Thursday, July 31, 2014

இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-ஆவது ஆண்டு விழா

மாமன்னன் இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-ஆவது ஆண்டு விழா கங்கை கொண்ட சோழபுரத்தில்,  ஜூலை 25-ஆம் தேதி நிறைவாக நடந்தது. இம்மன்னன் தன் தந்தை இராஜராஜனைப் போல், இன்றைய தலைமுறை மக்களின் மனதில் அரியாசனமிட்டு அமர, இவ்விழா விதை விதைத்திருக்கிறது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல், இராஜராஜனை அருண்மொழி வர்மனாய், பல மக்களிடம் அவர்கள் குடும்பத்தில் ஒருவராய்ச் சொந்தமாக்கிவிட, அது போன்ற ஒரு பந்தம், தந்தையை மிஞ்சிய தனயன் இராஜேந்திரனுக்கு ஏனோ கிடைக்கவில்லை.

கல்கி, இராஜராஜன் இளவரசனாக இருக்கும் போதே கதையை முடித்துவிட, அங்கிருந்து அவன் மாமன்னனாகி, சிறந்த ஆட்சி தந்து, இம்மண் உள்ளளவும் தமிழரின் திறனை, நாகரிகத்தைப் பறைசாற்ற பெருங்கோவில் எழுப்பியதை, பாலகுமாரன் ஆறு பாக உடையார் நாவலில் அற்புதமாக விவரித்திருந்தார்.

தன் எண்ணங்களை, உணர்வுகளை, நினைவுகளை சோழ சரித்திரத்தில் சஞ்சரிக்கவிட்டு எழுதிய பெரும் பணியை, மேலும் தவமாக்கி, கர்மமாக்கி, அதன் வலிமையாலேயே தன் உயிரையும் மீட்டு, நான்கு பாகமாய் “கங்கை கொண்ட சோழன்” நாவலைப் படைக்க, இராஜேந்திரனின் கீர்த்தியின் மேல் இன்று புது வெளிச்சம் விழுந்துள்ளது.

இவ்விரு படைப்புகளும் என் சிந்தனைகளைப் புரட்டிப் போட்டன. இவன் தலைநகர் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு, பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்லும் ஆவல் எனக்கு அதிகரிக்க...

அவ்விடத்தில் வசிக்கும் ராஜாராம் கோமகன் என்பவர், இராஜேந்திரன் அரியணை ஏறிய 1000-ஆம் ஆண்டை, விழாவாகக் கொண்டாடுகிறார்... அனைவரும் வாருங்கள் என பாலகுமாரன் நாளிதழில், வார இதழில், தொலைக்காட்சியில் அழைக்க...

ஜூலை 25-ஆம் தேதி, கங்கை கொண்ட சோழபுரத்தில், சோழ அரண்மனை அகழாய்வு செய்யப்பட்ட, மாளிகை மேட்டை, நான் சரியாக மாலை 4-மணிக்கு அடைய, வாத்திய ஒலிகளுடன் விழா துவங்கியது.

பாலகுமாரன் மற்றும் இராஜேந்திரனைப் பற்றி எழுதிய, ஆராய்ச்சி செய்த குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற அறிஞர்களுக்கெல்லாம், மரியாதை செய்து, மலர்க் கிரீடம் அணிவித்து, அவர்களை ரதம் போன்ற வண்டியில் அமர்த்தி, யானைகள் முன் செல்ல, இராஜேந்திரன் கட்டிய கோவிலுக்கு (இதுவும் பிரகதீஸ்வரர் கோவில்தான்) அழைத்துச் சென்றனர்.

அனைவரும் அகன்ற பின், அவ்விடத்தில் காற்று மட்டும் துணையிருக்க, அகழாய்ந்த பள்ளத்தில், அரண்மனைச் சுவர்களின் அடித்தளத்தின் மேல் இருந்த, ஓரடி சதுர கல்லின் மேல் அமர்ந்தேன். மூடிய கண்முன் சோழனின் கலம் ஓடிய காலம் விரிந்தது.

ஒரு மனிதனின் சொல்லுக்கு ஒன்பது லட்சம் வீரர்கள் அசைந்திருக்கிறார்கள்.

கீழைத் தேசங்களையும் உள்ளடக்கி, பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தை, பிரமிக்க வைக்கும் நிர்வாகத்தை, பொருளாதார விருத்தியை, நாகரிக மேன்மையை, அனைத்து தரப்பு மக்களும் இணைந்து உயர்ந்த நிலையை... இதோ இந்த இடத்திலிருந்து நிகழ்த்தியிருக்கிறான் இராஜேந்திரன்.

இவன் வம்சம் மேலும் தொடர்ந்து 280+ ஆண்டுகளுக்கு கோலோச்சியிருக்கிறது. இச் சாதனைகள் எல்லாம் நமக்கு பெரும் பாடங்கள்.

எந்த வளர்ச்சியும், விருத்தியும், விஸ்தரிப்பும் ஒரு நாள் ஒடுங்கும். பிரம்மாண்ட கோட்டை கொத்தளங்களும், ராஜ வீதிகளும், மாட மாளிகைகளெல்லாம் மண் மேடாகி, ஒரு சில சுவடுகள் மட்டும், இன்று இங்கு எஞ்சியிருப்பதும் நமக்கு பாடமே.

ஊர்வலம் கோயிலை அடைந்த சமயத்தில் அதனுடன் இணைந்தேன். பெரும் கூட்டம் கூடியிருந்தது. ஆயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டன.

விழா மேடையில் நாட்டியாஞ்சலிக்குப் பின் அறிஞர்கள் பேசினார்கள். முனைவர் பொற்கோ தொடங்கிட, பின் பாலகுமாரன் தொடர்ந்தார். ‘இராஜேந்திரனைப் பற்றிப் பேசும் முன் இப்படி ஒரு அற்புத விழாவை ஒருங்கிணைந்து முனைந்து நடந்திய இராஜாராம் கோமகனைப் பற்றி நாலு வார்த்தையாவது பேச வேண்டாமா? எனக் கேட்டு அவரைச் சிறப்பித்துச் சொல்ல அதை மேடை ஓரத்தில், சிறு புன்னகையுடன், தன்னடக்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் கோமகன்.

எந்த நேரத்தில் எந்தத் தகவலைக் கேட்டாலும் அள்ளிக் கொடுத்த குடவாயில் பாலசுப்ரமணியன், முனைவர் இராஜேந்திரன்... இவர்களின் உதவியால்தான் என்னால் நாவல்களைப் படைக்க முடிந்தது என அவர்களுக்குத் தன் நன்றியைத் தெரிவித்தார்.

உங்கள் பிள்ளைகளை ஊட்டி, ஏற்காட்டிற்கு அழைத்துச் செல்வது போல, தஞ்சைக்கும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கும் அழைத்து வாருங்கள். இக் கோவில்களின் மேன்மைகளை அவர்களுக்குச் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுங்கள் எனக் கேட்டுக் கொண்டு பேச்சை முடித்தார்.

பின் தொடர்ந்த முனைவர் இராஜேந்திரன் (ஆணையர், வேளாண் துறை) மன்னனைப் பற்றிய பல அரிய தகவல்களைத் தொகுத்துப் பேசினார். வெட்டனும், நட்டனும், கட்டனும்... இம்மூன்றையும் சிறப்பாகச் செய்தவன் இராஜேந்திரன் என்று நயமாகச் சொன்னார். அதாவது, குளங்கள் வெட்டனும், வெற்றிக் கொடி நட்டனும், கோவில் கட்டனும். இவன் மட்டும் கிழக்கே செல்லாமல், மேற்கே தன் படைகளைத் திருப்பியிருந்தால்... கஜினி முகமது முறியடிக்கப்பட்டிருப்பான். ஆப்கானின் ஊடுருவல்கள் தடுக்கப்பட்டிருக்கும். இந்தியாவின் சரித்திரம் மாறியிருக்கும் என தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார். இருப்பினும் கிழக்கே தமிழர்கள் பரந்ததற்கு, மலேசியாவில் தை பூசத்திற்கு தேசிய விடுமுறை விடுவதற்கெல்லாம் இவனே காரணம் என்றார்.

மற்றவரும் தொடர்ந்து பேச விழா நடந்தது. ஒவ்வொருவரின் பேச்சையும், கலையாமல், ஆவலாகக் கேட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு மகிழ்ந்தேன். பெரும்பாலும் சுற்றுப்புற மக்கள். கோவிலுக்கு வெளியே வெகுவாய் நீண்டிருந்த கார்களின் வரிசை பலரின் வருகையையும் சொல்லியது.

குடும்பமாக வந்திருந்த கூட்டத்தினரிடம் இருந்த மலர்ச்சி என்னையும் பற்றிக் கொண்டது. எந்த அவசரமும் இன்றி, தன் வீட்டு விழா போல், தன்னை அலங்கரித்துப் பங்கெடுத்து, தீபமேற்றி, அமைதியாய் தாமே வரிசையில் நின்று, உள்ளே இறையை தரிசித்து, விழா மேடைமுன் குழுமியதை நான் பார்த்தது, அங்கு பரந்திருந்த பசும் புல் தரையைவிட எனக்கு இதமாக இருந்தது.

மன்னா, இராஜேந்திரா உன் ஆன்மா இன்னமும் இங்கு உலவுவதை உணர்கிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் இங்கே மகிழ்ச்சியைத் தழைக்க வைக்கிறாய். மக்களை உன் பெயரால் ஒருங்கிணைக்கிறாய். குழுவாய்ச் செயல்பட்டு மேம்படவும் வழி நடத்துகிறாய். வணங்குகிறேன். உன் கீர்த்தி ஓங்குக.

இரவு கும்பகோணத்தில் தங்கினேன். இம்மண்ணின் மக்களுக்கு, விழாவின் நாயகர்களுக்கு, குறிப்பாக கோமகனுக்கு மானசீகமாய் நன்றி சொல்லி மன நிறைவுடன் படுத்தேன்.

மோசமான உடல் நிலையிலும் தன் உயிரைப் பயணம் வைத்து, மருத்துவர் துணையுடன் கங்கைவரை பயணம் செய்து, சோழன் சென்ற பாதைகளை கவனித்து, ஆயிரமாண்டிற்கு முந்தைய சோழ சாம்ராஜ்யத்தை நமக்கு எழுத்து மூலம் மீட்டுக் காட்டிய எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் நாவல் காட்சிகள் என்னைத் தாலாட்டி உறங்க வைத்தன.