Wednesday, December 29, 2010

சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத


“அம்மாவ், வுங்க கழனில மாடு பூந்திடிச்சி...” வாசலில் குரல் கேட்டது.

கிராமத்திலிருக்கும் உறவினர் வீட்டுக்கு அப்போதுதான் வந்திருந்தேன். மார்கழித் திங்களால் சில்லிட்ட கிணற்று நீரில் முகம் கழுவிக் கொண்டிருந்த போதுதான் அந்தக் குரல் கேட்டது.

“அது பொல்லாத மாடும்மா, எங்களால ஓட்ட முடியல... நடு கழனில அட்டகாசம் தாங்கலம்மா...” அடுத்தவீட்டுப் பெண்தான்(!) சொல்லிக் கொண்டிருந்தாள்.

உறவினர் வெளியூர் சென்றிருந்தார். நான் மட்டுமே ஆண்மகன். அந்தக் காளையை அடக்க... இல்லை இல்லை விரட்ட இந்தக் காளையாச்சு என, ஈர முகத்தை அவசர அவசரமாய்த் துடைத்துக் கொண்டு, வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு வீராவேசமாக கழனியை நோக்கி ஓடினேன்.

வீட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் வயலும் வயல் சார்ந்த நிலம்தான். வரப்பில் ஓடியபோது அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன்.

ஐ.டி கம்பெனியில் 24 மணிநேரமும் சாக்ஸினூடே ஷூவினுள் புழுங்கும் கால்கள், செருப்பு கூட அணியாமல் கெட்டிப்பட்ட களிமண் வரப்புகளில் பனியுடன் படர்ந்திருந்த புற்களின் மேல் ஓடியபோது, ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு என்னுடல் முழுக்கப் பரவியது.

14 அங்குல மானிட்டரே உலகம் எனப் பார்க்கும் கண்களுக்கு நிஜமான உலகம் எதிரே விரிந்தது. அதன் பார்வையின் வீச்சுவரை இடுப்பளவு உயர்ந்த பயிர்கள் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன.

பயிர் நிலங்களைத் தொடர்ந்து குன்றுகளும், அதன் மேல் நிலவை விட குளிர்ச்சியாக சிவப்புச் சூரியனும்... காட்சியின் கவர்ச்சியில் லயித்து அப்படியே நின்றுவிட்டேன்.

சே! ஐ.டி-யால் எவ்வளவு இழந்து விட்டோம். இரவென்றாலும் பகலென்றாலும் டியூப் லைட்டே நமது சூரியன். காலை, மாலை, அந்தி, சந்தி... எதையுமே உணர முடிவதில்லை. சன்னல்கள்கூட அடைக்கப்பட்டுவிட்ட க்யூபிக்கிள்தான் நம்முடைய ஆறடி நிலம்.

இப்படி வேட்டியை மடித்துக் கட்டி, துண்டை மட்டும் தோளில் போர்த்திக் கொண்டு, வெறும் கால்களை மண்ணில் ஒற்றி, காற்றை நுகர்ந்து, அண்ணாந்து வான் பார்க்கும் சுகத்தை அடியோடு இழந்துவிட்டதை நினைத்து சோககீதம் மீட்டிக் கொண்டிருந்தேன்.

சுரீரென வந்த வேலை உறைத்தது.

சட்டென சுதாரித்து கண்களைச் சுழற்றி மாட்டைத் தேடினேன். எங்கும் காணவில்லை. உறவினரின் நிலத்தை அடையாளம் காணவே சற்று நேரம் பிடித்தது. மெதுவாக அதை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

திடீரென நன்கு வளர்ந்திருந்த வயல் நடுவிலிருந்து இரு கொம்புகள் சற்று எழும்பித்தாழ...

‘ஆஹா... அவனா நீ...’ என்று கூச்சலிட்டபடி அங்கே பாய்ந்தேன்.

நான் வயலை அடைய, அதுவும் வெளி வர, நேருக்குநேர் சந்தித்துக் கொண்டதில் ஜல்லிக்கட்டு முரசு கொட்டியது. அது சாதுவான பசுதான். ஆனால் அது கண்களை உருட்டிய விதத்தில், கொம்புகளை சிலுப்பிய விதத்தில் காங்கேய நல்லூர் காளையெனத் தெரிய, எனக்கு சற்று வெடவெடத்தது.

எனக்குப் பின்னால் அப்போதுதான் உழுது நீர் இறைக்கப்பட்ட கழனி. தமிழ் சினிமாவில் மட்டுமே ஹீரோவும் வில்லனும் சேர்ந்து விழுந்து கட்டிப் புரள்வார்கள். இந்தப் பசு இன்னொரு முறை தலையை சிலுப்பினாலே, நானாகச் சென்று விழ வேண்டியதுதான்.

முரட்டுக் காளை ரஜினி மாதிரி ஜல்லிக்கட்டு போஸ் கொடுத்தேன் (வயலில் யாருமில்லையென்ற தைரியம் தான்!). அது அசரவில்லை.

‘சொன்னபடி கேளு...’ சிங்கார வேலன் மாதிரி பாடினேன். அது முறைத்தபடி என்னை நோக்கி ஓரடி வைத்தது. அவ்வளவுதான். பின்வாங்கிய என் கால்கள் சேற்றில் வசமாகச் சிக்கிக் கொண்டதில் என் வீரம் பறந்தோடியது. கை கூப்பி...

‘மாதா... கோ மாதா... போ மாதா...’ என சாவித்ரி குரலில் பாட முயல, ஸ்ருதி நாராசமாய் எழ, அது மிரண்டு ஓடி, ஒரு வீட்டின் கொல்லைப்புரத்தில் நுழைந்து விட்டது.

உறவினர் பாடுபட்டு விதைத்த வயலின் நடு பகுதி முழுதும் பாழ். மாட்டின் மேல் கோபம் வரவில்லை. அதற்குரிய தீனியைத் தராமல் வயலில் மேய விட்ட மாட்டுக்கார வேலன் மேல்தான் கோபம் வந்தது. மாடு நுழைந்த வீட்டுத் தொழுவத்திற்குச் சென்றேன். அங்கே ஒருவர் தவிட்டைக் கலந்து மாடுகளுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தார்.

‘ஏங்க, உங்க மாட்ட கட்டி வைக்க மாட்டீங்களா?’ சண்டைக்குச் சென்றேன்.

“எல்லா மாடும் கட்டிதானே இருக்கு” என்றார். உண்மைதான். அங்கே எல்லா மாடுகளும் கட்டப்பட்டுதான் இருந்தன. ஆனால் அனைத்தும் எருமை மாடுகள்.

‘ஒரு பசு மாடு வந்துச்சே!’

“அதுவா, அது எங்க வூட்டு மாடுல்ல. கோடி வூட்டு மாடு. அப்பவே வெரட்டிட்டேன்”

‘ஓ! நல்லது. எந்தப் பக்கம் விரட்டினீங்க’

“கழனி பக்கந்தான்”

அட, தேவுடா... மீண்டும் வயலுக்கு ஓடினேன். அங்கே அந்தப் பசு, என்னைப் பார்த்ததும் ஓடிக் கொண்டே வேகவேகமாய் பயிரைத் தின்னத் தொடங்கியது.30 நிமிடம் கடும் போராட்டம். சேற்றில் இறங்கி, வேலிகளைத் தாண்டி, கிணறுகளைச் சுற்றி, வரப்புகளில் ஓடி (நான் யார் பயிரையாவது மிதித்து விட்டால், கிராமத்து வீச்சரிவாள் என்னை அறுவடை செய்துவிடும்!) ஒரு வழியாக அந்தப் பசுவை வயலை விட்டு விரட்டிவிட்டேன்.

