம்பரை ஒப்பித்தேன் (அப்போ நம் நம்பர் மெமரி டாப்பு, இப்போ சிம் மெமரியால அதுக்கு ஆப்பு). அவர் போன் போட்டு என்னிடம் தர, முதல் ரிங்கிலேயே எடுத்துவிட்டான் பிரதீப்.

‘டேய், எங்கடா இருக்க...’

‘இதோ, சென்ட்ரல் வாசலுக்கு வந்துட்டேன்’

‘கிழிஞ்சுது, ட்ரெய்ன் சென்ட்ரல வுட்டே போய்க்கிட்டிருக்கு. அஜய் எங்க?’

‘என் கூடத்தான் ஓடிவரான். எப்படியாவது ட்ரெய்னை நிறுத்துடா. ஒரு நிமிஷத்துல வந்துடறேன்’

‘பிளாட்ஃபார்ம் எட்டுக்கு சீக்கிரம் வாடா’

அவர்கள் ஸ்டேஷனுக்குள் ஓடிவர, நாங்க ட்ரெய்னுக்குள் ஓடி, டிடிஆர்-ஐ தேடிப் பிடித்து...

‘சார், கொஞ்சம் ட்ரெய்னை நிறுத்துங்க சார்...’

‘எதுக்கு’

‘சார், விளக்கிச் சொல்ல டைம் இல்ல. எங்க யார்கிட்டயும் டிக்கெட் கிடையாது’

‘என்னது’

‘அதில்ல சார்’

‘அதான் இல்லேங்கிறீங்களே’

‘ஐயோ, எங்க ஃப்ரெண்ட் இப்பத்தான் பிளாட்ஃபாரத்துக்கு வரான். அவன் கிட்டதான் எல்லார் டிக்கெட்டும் இருக்கு சார். ஒரே ஒரு நிமிஷம் நிறுத்துங்க சார்’

‘இதென்ன டவுன் பஸ்சா விசிலடிச்சி நிறுத்த?... அதெல்லாம் முடியாது’

குப் குப் குப் குப் குப்... பக்கத்தில் ஒரு டீசல் என்ஜின் எங்களைப் பார்த்து கபகபவென சிரிப்பது போல புகை விட்டுக் கொண்டிருந்தது. அதிர்ந்தேன். ட்ரெய்ன் பிளாட்ஃபார்மைக் கடந்து விட்டிருந்தது.

‘டேய் இப்ப எங்கடா இருக்க’ (இரு பக்கமும் போன் ஆன்லைன்)

‘பிளாட்ஃபாம் வந்துட்டேன்’

‘ட்ரெய்ன் தெரியுதா’

‘தூரத்துல கடைசி பொட்டியோட X மட்டும் தெரியுது’

‘நாங்க எப்படியாவது நிறுத்தறோம். ஓடி வா’

இனி பேசிப் புண்ணியமில்லை. செயின் இழுத்து நிறுத்த வேண்டியதுதான். ஒரு பலசாலி நண்பன் செயினை இழுக்கத் தொடங்கினான்.

‘ஐயோ, இது துரு பிடிச்சி, ஜாமாக்கி கிடக்குதுடா. அசையவே மாட்டேங்குது’

‘பதினெட்டு பேரும் வித்தவுட்டில் போய் பைன் கட்டினா அதிகமா? செயின் இழுத்து நிறுத்தினா பைன் அதிகமா?’ ஒரு நண்பன் நிதானமாக அலசத் தொடங்கினான்.

‘ரொம்ப முக்கியம், முதல்ல செயினை இழு’. பலசாலி நண்பன் இரு காலையும் ஜன்னலில் வைத்து, உடல் எடை மொத்தத்தையும் பிரயோகித்து இழுக்க, நாலு பேர் அவன் இடுப்பைக் கட்டி இழுக்க...

டிடிஆர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

படீர்ர்ர்ர்ர்ர்ர்................

சத்தியமா நம்புங்க சார். செயின் கையோடு வந்துவிட்டது. சிவாஜி படத்தில் விவேக்கிற்கு அறுந்த செயின் எங்களுக்கு அப்பவே அறுந்து விட்டது.

‘பிரதீப்... செயினே அறுந்து போச்சுடா...’

‘நான் இப்போ பிளாட்ஃபார்ம் தாண்டி, தண்டவாளம் பக்கமாவே ஓடி வந்துட்டிருக்கேன்.

