Wednesday, December 10, 2014

பாலகுமாரனின் உடையார், கங்கை கொண்ட சோழன் - விமர்சனம்.


மனம் ஆட்டம் காணத் தொடங்கியது.

‘இராஜாதிராஜா, இனி சகலமும் உன் பொறுப்பு... எனக்கு விடை கொடு’ - என தன் மூத்த மகனிடம் மாமன்னன் இராஜேந்திரன் கூறி, சபையை வணங்கி விடை பெறும் போது, இனி இக்கதை அவரது இறுதி காலத்தை நோக்கிப் பயணிக்கும் என்பதால், அதைப் படிக்கும் திராணி இருக்குமா என எண்ணி மனம் கலங்கியது.

உடையார் நாவலில், இராஜராஜ சோழன் இறைவனடி சேர்ந்தார் என்பதை எழுத முடியாமல் கதறி அழுத ஆசிரியர் பாலகுமாரனின் உணர்ச்சிகள், படிக்கும் போது என்னையும் அழ வைத்தன. படிப்பது பேருந்தில் என்ற போதும், பிறர் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்தும், வழியும் கண்ணீரை என்னால் துடைக்கக் கூட முடியவில்லை.

மறுபடியும் அந்நிலைக்குப் பயந்தே, அதன் தொடர்ச்சியான ‘கங்கை கொண்ட சோழன்’ நாவலின் இறுதி அத்தியாயங்களைத் தனிமையில் படித்தேன்.

ஆனால், ஆஹா, தென்னகத்தின் இரு ஒப்பற்ற மாமன்னர்களின் வாழ்வு மட்டுமல்ல மரணமும் கூட இணையற்றதாய் நிகழ்ந்திருக்கிறது.

சேரனை அடக்கி, பாண்டியனை ஒடுக்கி, மேலைச் சாளுக்கியனை விரட்டி, கீழைச் சாளுக்கியனுக்குப் பெண் கொடுத்து பந்தமேற்படுத்தி, சோழ மக்களைப் பாதுகாத்த திருப்தியுடன், சிறை பிடித்த பகை வீரர்களையும் பாங்குடன் நடத்தி, தக்க சன்மானமும் தந்து, கோவில் பணியில் பங்கெடுக்க வைத்து... பிரமிக்க வைக்கும் கலையாய், உள்ளம் சிவனிடம் சரணடையும் வகையாய், பிரகதீஸ்வரர் கோவில் எழுப்பிவிட்ட பேரானந்தத்துடன்... உடையார்குடியில் ஒரு யோகியைப் போல, உடலை உயிர் நீங்குவதை, உணர்ந்து கொண்டே சிவபாதம் சேர்ந்திருக்கிறான் இராஜராஜன் (சிவபாத சேகரன்).

தனயன் இராஜேந்திரனும் அவ்வண்ணமே.

கங்கைவரை வென்று, அந்நதி நீராலேயே, தான் எழுப்பிய கோவிலுக்குக் குடமுழுக்குச் செய்து, சோழனின் பொருளாதாரத்தை, அனைத்து வருணத்தினரின் தரத்தை பலமடங்கு உயர்த்தி, கடல் கடந்து, கீழைத் தேசங்களையெல்லாம் வென்று, அங்கெல்லாம் தமிழரின் ஆளுமையை, ஆதிக்கத்தை, நாகரிகத்தைப் பரப்பிவிட்டு, தன் வயோதிகத்தில், அரசியலிலிருந்து முற்றிலும் விலகி, காஞ்சி அருகே, பிரம்மதேசம் என்னும் கிராமத்தில், பாணர்களின் மத்தியில் பாடல்கள் கேட்டபடி சில ஆண்டுளை இனிமையுடன் கழித்து, பெரும் மன நிறைவுடன், விண்ணுலகு சென்றான் இராஜேந்திரன்.

தமிழரின் இன்றைய நாகரிகத்திற்கு மையம் சோழ மண்டலம். அதன் சரித்திரத்தை, அம்மக்களின் வாழ்க்கையை, வீரத்தை, இவ்விரு மன்னர்களின் கால கட்டத்தை, இரு பெரும் நாவலாய், மொத்தம் பத்து பாகமாய் விவரித்த பாலகுமாரன் அவர்களை வணங்குகிறேன்.