ஆனாலும் தீனி அகப்பட்டு விட்டதில், அதை அசை போட்டபடி அசைந்து அசைந்து நிதானமாகச் சென்றது பசு.

அதற்கு மேல் என்னால் நிற்க முடியவில்லை. வீடு சென்று, திண்ணையில் கால் நீட்டி, பெருமூச்சு விட்டு அமர்ந்தேன். என் மென்மையான(!) பாதங்கள் விண்விண்னென வலித்தது. குனிந்துப் பார்த்தால்...

முட்கள் குத்தி கிழிபட்டதில், சொட்டுச் சொட்டாய்... திட்டுத்திட்டாய் ரத்தம்.

கிணற்றடிக்குச் சென்று ஜல்லிக்கட்டு ரணங்களை கழுவிக் கொண்டிருக்கும்போது “அம்மாவ், கழனில மாடு....” என்று வாசலில் மறுபடி குரல் கேட்டது.

Tuesday, December 28, 2010

கீ-போர்டைப் பார்க்காதே

தமிழோவியம்.காம் இணைய இதழில் எனது கட்டுரை...

கீ-போர்டைப் பார்க்காமல் எப்படி ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி வாசிப்பது என்று அங்கலாய்க்க வேண்டாம். நான் சொல்வது கணினியின் கீ போர்டை.
ரஹ்மான் கூட தன் பத்து விரல்களையும் பயன்படுத்திதான் உலகை மயக்குகிறார். ஆனால் நம்ம கணினிக்காரர்கள், இரு ஆள்காட்டி விரல்களால் கீ-போர்டை பாக்குச்சட்டியைப் போலக் குத்திக்குத்தி உலகையே ஆள நினைக்கிறார்கள்.
மேலும் படிக்க...

Friday, November 12, 2010

இந்த ஆண்டு கல்வி, அடுத்த ஆண்டு வேலை

தமிழோவியம்.காம் இணைய இதழின் தீபாவளி மலரில் எனது கட்டுரை...

இது ஒரு டிப்ளமோ கோர்ஸின் விளம்பர வாசகம். இதைப் படித்து நான் ரொம்பவே வேதனை பட்டேன். இந்த வாசகத்திலிருக்கும் மனப்போக்குதான் இன்று ஐ.டி துறையில் திறமையற்ற மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
 இன்றைய பெரும்பாலான ஐ.டி மாணவர்கள் சிந்திக்கும் திறனை அறவே இழந்தவர்களாக, கணினி மொழிகளில் எந்த ஒரு ஆளுமையும் இல்லாதவர்களாகத்தான் பட்டம் பெறுகிறார்கள்
 மேலும் படிக்க...

கட்டுரையை வெளியிட்டதற்காக தமிழோவியம் கணேஷ்... அவரிடம் என்னை அறிமுகப்படுத்தியதற்காக சித்ரன்... இருவருக்கும் என் நன்றிகள்.

Wednesday, September 22, 2010

குரங்கு

என் உறவினரின் கிராமத்திற்கு நான் அடிக்கடிச் செல்வதுண்டு. எங்கள் வீட்டைச் சுற்றி மரங்களும், பின் பகுதியில் வயல்களும், சற்றுத் தள்ளி குன்றுகளும் சூழ்ந்த ரம்மியமான கிராமம்.

இங்கே தினமும் குரங்குக் கூட்டம் எங்கள் வீட்டை கடந்துச் செல்லும். எங்கள் வீடு மாடியில் உள்ளதால் அதன் சன்னல்களில் வசதியாக அமர்ந்துகொண்டு கம்பிகளுக்கிடையே தலையை நுழைத்து எட்டிப் பார்க்கும்.

U-வடிவத்தில் இருக்கும் கம்பிகளுக்கிடையே, கீழே இரண்டு குரங்குகளும், மேலே ஒரு குரங்கும் நெருக்கிக் கொண்டு தலையை நுழைக்கும்போது, அவை மூன்று முகத்தான் போல அழகாகத் தேரியும். ஆனால் அதன் கண்களில் பசியும், ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கமும் பட்டவர்த்தனமாகத் தெரியும்.

அவைகளுக்குக் கொடுப்பதற்கென்றே வாழைப்பழம், பிரெட், பிஸ்கெட் ஆகியவை வீட்டில் இருக்கும். அதைக் கொண்டுவர உள்ளே சென்றால், கம்பியில் தலைசாய்த்து படுத்துக் கொண்டு எங்களை நோக்கி விழி வைத்து ஆவலாய்க் காத்திருக்கும்.

சற்றுப் பெரிய குரங்காய் இருந்தால், கொடுப்பதை கை நீட்டி வாங்கி, நிதானமாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும். சின்ன வாலுக்(!) குரங்குகள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு, கொடுக்கும் முன்பே பிடுங்கிக் கொண்டு, சண்டையும் போட்டுக் கொண்டு, வாங்கியதை கீழேயும் போட்டு ரகளை செய்துதான் சாப்பிடும்.

பெரிய குரங்குகள் பெரிய மனிதர்களைப் போல பக்குவம் அடைந்தவை. ஒரு முறை மொட்டை மாடியில், கைப்பிடிச் சுவரில் சாய்ந்துகொண்டு சாண்டில்யனின் “யவன ராணி” படித்துக் கொண்டிருந்தேன். அருகில் ஏதோ நிழலாடியது. படிக்கும் சுவாரஸ்யத்தில் அதைச் சட்டை செய்யவில்லை. இரு நிமிடங்கள் கழித்துதான் திரும்பிப் பார்த்தேன். ஐயோ... நிழலாடவில்லை... வாலாடியிருக்கிறது... ஒரு திம்மாங் குரங்கு என் அருகில் அமர்ந்து கொண்டு நான் படிப்பதை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. எனக்கு இடப்பக்கம் அதன் சகாக்கள் வேறு அமர்ந்து கொண்டிருந்தனர். எனக்கு சப்தநாடியும் ஒடுங்கிப்போனது. அலறவோ, ஓடவோ வாய்ப்பின்றி வெலவெலத்துப் போனேன்.

ஆனால், அவை அமைதியாக இருந்தன. இக்கலிகால சாமியார்களிடம் காணமுடியாத சாந்தமும், நிதானமும் அதன் முகங்களிலும், கண்களிலும் தெரிந்தது.

”இப்பத்தான் இதெல்லாம் படிக்கிறயா?” என்பதுபோல என்னை ஒரு அற்பப் பார்வை பார்த்துவிட்டு, திம்மாங் குரங்கு கைப்பிடிச் சுவருக்குத் தாவி, வாலை ஆட்டியபடி செல்ல, அதன் சகாக்களும் ரயில்பெட்டி போல வரிசையாகத் தொடர்ந்தன.

அன்று முதல் எனக்கு குரங்குகளின் மேல் பாசம் அதிகரித்தது. (பின்னே, என் பெயரில் வேறு ’ராம்’ இருக்கிறதே!). அவைகளுக்கு அன்னமிட்ட கையனாய் அதனுடன் நட்பு கொண்டொழுக, ஒருநாள்...

பால்கனியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தேன். எதிர்வீட்டு மாடியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் குரங்குக் கூட்டம்.

ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு மூன்று குரங்குகள் பேன் பார்த்துக் கொண்டிருந்தன (அட, கர்ப்பிணியும் குரங்குதான்). வாலைக் கடித்து, காலைக் கடித்து, காதைக் கடித்துக் கொண்டு குட்டிக் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. அந்த வீட்டைச் சுற்றியிருந்த தென்னை, புளி, முருங்கை, மா மரங்களில் பல குரங்குகள் போட்டி போட்டுத் தாவிக் கொண்டிருந்தன. மரங்களின் கிளைகள் காற்றினால் அசைந்ததைவிட குரங்குகளின் தாவலால், பறவைகளின் இறக்கைபோல படபடவென அசைந்தன.

