Saturday, May 18, 2019

பாலகுமாரனின் முதலாம் ஆண்டு ஆராதனை விழா

நாள்: மே 15, 2019
இடம்: வாணி மஹால்

இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரையும் புன்னகையுடன் வரவேற்று புத்தகத்துடன் ஒரு பையைக் கொடுத்தனர்.

ஓர் ஆர்வம் மேலிட்டது. இது படித்துவிட்ட புத்தகமா? வாங்கியபின் இன்னும் படிக்காமல் வைத்திருக்கும் புத்தகமா? இனிமேல் வாங்கவேண்டிய புத்தகமா? என குறுகுறுக்கும் எண்ணத்துடன், அரங்கினுள் சென்றமர்ந்து, பையிலிருந்து எடுத்துப் பார்த்ததும் பிரமித்தேன்.

அய்யனின் அமர ஜீவிதங்கள் - சரஸ்வதி சுவாமிநாதன்.

முன் தினத்தில்தான், இந்த நிகழ்ச்சி நடக்கப் போவதைப் பற்றி தந்தையிடம் பேசினேன். சில நாவல்கள் எப்படியெல்லாம் பாடம் கற்பித்தன என்று பேச்சு நீண்டது. உடலும், மனதும், வாழ்வும் திடமாக இருந்த போது படித்தவை சில, வாழ்வு சுழலில் சிக்கிக் கொண்டபோது படித்தவை சில. இன்னமும் படிக்க வேண்டியது பல. இன்றைய நிலையில் படித்தால் பெரும் புரிதலே கிடைக்கும். மீண்டும் தேந்தெடுத்துப் படிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

இதோ கையில்... பாலகுமாரனின் அத்தனைப் படைப்புகளின் சாராம்சமாய், அமர ஜீவிதங்கள். ஒவ்வொரு நாவலிலிருந்தும் முக்கிய வரிகளை எடுத்துத் தொகுத்திருக்கிறார் சரஸ்வதி சுவாமிநாதன். இப்படி ஒரு புத்தகம் வருவது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். தாம் படித்து உணர்ந்தவற்றை அசைபோடலாம். இனி படிக்க வேண்டியதையும் தேடிக் கண்டறியலாம். இவர் செய்தது ஒரு வணங்கத்தக்க பெரும் பணி. பாலா தந்த வாழ்க்கைப் பாடங்களுக்கு ஒரு கோனார் வடிவாய் இந்நூல் அமைந்திருக்கிறது. இப்பணிக்காக அவருக்கும், வருகை தந்த ஒவ்வொருவருக்கும் இப்புத்தகத்தை வழங்கிய பாலாவின் குடுப்பத்தினருக்கும் நன்றிகள் ஆயிரம். நிச்சயம் பாலாவின் ஆன்மா முறுவலித்திருக்கும்.

பையில் மற்றொரு புத்தகமும் உடன் இருந்தது. பிரித்தவன் திகைத்தேன். பாலகுமாரன் நினைவுத் தடங்கள் - கிருஷ்ணா.

அவர் வாழ்க்கை பற்றிய தகவல்கள் என்றுதான் நினைத்தேன். இல்லை. காவேரி மருத்துவமனையில், உயிர் பிரியும் தருவாயில் உடனிருந்த கிருஷ்ணா, அதை அப்படியே பதிவு செய்திருக்கிறார். // என் குழந்தை கௌரிகிட்ட போகும்போது சொல்லிட்டு போகணும்டா, ஃபேஸ் புக்ல விடைபெறுகிறேன்னு ஸ்டேட்டஸ் போடணும். போனைக் கொடு.. என்று மகன் சூர்யாவிடம் கேட்டிருக்கிறார். // நடுங்கி விட்டேன். நிஜ மரணத்தின் பதிவு இது. மேற்கொண்டு புரட்ட இது தருணமல்ல. பையில் வைத்து விட்டேன்.

