Wednesday, December 2, 2020

பாம்பும் பூனையும்

சட்டென்று அந்தப் பாம்பு தோட்டத்தின் புற்களிடையே சீறி எழுந்து படமெடுத்து நிற்க, அதனுடன் சண்டைக்குச் சென்ற பூனை ஓரடி பின்வாங்கி நிற்க... ஆஹா, இன்று இவைகளின் சண்டையைப் படமெடுத்து விடலாம் என்று மொபைல் போனை எடுத்து வர வீட்டினுள் ஓடினேன்.

இந்த கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலையென்பதால், உறவினரின் கிராமத்திற்குச் சென்று விட்டேன். மழைக்காலம் தொடங்கியதில் பல ஜீவராசிகள் தத்தம் இடங்களிலிருந்து வெளியே வந்து சுற்றிக் கொண்டிருந்தன. ஒரு சிறு முதலை அளவிற்கு ஒரு உடும்பு தோட்டத்துப் பக்கம் வந்து சென்றது. சைனாவிலிருந்தே வந்து விட்டனவோ என அஞ்சும்படி இருபது வௌவ்வால்கள் கூட பெரும் சப்தம் எழுப்பிப் பறந்தன. ஆனால் அதிகப்படியாக சுற்றுவது என்னவோ பாம்புகள்தாம். 

வீட்டு வாசற் பகுதியில், ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் நிலத்தடி குழாய் வேலையாய் ஊராட்சி பள்ளம் தோண்ட, பூமியினுள் நாகலோகம் திறந்து கொண்டதோ என்னமோ?!, அப்பள்ளத்தின் வழியே பாம்புகள் வெளிவந்து செல்வதும் சகஜமானது. ஒரு முறை டூ-வீலர் ஸ்டேண்டின் மீது நான் கால் வைக்க, வெகு அருகில், வண்டியின் அடியிலிருந்து ஒரு பாம்பார் எட்டிப் பார்த்து, தன் பிளவுபட்ட நாக்கு நுனியை, வெளியே உள்ளேயென சிலமுறை நீட்டி இழுத்து காட்சி தந்தபின் சென்றுவிட்டார். நாம் அதை அடிக்க முயலாமல் சிவனே என்று இருந்தால், அவைகளும் அதே சிவனே என்று போய்விடுகிறன. 

ஆனால் இங்கே நான்கு பூனைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவைகளுக்கு அக்கம்பக்கத்து வீடுகள் எதுவும் ஒரு எல்லையில்லை.  எந்தச் சுவர்களும் ஒரு தடையுமில்லை. வீட்டுக்கு வீடு சுவரேறிச் சென்று, சமையல் அறை சன்னல் வழியே உள்ளே நுழைந்து பாலைக் குடித்துவிட்டு, வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியரிடம் கொஞ்சிக் குலவிவிட்டுச் சுற்றிக் கொண்டிருக்கும். 

பாரதியார் பாடியதுபோல சாம்பல் நிறத்தில் ஒரு பூனை, வெள்ளைப் பாலின் நிறத்தில் ஒன்று, பாம்பின் நிறத்தில் ஒன்று... அட விடுங்க... பாம்பின் நிறத்தில் பூனை இருப்பதெல்லாம் தேவையில்லை. இவை நாலுமே, பாம்பைக் கண்டால் சண்டைக்கு வந்து விடுகின்றன. ஏரியா பிரித்து, உனக்கு அந்தப் பாம்பு எனக்கு இந்தப் பாம்பு என்றெல்லாம் பங்கு பிரித்து சண்டைக்கு வருகின்றன.

டூ-வீலரின் அடியே ஓய்வெடுக்கும் பாம்பை ஒரு பூனை தாவி அதன் தலையருகே கவ்விப் பிடிக்க, பாம்பு சடசடவென தன் உடலை பூனையின் கழுத்தை சுற்றி இறுக்க முயல... இவைகளின் சண்டையின் களம், தெருவுக்கு மாறி, பின் பள்ளத்தினுள் விழுந்து புரண்டு, மறுபடியும் மேலேறி, ஒரு புதரினுள் சென்று மறைந்து விட்டன. கிளைமாக்ஸ் தெரிய  இரண்டு நாட்கள் ஆனது. எதற்கும் பாதிப்பில்லை. மறுபடியும் டூ-வீலரின் அடியே பாம்பார் ஓய்வெடுக்க வந்தார். பூனையார் வழக்கம் போல் தோட்டத்துப் பக்கம் சுற்றித் திரியத் தொடங்கினார்.