‘அடப்பாவி. இருட்டுல எங்கயாவது விழுந்து தொலையாதே’

‘ஐயோ அஜயை காணோம்’

‘என்னது’

‘ஆங் அதோ பிளாட்ஃபார்ம் சரிவுல விழுந்து உருண்டுட்டிருக்கான்.

ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்தோம். அப்போது அதிசயமாய் ட்ரெய்ன் நின்றது.

‘டேய் வாடா வாடா...’

‘கிட்ட வந்துட்...டேன்..... ஐயோ ட்ரெய்ன் திருப்பவும் கிளம்பிடிச்சி’

‘சார் சார் ட்ரெய்னை நிறுத்துங்க சார்.. உள்ள இருபது பேர் இருக்காங்க. இதோ பாருங்க மொத்த டிக்கெட்டும் என் கையில இருக்கு...’

அவன் குரல் கேட்டது. ம்ம். கடைசி பெட்டியில் நிற்கும் கார்ட்டிடம் கெஞ்சிக் கொண்டே ஓடி வருகிறான். அவரும் நிறுத்துவதாய் தெரியவில்லை.

சப். ஏதோ சத்தம் கேட்டது. அப்புறம் அவன் குரல் கேட்கவே இல்லை.

‘பிரதீப்.......’ பதிலில்லை. போன் ஆனில்தான் இருந்தது. பல குரல்கள் மாறிமாறிக் கேட்டது.

‘ஐயோ அவனுக்கு ஏதோ ஆயிடிச்சி...’ எங்கள் இதயம் மொத்தமாக நின்றுவிட்டது. சில நொடிகளுக்கு பிறகு...

‘ஹலோ’ ஒரு இனிமையான பெண் குரல் கேட்டது!!

‘ஹலோ, உங்க பிரெண்டு எங்க கம்பார்ட்மெண்டில் ஏறிட்டார்’

‘டேய் அவன் லேடீஸ் கம்பார்ட்மெண்டில ஏறிட்டான்டா’

‘ஏறினவுடனே மயக்கம் போட்டு விழுந்துட்டார்’

‘ஐயோ’

‘அதெல்லாம் கவலை படாதீங்க. நாங்க எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருந்தோம். மயக்கம் தெளிய வெச்சு பத்திரமா அடுத்த ஸ்டாப்புல அனுப்பறோம்’

அடடடடா... என்னே பாக்கியம். கோதையர் கூட்டத்தின் நடுவே பிரதீப்.

‘ஆமா, இன்னோருத்தர் ஓடி வந்திருப்பாரே’

‘அவரு கார்ட்டு பொட்டில ஏறிட்டார்’

‘அம்மா...டி... ரொம்ப தேங்ஸ்மா..’

போனை ஆப் செய்தேன். எங்களைவிட டென்ஷனாகப் பார்த்துக் கொண்டிருந்த அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைத்தேன்.

அரக்கோணம் ஜங்ஷன்.

ட்ரெய்ன் நிற்க, ஓட்டப் பந்தய வீரர்கள் வந்து சேர்ந்தனர். விழுந்து புரண்டதில் அஜய்க்கு சட்டையெல்லாம் கிழிந்திருந்தது. கோதையர் தெளிய வைத்து அனுப்பிய பிரதீப்பிற்கு வாயெல்லாம் பல்.

டிடிஆரிடம், எக்ஸ்டீரீம்லி சாரி சார்னு சொல்லி, டிக்கெட்டைக் காட்டி, ஒரு அபாலஜி லெட்டரையும் எழுதிக் கொடுத்து, கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொன்னோம்.

அவர் நிதானமாக இரு வீரர்களைக் கேட்டார்.

‘ஏன் சார், உங்களுக்கு ட்ரெய்ன் ஏழு மணிக்குனு தெரியாதா?’

Monday, August 5, 2013

மதுரை பேருந்தில் மகளிர் இருக்கையில்...

கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கிய பின் பூவையர் பகுதிக்குக் கண் திரும்ப, மனம் ஆஹாவெனத் துள்ளியது.

இடம் மதுரை; பெரியார் நிலையத்திலிருந்து அழகர் கோவிலுக்குச் செல்லும் பேருந்து.

அழகான பெயர் கொண்ட திருமாலிருஞ்சோலை சென்று, அழகரைக் கண்டு, வழி நெடுங்கும் சோலையடர்ந்த மலைமீதேறி, உச்சியில், ராக்காயி கோயிலில், நூபுர கங்கையில் குளித்து, பழமுதிர் சோலை முருகனை தரிசித்து, அவ்வைப் பாட்டி அமர்ந்ததாய்க் கருதும் நாவல் மரத்தடியில் (சுட்ட பழம் வேண்டுமா கதை) சிறிது நேரம் அமர்ந்து வர தனியாகப் புறப்பட்டேன்.