கதாநாயக நாயகிகளை, அரச குடும்பத்தை மையப்படுத்தியே நகரும் சரித்திரக் கதைகளிலிருந்து வேறுபட்டு, பாத்திரங்களை, மக்களை மையப்படுத்தியே கதை நகருகிறது. அடர்த்தியின்றி, சரளமாக, பிரவாகமாகச் செல்லும் நடை. ஆனால் ஆங்காங்கே நின்று, படித்ததை மனம் அலசுகிறது.

இல்லத்தில் ஒரு குடும்பமாய், பணியில் ஒரு குழுவாய் இயங்கவே இன்று நாம் திணறுகிறோம். நேரமில்லை என்று தள்ளிப் போடும் செயல்கள்தான் எத்தனை எத்தனை! ஆனால் தேவரடியார்கள், வேளாளர்கள், வணிகர்கள், கம்மாளர்கள், தச்சர்கள், சிற்பிகள், பஞ்சமர்கள், அந்தணர்கள் என்று மக்கள் பலவாய், தேசம் ஒன்றாய் இயங்கி வளர்வதைக் கண்டுத் திகைக்கிறேன்.

ஏன் இத்தனை பிரிவுகள். ஆசிரியரின் விளக்கத்தில் பலதும் புரிகிறது.

இன்று மழை வருமா? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா? முடிவெடுக்க முடியாமல் திணறுகிறோம். செவ்வாய் கிரகத்தின் பாதையையும், பயணத்தையும் கணக்கிட்டு, இன்ன நேரத்தில் இன்ன திசையில் மங்கள்யான் ஏவப்பட்டால், அது செவ்வாயை சரியாக அடையும் என்று கணினிகளின் துணையுடன் கணக்கிடுகிறோம்.

எந்தப் பருவத்தில் விதைக்க வேண்டும், எந்த நாளில் படை / மரக்கலம் கிளம்ப வேண்டும், எப்போது பகை நாட்டைத் தாக்க வேண்டும் என்பதையெல்லாம் கணிக்க, நட்சத்திரங்களின் நிலைகளை, வானிலைகளை கவனித்து, கையில் வெறும் நூலைத் தொங்கவிட்டு அது அசைவதை வைத்து காற்றின் திசையை, வேகத்தை, அதில் படியும் ஈரத்தை வைத்து மழையின் நிலையை எல்லாம் கணக்கிட வேண்டி... அதற்கு மனம் கவனம் சிதறாமல் ஒருமுகப் பட்டு இருக்கவே வேறெந்தப் பணியிலும் ஈடுபடாமல் ஒரு சாரர் செயல்பட்டனர்.

பந்தை எதிர் கொள்ளும் பேட்ஸ்மெனின் தேவையை பூர்த்தி செய்யவே, ட்வெல்த்-மேன் தேவைப்படுகிறான். பகையை எதிர் கொள்ளும் மறவனின் ஆயுதங்களைச் செய்ய, செப்பனிட, அவன் குதிரைகளுக்கு லாடம் அடிக்க கம்மாளர்கள், குதிரைகளைப் பராமரிக்க பஞ்சமர்கள் இயங்கினார்கள்.

மறவர்களுக்குள் தான் எத்தனைப் பிரிவுகள். வெறுங்கையாலேயே தாக்கும் கைகோளப்படை, முதுகு வாள் படை, மரணம் நிச்சயம் எனத் தெரிந்தே யுத்ததின் முன்னனிக்குச் செல்லும், முனை திரியார், மாமுனை திரியார்... பெரும் பட்டியலே நீள்கிறது. இவர்களை வழி நடத்த உபதளபதி, தளபதி, மாராயர்... மாதண்ட நாயகர் வரை பல நிலையில் தலைவர்கள். ஆசிரியரின் விவரணங்கள் வாய் பிளக்க வைக்கின்றன.