நான் பெரும்பாலும் தோட்டத்தின் அருகேதான் லேப்டாப்பில் பணிசெய்து கொண்டிருக்கிறேன். வெள்ளைப் பூனை மெல்ல ஓட்டின் மேலே பதுங்கிப் பதுக்கி முன் நகர்வது ஓரக் கண்ணில் தெரிய திரும்பியவன் திகைத்தேன். இதுவரைக் கண்ட பாம்புகள் எல்லாம் இரண்டு முதல் இரண்டரை அடி நீளம் மட்டுமே இருந்தன. ஆனால் இப்போது கண்டதோ ஆறடிக்கும் மேலான நீளத்தோடு மிரள வைக்கும் தேகவனப்போடு ஒரு பாம்பு. மெல்ல ஓட்டின் மீதிருந்து, தூணின் வழியே கீழே இறங்கிக் கொண்டிருந்த இதன் வாலைப் பிடிக்கத்தான், பூனையார் பதுங்கி வந்து கொண்டிருந்தார்.

எனக்கும் தூணுக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் நாலைந்து அடிதான். பூனை, பாம்பின் வாலைப் பிடித்து இழுத்து, இது சீறி எழுந்தால், என்பக்கம் வந்து விழும் வாய்ப்பு அதிகம்,. சுதாரித்து நான் எழுவதற்குள். பூனை தாவிப் பிடிக்க, அதன் விரல் நகங்களுக்கிடையே, மாட்டிக் கொள்ளாமல், பாம்பின் வால் வழுக்கிச் செல்ல, பாம்பு காம்பவுண்ட் சுவர் ஓரமாய் பல மாதமாய் கிடக்கும் கட்டைகளுக்கிடையே சென்று மறைந்து விட்டது. அவ்வப்போது வெளியே வந்து ஓட்டின் மேலேறி, இரைதேடித் திரும்புவது இதன் வாடிக்கையானது.

எந்தக் காட்சியும் இமைபொழுதில் மறைந்து விடுகின்றன. ஒருமுறைகூட படம் எடுக்க முடிந்ததில்லை. இந்த ஆறடிப் பாம்பும் வெள்ளைப் பூனையும்தான் இப்போது நேருக்கு நேர் போர் முரசு கொட்டின.

சிறு வயதில் Snake in the monkey's shadow என்றொரு குங்ஃபூ படம் பார்த்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.  பாம்பின் ஸ்டைலில் சண்டை போட்டு பலரை வீழ்த்தும் வில்லன்கள் இருவரை வெல்ல முடியாமல் திணறும் நாயகன், காட்டில் பாம்புடன் சண்டையிட்டு ஜெயிக்கும் குரங்கைக் கண்டு, பின் அதைப் போலவே சண்டையிட்டு வெல்கிறான். அந்த பாம்பும் ஆறடிக்கு மேல் நீளமிருந்ததும் நினைவுக்கு வந்தது. அது போல ஒரு சண்டையை நாம் இப்போது படமெடுக்கப் போகிறோம்... அட மொபைலில்தாங்க... என்று எண்ணிக் கொண்டே, கேமிராவை ஆன் செய்து கொண்டே விரைந்து திரும்பினேன்.

பூனை அப்படியே அசையாமல் கூர்மையான பார்வையோடு நின்று கொண்டிருந்தது. ஆனால் பாம்பைக் காணோம். புற்களிடையே ஏதாவது சலசலப்பு தெரிகிறதா எனப் பார்த்தேன். ம்ஹூம். பாம்பிருக்கும் சுவடே இல்லை. அதுவரை வீரச் சவால் நாயகனாய் நின்றிருந்த பூனை என்னை திரும்பிப் பார்த்து விட்டு அதுவும் சிவனே என்று சென்று விட்டது. 

சை... இன்றும் படமெடுக்க முடியவில்லை என சலித்து, கேமராவை அணைக்கும் போது, யூ.டியூப் ஆப் மீது விரல் பட்டுவிட்டது. ஆப் திறந்து கொள்ள... ரஜினி, குஷ்பு, பாம்பு என அண்ணாமலை படத்தின் பாம்புக் காட்சி முதலாவதாய் வந்து நின்றது. என்ன டிசைனோ!

Monday, October 26, 2020

விடாப்பிடி (குறுநாவல்)

சுஜாதா அவர்களின் தமிழ் மூலம்தான் கம்ப்யூட்டரைப் பற்றி பள்ளிப் பருவத்தில் அறிய முடிந்தது. பின் ஐ.டி. துறையே வாழ்க்கையான பிறகு, எழுத்தாளர் இரா. முருகன் அவர்களின் நட்பு கிடைக்க, “சுஜாதா சார் பெரிய அளவில் செய்ததை நானும் என் நண்பர்களும் நம்மால் முடிந்த அளவில் செய்து வருகிறோம். நீங்களும் எழுத வாருங்கள்” என அன்போடு அழைத்தார். அது முதல் ஐ.டி. துறை சார்ந்த கதை எழுதும் ஆசை வேர் விட்டிருந்தது. 

ஒரு தொலைபேசி உரையாடலில் எழுத்தாளர் பா. ராகவன் அவர்கள்  “சுஜாதா நினைவு போட்டி நடக்க இருக்கிறது. அதற்கு ஒரு குறுநாவல் எழுதி அனுப்புங்கள்” என ஊக்குவிக்க... இரு பெரும் எழுத்தாளுமைகளின் ஆசியால் விளைந்ததே இந்த ’விடாப்பிடி’ குறுநாவல்.

கொரோனாவினால்  போட்டி நடக்க இயலாமல் போனதால், இது கிண்டிலில் புத்தகமானது. 

ஐ.டி. துறையில், டாட்.காம் குமிழி வெடித்து பெரும் பிரளயமே நிகழ்ந்த இறுதி ஆண்டில் (2001), அதில் சிக்கிக் கொண்ட ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் நாயகன் ஒரு சி.டி.யை (குறுந்தகடு) வைத்து புது ப்ராஜெக்டை உருவாக்கி கம்பெனியை மீட்க முயலும் கதையே இந்த “விடாப்பிடி”.

எதை எழுதினாலும் முதல் நபராகப் படித்து, திருத்தங்கள் யோசனைகள் சொல்லும் நண்பர் சித்ரன் ரகுநாத் அவர்களின் உதவியின்றி இந்த “விடாப்பிடி” முழுமை அடைந்திருக்காது.  மூவருக்கும் நன்றி.

இக்குறுநாவல் சற்றே ஒரு த்ரில்லர் வகையாக அமைந்திருக்கிறது. தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் அறிய ஆவல். நன்றி.

அமேசான் சுட்டி: விடாப்பிடி  

விலை: ரூ 49.


Sunday, February 23, 2020

சத்யானந்தனின் புது-பஸ்டாண்ட்

சிலருக்கு பண்டைய வரலாறு இனிக்கும். சிலருக்கு இக்கால அரசியலும் காதலும் தித்திக்கும். சிலருக்கு எதிர்கால விஞ்ஞானம் சுவைக்கும். இவ்வனைத்தையும் புலிவலம், திருவள்ளரை, துறையூர், திருச்சி சுற்றிய பகுதிகளை ஒட்டி கடந்த காலம் கி.பி 600-1300, நிகழ்காலம், சற்று எதிர்காலம் 2040-2070 கொண்டு 180 பக்கங்களுடன் ஒரு கையடக்க நாவலாய் ‘புது பஸ்டாண்ட்’-ஐ எளிமையான நடையில் படைத்திருக்கிறார் சத்யானந்தன்.