கிளம்பிய பேருந்தில் அப்போதுதான் இருக்கைகள் நிரம்பியிருக்க, நின்றபடி மகளிர் பகுதிக்குத் திரும்பி, நான்  கண்டதை எப்படிச் சொல்ல...?

கல்லூரி மாணவிகள் சிலர். தாவணியில் சிலர். குடும்பப் பெண்கள் சிலர். மஞ்சளில் குளித்த முகங்கள் சில. தலையில் மல்லிகைச் சரடுடன் சிலர்... இன்னமும் அடுக்கலாம். ஆனால் வயதும் பருவமும் மாறுபட்டும், கிட்டதட்ட அனைத்து பெண்களின் கையில் இருந்தது தமிழ்ப் புத்தகங்கள்... இலக்கணப் புத்தகங்கள்! (இதுதான் சார், ஆஹாவுக்கான ஓஹோ காரணம் :) )

அவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். நான் ஈரடி முன்பின் நகர்ந்து புத்தகங்களைக் கவனிக்க... நச்சினார்க்கினியர், பரிமேலழகர், சீத்தலைச் சாத்தனார்... உரையாசிரியர், சங்கப் புலவர்களின் பெயர்கள் தொடர்ந்து தென்பட்டன. தமிழ் பேப்பர் இணைய இதழில், என்.சொக்கன் "அம்மா, ஆடு, இலக்கணம்" தொடர் எழுதி, இன்றைய இணைய தலைமுறைக்குப் புரியும்படி சொல்லித் தரும் ஐகார, ஔகார, மகர குறுக்கங்கள்... குற்றிய லிகர, லுகரங்கள் அளபடை எல்லாம் இங்கு சகஜமாகத் தென்பட்டன.

ஒரு மாணவி ஏதோ சந்தேகம் கேட்க, அவள் தோழி, சட்டென தன் பையிலிருந்து வேறோரு புத்தகமெடுத்து, சொல்லுறுப்புகளைப் பகுத்துப் பகுத்து விளக்கினாள். என்னால் முறுவலை மறைக்க முடியவில்லை. அதை அவள் பார்த்துவிட, சற்று வெட்கித் திரும்பிக் கொண்டாள். சில புத்தங்கள் சற்று கிழிந்திருந்தன. பழைய புத்தகக் கடையில் வாங்கியிருக்கக் கூடும். ஆனால் அவர்கள் படிப்பதில் புதிய ஆர்வம் இருந்தது.

இவர்கள் என்ன படிக்கிறார்கள். எங்கு படிக்கிறார்கள். இவர்களுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கிறது. விசாரிக்க நினைத்தேன். அதற்குள் k.புதூர் (ஆமாம் இனிஷியலுடன்!) என்னும் இடம் வர, அனைவரும் இறங்கிச் சென்று விட்டார்கள். அடுத்தமுறை அவ்வூர் சென்று, அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகத்தையோ கல்லூரியையோ கண்டு வர ஆவல்.

ம்ம். முதல் இடை கடை என்று சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் எச்சம், சொச்சம், மிச்சம் இருக்கத்தான் செய்கிறது.

நான் நின்ற இடம்வரை வந்து, தம்பி என்று கண்ணியமாக விளித்து டிக்கெட் கொடுத்த கண்டக்டர் முதல், எத்தனையோ விசயங்கள், சென்னை பேருந்திலிருந்து மாறுபட்டன. ஆனால் எவ்வூர் சென்றாலும் ஒன்று மட்டும் மாறவில்லை சார்.

அது, ஆண்கள் பகுதியில், அக்காலை வேளையிலும் அருந்தி விட்ட டாஸ்மாக் பான நெடி.

Saturday, May 4, 2013

இரா. முருகனின் ‘அரசூர் வம்சம்’


கற்பனை. இதன் வளத்தையும், ஆற்றலையும் கொண்டு, தனக்கென ஓர் உலகைச் சிருஷ்டிக்கும் லயம் ஒரு மனிதனுக்கு வசப்பட்டு விட்டால், காலத்தின் வரிசைகளைக் கூட மாற்றியமைத்து அதில் தன்னிஷ்டம் போல் சஞ்சரிக்க முடியும். அப்படி காலம் மூன்றையும் ஸ்டெம்புகளாக நட்டு, இரா. முருகன் சார் ஆடிய மேட்ச் - அரசூர் வம்சம் - நாவல்.

