Thursday, July 30, 2015

இனி முளைக்கட்டும் அக்னிச் சிறகுகள்!












(திரு. அப்துல் கலாம், ஜனாதிபதியாகப் பதவி
ஏற்ற போது, அவருக்கு அனுப்பிய கவிதை)

ஓயாத கடலலைகள்,
தாளமிடும் கரையினில்,
சத்திய உள்ளமுடன்,
கருணை வெள்ளமுடன்,
நித்திய ஊக்கமுடன்,
இடையறா உழைப்புடன்,
பிறந்து - நீர்
இன்றமரும் பதவி,

முப்படைத் தளபதிகளும்,
முதல் மரியாதை செலுத்தும்,
மூத்த பதவி.

நாற்பது ஆண்டுகளாய்,
மெய் வடித்த சாதனைகளால்,
பாரத வானை,
கோள்கள் வலமிட வைத்து,
ராணுவத் தூணியில்,
ஏவுகணைகள் நிரப்பியபின்,
இன்று நீர்,
முதல் குடிமகனாவதில்,

படித்தவர்க்கு ஆனந்தம்!
பாமரர்க்கோ பேரானந்தம்!

பிரதி தினமும் நீரோதும்,
குரானின் ஒலிகளும்,
கீதையின் வரிகளும்,
மதங்கள், தவறி வகுத்திட்ட
எல்லைகளை இணைக்கட்டும்!

தன்னலமற்ற உம் சேவைக் கண்டு,
கட்சிகள் ஓரணி ஆகட்டும்!
உம் தாயக விசுவாசம் கண்டு,
ஆயுதமேந்திய கைகள்,
தவறுணர்ந்து பணியட்டும்!

இனி உம்
ஒவ்வொரு அசைவினிலும்,
மாணவர் விஞ்ஞானம் படிக்கட்டும்!
நீர் மீட்டும் வீணையின் இசையில்,
மெய்ஞானம் கற்கட்டும்!

இனி ஒவ்வொரு
இந்தியனுக்கும் முளைக்கட்டும்,
அக்னிச் சிறகுகள்.
மெய்ப்படட்டும் உம் இந்தியக் கனவு!

இனி நிகழட்டும்,
எங்கு காணினும் வளர்ச்சி!
எவரிடம் காணினும் மலர்ச்சி!
எங்கு சென்றிடினும் செழிப்பு!
எவரிடம் பேசிடினும் நட்பு!

இனி பாரதம்,
மக்களுக்கு ஒரு நல்லரசாகட்டும்!
உலகினில் பெரும் வல்லரசாகட்டும்!

-- காஞ்சி ரகுராம்

Friday, July 10, 2015

பொன்னியின் செல்வன் நாடகம் - விமர்சனம்

‘நீங்க நெஜ வந்தியத் தேவரா’ - என் மகன் கேட்டான்.

‘இல்லை தம்பி, வந்தியத் தேவரா நடிக்கிறேன்’ - அவர் சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

இடம்: மியூசிக் அகாடமி. SS International, Magic Lantern Theatre-இன் பொன்னியின் செல்வன் நாடகம்.


இன்று ஒரு திரைப்படம் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் சென்றாலே... நீளமா இருக்கு, ஸ்லோவா போகுது என்ற எண்ணங்கள் ஊன்றிவிட்ட நிலையில்...

மூன்று மணி நேரம் கடந்தும், சுவாரஸ்யக் குறைவின்றி நாடகம் தொடர்ந்தது. ஆனால் இரவு 9 மணியைக் கடந்து விட்டதால், மகனை கேன்டீனுக்கு அழைத்து வர, அங்கே வந்தியத்தேவன்.