நிகழ்ச்சி துவங்கியது. OS அருணின் இன்னிசைக்குப் பின் பாலகுமாரனின் பெயரால் “கண்மணித் தாமரை” விருதை இல. கணேசன், இளம் எழுத்தாளர் நரனுக்கு வழங்கினார். விருது பற்றிய சூர்யா பாலகுமாரனின் உரை, நரனின் ஏற்புரை, பாரதி பாஸ்கரின் சிறப்புரை... அனைத்தும் எளிமையாக அழகாக அமைந்தது.

பாலகுமாரனைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது. இதை இயக்கியவர், ‘தமிழ் இந்து’ துணை ஆசிரியர் ராம்ஜி. நாற்பது நிமிட நீளத்தில் மிக அற்புதமாக வந்திருக்கிறது. பாலாவைப் பற்றி பலதும் அறிய முடிந்தது. பல எழுத்தாளர்களும், திரைத் துறையினரும், வாசகர்களும் பேசினார்கள்.

அவரைப் பற்றி பலரும் பல விஷயங்கள் பேசினாலும், அதன் அடி நாதம் ஒன்றுதான். வாழ்வு நொடிந்துவிட்ட நிலையிலும், நம்பிக்கையை விதைத்து, மீண்டும் வாழ வைத்த பாடங்கள்தான் அவரது படைப்புகள்.

ராம்ஜி வெளிப்படையாகவே கூறினார். இருபது வயதில், தீய பழக்கங்களுடன், தறுதலையாக சுற்றிக் கொண்டிருந்த என்னை, என்னென்னவோ செய்து நல்வழிக்குத் திருப்பியது அவரது எழுத்துக்களே என்று. அவருக்கு மட்டுமா, அந்த எழுத்து சிறப்பித்த வாழ்வினால் அங்கு வந்திருந்த வாசகர் அனைவருமே, ஒருவித உருகும் உணர்வோடு பிணைக்கப்பட்ட சொந்த பந்தமாகவே தென்பட்டனர். அது அபூர்வம். எழுத்தாளன் என்பதைக் கடந்து, பலருக்கு நல்வழிப் படுத்தும், ஆற்றுப் படுத்தும் குருவாகவே வாழ்ந்திருக்கிறார் பாலா.

அரங்கம் நிரம்பிவிட்டதால், இருபுறச் சுவர் ஓரங்களிலும், இரு பகுதி இருக்கைக்கு இடைப்பட்ட இடம் முழுவதும், வீடு திரும்பும் அவசரமின்றி, மூன்று மணி நேரம் நிற்கிறார்கள் என்றால், இவர்கள் பாலாவிற்கு நன்றி சொல்கிறார்கள் என்றே பொருள்.

குறையின்றி எழுத்தில்லை. இவரது சில நாவல்களில் சில குறைகளிருக்கலாம். கதையைப் படிப்பதைவிட கதை மாந்தர்களைப் படித்தறிவதே இங்கு பிரதானம். வாழ்வின் யதார்த்தங்களும் சிக்கல்களும் இம்மாந்தர் ரூபத்தில்தான் அலசப்படுகின்றன. இதில் லயிக்கும் போது குறைகள் உறுத்துவதில்லை. அப்படித்தான் குறையின்றி மனிதருமில்லை. நெருங்கிய உறவோடு, அவர்களின் மனத்தின் லயத்தோடு இணைந்து விட்டால், அவர்களின் குறைகள் ஒரு பொருட்டில்லை. இதனால் கோபங்களும் சண்டைகளும் நீர்த்து வசந்தம் வசப்படும். இக்கலையை இவரின் எழுத்துக்கள் துளிர்க்க வைத்திருக்கின்றன.

படிப்பது ஒரு இயல்பான செயல். படித்ததை உணர்வது ஒரு வரம். உணர்ந்ததை வாழ்வோடு இணைப்பது ஒரு தவம். அத்தவம் முயல்வதை பலரின் முக உணர்வுகள் சொல்லின. எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காத பாக்கியம் இது. அவரால் நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியமும் இது.