2004-ல் வெளிவந்த நாவலுக்கு, இப்போது எதற்கு விமர்சனம்?

அவருடைய சமீபத்திய நாவல் - விஸ்வரூபம். அதன் வெளியீட்டு விழாவிற்கு என்னையும் அன்போடு அழைத்திருந்தார். எண்ணற்ற இலக்கியம் படைக்கும் அவர் கையெழுத்துடன், வாழ்த்தெழுத்துடன் அந்நாவலை வாங்கினேன். அது அரசூர் வம்சத்தின் தொடர்ச்சி. அதைப் இப்போது படித்ததால் விமர்சனம்...

மேலும் படிக்க ஆசிரியரின் வலைத்தள சுட்டியைக் கிளிக்கவும்.

Wednesday, March 13, 2013

எப்படி இருந்த பள்ளி...


டாண்... டாண்... டாண்...

பள்ளி துவங்குவதற்கான முதல் மணியோசை.

‘அம்மா... வரேன்மா..’ பையை தோளில் மாட்டிக் கொண்டு கிளம்புவேன். என் வீட்டுச் சுவரை ஒட்டியே பள்ளி, சில நொடி நடை தூரத்தில்.

காலை பத்து மணிக்குத்தான் பள்ளி. ஒன்பது மணிக்கே நான் ரெடியாகி விடுவதால், தினத்தந்தியில் சிந்துபாத், சாணக்கியன் சொல், ஆண்டியார் பாடுகிறார் (இவையெல்லாம் இன்னும் கூட வருது சார்!) எல்லாவற்றையும் நிதானமாகப் படித்துக் கொண்டிருப்பேன். முதல் மணி அடிக்கத் துவங்கியதும்தான் கிளம்புவேன்.

கல்யாணக் கூடம் போல் அமைந்திருக்கும் முதல் கூடத்தின் நடுவில், ஒரு கோபுரக் கூண்டில் பழங்கால பெரிய மணி. அதன் மேல் அரை வட்ட இரும்பில், சைக்கிள் செயின் மாட்டப்பட்டு இருபுறமும் தொங்கும். பள்ளியின் பியூன் அதை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, அந்தரத்திலிருந்து மத்தைக் கடைபவர் போல் மாறிமாறி இழுக்க, மணி ஊஞ்சல் போலாடி, தன் நாக்கை ஆட்டி, தேவ கானமாய் ஒலியெழுப்ப, அதுவே அன்றைய பள்ளி தினத்தைத் துவங்க உற்சாகத்தைத் தரும்.

பியூன் மணியை ஒரு நிமிடம் வரை தொடர்ந்து அடிப்பார். பள்ளியின் இரண்டாம் கட்டத்தில் விளையாட்டுத் திடல். அதைச் சுற்றி வகுப்பறைகள் நல்ல காற்றோட்ட வெளிச்சத்துடன்.

முதல் மணி அடித்து முடிவதற்குள் அனைத்து மாணவர்களும் திடலில் கூடி, எவருடைய கட்டுப்படுத்தலும் இன்றி, ஒழுங்கான வரிசைகளில் நிற்போம்.

இது ஒரு இடைநிலைப் பள்ளி. 6, 7, 8 வகுப்புகள் மட்டுமே.

திடலில் ஒவ்வொரு திசையிலும், ஒரு வகுப்பு அதன் பிரிவுகளுடன் நிற்க, நான்காம் திசையில் கொடிக் கம்பத்தைச் சுற்றி ஆசிரியர்கள்.

மாணவர் தலைவன், என்.எஸ்.சி மிடுக்குடன் தலைமை ஆசிரியருக்குச் சல்யூட் அடித்து, கொடிக் கயிறை எடுத்துக் கொடுக்க, தினமும் தேசியக் கொடி ஏற்றப்படும்.

துணைத் தலைமை ஆசிரியர், இளைய ராஜாவின் ரசிகர். அவரைப் போலவே கைகளை ஆட்டி ஸ்ருதியைச் சொல்ல, எல்லாரும் கோரஸாக ஏற்ற இறக்கங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவோம்.

திடலில் நடு நாயகமாக ஒரு மாணவன், தினமணியைப் பிரித்து சில முக்கிய செய்திகளை கணீரென்று வாசிக்க, நாட்டு நடப்புகளை அறிந்து கொண்டு தத்தம் வகுப்பறைகளில் ஆஜராவோம்.

