Wednesday, March 26, 2014

சென்னையில் எச்சரிக்கை!

ஆஹா, வானில் கதிரவன் இன்னும் ஜொலிக்குதே! மனம் வேறேதோ கிரகத்தில் இருப்பதாய் நினைத்துக் குதிக்குதே.

பின்னே என்ன சார்? இந்த ஐ.டி கம்பெனி மேஸ்-ஸிற்குள்ளே (Maze) காலையில் நுழைந்து விட்டால், வேளை மாற்றம் புரியாமல் சீட்டிலேயே சாப்பிட்டு, மவுஸை இயக்கியே கை சோர்ந்த பின் (ஃபேஸ்-புக்கையே பார்த்தாலும் லைக் பண்ணணுமே சார்) வெளிவரும் போது, சூரியக் கணவனோடு சண்டை போட்டு ஒன் எய்ட்டி டிகிரி முகம் திருப்பியிருப்பாள் பூமி. அப்படியிருக்க இன்று நாலு மணிக்கே வீட்டிற்குக் கிளம்பினால் (கண்ணு போடாதீங்க சார்) மனம் குதிக்காதா?

சாலையில் கானல்நீர் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. திணறடிக்கும் நச்சுப் புகை வர, இன்னும் இரு மணி நேரம் இருப்பதால், காற்று சுத்தமாய், சுதந்திரமாய், சந்தோஷமாய் உலாவிக் கொண்டிருந்தது.

சன்னமாக விசிலடித்தபடி, ஒரு பாட்டை முணுமுணுத்தபடி, ஆபீஸ் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன்.

ஒரு கை விரல் எண்ணிக்கையில் மட்டுமே சிலர் பஸ்ஸிற்காகக் காத்திருந்தார்கள்.

என்னே பாக்கியம்!! ஆனந்திக்கும்போதே, தோளருகே யாரோ நகர, சுரீர்ரென உள்ளுணர்வு எச்சரிக்கை செய்ய, சட்டென ஓரடி நகர்ந்து திரும்பினேன்.

என் சட்டை பாக்கெட்டை எட்டிப் பார்த்து நகர்ந்த அவன், என்னைப் பார்த்து பகபகவென படு கேவலமாகச் சிரித்தான்.

ஜிம் பாடியை இறுக்கியபடி பழைய டி-சர்ட், ஜீன்ஸ். பரட்டைத் தலை. அவன் தோற்றம் அபாய மணி அடித்தது.

சில அடி தூரத்தில், ஒரு நிழல் நகர, திரும்பினால், அங்கேயும் ஒருவன் இதே போல் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.

என்னமோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த, பிற பயணிகள், பேருந்து நிறுத்தத்தை விட்டு நகர, நான் தனித்து விடப்பட்டேன்.

படு வேகமாய் மனசில் எண்ணங்கள் ஓடத் தொடங்கின.

ஒருவனைச் சமாளிக்கவே என்னிடம் பலமில்லை. ஓடித் தப்பிப்பது சுலபம். ஆனால் எதற்காக என்னை குறி வைக்கிறார்கள்?

ஒரு வேளை, ஆபீஸ் வளாகத்தினுள் இருக்கும் ஏ.டி.எம்-இல் செக்கை டிராப் செய்ய நான் சென்று வந்ததை, பெருமளவு பணம் எடுத்ததாக நினைத்து அதைக் களவாட வருகிறார்களோ?

ம்ஹூம். இவ்விடம் வரும் வரை யாரும் என்னை ஃபாலோ செய்யவில்லை.

ஒருவன் என் சட்டை பாக்கெட்டையே வெறித்துப் பார்த்தான். அடுத்தவன் என் ஷூவைப் பார்த்து,  தன் முகத்தை  ஙே-வென வைத்துக் கொண்டு  பகபகவெனச் சிரித்தான்.

இருவரும் என்னை நோக்கி வர, ஓடத் தயாரானேன்.

இரு இரு... மனம் கட்டளைகளை ட்வீட்டுக்களாய் வீசியது.

இது உன் ஏரியா.

(அதாவது சுற்றுப்புறம் உனக்குப் பரிச்சயம். இண்டு இடுக்குகளில் புகுந்து ஓடி விடலாம்.)

800-மீட்டர் ரன்னிங் ரேஸில் கலந்து கொண்டு நீ பாய்ந்து ஓடிய பள்ளி நாட்களை நினைத்துப் பார்.

நீ கடைசியாகத்தான் வந்தாய். உன் ஓட்டம் தண்டம்தான். ஆனால் இந்த ஜிம்காரர்களை விட நீ  ஜம்மென்று ஓடலாம்.