இந்நிகழ்ச்சியை நடத்திய விதம் அருமை. வருகையில் பாந்தமாய் சிற்றுண்டியும், பெண்களுக்கு மல்லிகை முழமும், கிளம்புகையில் பாலாவின் முதல் நாவலும் (ஏதோ ஒரு நதியில் - குடும்ப நாவல் - முதலாமாண்டு நினைவாஞ்சலி மலர்), வீடு சேரும் வரை பசிக்காமலிருக்க சிறிதளவு உப்புமாவும் கொடுத்து வழியனுப்பிய விதம்... பண்பட்ட விதம்... எழுத்தும், கனிவும், அக்கறையும் விளைந்த இடம் என்பதை உணர்த்தியது.

புத்தகப் பையில் விபூதி, குங்குமப் பிரசாதங்கள் இருந்தன... புன்னைநல்லூர் மாரியம்மன், கர்ப்பரட்சாம்பிகை, பாபநாசம், வைத்தீஸ்வரன், உறையூர் வெக்காளியம்மன், மண்ணச்சநல்லூர் பிரம்மபுரீஸ்வரர், அண்ணாமலையார்...  இது பலரையும், அவர் வீட்டினரையும் மகிழ்விக்கும், ஆசிர்வதிக்கும்! (புத்தகப் பக்கங்களைப் புரட்டிய போது, அதிலிருந்தும் குங்கும வாசம் வந்தது :))

நிகழ்ச்சி நிறைவாகும்போது, அதைத் தொகுத்து வழங்கிய சம்பத் லஷ்மி கூறினார்...

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...
ஊர் சொல்லி விட்டது... இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...


ஆவணப் படத்தின் சுட்டி: https://youtu.be/1CDvz9TUgy8

Thursday, November 29, 2018

பா. ராகவனின் யதி

திரு. பா. ராகவன் அவர்கள், தினமணி.காம்-இல் ‘யதி’ என்னும் பெருந் தொடரை எழுதியிருக்கிறார். அதற்கான எனது விமர்சனம் அவரது வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

அடேய் கிராதகா! உன் யதியைப் படிக்க, மூச்சுப் பயிற்சியெல்லாம் செய்ய வேண்டுமா?
இதயம் அதிகமாய்ப் படபடத்தது. சமயத்தில் சில துடிப்புகள் சில நொடிகளுக்கு நின்று மீண்டன. படித்து முடித்த போது புயல் தாண்டவமாடிக் கடந்த நிலமாய் என் மனம். நிசப்தத்தில் செவி. வானை வெறித்தபடி விழிகள். இன்னும் சில நாட்களுக்கு யதிலிருந்து மீள முடியாது என்று நினைக்கிறேன்.
இது வீட்டை விட்டு விலகி துறவு பூண்ட நான்கு சகோதரர்களின் கதை...

நன்றி பா. ராகவன்.

Wednesday, October 26, 2016

எம். எஸ். தோனி (சினிமா)


அபூர்வமாக சில படங்கள் மன நிறைவைத் தரும். எம். எஸ். தோனி அவ்வகைப் படம்.

வில்லனின்றி, வன்முறையின்றி, அபத்தக் காமெடியின்றி மூன்று மணி நேரம், ஒரு 20-20 கிரிக்கெட் மேட்சைப் போலவே செல்கிறது  தோனியின் வாழ்க்கைப் படம்.

மனிதன் ரசிக்கும் ஒரு விஷயம் சாயல்.

தந்தையின்/தாயின் ஜாடையிலேயே இருக்கிறது குழந்தை. அவரைப் போலவே இவன் செய்கிறான். இது மனிதனின் அன்றாடப் பேச்சு. அதற்குச் சிறந்த வடிவமாய் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். தோனியின் அச்சில் தன்னைக் கச்சிதமாய் வார்த்தெடுத்திருக்கிறார்.