எவ்வித படபடப்பும், நிர்பந்தமும், படிப்புச் சுமைகளும், டியூசன் செல்ல வேண்டிய அவசியம் இன்றி, வகுப்புகள் இனிமையாகத் துவங்கும்.

அதட்டல், மிரட்டல் இன்றி, சக மாணவன் போல கல்வி கற்பித்த அப்பள்ளி ஆசிரியர் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதலாம். அதிலும் தலைமை ஆசிரியர். சதா நிதானத்துடன், எப்பொழுதும் புன்னகைக்கும்  முகத்துடன், இலைமறைவான கண்டிப்புடன் அவர் நடத்திய பாடங்கள் வாழ்க்கைப் பாடங்கள்.

என் தந்தை, சித்தப்பா, மாமா... முன் தலைமுறை உறவுகளுக்கும் அவரே தலைமை ஆசிரியர். அவர் கற்பித்த ஆங்கிலப் புலமை எந்தக் கான்வென்ட்டிலும் கிடைக்காதது.

வரையும் கலை, பேசும் கலை, எழுதும் கலை என அனைத்தையும் கற்பித்து எங்களை படிப்படியாக வளர்த்த பள்ளி அது.

காஞ்சியில் நெசவு உச்சத்தில் இருந்த காலம் அது. பல மாணவர்கள் நெசவுக் குடும்பத்தின் வாரிசு. பள்ளியிலும் நெசவுக் கூடம் இருந்தது (என் வீட்டு சன்னல் வழியாக எட்டிப் பார்க்கலாம்!)

நூல்களை சிக்கல் பிரிப்பது, அறுந்த நூல்களை தறிச் சட்டத்தின் துளைகளில் இலகுவாகச் செல்லும் வகையில் முடிச்சிடுவது, ராட்டினம் சுற்றுவது அதன்பின் நெய்வது என தொழிலையும் பள்ளி போதித்தது.

டக்... டக்... டக்... டக்... சீராக, ரிதமாக எந்தவித தவறுமின்றி அதிக நேரம் நெய்வதில் போட்டியே நடக்கும்.

நான் கூட ஒரு ஜமுக்காளமும், கட்டிலுக்கான பட்டை நாடாவையும் நெய்திருக்கிறேன். அதையெல்லாம் காதி கிராப்ட் மூலம் விற்கவும் செய்திருக்கின்றனர்.

1987. இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட். மேட்ச் என்ன ஆச்சோ. ஆசிரியர்களுக்கும் டென்ஷன் எகிறும். வகுப்பின் இடைவேளையில்...

‘ரகு, ஸ்கோர் பார்த்துச் சொல்லேன்...’

அல்வாத் துண்டாய் விழும் வார்த்தையைக் கேட்டதும், வீட்டிற்கு ஓடி, ஒரு ஓவர் பார்த்து, அதே வேகத்தில் திரும்பி... கபில்தேவ் எடுத்த விக்கெட் பற்றியோ, நம்ம தயிர்சாதம், அதான் சார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விளாசிய ஃபோர் பற்றியோ, நான் வர்ணித்துச் சொல்ல, ஆரவாரத்துடன் வகுப்புகள் தொடரும்.

அப்பள்ளியின் ஆண்டு விழா மேடையில் நான் பேசிய நாடக வசனங்கள்தான், என் ப்ரொஃபஷனில் எடுத்த செமினார்களுக்கு அடித்தளம்.

எத்தனையோ நல்ல ஆபீஸர்களை, உயர் அதிகாரிகளை உருவாக்கிய பள்ளி அது.

அதன் பெயர் - தேவள்ள ராமசாமி ஐயா இடைநிலைப் பள்ளி (DRS Secondary School).

இருபது ஆசிரியர்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சிறந்து விளங்கிய இப்பள்ளி, கால மாற்றத்தில் மெல்ல இறங்கு முகத்தைக் கண்டது.

அதை உயர்நிலைப் பள்ளியாக்க பலர் எடுத்த முயற்சிகள் தோற்றன. என்னுடன் படித்த நண்பர்கள் குழுவாக இணைந்து பள்ளியை வளர்க்க எடுத்த முயற்சிகளும் நீர்த்தன.

இப்போது நான்கு ஆசிரியர்கள். வெறும் பதினாறு மாணவர்கள். இதற்கு மேல் நடத்த முடியாததால், இதோ இந்த மார்ச் மாதத்துடன், இப்பள்ளி மூடப்படும் நிலையில் இருக்கிறது.