அருகில் இருந்த பி.எஸ்.என்.எல் டவரிலும் சில குரங்குகள். அவை விறுவிறுவென உச்சிக்கு ஏறுவதும், பின் அங்கிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஒயரில் சர்ர்ர்...ரென இறங்குவதுமாக பரமபதம் ஆடிக்கொண்டிருந்தன.

ஒவ்வொரு குரங்கின் சேஷ்டையையும் நான் அணுவணுவாக ரசித்துக் கொண்டிருந்தபோது, அந்த விபரீதம் நிகழ்ந்தது...

எதிர்வீட்டு மாடியில் துணிக் கொடியை குரங்குகள் பிடித்துக்கொண்டு ஆடியபோது, பட்டென்று அறுந்த கொடி, ஒரு குட்டிக் குரங்கின் கழுத்தில் சுருக்கிட்டு இழுபட, நொடியில் மூச்சு நின்று அது சடலமாய்த் தொங்கியது.

நான் அதிர்ச்சியில் உறைந்தேன். தெருவில் இருந்தவர்கள் இதைக் கவனித்துவிட, மாடியை நோக்கி விரைந்தனர். ஆனால் அதற்குள் குரங்குகளுக்குள் எப்படியோ தகவல் பரிமாறிவிட்டது. அனைத்து குரங்குகளும் அந்த மாடியில் குவிந்து விட்டன. அவை குட்டியைச் சக்கரவட்டமாய்ச் சுற்றிக் கொண்டன. எந்த மனிதரையும் நெருங்கவிடவில்லை.

கீழே ஊர் சனம் கூடிவிட்டது. அவர்கள் பேசிக் கொண்டனர். குரங்குகளும் மனிதர்களைப் போலவே, அதற்கென தனி இடத்தில் தகனம் செய்யும் என்று.

இரு பெரிய குரங்குகள் கொடியிலிருந்து குட்டியை விடுவிக்கப் பார்த்தன. முடியவில்லை. பின் அவை குட்டியைத் தொட்டுத்தொட்டுப் பார்க்க, அதைக் காணத் திராணியற்று குலுங்கியது என்னுடல்.

அனைத்து குரங்குகளும் நடந்ததை ஏற்றுக் கொண்டது போல அமைதியாக அமர்ந்தன. சில நிமிடங்களுக்கு முன்வரை அதகளப்பட்ட மாடியில் இப்போது கனத்த நிசப்தம். அழு குரல்கள் இல்லை. போலியான ஒப்பாரிகள் இல்லை. மெளனமாக ஒரு அஞ்சலி மட்டுமே நடந்தது. பின் தலைவன் குரங்கு எழுந்து நடந்தது. அதைத் தொடர்ந்து அனைத்து குரங்குகளும் எந்தவொரு ஆர்ப்பாட்டமுமின்றி கலைந்து சென்றன.

ஊர் சனம் செயல்பட்டது. ஒருவர் குரங்கை ஜாக்கிரதையாக விடுவித்து கீழே படுக்கவைத்தார். இருவர் தென்னை மட்டையை உடைத்துக்கொண்டு வர, மடமடவென பாடை தயாரானது. பூமாலைகளும் வந்து சேர்ந்தது. அருகிலிருக்கும் பெருமாள் கோயிலின் பட்டர் வரவைக்கப்பட்டார்.

மந்திரங்கள் ஓதி, ஊர் மயானத்திற்குக் குரங்கை எடுத்துச் சென்று சகல மரியாதைகளுடன் தகனம் செய்துவிட்டு திரும்பியது சனம்.

அன்றிரவு உறக்கம் பிடிபடாமல் பால்கனியில் அமர்திருந்தேன். எதிர்வீட்டில் குரங்கு ஊஞ்சலாடி அறுந்த கொடி, காற்றில் ஊசலாடிக் கொண்டிருப்பது நிலவொளியில் தெரிய, அதையே வேகு நேரம் வெறித்துக் கொண்டிருந்தேன்.

Monday, September 6, 2010

வெள்ளைக்காரியும் குருவிக்காரியும்

செங்கல்பட்டு பஸ் நிலையத்தில், மாமல்லபுரம் செல்லும் பஸ்ஸூக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது சற்றுத் தள்ளி இரண்டு வெள்ளைக்காரிகள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்நிய நாட்டினரைப் பார்த்தால் சிறு வயது முதல் ஏற்படும் சுவாரஸ்யத்துடன் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சரியம்!

ப்ளாட்பாரத்தில், தனக்கே உரிய பாணியில் அமர்ந்திருந்த நரிக்குறவர்களுடன் அவர்கள் வெகு சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். குறவர்களின் தலைவன் - தலைவி போன்று தெரிந்தவர்கள், இவர்களிடம் எந்த அந்நியமும் பார்க்காமல், தங்கள் கூட்டதின் அங்கமாகவே கருதிப் பேசிக் கொண்டிருந்தது எனக்கு படா படா ஆச்சரியம்!

(இவர்களில் ஒருவரை எமி என்றும், மற்றொருவரை லிண்டா என்றும், இப்பதிவின் வசதிக்காக அழைக்கப் போகிறேன்!... சரிதானே!...)

எமியும், லிண்டாவும் மாமல்லபுரத்திற்கு வந்த டூரிஸ்ட் என்பதும், அங்கே இந்தக் குறவர்களுடன் எப்படியோ நட்பு ஏற்பட்டு, அவர்களுடன் செங்கல்பட்டிற்கு வந்து, இப்போது திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்கு ஒருவாறு புரிந்தது.

அப்போது ஒரு பஸ், நிலையத்தினுள் நுழைய, லிண்டா என்னிடம் வந்து...

“டஸ் இட் கோ டு மாமல்லபுரம்?” என வினவினாள்.

நான் “எஸ்” என்றதுதான் தாமதம்... தன் இருகைகளையும் தன் உதட்டருகே குவித்து...

“எவ்ரூரூரூ...... ப...ஸ்...” என்று குறவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே கூவ, நான் அசந்து போனேன்.

பஸ் வளைவில் திரும்பிக் கொண்டு வரும்போதே ரன்னிங்கில் ஏறினால்தான் இடம் கிடைக்கும். ஓடத் தயாரான நான் ஸ்தம்பித்து நின்றேன். என்னை முந்திக்கொண்டு, பஸ்ஸில் இடம் பிடிக்க அதிவேகமாகப் பாய்ந்தாள் லிண்டா. அவள் சற்று வாட்டசாட்டமாக இருந்தாள். வாலிபால் எல்லாம் ஆடுவாள் போல!  பஸ்ஸைத் தாவிப் பிடித்த கையில் உறுதி தெரிந்தது.

வேட்டியை மடித்துக்கட்டி பஸ்ஸில் ஏற முற்பட்ட உள்ளூர் வீரர்கள் சற்று சோப்ளாங்கிகள். லிண்டாவிடம் இடிபட்டதில், நிலை தடுமாறி தொபுக்கடீரென கீழே விழுந்து விழி பிதுங்கினர்.

பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட ஒருவர் ”ஏம்மா, இப்டி முட்ற” என்று கத்த...

“எலே... கோ...” என லிண்டா பதில் சவுண்ட் விட, அவர் அரண்டு போய்...

“அம்மா.. தாயீ... ஆள வுடு” என கும்பிடுபோட்டு நகர, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஒருவழியாக நானும் பஸ்ஸில் ஏறினேன். ஒரு மூன்றுபேர் சீட்டைப் பிடித்திருந்தாள் லிண்டா. ஆனால்...