ஜாக்கிச்சானை, துரோணராய், மானசீக குருவாய் பாவித்து, ஹாய் ஊய் என்று கொஞ்ச காலம் கராத்தேவெல்லாம் கற்றாயே. அவர்கள் அடித்தால் இரண்டு அடிகளைத் தடுக்கலாம். அவ்வளவுதான். திருப்பி அடிப்பதெல்லாம் கீ-போர்ட் தட்டும் விரல் முஷ்டிகளால் முடியாது.

தப்பிப்பது முக்கியம். ஆனால் அவர்களின் நோக்கத்தை அறிவது அதைவிட முக்கியம்.

பதட்டப் படாதே. குறைந்தபட்சம் பதட்டத்தை வெளிக் காட்டாதே. ஆபத்து இன்னும் நெருங்கவில்லை. அசராதது போல் நடி.

பிளாட்ஃபார்மிலிருக்கும் கைப்பிடியில், இரு கைகளையும் பின்புறமாய் ஊன்றி சாய்ந்து நில். வெளிப் பார்வைக்கு நீ அலட்சியமாக இருப்பதாகத் தெரியும்.

ஆனால் கைகளை அழுத்தி ஜம்ப் செய்தால், முதல் தாவலிலேயே ஆறடி தாண்டி ஓடத் தொடங்கலாம்.

(மனக் கட்டளைகளை மெனக்கெட்டுச் செய்யத் தொடங்கினேன்)

இருவரும் கிட்டதட்ட நெருங்கி விட்டார்கள்.

சீக்கிரம் கண்களைச் சுழற்றிக் கவனி. மேலும் ஆட்கள் இருக்கலாம்.

பெல்ட்டை இறுக்கிக் கொண்டே, மெல்ல உடலைத் திருப்பியபடி, நான்முகனாய் திசைகளைப் பார்த்தேன்.

வலப்பக்கம்... சற்றுத் தொலைவில்... அங்கே... டாடா-சுமோ... அதனுள் மேலும் இரண்டு தலைகள் தென்பட...

அவர்கள் கையில் ஏதோ கருப்பாய், உருளையாய், சற்று நீளமாய்...

ஐயோ ஆபத்து வந்தே விட்டது ஓடு...

பாய முனைந்த கால்கள், அப்படியே சடன்-பிரேக் அடித்து நிற்க, இதழ் முறுவலிக்க, முகத்தில் மந்தகாசம் பரவியது.

அஹ்ஹஹ்ஹஹ்ஹா... வாய்விட்டுச் சிரித்தபடி, நெருங்கி விட்ட இருவரையும், இரு கைகளால் பிடித்து, அப்படியே டாடா-சுமோவை நோக்கி அவர்களைத் திருப்பி, கைகளை உயர்த்தி தம்ஸ்-அப் காட்டினேன்.

சற்றே அசட்டுச் சிரிப்புடன், என் கைகளைக் குலுக்கி, ஒரே குரலில் சொன்னார்கள்... தேங்க்யூ சார்.

Pogo சானலில், சோட்டா-பீமிற்கு முன் கொடிகட்டிப் பறந்த Just For Laugh-ஐ போல் எதையோ ஒரு லோக்கல் தமிழ் சானல், Candid Camera ப்ரோக்ராமுக்காக​ எடுத்துக் கொண்டிருந்தது!


Wednesday, March 5, 2014

என். சொக்கனின் ‘மொஸாட்’

மொஸாட். பெயரைக் கேட்ட கணமே ஒரு திரில்லைத் தரும் இஸ்ரேலிய உளவுத் துறை.

தன்னைச் சுற்றி எந்தச் சுவருமின்றி, தரையில் எந்தச் சுகமுமின்றி, எந்நேரமும் உயிர் குடிக்கப் பாயும் விலங்கை எதிர்ப்பார்த்தே துயிலும் காட்டு மனிதனின் உணர்வுகளே மொஸாட்டிற்கு அடிப்படை.

சின்னஞ்சிறு இஸ்ரேல் நாட்டை, விட்டமாய் வளைத்திருக்கும் பகை நாடுகளிடமிருந்து தற்காக்கவும், சதியை மோப்பம் பிடிக்கவும், தானே சதியை முறியடிப்பதோ அல்லது தாக்குதலுக்கு தன்னாட்டு ராணுவத்திற்குத் திட்டமிட்டுக் கொடுப்பதோ மொஸாட்டின் பிரதான வேலைகள்.

மொஸாட் விதைந்து வளர்ந்ததை, செயல்பட்டதை, சாதித்ததை... எளிமையாய், அழகாய், கோர்வையாய், கதை சொல்லியாய் ‘மொஸாட்’ புத்தகத்தில் விளக்குகிறார் ஆசிரியர் என். சொக்கன்.