சரித்திரக் கதையின் யுத்த தந்திரங்கள் பெரும்பாலும் அதன் ஆசிரியரின் கற்பனைகளே.

ஆனால் பாலகுமாரன் போர்ப் பகுதிகளைச் சுருக்கி, போருக்கான ஆயத்தங்களை விரிவாக்கியிருக்கிறார். பல இலட்சம் வீரர்கள் புறப்படும் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. காடுவெட்டிகள் முன் சென்று மரங்களை வெட்ட, காடு சேறு சரிவுகளில் தச்சர்கள் பலகைகளுடன் பாதையமைக்க, சமைப்பவர்கள் தானியங்களைச் சேகரித்து உணவிட, மறவரில் முன்னனியினர் தாக்க, கைப்பற்றியதை பின்னனியினர் காக்க... ம்ஹூம், இதை மேலும் விளக்க, மீண்டும் நாவலை நான் புரட்ட வேண்டும்.

போர் விவரங்கள் மட்டுமல்ல...

சிற்பங்கள் செதுக்குவது, ஐம்பொன் சிலைகள் வடிப்பது, கோவில், மரக்கலம் கட்டுவது, கடலில் நீரோட்டம் பிடிப்பது... என்சைக்ளோபீடியா போல், ஆனால் புள்ளி விவரங்களாகத் தந்து விடாமல், கதையின் ஓட்டத்திலேயே பெரும் தகவல்களை ஆசிரியர் தந்த விதம் அற்புதம்.

பாத்திரப் படைப்புகள் வாழ்க்கைப் பாடமே நடத்துகின்றன. பெண் பாத்திரங்கள் படிப்பவரை நிச்சயம் ஆட்டம் காண வைக்கும். அவரவர் வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கதற வைக்கும். பெண்ணிற்குப் பிரதான இலக்கணம் இராஜராஜரின் அனுக்கி பஞ்சவன் மாதேவி. எதிர்மறை அவர் மகள் குந்தவை. இவளால் நிர்க்கதியில் உயிர்விடும் கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தனைப் போன்றவர் இன்றும் ஏராளம்.

காலம் போடும் கணக்குகள் திகைக்க வைக்கின்றன. 10+ மனைவிகளிருந்தும் இராஜராஜனுக்கு ஒரே மகன். இரு மகள்களும் தடம்மாற, இராஜேந்திரனோ மூர்க்கத் தனத்துடன் வளர்கிறான். பின் பக்குவப்படும் அவனுக்கு 7 மகன்கள். அவர்கள் கச்சிதமாக வளர்கிறார்கள். பரந்த சாம்ராஜ்யப் பகுதிகளை  திட்டம் போட்டு ஒற்றுமையாய் நிர்வகிக்கிறார்கள். சிறிது காலமே வாழும் கடைசி மகன், சோழ கேரளாந்தகன் (கேரளத்தை நிர்வகித்தவன்) உள்ளத்தை பெரிதும் கொள்ளை கொள்கிறான். மீண்டும் சரித்திரத்தின் விசித்திரம். இவர்கள் யாவருக்குமே பிள்ளையில்லை. (கதையின் காலத்திற்குப் பின் விமலாதித்தனின் பேரன் அநபாயன் குலோத்துங்கன் சோழ அரியணை ஏறுவான்.)

பல சம்பவங்கள், கதையைப் படித்து முடித்த பின்பும், பல நாட்களுக்குப் மனதில் பசுமையாகத் தொடர்கிறது.

உதாரணம். இருட்டில், சலசலக்கும் காவிரி நீரோட்டதின் மேல், ஆசனமிட்டு இராஜராஜனும் இராஜேந்திரனும் தனிமையில் உரையாடுவது அனாயாசமாக, 80 பக்கங்களைக் கடக்கிறது. அதுவரை தந்தையுடன் பலதில் முரண்பட்ட இராஜேந்திரன் மெல்ல மெல்ல உணரத் தொடங்குவதைப் படிக்கும் எந்த தந்தையின் உதடும் முறுவலிக்கும்.

இதைப் போலவே சின்னச்சின்ன காட்சிகளும்.