அமைதியான முகபாவங்கள், இக்கட்டிலும் புன்னகைக்கும் விதம், நடை, தோரணை, தன்னம்பிக்கை, தலைமை, தோனியின் ட்ரேட்மார்க் ஷாட்டுக்கள், குறிப்பாக ஹெலிகாப்டர் ஷாட்... அனைத்தையும் அப்படியே பிரதிபலிக்கிறார்.

ஒரு தந்தையின் தவிப்பு/கண்டிப்பு, தாயின்/தமக்கையின் அரவணைப்பு,  நண்பர்களின் ஆதரவு, கோச்/அதிகாரியின் வழிகாட்டுதல்கள்... இத்தளத்தின் மீதுதான் தோனியெனும் பெருந்தூண் எழுகிறது.

இவர்களின் கோணத்திலும் கதை நகர்வதில், இவர்களின் உணர்ச்சிகள் பார்ப்பவரையும் பற்றி நெகிழ வைக்கிறது.

2011 பைனலில், மூன்று விக்கெட்டுகள் விழுந்து விட்ட நெருக்கடி நிலையில், துணிந்து முன் இறங்கி விளையாடி, இமாலய சிக்ஸருடன் கோப்பையை வென்றதே, தோனியின் வாழ்வில் சிகரம். இதை மையப்படுத்தியே திரைக்கதை சுழல்கிறது. அதில் சின்னச் சின்ன காட்சிகள் அழகாகக் கோர்க்கப் பட்டிருக்கிறது.

குளிர் இரவில் பிட்சிற்கு நீர் ஊற்ற தந்தை (அனுபம் கேர்) செல்வதை சிறுவன் தோனி பார்ப்பது, கோல்-கீப்பிங்கிலிருந்து விக்கெட் கீப்பிங்கிற்கு மாறும் தோனி பந்தைத் தட்டி விடுவது(!), முதல் மேட்சில் பேட்டிங் செய்ய இறங்கியதும் உயரமான கட்டிடத்தையும், மரத்தையும் பார்ப்பது, நண்பனும் அவன் காதலியும் கண்கள் கலந்த நிலையில் ஹெலிகாப்டர் ஷாட் அறிமுகமாவது, யுவராஜுடன் நேருக்கு நேர், இரு காதலிகளுடனான முதல் சந்திப்பு, திடீரென தோனியை நேரில் கண்டதும் திக்குமுக்காடும் சாக்‌ஷியின் தோழி, நிஜ மேட்சுகளில் நடிக தோனியின் முகம்...  இப்பட்டியல் நீளம். திரையில் ரசிப்பதே உத்தமம்.

பல காட்சிகள் மனதில் அழுத்தமாகப் பதிவதால், பிற்பாதியில் வரும் சில குறைகள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

பொதுவாக தன்னம்பிக்கையை விதைக்கும் படங்கள் இனிப்பைப் போன்றவை. நாவில் கரையும் வரைதான் இனிப்பின் சுவை. அதைப் போல, படம் பார்த்த நான்கு நாட்களுக்குள் கதா நாயகனின் பிம்பம் தந்த தன்னம்பிக்கை மறைந்துவிடும். காரணம் அது வெறும் நடிப்பு என்னும் யதார்த்தம்.

ஆனால் இது சாதித்த மனிதனின் கதை. இந்திய கிரிக்கெட்டை முதல் நிலைக்கு உயர்த்தியவனின் கதை. பல இக்கட்டுக்களை, சர்ச்சைகளை கலங்காமல் கடந்தவனின் கதை. இவனது  நிதானம் மிக அபூர்வம். தன் வாழ்க்கையை மாற்றக் கூடிய பயணத்திற்கான விமானத்தைத் தவற விட்ட நிலையிலும், முறுவலிக்கும் பாங்கே இவனை இந்நிலைக்கு உயர்த்தியது.

எவ்வயதினருக்கும் இப்படம் பிடிக்கும்.

கடைசியில் கண்களில் நீர் கோர்க்க நிற்கும் அனுபம் கேரின் பெருமிதத்தை, நம் தந்தைக்குச் சிறிதளவேனும் அளிக்க முடிந்தால் நாமும் தோனியே.