அடடா... நம்ப ஊர் டெக்னிக் முழுமையாக அவருக்குத் தெரியவில்லை. சன்னல் வழியாக கூடையைப் போட்டு அதில் ஒரு சீட்டைப் பிடித்திருந்த நபர், அங்கே வந்து கூடையைக் காட்டி, “அது என் சீட்” என்று அங்கலாய்த்தார்.

“ஓ, இட் ஈஸ் யுவர் பேக்?” என்று லிண்டா கூடையை எடுத்து அவரிடம் கொடுக்க, அந்த இடமே ஏக ரகளையானது.

நான் குறுக்கிட்டு விளக்க, “ஓ சாரி, டேக் யுவர் சீட்” என்று பார்டிக்குப் பெருந்தன்மையுடன் வழிவிட்டார். எமியும், குறவர்களும் வந்து சேர்ந்தனர். முதல் சீட்டில் எமி அமர, லிண்டா குறவப் பெண்ணின் குழந்தையை வாங்கி, வாஞ்சையோடு அதன் தலையைக் கோதி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.

சன்-சில்க் காணா கேசங்களும், ரின் காணா உடைகளும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மதர் தெரசாவைப் படித்திருப்பார்களோ?! பெரிய விஷயம்.

பஸ் புறப்படத் தாமதமாக, உள்ளே கூட்ட நெரிசலால் புழுங்கத் தொடங்கியது. எமியின் டி-சர்ட் வேர்வையில் நனைந்தது. அருகில் நின்று கொண்டிருந்த குறவப் பெண்,  எமியின் டி-சர்டின் முதுகுப்பகுதி U-கட்டை லேசாக இழுத்து (லேசாகத்தான்)   உள்ளே பூ... பூ... என்று ஊதத் தொடங்கினாள். எமியின் முகமும் வேர்க்கத் தொடங்க, குறவப் பெண் தன் முந்தானையால் விசிறவும் செய்தாள். இப்போது எமியின் முகத்தில் வேர்வைக்குப் பதில் கொள்ளை சந்தோசம். இந்த அபூர்வக் காட்சியில் என் மனம் லயித்தது. (விசிறியதில் எனக்குக் கூட கொஞ்சம் காற்று வந்தது!).

பஸ் புறப்பட இருவரும் பள்ளித் தோழிகள் போல அன்னியோன்யமாய்ப் பேசத் தொடங்கினர். எமி ஆங்கிலத்தில் எதையோ கேட்க, குறவப் பெண் அதற்கு தமிழில் பதில் கூறித் தன்பங்குக்கு எதையோ கேட்க அதற்கு எமி ஆங்கிலத்தில் பதில் சொல்ல, எனக்கு மண்டை கிறுகிறுத்தது.

எமியின் ஆக்சென்ட் எனக்கு பிடிபடவில்லை. குறவப் பெண்ணின் தமிழ் உச்சரிப்பும் என் செவிக்குள் நுழையவே இல்லை. இருவரும் கேட்டுக்கேட்டு, கூறிக்கூறி, மாறிமாறிப் பேசியதில் எனக்கு மயக்கமே வந்தது. என்னத்தான் பேசுகிறார்கள்?! எப்படித்தான் இது சாத்தியம்?!...

மெல்ல உண்மை புரியத் தொடங்கியது.

வார்த்தைகள் உச்சரிக்கவே தெரியாத குழந்தைப் பருவத்தில், நாம் தாயிடம் இப்படித்தானே பேசினோம்!

இரண்டு கள்ளமற்ற மனங்களின் உணர்வுகள் ஒன்றிவிட்டால்,  அது அன்பினில் நிறைந்து விட்டால், மொழிகளுக்கிடையே பேதமில்லை. வார்த்தைகளினூடே அர்த்தங்கள் இல்லை. நயன பாஷை, மெளன பாஷை, டெலிபதி ஆகியவை இதன் அடுத்தடுத்த நிலைகளே.

நிறம், மொழி, மதம், நாடு கடந்து அவர்கள் கொண்ட நட்பை மானசீகமாய்க் கைகூப்பி வணங்கினேன்.

என் ஊர் வந்துவிட, படியில் இறங்கிக் கொண்டே அவர்களை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். குறவப் பெண்ணின் குழந்தை, தன் தாய்மடி எனக் கருதியே, லிண்டாவின் மடியில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

Tuesday, August 24, 2010

சமஸ்கிருதமும் ஜாவாவும், தமிழும் டாட்நெட்டும்

கோவில்களில் சமஸ்கிருதமா தமிழா என்ற சர்ச்சை பல நாட்களாகத் தொடர்கிறது. என்னைப் பொருத்தவரை இரண்டையும் சமவிகிதத்தில் பயன்படுத்தலாம் என்றே நினைக்கிறேன். இதை, கணினி மொழிகளான ஜாவா (Java) மற்றும் டாட்நெட்டைக் (.Net) கொண்டு விளக்குகிறேன்.

நான் கல்லூரிகளுக்குச் செமினார் எடுக்கச் செல்லும்போது (அதைப்பற்றி ஒரு நகைச்சுவைப் பதிவு: முனியின் செமினார்)  மாணவக் கண்மணிகள் (இருபாலரையும் குறிப்பிட இதுதான் வசதியாக இருக்கிறது!) என்முன் வைக்கும் பிரதான கேள்வி: ஜாவா, டாட்நெட் இந்த இரண்டில் எதைப் படிப்பது?

இதில் எந்த மொழியில் ப்ரோக்ராம் எழுதினாலும் அவை ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ள மொழி கடந்த ப்ரோட்டோகால்கள் (Protocol) வந்து விட்ட நிலையில், நான் இரண்டையுமே படிக்கச் சொல்கிறேன்.

இப்போதெல்லாம் எந்த ப்ராஜெக்ட்டானாலும் சர்வர் கம்ப்யூட்டரில் (Server Computer) இயங்கும் ப்ரோக்ராம்களும், க்ளையண்ட் கம்ப்யூட்டரில் (Client Computer) இயங்கும் ப்ரோக்ராம்களும் எழுதி அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் வகையில் வடிவமைக்க வேண்டியிருக்கிறது. (Web ப்ராஜெக்ட்கள் விதிவிலக்கு).

பெரும்பாலான க்ளையண்ட் கம்ப்யூட்டர்கள் விண்டோஸில்தான் இயங்குகின்றன. இதில் நாம் பயன்படுத்துவதற்கு வசதியாக ப்ரோக்ராம் எழுத டாட்நெட் சிறப்பாக இருக்கிறது.

சர்வர் கம்ப்யூட்டர்களை இன்விசிபிள் (Invisible) கம்ப்யூட்டர் என்றும் சொல்வார்கள். எங்கே இருக்கின்றன, எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்க முடியாது. அவற்றின் பெயர் கொண்டு (உதா: yahoo.com) தொடர்பு கொள்ளலாம். அவை நீங்கள் கேட்கும் சர்வீஸைத் தரும். உதா: இமெயில்.

இந்த சர்வர்கள், இதில் பயன்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டம், கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும். அதனால் அனைத்திலும் இயங்கும்படி சர்வீஸ் ப்ரோக்ராம்களை வடிவமைக்க வேண்டியிருக்கிறது. இதற்கு ஜாவா சிறப்பாக உதவுகிறது.

ஆக, நான் கையாளும் ப்ராஜெக்ட்களில் இரண்டையுமே பாகுபாடின்றி சரியான விகிதத்தில் பயன்படுத்துகிறேன். அவை வெற்றியும் கண்டு கோலோச்சுகின்றன.

சரி, கோவிலுக்கு வருகிறேன். இங்கே இறைவன்தான் சர்வர்.  இவரும் கண்ணுக்குத் தெரிய மாட்டார். எப்படி இருப்பார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. நாம் கேட்கும் வரத்தை சர்வ் செய்வதால் இறைவனும் சர்வரே.

எங்கும் நீக்கமற இருக்கும், சர்வ வல்லமை படைத்த, உருவம் கடந்த பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட சக்தியாக சிவனாகவோ, விஷ்ணுவாகவோ (yahoo, google மாதிரி), ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் டியூன் செய்ய சமஸ்கிருதம் சிறப்பாக இருக்கிறது. இங்கே செய்யப்படும் ப்ரோக்ராம்கள்தான் யாகங்கள், யக்ஞங்கள், குடமுழுக்குகள். இவை சமஸ்கிருததில் இருக்கலாம் என்பது என் கருத்து.

பக்தர்களான நாம்தான் க்ளையண்ட். நம் சார்பில் செய்யப்படும் அர்ச்சனைகள், பூசைகள் தமிழில் நடந்தால் அது நமக்கு ரொம்ப வசதி.

தன்னிலை மறந்து மனமுருகிச் செய்யும் மொழி கடந்த பிரார்த்தனையே, நம்மையும் இறைவனையும் இணைக்கும் ப்ரோட்டோகால்.

ஆக, கடவுளென்றாலும் கணினியென்றாலும் எச்செம்மொழியும் நமக்குச் சம்மதமே.

Monday, August 16, 2010

என். சொக்கனின் ‘முத்தொள்ளாயிரம்’


மதராசபட்டினம் ஒரு கவிதையாய் நம்பளை அறுபது வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்லுமென்றால், செம்மொழிக் கவிதைகள் ஆயிரம் வருடங்கள் கூட பின்னோக்கி அழைத்துச் செல்லும். அப்படி சங்ககாலத்திற்கு அழைத்துச் செல்ல என்.சொக்கன் பயன்படுத்தியிருக்கும் காலயந்திரம் முத்தொள்ளாயிரம்.

சேர சோழ பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே முத்தொள்ளாயிரம். இலக்கியச் சுவை மிகுந்த இந்த நூலை, எஸ்.எம்.எஸ் மட்டுமே படிக்கும் இந்த தலைமுறைக்கும் புரியும்படி மறுபிறப்பெடுக்க வைத்திருக்கிறார் சொக்கன்.

”ஐயோ, வெண்பாவா? அதெல்லாம் நமக்கு ஒவ்வா!” என அலறி ஓடும் தமிழ்தாசர்களை நிறுத்தி, படித்துதான் பாரேன் எனச் சவால் விடுகிறது சொக்கனின் எளிய தமிழ் நடை.

பாடல்களின் மையக்கருத்தினைக் குழைத்து ஓரிரு வார்த்தைகளில் சுவாரஸ்யமாக இவர் வைத்திருக்கும் தலைப்புகளே இச்சவாலுக்கான அறைகூவல். உதாரணங்கள்: தீப்பிடித்த தண்ணீர், தரையில் வானவில், யானையின் வெட்கம், சிலந்தி (க)வலை, கவிதை எழுதும் யானைகள், சாவித்துளைக்கு நன்றி!

இதைத் தொடர்ந்து உடனடியாக பாடலுக்குச் சென்றுவிடாமல், ஒரு பக்கக் கதைகளைப் புனைந்திருக்கிறார். சங்கப் புலவர்களின் கற்பனைகளை சிறிதும் காயப்படுத்திவிடாமல், பாடல்களின் ஓட்டத்திலேயே தனது கற்பனை, நகைச்சுவை மற்றும் தற்கால மேற்கோள்களையும் அளவாக பதமாகக் கலந்து கதைகளை/விளக்கங்களை புனைந்திருக்கிறார். 

புலவர்களிடம் கற்பனை வளம் செழித்திருந்திருக்கிறது. அதில் சில புன்னகைக்க வைக்கின்றன. சில ”அட!” போட வைக்கின்றன. சில ”வாவ்!” சொல்ல வைக்கின்றன. அத்தனைக்கும் அடித்தளமமைப்பது சொக்கனின் விளக்கக் கதை. 

உதாரணமாக இமையார் என்று தேவர்களைக் குறிப்பதை, எந்நேரமும் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை என்று பேரழகிகளைப் பார்த்துப் பழகியதாலோ என்னவோ, தேவர்களின் கண்கள் எப்போதும் இமைப்பதில்லை என்று சுவையாக விரித்திருக்கிறார் (ஏனோ மேனகையை டீலில் விட்டுவிட்டார்).

கதையைத் தொடர்ந்து பாடலையும், அதன் பின் சில சொற்களுக்கான அர்த்தங்களை குட்டி டிக்ஸனரி போலவும் கொடுத்திருக்கிறார்.

சுவையான விளக்கத்தை படித்தபின் பாடலைப் படிக்கும்போது, அது தெளிவாகப் புரிகிறது. அறியாத சொற்களின் அர்த்தத்தையும் ஊகிக்க முடிகிறது. பின்தொடரும் டிக்ஸனரியில் அதைச் சரிபார்க்கும்போது, அட நமக்கும் தமிழ்ப்புலமை கிட்டுகிறதோ என்று துள்ளிக் குதிக்கத் தோன்றுகிறது. நன்றி சொக்கன். நிச்சயம், பாடலெழுதிய புலவர்களின் ஆன்மா தங்களை வாழ்த்தும்.

இப்புத்தகத்தைப் படிக்க தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. விளக்கங்கள் ஜெட் வேகத்தில் பறப்பதால் கிடைக்கும் ஐந்து நிமிட அவகாசத்திலும் ஒரு பாடலைப் படித்துவிடலாம். சொக்கனின் கைவண்ணத்தில்... ஸாரி... எழுத்து வண்ணத்தில் பாடலின் நல்ல சொற்றொடர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. சமயத்தில் அவை பயன்படும்.

உதாரணமாக, உங்கள் மனைவி பொட்டிட்டு வருகையில், “திலகம் கிடந்த நல்நுதலாய்” எனக்கொஞ்சி செல்லமாகக் குட்டு வாங்கலாம். (மாறாக, “ஐயோ என் புருஷனுக்கு கிறுக்கு புடிச்சிடுச்சு” என்று உங்கள் அன்பு நாயகி அலறினால் அதற்கு சொக்கனோ, நானோ பொறுப்பல்ல!)

அனைத்து பாடல்களும் நான்கடி (நான்கு வரிகள்) கொண்ட பாக்கள். ஆனால் பல பாடல்களில் கருத்து இரண்டு அடிகளிலேயே முடிந்து விடுகிறது. ஓரடி மன்னனை,  தேர்ந்தெடுத்த மலர்மாலையை அணிந்தவனே, ஆய்ந்தெடுத்த மணிகளைச் சூடியவனே, கடல்சூழ் உலகை ஆள்பவனே என்றெல்லாம் புகழ்ந்து பாராட்டவும் (சேனைத் தலைவனுக்குப் பாராட்டு விழா!) அடுத்த அடி இணைப்புச் சங்கிலியாகவும் செலவிடப்பட்டிருக்கிறது. இத்தகைய குறுகிய பாடல்களை ஒரு பக்கக் கதைகளாக வடித்திருப்பது சொக்கனின் தனித்திறமை. வணக்கங்கள் சொக்கன்.

இக்கதைகள் குழந்தைகளுக்குச் சொல்ல பெரிதும் பயன்படும். அன்றைய அன்னை குழந்தைக்கு வீரம் ஊட்டினாள். இன்றோ செரிலாக்தான் ஊட்டுகிறாள். நாம் குறைந்த பட்சம் வீரக் கதைகளைச் சொல்லி சோறும் உடன் கொஞ்சம் தமிழையும் ஊட்டலாம் (பசலை படியும், சங்கு வளையல்கள் கழன்று விழும் காதல் கதைகள் சொல்வதற்கில்லை, அவை நமக்கு மட்டும்!) .