‘எனக்கு டிவெண்டி மினிட்ஸ் பிரேக், அந்த கேப்ல நானும் சாப்பிட வந்துட்டேன்’ என்னிடம் சொன்னவர், மகனிடம் தொடர்ந்தார். ‘சீக்கிரம் சாப்ட்டு உள்ள போ தம்பி, யானையெல்லாம் வரும்’

அவர் ஒரு நாடகக் கலைஞர் என்ற எண்ணமே எனக்கு வரவில்லை. அசல் வல்லவராயன் வந்தியத்தேவராகவே காட்சி தந்தார்.

அறுபது வருடங்களுக்கு முன் கல்கி எழுதிய அமர காவியம். ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன், அருண்மொழி, குந்தவை... போன்ற சரித்திரப் பாத்திரங்களை, படிப்பவர் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருத வைத்தது, கல்கியின் உயிரோட்ட வரிகள் என்றால், அவர்களின் பிம்பங்களை மனதில் பதிய வைத்தவை மணியமின் அற்புத ஓவியங்கள். அதன் வடிவங்களை ஒட்டியே நாடகப் பாத்திரங்களுக்கு ஒப்பனை செய்தது, Magic Lantern Theatre-இன் முதல் மாஸ்டர் ஸ்ரோக்.

ஓவியங்களுக்கு ஏற்றவாறு முகம் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கடும் பயிற்சி தந்து, உடற்கட்டையும் வளர்த்து ஒப்பனை செய்தது பலருக்கு கச்சிதமாய்ப் பொருந்துகிறது. குறிப்பாக, குந்தவையின் மேல் நோக்கும் கொண்டை, ஆழ்வார்க்கடியானின் முன் குடுமி, அருண்மொழியின் தலைப்பாகை, வந்தியத்தேவனின் அலைபாயும் கேசம், அரும்பு/குறும்பு மீசை... இன்னும் பலப்பல.

முக்கிய பாத்திரங்களின் அறிமுகக் காட்சிகள் அற்புதம். பின்னணி இசையும் பிரமாதம். தடியைச் சுழற்றியபடி ஆழ்வார்க்கடியான் நுழைந்த போது அரங்கம் கலகலத்தது. வந்தியத்தேவனும், அருண்மொழியும் தோன்றிய போது புது உற்சாகம் வந்தது. அதற்கு மாறாக உக்கிரமாய் நுழைந்த கரிகாலனின் தோற்றமும், வேகமும் அதற்கேற்ற பின்னணி இசையும், ஒரு மிரட்சியையும், திகைப்பையும், பெருமிதத்தையும் தந்தன.

நாவலை பலமுறை ஊன்றிப் படித்து, அந்தந்த பாத்திரங்களாகவே கலைஞர்கள் தங்களை சுவீகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அருண்மொழிக்கே அதிக பொறுப்பு. நாவலைப் படிக்காத பாமரனின் உள்ளங்களிலும் வாழும் மாமன்னன் ராஜராஜ சோழனின் இளமைப் பருவமது. அதற்குரிய கண்ணியம், கம்பீரம், வீரம், தீட்சண்யத்தை கண்ணசைவில், முக பாவத்தில், உடல் மொழியில், ராஜ நடையில் வெளிப்படுத்த வேண்டும். அந்தக் கலைஞர் பிரமாதப்படுத்தி விட்டார்.

கோட்டை வாயிலில் யானைப் பாகனாய் முக்காடிட்டு, வானதியை அழைத்து வரும் காட்சி... கோட்டையை முற்றுகையிட்டிருக்கும் பெரிய வேளாளர் வானதியை வெட்ட வாளை ஓங்க, அதை தன் வாளால் தடுத்து வீழ்த்தியபின், முக்காட்டைக் களைந்து தான் அருண்மொழியென வெளிப்படுத்திய சமயம்... எதிர்பாராத விதமாய் தலைப்பாகை கழன்று முதுகில் தொங்கியது. சற்றும் அசராமல், தீ விழிகளுடன், கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகளை பேசியபடியே, பாகையை எடுத்து, படு கம்பீரமாய்ப் பொருத்தி நின்ற ராஜதோரணையே அந்தக் கலைஞரின் அர்ப்பணிப்பை பறை சாற்றும்.