கோவில் கட்டுமிடத்தில் கட்டிலில் அமர்ந்து விவாதிக்கும் இராஜராஜன் அப்படியே கண்ணயர்ந்துவிட, அடுத்த நொடியே ஒரு தாதி வெண்பட்டைப் போர்த்த, இருவர் விசிறத் தொடங்க, மெய்க்காவல் படை தம் குதிரைகளின் கனைப்பு அரசரின் உறக்கத்தைக் கலைத்து விடக்கூடாது என்று அவற்றை சற்று தொலைவிற்கு அனுப்புவதெல்லாம் ஹைகூ.

உடையார் நாவலின் கரு, தஞ்சைக் கோவிலை எழுப்புதல். கங்கை கொண்ட சோழன் நாவலின் கரு கங்கை மற்றும் கடாரத்தின் மீது படையெடுப்பு. இரண்டுமே இரு மன்னரின் தனிப்பட்ட சிந்தனைகள். செயல்படுத்த இரண்டிற்கும் எந்த முன்மாதிரியும் கிடையாது. பலர் ஆதரவும் கிடையாது. அதை அவர்கள் சாதித்தபோது சோழனின், தமிழனின் வாழ்வு பலமடங்கு உயர்ந்து விட்டது.

இந்நோக்கங்களை அடைவதற்குள்தான் எத்தனை எத்தனை சோதனைகள். பிரச்னைகள். ஒரு பெண்ணோ, வீரனோ எந்த முன்யோசனையும் இன்றி செய்யும் ஒரு சிறு தவறு, ஒன்றன்பின் ஒன்றாய் பல்கிப்பெருகி, பெரும் கலவரமாகி, நோக்கத்திற்கே ஊறு விளைவிப்பதும், அதை இரு அரசர்களும் கடந்து சென்று, இலக்கை அடைவதை, ஆசிரியர் பாடமாய்ச் சொன்னது, நம் வாழ்க்கையில் எந்த முயற்சிக்கும் துணை வரும்.

இரு மன்னர்களை நினைத்து நினைத்து நெஞ்சு நிமிர்கிறது. பழையாறை, தஞ்சை, அமண்குடி, உடையார்குடி, மீன்சுருட்டி போன்ற பெயர்களைக் கேட்கும் போதே அது குளிர்கிறது. அவர்கள் வாழ்ந்த ஊர்களுக்கு, எழுப்பிய ஆலயங்களுக்குச் செல்லும் போது, பாலகுமாரன் விவரித்த காட்சிகளை கண்முன் நிறுத்தி, அக்காலத்திற்கே சென்று ஆனந்த சுகத்தில் லயிக்கிறது.

ஆனால் அதே கணம்...

இராஜேந்திரன் வென்ற தேசத்தவனாய் நினைக்கையில் குலை நடுங்குகிறது. கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ஜிம்பாப்வேயை அடித்து நொறுக்குவதைப் போலத்தான், பல இலட்சம் வீரர்களுடன் சென்று... மேலைச் சாளுக்கியம், தட்சிணலாடம், உத்திரலாடம், ரோஹணம், இலங்கா சோகம், கடாரம்... இன்னும் பல தேசங்களைத் துவம்சம் செய்திருக்கிறான்.

அடுத்த பத்து இருபது ஆண்டுகளுக்கு எழ முடியாமல் நகரங்களைத் தரைமட்டமாக்கி, கடுகை விதைத்து விளைநிலங்களையும் மலடாக்கியிருக்கிறான். பாத்திரங்கள், பெண்டிர், செல்வம், புத்தர் பொற்சிலைகள், ஏன் கோவிலிலிருந்து காளி சிலைகளையும் பெயர்த்துக் கொண்டு வந்திருக்கிறான். மெல்ல அந்த தேசம் துளிர்க்கின்ற போது அவன் மகன் இராஜாதிராஜன் மீண்டும் படையெடுத்து அழித்து வந்திருக்கிறான். யுத்தத்தின் கோரத்தை, தோற்குமிடத்தின் அவலத்தை, வென்ற தேசமே ஆயினும் மரணமடைந்த வீரர்களின் குடும்ப நிலையையும், விதவைகள் பெருகுவதையும் வேறு எந்த சரித்திரக் கதையிலும் இல்லாத அளவிற்கு விவரித்திருக்கிறார் பாலகுமாரன்.