இந்நாவல், படிப்பவர் தன் ஞாபகச் சக்தியைப் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளும்படியாகவும் வடிக்கப்பட்டிருக்கிறது. சட்டெனக் கீழே விழுந்துச் சிதறும் குண்டு மணிகளைப் போல் பல சம்பவங்கள் - மூன்று காலப் பரப்பில் - ஒரே  நேர்க் கோட்டில் அல்லாமல், விதவித வழிகளில் தொகுக்கப்பட்டிருகின்றன. சற்று அசந்தால், அல்லது சிறு இடைவெளி விட்டுப் படித்தால் பாத்திரங்களின் பெயர்களும் சம்பவங்களும் மறந்தே போய்விடும்.

திருவள்ளரை வைணவக் கோவிலின் பூர்த்தியாகாத ராஜகோபுரத்தை மையப்படுத்தி கதையின் களம் அமைக்கப்பட்டிருக்கிறது. பல சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது முன்னுரையில் வரும் ஒரு வரி - “இன்று நாம் ஓர் இரவுப் பயணத்துக்குள் கடந்து விடும் நிலப்பரப்பை ஒரு காலத்தில் நான்கு மன்னர்கள் ஆண்டனர்”. ம்ம், பல்லவன் போரில் தோற்க, சோழனிடம் ஆட்சி மாறியபின் கோபுரம் கட்டும் பணி நிற்கிறது. ஆனால் இப்பணியாலும், போராலும் சாமானிய மக்களிடம் நிகழும் தாக்கமே பிரதானமாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. கோவில் பணிக்குச் கல்தச்சர்கள் சென்று விட, அம்மி, ஆட்டுகல் கொத்தித் தருவதற்குக் கூட ஆளில்லை. ஒரு போர் நிகழும் போது கள்வரிடமிருந்து காக்கவும் வீரரில்லை... எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு இடத்திலும் ஒரு பெரும் தொழில்/வேலை தொடங்கப்படும் போது, சுற்றுப் புற மக்களுக்கு வேலை கிடைக்கும் அதே சமயம், கடைப் பணிக்கும், வீட்டுப் பணிக்கும், கூலிக்கும் ஆட்கள் அற்றுப் போகும் அவலமும் சேர்ந்தே நிகழ்கிறது. 

அதனுடன் காலங்காலமாய்த் தொடரும் சாதிப் பிரச்சினைகளும், தீண்டாமைகளும், இதையும் மீறிப் பூக்கும் காதல்களும், காமமும், அதன் விளைவுகளும் காட்சிப் படுத்தப்படுகின்றன. ஆயர் குலப் பெண், கல்தச்சனின் வீட்டு வாயிலிலேயே நிற்பதும், இளவயதில் திருமணமாகி பூப்பெய்தும் முன்பே கணவனை இழந்த புலையர் பெண் வள்ளி, போரில் முடவனான சஞ்சீவனைக் காதலிப்பதும், சங்கரனின் தந்தை நடுநிசியில் தேவதாசி பெருந்தேவி வீட்டிற்குச் செல்வதும்... பலவாறு படிப்பவரின் மனதை அசைத்து விடுகின்றன.

இவை இப்படியே இன்றும் தொடர்வது, இவைதான் நம் அடையாளங்களா என்றும் திகைக்க வைக்கிறது. ஆனால் மாலா தன் தாய்க்காகத் தெளிந்து அறிவழகனை விட்டு விலகும் முதிர்ச்சி நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. இவள் குலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம், கொடுக்கப்படாமல் ஏமாற்றப்படுவதும், புது பஸ்டாண்டை  அரசியல் லாபங்களுக்காக கொண்டு வர முனைவதும், அதை ஒட்டிய போராட்டங்களும், வாழ்வாதாரங்களும், திரைமறைவு செயல்பாடுகளும்... குவாரி, கிரானைட், ரியல் எஸ்டேட், செம்மரக் கடத்தல், கந்து வட்டி, நக்ஸலைட்கள், ஃபைனான்ஸ் கம்பெனி, ஆள் கடத்தல் எனப் பலதும் இங்கே கோர்க்கப்பட்டிருக்கிறது. அற்புத திராவிட கழகம் (அ.தி.க), தமேஸான் என்றெல்லாம் சூட்டப்பட்ட பெயர்களால் இக்காலத்தின் பிரதிபலிப்பை படிப்பவர் சுலபமாக உணரலாம். மக்களின் கவனத்தை திசை திருப்பும் உத்திகள் அரசாட்சி முதலாய் நடப்பது சில பத்திகளிலேயே பட்டவர்த்தனம்.

