Monday, January 24, 2011

பேயோனின் ‘திசை காட்டிப் பறவை’


புத்தகங்களை வாசிக்கும் அனுபவத்தில் புதியதொரு திசையைக் காட்டுகிறது, ரைட்டர் பேயோனின் ‘திசை காட்டிப் பறவை’.

வரிகளின் ஓட்டத்தை விழிகளால் இடைவிடாமல் தொடர்ந்து, பக்கங்களைப் புரட்டிக் கொண்டேச் செல்வது ஒருவித சுகமென்றால், சில வரிகளைப் படித்ததுமே மனம் அதில் சிக்கி, சற்றுத் திகைத்து, வாய்விட்டுச் சிரித்து (பேருந்தில் படித்தால் வாய் பொத்திச் சிரித்து), பின் படிப்பைத் தொடந்து மீண்டும் மீண்டும் சிக்கிக் கொள்வது மற்றொரு சுகம்.

பேயோன் தரும் இந்த இரண்டாவது சுகத்தை எழுத்துலகில் கோலோச்சும் ஜெமோ, பாரா போன்றவர்களே சிலாகிக்கிறார்கள் என்றால், மேற்கொண்டு நான் எதைச் சொல்ல?  இருப்பினும் இது ஒரு கடைக்கோடி வாசகனின் வாசிப்பனுபவம்.

பொதுவாக ஒருவரின் தற்புகழ்ச்சியில் நமக்கு எரிச்சலே மிஞ்சும். ஆனால் இவர், எவர் மனதையும் புண்படுத்தாமல் தன்னைத்தானே புகழ்ந்து உயர்த்திக் கொள்வதெல்லாம் சிரிப்புச் சரவெடி. சர்வ நிச்சயமாக இது பேயோனுக்கு மட்டுமே சாத்தியம்.

பறவை நொடிமுள்ளிலிருந்து திசை காட்டத் தொடங்குகிறது.

இணையத்தில் பேயோனை நான் முதன்முதலில் வாசிக்கத் தொடங்கியதும், இந்த ‘நொடிமுள்ளின் கதை’-யிலிருந்துதான். எச்சூதுமறியா இளம்பிள்ளையாய் இக்கதையை வாசித்து, அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த புத்தகங்களை கூகுளில் தேடினேன். சொற்களை டைப் அடிக்கத் தொடங்கியதுமே தேடியதை சரமாரியாகக் கொட்டும் கூகுள் விழி பிதுங்கத் தொடங்கியதும்தான் இவை அனைத்துமே பகடி என்பது புரிந்தது. இப்படிக் கூட ஒருவரால் இட்டுக்கட்டி எழுத முடியுமா என்ற பிரமிப்பிலிருந்து விடுபடவே எனக்கு வெகு நேரம் பிடித்தது.

அதுமுதல் அவருக்கு வாசக ரசிகனானேன்.

நிஜங்கள் கசக்கும்போது கற்பனை உலகே நமக்கு மீட்சி. அதை அள்ளிக் கொடுத்த கவிதைகளும் இன்று நிஜங்களுக்கு வந்துவிட்ட பிறகு, பத்திகளால் அனுமான எல்லைகளுக்கு அப்பாற்பட்ட கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்று நம் மனதை அலசித் தருகிறார் ரைட்டர் பேயோன்.

இவர் பார்த்து நடந்த ‘பிரெஞ்சுப் புரட்சி’, இவர் பாத்திரம் பிச்சை போட்ட ‘ரஷ்ய புரட்சி’ போன்றவற்றின் பத்திகள் சிரிப்பை வெடிக்க வைப்பதெல்லாம் பதிவுலகில் ஒரு புதிய புரட்சி!

நுணுக்கமான வரி வார்த்தைகளால் நகைச்சுவையை ஊசியாய் நுழைப்பது போலவே சோகம், பயங்கரத்தையும் நுழைக்கிறார். ‘கனவினூடே’-வைப் படித்த இரவே, ஒரு ஆட்டோவின் ஒவ்வொரு சக்கரத்தின் மேல் பகுதி தனித்தனியாக கழன்று என்னுடலை ஊடுருவிக் கூறுபோடுவதுபோல் எனக்கு கனவு வந்ததென்றால், இதன் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

பிரிமியம் பாண்ட் பேப்பரில் பிராஜெக்ட் ரிப்போர்ட்டை பிரிண்ட் எடுப்பதையே நாங்கள் பெருமையாகக் கருதிய கல்லூரிக் காலங்களுண்டு. ஆனால் ஒரு புள்ளி கூட வைக்காத ஒரு பாண்ட் பேப்பரை வைத்தே ‘அந்த வெற்று காகிதமே’ எழுதியிருப்பது இவரின் கற்பனை ஊற்றுக்குச் சாட்சி என்றால், இனி எழுத எதுவுமே இல்லை என அங்கலாய்க்கும் பதிவர்களுக்கு, இல்லை என்ற ஒரு வார்த்தையை வைத்தே, இல்லை இல்லை என்று சொல்லியே அவர் ‘இல்லை’-யை எழுதியிருப்பது பாலபாடம்.