இவ்வளவு பயனுடன் எளிமையாக சொக்கன் எழுதினாலும், அவரது பணி எளிமையானதல்ல என உணரமுடிகிறது. ஒவ்வொரு பாடலையும் தீவிரமாகப் படித்து அலசியிருக்கிறார். காதல் பாடல்களுக்கு, திருக்குறள் கா. பாலிலிருந்து வரும் மேற்கோள்களும், ஓரிடத்தில் வரும் குறுந்தொகை, கலிங்கத்துப்பரணி மேற்கோள்களும் அவரது உழைப்பை பளிச்சிடுகின்றன. வாழ்த்துக்கள் சொக்கன்.

சேரனைவிட (கோதை) சோழனிடத்திலும் (கிள்ளி), சோழனைவிட பாண்டியனிடத்திலும் (மாறன்) பலவகைகளில் பாடல்கள் இருக்கின்றன. அவற்றை ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.

முடித்தபோது சந்தோஷத்துடன் ஒரு ஏக்கமும் இணைந்தது. மூன்று தொள்ளாயிரம் பாடல்களில் வெறும் 108 மட்டுமே கிடைத்திருக்கிறதாம். அவையே இவ்வளவு சுவையென்றால்....

மற்ற பாடல்களில் சில நூறாவது கிடைக்க காலமும், அவற்றை சொக்கன் எழுத தமிழன்னையும் அருள வேண்டுகிறேன் தொழுது.

Thursday, July 8, 2010

பிரெஞ்சுப் புரட்சி

நாங்கள் படித்த யுனிவெர்சிட்டியில் பல வசதிகள். ஒரே சமயத்தில் இரண்டு மூன்று கோர்ஸ்கள் படிக்கலாம். அல்லது குறைந்த பட்சம் மற்ற டிபார்ட்மெண்ட்களுக்குச் சென்று பிடித்தமான பேப்பர்களைத் தேர்ந்தெடுத்தும் படிக்கலாம்.

படிக்கும் ஐ.டி துறைமூலம் விரைவிலேயே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து, உலகம் சுற்றும் வாலிபர்களாகப் போகிறோம் என்ற கனவில் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்ததால், லிங்குஸ்டிக் டிபார்ட்மெண்ட் சென்று ஒவ்வொரு செமஸ்டரிலும் ஒரு உலக மொழியைக் கற்கலாம் என்று முடிவெடுத்தோம்.

கடைசி செமஸ்டரில் கேம்பஸ் இண்டர்வியுவிற்கு வரும் முதல் கம்பெனிக்கு ஜப்பானில் கிளை இருப்பதால் முதலில் ஜப்பானிய மொழியைத் தேர்ந்தெடுத்தோம்.

எங்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்... ஸாரி... ஜப்பானிய ஆசிரியை மிக அழகாக அம்மொழியைக் கற்றுக் கொடுத்தார்.

போஸ்ட் கிராஜுவேட் படிக்கும் வயதில் கிள்ளை பிள்ளைகளாட்டம் ”எ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பனானா” என்ற ரீதியில் கோரஸாகப் படிப்பதும், முதன் முதலாக ஸ்லேட்டில் பலப்பம் பிடித்து எழுதுவது போல மொழியின் எழுத்துக்களை வரைவதும் (அம்மொழியின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு பூச்சியின் படம் போல வேறு இருந்தது) தமாஷாக இருந்தது.

எனக்கு மட்டும் ஒரு சின்ன வருத்தம். அவருக்கு ’ர’ உச்சரிப்பு வராமல், என்னை ”லகுலாம், லகுலாம்” என்று அழைத்துக் கொண்டிருந்தார்.

(ஆனால், கணையாழியின் கடைசி பக்கங்களில் தன் ஜப்பானிய பயண அனுபவத்தைச் சொல்லும் சுஜாதா, அவர்களுக்கு ’ல’ க்கு பதில் ’ர’ தான் வருகிறது என்கிறார். “புர்ரட் ட்ரெயின், புர்ரட் ட்ரெயின்” என்று அவர்கள் சொன்னது “புல்லட் ட்ரெயின்” என்று வெகு நேரத்திற்குப் பின்பே தனக்கு புரிந்தது என்றும் சொல்கிறார். ஒரு வேளை அந்த ஆசிரியை இந்தியா வந்துவிட்டதால் லகரமும், ரகரமும் இடமாறிவிட்டதோ?!)

சின்னஞ்சிறு கண்களுடன், எப்போதும் சிந்தும் புன்னகையுடன், ஒரு குழந்தைக்கு கற்றுத் தரும் கனிவுடன் அவர் பாடம் நடத்தியவிதம் எங்களை பிரைமரி ஸ்கூலின் கபடமற்ற நினைவுகளில் தாலாட்டியது.

நான்கு ஜப்பானிய வார்த்தைகள் கற்றுக் கொண்ட குஷியில், ‘அனதாவா ஜென்கி தேசுகா (நீங்கள் சௌக்கியமா)?, சயோனாரா மாதாஆய் மாசோ (டாடா பை பை) ’ என்றெல்லாம் எதிர்பட்டவர்களிடம் பேசி, அவர்கள் முகம் வெளிர வைத்தோம்!

ஒரு மொழியைக் கற்கும்போது பரிசயமற்ற உச்சரிப்புகளில் நா பிறழ்வதும், புதிய புதிய வார்த்தைகளின் நளினத்தில் மனம் புரள்வதும் ஒரு சுகானுபவம்.

அந்த அனுபவம் தந்த உற்சாகத்தில், அடுத்த செமஸ்டரில் எந்த மொழியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று, நண்பர்கள் ஒன்று கூடி விவாதித்தோம். அப்போது, என்னுடைய ஐ.பி.எல் பதிவின் நாயகன் கிருஷ்ணன் எங்கள் முன் தோன்றி, பிரெஞ்சு மொழியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று ஆலோசனை கூறினார். தான் பிளஸ்ஒன் முதலே அதைப் படித்ததாகச் சொல்லி, அம்மொழியின் அருமை பெருமைகளையெல்லாம் சிலாகித்துச் சொன்னார்.

ஆஹா, பிரெஞ்சு மொழியைக் கற்று, அப்படியே கன்கார்ட் விமானத்தில் லண்டனிலிருந்து பாரிஸூக்குப் பறந்து, ஈஃபிள் டவர் அருகே நின்று எதிர்ப்படுபவர்களிடம் ”மான்சியூர்” சொல்லி போட்டோவெல்லாம் எடுத்துக் கொள்ளலாம் எனக் கனவு கண்டோம்.

முதல் நாள் வகுப்பு. பிரெஞ்சு ஆசிரியையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால் வந்ததோ ஒரு உள்ளூர் ஆசாமி. சிரிப்பை பாதாள லோகத்தில் புதைத்து விட்டார் போல; சுரத்தே இல்லாமல் வகுப்பெடுத்தார்.

ஜப்பானிய பாஷை கடினமாக இருந்தாலும் கற்க முடிந்தது. ஆனால் பிரெஞ்சு பாஷை ரெண்டுங்கெட்டானாக இருந்தது. சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் ரொம்பவே மெனக்கெட வேண்டியிருந்தது. எண்ணிக்கையைச் சொல்ல இருபதுக்கு மேல் வார்த்தைகளே இல்லை. உதாரணமாக 97 என்பதை ‘குவாதர் வான் திசெப்ட்” என்று சொல்ல வேண்டும். குவாதர் என்றால் நான்கு, வான் என்றால் இருபது, திசெப்ட் என்றால் பதினேழு. அதாவது நான்கு இருபது பதினேழு என்று சொல்ல வேண்டும். என்ன கொ. சரவணா இது?!