72-ல் ஜெர்மனியின் மியூனிக் நகரில், ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும், இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் படுகொலை செய்யப்படும் பரபரப்புடன் புத்தகத்தைத் துவங்குகிறார். கொதித்தெழுந்த இஸ்ரேலியப் பிரதமர், இதற்கு காரணமானவர்களை வேட்டையாட முடிவெடுக்க, மொஸாட் அறிமுகம்.

படுகொலையை நிகழ்த்திய பாலஸ்தீன தீவிரவாதிகளை லிஸ்ட் எடுத்து போட்டுத் தள்ளுகிறது மொஸாட்.

இதென்ன பிரமாதம் என்கிறீர்களா? சொக்கனும் நம்மை இப்படிக் கேட்க வைத்து, இத்தாலி, பிரான்ஸ், ஏன் பாலஸ்தீனர்களின் கோட்டையான லெபனான் ஆகிய நாடுகளில் மொஸாட் எப்படி வேட்டையாடியது என்பதை, புத்தகத்தின் முதல் அத்தியாயங்களில், ஒன்-டே மேட்ச்சின் முதல் பவர்-பிளேயைப் போல விறுவிறுவெனச் சொல்கிறார்.

முதல் சம்பவத்தின் வேட்டை முடிந்தபோது, உலகில் எந்த மூலையிலும் யூதனுக்கு ஒரு பிரச்சினை என்றால் மொஸாட் பாய்வதைச் சொன்ன சொக்கனின் அடுத்த ஜம்ப் -  அடால்ப் ஐக்மென்.

ஹிட்லர் தலைமையில் யூதர்களை இலட்சக் கணக்கில், கர்ண கொடூரமாய்க் கொன்று குவித்த தளபதி. இவரையும் அர்ஜெண்டினாவில் தேடிக் கண்டுபிடித்து போட்டுத் தள்ளுகிறது மொஸாட்.

இப்போது மொஸாட்டின் நதிமூலத்தைக் காட்ட வருகிறார் சொக்கன். அரேபியர்களின் தேசமான பாலஸ்தீனத்தில் மைனாரிட்டியான யூதர்களின் பாதுகாப்பின்மையே மொஸாட்டிற்குப் பிள்ளையார் சுழி.

இந்தக் காலக் கட்டம், இஸ்ரேல் உருவானதற்கு முன்பா, பின்பா என்று வாசகனுக்கு குழப்பம் வருகிறது.

அத்தியாயம் 7. யூதர்களை ஹிட்லரின் நாஜிப் படைகள் கொன்று குவித்த இனப் படுகொலை. அப்போது யூதர்களுக்குத் தனி தேசம் எதுவும் இல்லை.

இந்த ஒரு வரி, 11-ஆம் (நதிமூல) அத்தியாயம் படிக்கும்போது நினைவில் இல்லாவிட்டால், அதுவும் இனப் படுகொலையின் கால கட்டத்தை, வாசகன் அனுமானிக்காவிட்டால், குழப்பம் மிஞ்சும். எப்போதும் இணைப்புகளைச் சரியாக முடிச்சிடும் சொக்கன் இங்கே சற்றே அசந்து விட்டார்.

புத்தகத்தின் பிற்பாதியை படுவேகமாக நகர்த்துகிறார் சொக்கன். மிக், 200 டன் யுரேனியம், போர்ப் படகுகள் ஆகியவற்றை ஈராக், பெல்ஜீயம், பிரான்ஸ் நாடுகளிடமிருந்து மொஸாட் கடத்தும் ’அட்றா சக்க..’ சம்பவங்கள். எகிப்து, ஈராக் மீது விமானத் தாக்குதல்கள். இவற்றைப் படிக்கும் போது மொஸாட்டின் மீது பிரமிப்பும், மரியாதையும் வருகிறது.

உடனே மொஸாட் பல்பு வாங்கிய சம்பவங்களையும் புன்னகைக்கும் விதமாய் சொக்கன் தருகிறார்.

மொஸாட்டின் உளவாளிகளாகட்டும், அல்லது அவ்வமைப்பிற்கோ, யூதர்களுக்கோ உதவும் எவரையும், மொஸாட் காக்கவும், கௌரவப்படுத்தவும் முயலும் என்பதை, ஷூலா என்ற பெண்மணியின் நெகிழ்வான சம்பவம் மூலம் விளக்குகிறார். இந்த அத்தியாயத்தை புத்தகத்தின் கடைசி பகுதியில் வைத்திருந்தால் இன்னும் நெகிழ்வாக முடிந்திருக்கும்.

இருப்பினும், புத்தகத்தைப் படித்து முடித்தபோது, ஒரு நல்ல திருப்தி. நன்றி சொக்கன்.

வெளியீடு: மதி நிலையம்
முகவரி: மதி நிலையம், 2/3, 4வது தெரு, கோபாலபுரம், சென்னை 600 086. தொலைபேசி : 044-2811 1506.