பூத உடலின் பயணத்தின் கணங்கள், சிந்தனை உலவின் கணங்களை வரையறுக்க வல்லவை. குறிப்பாக ஒரு தேர்ந்த எழுத்தாளன், தன் ‘சமகால’ எழுத்தாளனை ஒரு பயணத்தில் சந்தித்து கணங்களை பரிமாறிக் கொண்டால் அக்கணமே ஒரு இலட்சத்து எழுபத்தி ஆறாயிரம் சிந்தனைச் செல்கள் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படும்.  இப்படித்தான் ஒரு முறை, அண்டார்டிகா நீர்ப்பரப்பிலுள்ள அலக்டோரியா தீவினில் நடக்க இருந்த ‘சமகால எழுத்தரின் கணங்கள்’ மாநாட்டில் கலந்து கொள்ளப் பயணித்தேன். ஒரு ‘கேப் பெட்ரல்’ பறவை திசை காட்டிச் செல்ல, அதன் வெள்ளெச்சம் விழும் தடத்தை ஒற்றிச் சென்ற படகில் என்னுடன் பேயோனும் இருப்பதைக் கண்டு அதிசயத்து...

ஹஹ்ஹஹ்ஹா... வேறொன்றுமில்லை... ‘என்னைப் போல் பத்தி எழுதுவது எப்படி’ படித்ததன் பின்வினையே கடந்து சென்ற நிறைவேறாத பகடிப்பத்தி.

ஒற்றிலக்க பத்திகளில் ஒரு கதையும், இரட்டையிலக்க பத்திகளில் வேறொரு கதையும் நகர்ந்து, கடைசி பத்தியின் கடைசி வரிகளில் இணையும் ‘அடுத்த வாரத் தொடர்ச்சி’ கிளாசிக்.

அவரின் நினைவுக் கூர்மையும், பார்வைக் கூர்மையுமே அவரின் எழுத்தின் கூர்மைக்கு அடிப்படை. கண்ணின் நிழலில் அசைவதற்குக் கூட சுவாரஸ்ய எழுத்து வடிவம் தருகிறார்.

‘மயிலிறகிற்கு நட்ராஜ் பென்சில் சீவல் பிடிக்கும்’

‘உதவுதல் நாடி சுலைமான் அபெக்கேவுக்கு கடிதம்’ போன்ற இடங்கள் இரண்டே இதற்கு அத்தாட்சி.

பறவை ‘சியாமள விகாச பட்சியாய்’ நம்மை விகாசிக்க வைத்து, சிறகுதாரியாய் நம் மனதை சிறகடிக்க வைத்து, ‘வாழும் கணங்களில்’ நிறைகிறது.

பத்திகளின் வரிசையை மாற்றிப் படித்தாலும் தொடரும் ‘வாழும் கணங்கள்’, உண்மையில் வாசிக்கும் கணங்கள்.

இவரெழுத்தை ஆப்சன்மைண்டட்டாக வாசிக்க முடியாது. இன்னமும் சொல்ல எண்ணிக்கை இருந்தும், இப்பதிவு ‘நெடுங்கதையாகத்’ தொடர்வதால், என்னையும் சேர்த்து ஒற்றையிலக்க வாசிப்பாகும் எனத் தயங்கி, இத்துடன் புள்ளி வைக்கிறேன்.

புத்தக கண்காட்சியில், ஆழி பதிப்பகத்தில் இவர் யாரென்ற புலன் விசாரணை அனுதினமும் நடந்திருக்கும். அங்கே நான் இப்புத்தகத்தைக் கேட்டபோது, அங்கிருந்தவர்கள் என்னை நிமிர்ந்துப் பார்த்தார்கள். ஆனால் நான் ஒரு சொல் வினவாமல், புத்தகம் வாங்கி அமைதியாக நகர்ந்தேன். ஏனெனில்...

கடவுளைத் தேடும் வரைதான் ஆராதனைகள். பேயோன் என்ற தேடல் உள்ளவரைதான் அவர் எழுத்து சுவை ஊற்றெடுக்கும் சுனைகளாக இருக்கும்.


1 comment:

  1. //கடவுளைத் தேடும் வரைதான் ஆராதனைகள். பேயோன் என்ற தேடல் உள்ளவரைதான் அவர் எழுத்து சுவை ஊற்றெடுக்கும் சுனைகளாக இருக்கும்.//

    யார் இவர் என்ற க்யூரியாசிட்டி எனக்கும் நிறையவே இருந்தது. ஒரு கட்டத்தில் இவர் யாராகவும் இல்லாமல் பேயோனாகவே தொடர்வதுதான் சுவாரஸ்யம் எனத் தெளிந்தது.

    ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...