இதைவிடக் கொடுமை, எழுத்துக்கள் ஆங்கிலம் போன்றே இருந்தாலும், உச்சரிப்பிற்கும் ஸ்பெல்லிங்கிற்கும் சம்பந்தமே இல்லை. இந்த வான்-னுக்கான ஸ்பெல்லிங் Vingt. பொதுவாக எழுத்தைக் கூட்டி படிக்கச் சொல்வார்கள். இங்கே சில எழுத்துக்களை கழித்துப் படித்தாலும் உச்சரிப்பு வரவில்லை. உச்சரிப்பைப் படித்தால் தியரி எக்ஸாமிலும், ஸ்பெல்லிங்கைப் படித்தால் வைவாவிலும் பெயிலாகி அழ வேண்டியதுதான்.

எங்களை பெயிலின் பாதைக்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணனை பார்க்கும் போதெல்லாம் காது புகைந்தது. பரீட்சையும் வந்து விட்டது. முதலில் வருவது தியரியாதலால், டைப்ரைட்டிங் கிளாசில் ஆங்கிலமே தெரியாமல் ஒவ்வொரு எழுத்தாக டைப் அடித்தது போல, உருப்போட்டு மனனம் செய்து பரீட்சையை எழுதிவிட்டேன்.

மறுநாள் வைவா. ஹாஸ்டலில் கிருஷ்ணன் மடையான தண்ணி குடித்து சொல்லிக் கொடுத்தார். மற்றவர்களெல்லாம் தட்டுத்தடுமாறி கற்க, நம்ம மூளைக்கு உச்சரிப்பு ஏறவே இல்லை. இரண்டாவது பக்கத்தை படிக்கும் முன்பே முதல் பக்கம் அடியோடு மறந்து போனது. ”போடா, நீயும் உன் பிரெஞ்சும்” என்று சலித்துக் கொண்டு தூங்கச் சென்றேன். “டேய், பொறுப்பில்லாமல் படுக்காதே, நிச்சயம் பெயிலாயிடுவே” என்று அவர் திட்டிக் கொண்டிருக்க, அதை சட்டை செய்யாமல் தூங்கியே விட்டேன்.

விடிந்தது வைவா தினம். முதலில் சென்றுவந்த நண்பன், ”நமது பிரெஞ்சு புத்தகத்திலிருந்து ரேண்டமாக ஒரு பக்கத்தைப் பிரித்து, அதைப் படித்து அர்த்தமும் சொல்லச் சொல்கிறார்கள்” என்றான். அட அவ்வளவுதானா... ஒரு சுலபமான பக்கத்தை தேர்ந்தெடுத்து, அதை சொல்லிக் கொடுக்க கிருஷ்ணனை விளித்தேன். “இத மட்டும் படிச்சு என்னடா பண்ணபோற?” எனப் புலம்பிக் கொண்டே சொல்லிக் கொடுத்தார். அந்த பக்கத்தை ஒரு பத்து தடவை நன்றாக படித்துக் கொண்டேன்.

என் திட்டம் இதுதான். சுண்டு விரலை புக்மார்க்காக வைத்து புத்தகத்தை மூடிக் கொள்வது. எப்பக்கத்தைக் கேட்டாலும், இப்பக்கத்தை தற்செயலாக திறப்பது போல் நடித்து படிக்கத் தொடங்கிவிடுவது. பிறகு நடப்பது அந்த சாட்சாத் கிருஷ்ணன் விட்ட வழி (வேறு என்னதான் செய்ய?!).

என் முறை வர உள்ளே சென்றேன். அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வருவது அதுதானோ? நான் படித்த இருபத்தி ஏழாவது பக்கத்தைதான் எக்ஸ்டர்னல் திறந்து வைத்தார். அதை ஓரக் கண்ணால் கவனித்துவிட்ட நான், டக்கென சுண்டுவிரலை எடுத்து விட்டு, நிதானமாக அமர்ந்து...

’வார்ம் கீரீட்டிங்ஸ் இன் திஸ் பிளசண்ட் மானிங்’ என்றேன்.

“ஹொ... வெல்கம்.. யு லுக் ஸோ ரிலாக்ஸ்ட்” என்றார். (பின்னே இருக்காதா?)

’வாட்ஸ் தி பேஜ் நம்பர் சார், ஈஸ் ட் ட்வெண்டி செவன்? ஜஸ்ட் எ செகண்ட்’... அப்பக்கத்தை புரட்டி, நெப்போலியன் பூமியில் பிறந்தவன் போல் மடமடவென படித்து அர்த்தத்துடன் அடுக்க...

”ஹோ.. ஹவ் ஃபுலூயண்ட் யு ஆர்... தட்ஸ் இனஃப்” என்றார்.

”தட் ஈஸ் யுவர் ஜெனராசிட்டி, அதர்வைஸ் வாட் ஆம் ஐ?” என்று நன்றி கூறி, ‘கிருஷ்ணா, இதுவல்லவோ உன் லீலா’ என்று புல்லரித்தபடி வந்து விட்டேன்.

அடுத்தது நண்பர் கிருஷ்ணனின் முறை. அவருக்கு மிகக் கடுமையான பகுதி வர, அவர் தன் புலமையைக் காட்டப் போக, ஏதோ களேபரம் ஆகியிருக்கிறது.

ரிசல்டைப் பார்த்தால், ஐந்து வருடம் படித்த அவருக்கு C கிரேடும், ஐந்து நிமிடம் படித்த எனக்கு B கிரேடும் கிடைத்திருந்தன.

Friday, June 25, 2010

ட்விட்டருக்கு ஆபத்து?


உலக கோப்பை கால்பந்தாட்ட ஜூரத்தின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், அதன் ரசிகர்கள் எழுதும் ட்வீட்ஸ் (Tweets)-களின் எண்ணிக்கையை தாக்குப் பிடிக்க முடியாமல் ட்விட்டர் நிலைகுலையக் கூடும் என்று சில மென்பொருள் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதைப் படிக்கையில் எனக்கு சிரிப்புதான் வந்தது. ஏனென்றால், "எத்தனை கோடி டேட்டா (data) தந்தாய் உலகே" என்று ஜாலியாகப் பாடிக் கொண்டிருக்கும் ட்விட்டர், இன்னும் எத்தனை கோடி டேட்டா தந்தாலும், இது எனக்கு கவுரவப் பிரசாதம் என்று ஸ்வாஹா செய்து விடும். காரணம் அது ட்வீட்ஸ்களை சேமிக்கும் டேட்டாபேஸ் (Database)-ஐ கட்டிக் காப்பது சர்வ வல்லமை பொருந்திய இளவரசி காசண்ட்ரா (Cassandra).

பண்டைய துருக்கி நாட்டின் புகழ்பெற்ற ட்ராய் (Troy) நகரின் இளவரசி காசண்ட்ராவிற்கும் ட்விட்டருக்கும் என்ன சம்பந்தம்? இதன் நதிமூலம் கூகுள். அங்கிருந்தே விளக்குகிறேன்.

இன்று இன்டர்நெட்டின் மொத்த ட்ராஃபிக்-இல் 45 சதவீதம் கூகுளை நோக்கியே. கூகுள் எப்படி இதைத் தாக்கு பிடிக்கிறது? அது எப்படி அதன் டேட்டாவை சேமித்து வைக்கிறது? எதைக் கேட்டாலும் எப்படி அதனால் உடனே தர முடிகிறது என்றெல்லாம் யோசித்ததுண்டா?