ஓகே கண்மணி திரைப்படக் காட்சிகள் கூட தூண்டாத காதலுணர்வை, குந்தவை வந்தியத்தேவனின் சந்திப்பு கிளறுகிறது. கண்கள் கலந்த நொடியே அவர்கள் ஸ்தம்பித்து நிற்பதும், வந்தியத்தேவன் இலங்கைக்குக் கிளம்பும் போது, குந்தவையின் பின்னே காதருகே மென்மையாய் ‘வருகிறேன்’ என்றதும் அவள் உடல் சிலிர்ப்பதும், அவர் பத்தடி சென்றபின் திரும்பி உடலுருக, முகமலர, கண்ணில் காதல் பெருக சில கணம் நின்று பார்த்தபின் விரைந்த போது, கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது.

நாற்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். ஐந்து பாக நாவலை 4 மணி நேரத்திற்கு அழகாகச் சுருக்கி நாடகமாக்கியிருக்கிறார்கள். வெகு காலத்திற்குப் பிறகு, நல்ல தமிழ் உச்சரிப்பைக் கேட்டது காதிற்கு இனிமை.

சிலம்பு வீச்சும், சிறு சிறு வாட்போர்களும், இரு கைகளாலும் வாட்களை கரகரவென சுழற்றும் காட்சிகளும் நன்று. இடையில் வாளுறையைத் தரிக்காமல், ஒரு வளையம் போன்றதைக் கட்டியிருக்கிறார்கள். இதனால் அதிலிருந்து வாளை உருவுவதில் இருக்கும் கம்பீரம், மீண்டும் அந்த வளையத்தை சரியாகப் பிடித்து வாளைச் சொருகும்போது இல்லை. இவ்விடத்தை சற்று கவனிக்கலாம்.

தோட்டா தரணியின் பிரதான செட்டும், அதிலேயே செய்யும் சிறு மாற்றங்களும் அழகு. ஆனால் சிறு வயதில் மனோகரின் புராண நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். காட்சிகளுக்கு ஏற்ப, சபை, வீதி, காடு என் முழுமையாய் மாறும் செட்கள் இதில் இல்லாதது சிறு குறையே.

பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். நந்தினியே ஊமைப் பெண்ணாகவும் வருகிறார். தேவராளனே பார்த்திபேந்திர பல்லவன். ஆனால் ஆழ்வார்க்கடியானே ஜோதிடராய் வருவது ஒட்டவில்லை. இதைத் தவிர்க்கலாம்.

பெரிய பழுவேட்டரையர். கதைகேற்றபடியே வயோதிகம். ஆனால் கனைப்பும், கர்ஜனையும் பிரமாதம். ‘பராசக்தீ... சோழ தேசத்தைக் காப்பாற்று’ எனக் கூவி, உடல் துடிக்க உயிர்விடும் நடிப்பில் அரங்கே சிலிர்த்தது. (சோழர்குல தெய்வமான நிசும்பசூதனியைத்தான் பராசக்தீ என்பது போன்ற பெயரில் அழைத்தார்)

முதலை, யானை வேட தந்திரங்கள் குழந்தைகளை குஷி படுத்துகின்றன. சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரையும் கட்டிப் போட்ட, இந்த நாடகமும் குழுவும் மேன்மேலும் வளர வேண்டும்.

இவர்களையும், பிற பாத்திரங்களையும் குறிப்பாக நந்தினியைப் பற்றியும் பலவாறு சிறப்பித்துச் சொல்லலாம். ஆனால் ஒரே வரியில் முடிக்கிறேன். வெளியே வரும் போது, என் ஐந்து வயது மகன் கேட்கிறான்...

‘இன்னோரு வாட்டி பாக்கலாமாப்பா’

சுட்டிகள்: