Wednesday, August 5, 2015

குழந்தைக்குப் பெயர் வைப்பது எப்படி?

நண்பனின் வீடு. அவன் குழந்தைக்குப் பெயர் வைக்கும் வைபவம்.

‘நவநீத்’ என்று பெயர் சூட்டப்பட திகைத்தேன்.

நவநீதம் என்றால் (புது)வெண்ணெய். அதை விரும்பி உண்டதால், உண்டவனுக்கு ஏற்பட்ட காரணப் பெயர் நவநீத கிருஷ்ணன்.

அதை இப்படி சுருக்கிவிட்டதால் குழந்தையை ‘வெண்ண... வெண்ண...’ என்றல்லவா அழைப்போம்.

பெயர் ஸ்டைலாக, மாடர்னாக இருப்பதற்காகச் சுருக்கும் போது அதன் அர்த்தம் சிதைகிறது.

உதாரணங்கள்: நரேன், விஸ்வம்.

இந்திரன் என்றால் அரசன். தேவர்களின் அரசன் தேவேந்திரன். மனிதர்களின் அரசன் நரேந்திரன். (பிரதமரின் பெயரும் நரேந்திரர்தானே!)

விஸ்வம் என்றால் உலகம். அதன் அதிபதி விஸ்வநாதன். தமிழில் உலகநாதன்.

சுருக்கியதும் மனிதன் (நரேன்), உலகம் (விஸ்வம்) என்று பொருள் மாறி வருகிறதே தவிர, இதில் அழைப்பே தொனிக்கவில்லையே. (ஓ குழந்தைதான் அவர்களின் உலகம் என்பதால், அப்படி பெயர் வைக்கிறார்களோ!).

பெயர் வைப்பதன் பிரதான நோக்கமே அழைப்பதற்குத்தானே!

இறைவனின் பெயர்களைப் பாருங்கள்: சிவன், கணேசன், முருகன், ராமன். கண்ணன்... அழைக்கும் போது சிவா, கணேசா, முருகா, ராமா, கண்ணா...

கடைசி எழுத்தில் ‘ஆ’ என்ற நெடில் வருவதால்... அன்புக்காக, ஆசைக்காக, அவசரத்திற்காக, ஆபத்திற்காக... எந்தத் தொனியிலும் பெயர்களைக் கூவி அழைக்கலாம்.

உகரமும் சிறப்பு: விஷ்ணு. பெண்களுக்கு இகரம்: பார்வதி, லஷ்மி, சரஸ்வதி, அபிராமி, காயத்ரி. இகர, உகர ஒலியை எப்படி வேண்டுமானாலும் நீட்டலாம். அபிராமீமீமீ... என்று மனமுருகியும் அழைக்கலாம்.

ஸ்டைலாக ‘த்’-ல் முடித்தால் (நவநீத், அஸ்வத்) வேகமாக எழும் அழைப்பொலி கடைசி எழுத்தில் முழுங்கப்பட்டு நம்மிடமே நின்றுவிடும். பலர் திரும்பாமல் போவதற்கு, அழைப்பொலி காற்றில் பரவி அவர்களை எட்டாததும் ஒரு காரணம். (கண்டுக்காம போறவங்க வேற ரகம்!).

பெயரைச் சுருக்காமல் வைத்தாலும், இருபெயராக வரும் காரணப் பெயர்களில் வேறோரு சிக்கலும் இருக்கிறது. முருகனை, சிவ குமாரா என்று விளிப்பதை வைத்து, ஒருவனுக்கு சிவகுமார் என்று பெயரிட்டால், பெரும்பாலும் சிவா என்றே, முதல் பாதி பெயரால் அவனை அழைப்பார்கள். முருகனாக இருக்க வேண்டியவன் சிவனாகி விடுவான்! இறைவனை சிறுவனாக பாவிக்கையில் பாலமுருகா, பாலகிருஷ்ணா என்று அழைக்கிறோம். இதை பெயராகக் கொண்டவனை (அவன் பெரியவனான பிறகும்... எல்லோராலும்...) பாலா பாலா... பையா பையா...என்றே அழைக்கப்படுவான்.

அர்த்தம் பொதிந்த பெயர்களை சிதைய விடாதீர்.

திடீரென தமிழ்ப் பற்று பொங்கிட,  ஒரு நண்பன், தன் பெண் குழந்தைக்கு வண்டார்குழலி என்று பெயர் வைத்து விட்டான். பின்னாளில் பள்ளியில் மாணவர்களால் கேலிக்கு ஆளாகி, அவளுக்கு ஏற்படும் மன உளைச்சல்களைப் பற்றி யோசிக்க வேண்டாமா?

ஆக, பெயர் வைக்கும் அடிப்படை:

1) அழைப்பு தொனிக்க வேண்டும்
2) அர்த்தம் மாறாதிருக்க வேண்டும்
3) கடைசி எழுத்தொலி நீள வேண்டும்

செல்லப் பெயர்கள் அழைப்பவருக்குச் சந்தோஷம். நல்ல பெயர்கள் அழைக்கப்படுபவருக்குச் சந்தோஷம். இரண்டையும் தனித்தனியாக வைத்துக் கொள்ளுதல் இருவருக்கும் பரம சந்தோஷம்.