ஒரு பேட்ஸ்மென், முதல் சில பந்துக்களை விட்டுவிட்டு, பிட்சின் தன்மையை உணர்ந்தபின் ஆடத் தொடங்குவது போலத்தான், இந்நாவலின் முதல் சில அத்தியாங்களை நிதானமாகப் படித்தபின்பே வேகமெடுக்க வேண்டும். எந்த ஒரு அறிகுறியுமின்றி, அடுத்த பத்தியிலேயே காலமும் காட்சியும் மாறும். அச்சுப் பிழையோ என்றும் நினைத்தேன். ஆனால் இது ஒரு உத்தி  எனப் புலப்பட்டபின், நினைவில் நிறுத்திப் படிக்கும் விதமாய்த் தொடர்ந்தேன். ஆனாலும், பல சம்பவங்கள் தொடர்ச்சியின்றி தனித்தீவுகளாய் நிற்கும். அதனுடன், பட்சிகளுக்குள் உரையாடல், நாய்க்கும் மனிதனுக்கும், ஒட்டகத்துக்கும் மனிதனுக்கும் உடைரயாடல் என்று துணுக்குகளும் உண்டு. சிலதில் ஒரு தகவலிருக்கும். சிலது வெறுமனே கடந்தும் செல்லும்.

எதிர்காலச் சம்பவங்கள் மிக நேர்த்தியாகத்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வெகு விரைவில் மாற்றங்களைக் காணும் நமக்கு  இதன் சில பகுதிகளில் பட்டம் படிக்கும் விதம், உணவகத்தில் ரோபோக்கள், வேற்று கிரக உயிருடன் உரையாடல்... போன்றவை வசீகரிக்கவில்லை.

எங்கோ தடம் மாறி சென்று விட்ட நாம், இயற்கை விவசாயத்தை நோக்கி மெல்ல திரும்பத் தொடங்கியிருக்கிறோம். இதன் உச்சம் இனி வரும் சில பத்தாண்டுகளிலேயே நிகழ்வதாய்... அறிவழகனின் தந்தை மணவாளன் மூலம், வானம் பார்த்த பூமிகளில் சொட்டு நீர்ப் பாசனம்... விதை நடும் ரோபோக்கள்... பூச்சிக் கொல்லி மருந்துகளை அறவே தவிர்த்து பெரிய பெரிய வெட்டுக் கிளிகளை உண்ணும் க்ளோனிங் செய்யப்பட்ட ராட்சதத் தவளை... சரியும் மக்கள் தொகை.. விரியும் காடுகள் / நீர்ப் பரப்புகள் என்றெல்லாம், பலரின் கனவுகளும், ஆசைகளும்,  முன்னெடுப்புகளும் இப்புத்தகத்தில் பூர்த்தியாவது போல நிகழ வேண்டுமென்பதே படித்து முடிப்பவரின் வேண்டுதலாய் இருக்கும்.

ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும், திருச்சி ராஜ கோபுரம் எழும்பியதைப்போல்,  திருவள்ளரை கோபுரத்தோடு தமிழகமெங்கும் இன்னமும் வலுவான அடித்தளமுடன் இருக்கும் பீடங்களின் மேல் கோபுரங்கள் எழும்பட்டும். அதனுடன் இம்மண்ணின் வளமும், மக்களின் நலமும் உயரட்டும். அதைக் கண்டு இந்நூலாசிரியரின் மனம் நிறையட்டும்.

வெளியீடு: Zero Degree Publishing
சுட்டி: புது-பஸ்டாண்ட்