இந்தப் பாவங்களினாலோ என்னவோ... முன்னூறு வருடங்களுக்குப் பின், பாண்டியனால், மற்றொரு தமிழனால், அற்புதமாக நிர்மாணிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம், ஒரு தூண்கூட நிற்க விடாமல், அழிக்கப் பட்டிருக்கிறது. தமிழன் மட்டும் ஒற்றுமையாய் இருந்திருந்தால், உலகையே ஆண்டிருப்பான். என்ன செய்ய, இது விதி, இது விதி, இது விதி என்று ஆசிரியர் முடித்த போது, அது தந்த வலி மறையவே எனக்கு சில நாட்கள் பிடித்தது.

ம்ம். இது பத்து பாகம் கொண்ட நெடுங்கதை. குறைகளும் உண்டு. பல சின்னச் சின்ன சம்பவங்கள், தொடர்ச்சியின்றி அப்படியே நின்று விடுகின்றன. உதா: நரேந்திரன் இராஜேந்திரனுக்கு எழுதும் ஓலை, மேலைச் சாளுக்கியரிடம் சிக்க, அவர்கள் அவர்களுடைய மன்னனுக்கு எழுதியது போல் மாற்றி, வேண்டுமென்றே சோழ ஒற்றர்களிடம் சிக்க விடுவது. பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிய இடம் இது. ஆனால் இது தொடரவே இல்லை. கால இடைவெளிகளும் குழப்புகின்றன. இராஜேந்திரனின் மனைவியின் பெயரும் பஞ்சவன்மாதேவி என்று வருவது சற்றே குழப்புகிறது. சொற்பிழைகளும் உண்டு: மூன்று மரக்கலம் (மரக்கால்) நெல். சின்னச் சின்னதாய் இது போன்ற பிழைகள், கதையை லயித்துப் படிக்கும் போது நெருடுகின்றன.

பாலகுமாரன் உயிரைப் பணயம் வைத்து எழுதிய கதை. மருத்துவர் நம்பிக்கையை இழந்த நிலையிலும், மீண்டும் எழுத வேண்டுமே என்ற எண்ண வலிமையினாலேயே மீண்டு படைத்த கதை. எழுத முடியாமல், வாயால் சொல்லி, ஒலிப்பதிவு செய்யப்பட்டு, அவரது உதவியாளரால் எழுத்தாக்கப்பட்ட கதை. இதனால் ஏற்பட்ட குறைகள் களையப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

பாலகுமாரன், வரலாற்றைச் சொல்லி, நம் பண்பாட்டைக் காட்டி, பற்பல சாதனைகளை, நெறிமுறைகளை விளக்கி, மனதிற்குப் பற்பல உணர்ச்சிகளைத் தந்து, அதைப் பக்குவப் படுத்தி புதிய தேடலுக்கும் வித்திட்டுவிட்டார்.

நன்றி ஐயா.

தொடர்புடைய பதிவு:

3 comments:

 1. Dear Raguram,

  Really very nice Post!... I'm also a lover of 'Ponniyin Selvan' & 'Udaiyar'... super post... ungali pola naanum Udaiyar Noval padikkum pothu ... Kanneer Vitean... bcoz of my Favorite Sri. Bala Kumaran Sir...

  Nice Post ...

  ReplyDelete
 2. //சரித்திரக் கதையின் யுத்த தந்திரங்கள் பெரும்பாலும் அதன் ஆசிரியரின் கற்பனைகளே. ஆனால் பாலகுமாரன் போர்ப் பகுதிகளைச் சுருக்கி, போருக்கான ஆயத்தங்களை விரிவாக்கியிருக்கிறார்.

  My thoughts exactly. And this is what sets Balakumaran's work apart from the rest.

  Excellent writing.

  ps: sorry for usage of English. I do not have access to Tamil typing as of now.

  ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...