ஒன்று வாங்கினால் இன்னொன்று ஃப்ரீ, மாடு வாங்கினால் ஆடு ஃப்ரீ, ஆடு வாங்கினால் வாத்து ஃப்ரீ என்ற ரீதியில் மற்ற நிறுவனங்களெல்லாம் செயல்பட, நீ எதுவுமே வாங்க வேண்டாம் ராசா, உனக்கு எல்லாமே ஃப்ரீ என்று எப்படி கூகுளால் தர முடிகிறது என்றாவது யோசித்ததுண்டா?

பொதுவாக பெருமளவு டேட்டாவை சேமிக்க பெரிய பெரிய ஹார்ட்வேர் (hardware), டேட்டாபேஸ் சர்வர்கள் (database servers), சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றில் மில்லியன் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் கூகுள் தனக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இதற்கு வீணடிக்காமல் மாத்தியோசித்தது.

டேட்டா தின்று கொட்டை போட்ட Oracle, SQL Server ஆகியவற்றை ஒதுக்கித்தள்ளி பிக் டேபிள் (Big Table) என்ற புதிய டேட்டாபேஸ்-ஐ உருவாக்கிக் களமிறக்கியது. இது மின்னல் வேகத்தில் செயல்படக் கூடியது. ஆனால் இதனை சாதாரண கம்ப்யூட்டரில் கூட நிறுவ முடியும். மலிவான சிறிய சிறிய கம்ப்யூட்டர்களை பிக் டேபிளுடன் உலகெங்கும் நிறுவி அவற்றை மேகம் போன்ற ஒரு நெட்வொர்க்-கில் இணைத்தது.  இதற்கு க்ளவுட் கம்யூட்டிங் (Cloud Computing) என்று பெயர்.

இந்தக் க்ளவுடில் இருக்கும் கம்ப்யூட்டர்கள், "என்கிட்ட இது இருக்கு, உன்கிட்ட என்ன இருக்கு, நீ இத வச்சுக்கோ, நான் இத வச்சுக்கிறேன்" என்றெல்லாம் வளவள லொடலொட எனப் பேசி டேட்டாவை பண்டமாற்றிக் கொள்ளும். இதற்கு காஸிப் ப்ரோட்டோகால் (Gossip Protocol) என்று பெயர். இதன் மூலம் இந்த நெட்வொர்க்கில் ஒரு கோடியில் நுழையும் டேட்டாவானது சில நிமிடங்களிலேயே மேகமாக ஆனால் சற்று வேகமாக நகர்ந்து, வழியெங்கும் பிரதி (copy) எடுத்தபடியே, மறு கோடிக்குச் சென்று விடும். இதனால், உலகின் எந்த மூலையிலிருந்து கேட்டாலும், உங்களுக்கு அருகிலுள்ள கூகுளின் கம்யூட்டர் "இதானே கேட்டீங்க, இந்தாங்க வெச்சுக்கோங்க" என உடனே கொடுத்துவிடும். இதுவே கூகுள் வெற்றியின் ரகசியம்.

கூகுள் தன் பிக் டேபிளின் சூட்சுமங்களை வெளி உலகிற்குக் கோடிட்டுக்காட்ட, அதை வைத்து ஃபேஸ்புக் (Facebook), கணினிச் செம்மொழியான ஜாவாவைப் (Java) பயன்படுத்தி, பிக் டேபிள் என்ற சக்ரவர்த்திக்கு மகளாக ஒரு புதிய டேட்டாபேஸ்-ஐ உருவாக்கியது. அதற்கு காசண்ட்ரா என்ற நாமகரணமும் சூட்டியது. ஆக துருக்கி தேச இளவரசி, இப்பிறவியில் டேட்டாபேஸ்-ஆக அவதரித்து விட்டாள். ஆனால் ஃபேஸ்புக்கில் அவள் வளர போதுமான வசதிகளில்லை.  Apache.org என்ற ஓபன் ஸோர்ஸ் (Open Source) அரண்மனைக்கு அவள் அனுப்பப்பட்டாள். அங்கே அவள் சகல வித்தைகளையும் கற்று, யௌவனங்கள் நிறைந்த அரசிளங்குமரியாய்த் திரும்பி ஃபேஸ்புக்கில் அரியணை ஏறினாள்.  அன்று முதல் ஃபேஸ்புக்கின் முகம் மேலும் பிரகாசிக்கத் தொடங்கியது.

காசண்ட்ராவின் கொடியிடை அழகிலும் (Smallest Database), ஆட்சித் திறத்திலும் (Replicating the database), மாட்சித் திறத்திலும் (Maintaining the database) மயங்கிய ட்விட்டர் அவள் தலைமையை ஏற்றது (அப்பாடா!! கூகுளில் தொடங்கி ஃபேஸ்புக் வழியாக ட்விட்டரில் முடித்து விட்டேன்!). Digg.com, Outbrain.com போன்ற ஜாம்பவான்களும் தங்களை காசண்ட்ராவுடன் இணைத்துக் கொண்டன.

காசண்ட்ராவின் ஆட்சி விரியத் தொடங்கியது. அவள் சாம்ராஜ்யத்தில் கால்பந்தாட்ட மைதானங்களெல்லாம் கால் தூசிற்குச் சமம். இப்போது நான் சிரித்ததன் அர்த்தம் புரிகிறதா?!!

பெரும் ராஜ்ஜியங்களைப் பிடித்தபின், குழந்தையிடம் விளையாட வருவது போல் காசண்ட்ரா இப்போது என்னிடம் வந்துள்ளாள். டெரா பைட்ஸ் (Tera Bytes) கணக்கில் டெட்டா புரளும் என் ப்ராஜெக்ட்-ன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நான் பணிபுரியும் கம்பெனியில் இளவரசியை களமிறக்கிக் கொண்டிருக்கிறேன்.

Saturday, June 12, 2010

பேர் சொல்லாத பிள்ளை

மறதி ஒரு வரப்பிரசாதம். சிலவற்றை மறக்க முடிவதால்தான் வாழ்க்கை தொடர்கிறது. ஆனால், இதெல்லாம் மறக்கும், இப்படியெல்லாம் மறக்கும் என்ற நிலைகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, மறக்கவே கூடாத, மறக்கவே முடியாததை நான் மறந்திருக்கிறேன். குழம்புகிறதா? சொல்கிறேன்!

அப்போது நான் ஏழாங் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். வேறொரு பள்ளியில் கட்டுரை போட்டி. அப்பள்ளியின் பி.டி மாஸ்டர் தான் போட்டிக்குச் சூப்பர்வைசர். அவர் மிலிட்டரியிலிருந்து ரிடையர் ஆனவராம். இன்னமும் அதே மிடுக்குடன் அறிவித்தார்.

"போட்டி நேரம் இருபது நிமிடம் மட்டுமே. அதற்குள் கண்டிப்பாக எழுதி முடித்து விட வேண்டும்" என கட்டளையிட்டு விசிலடித்தார்.

என்னுடைய கட்டுரைக்கு இருபது நிமிடம் ரொம்ப குறைவு என்பதால், உடனடியாக பரபரவென எழுதத் தொடங்கினேன். மிலிட்டரி அடுத்த அறிவிப்பை செய்திருக்கிறார். “இப்பொழுதே உங்கள் பெயர், வகுப்பு, பள்ளி ஆகியவற்றை, பேப்பரின் வலது ஓரத்தில் எழுதி வைத்து விட வேண்டும்.” இருபது நிமிடம் முடிந்த உடனேயே பேப்பரை வாங்கி விடுவேன் என சொல்லியிருக்கிறார். ஆனால் எழுதும் மும்முரத்தில் அதை நான் கவனிக்கத் தவறியிருந்தேன்.

இரண்டொரு முறைதான் கண் சிமிட்டியிருப்பேன். அதற்குள் இருபது நிமிடம் கரைந்து விட்டது. மிலிட்டரி மீண்டும் விசிலடித்து "ஸ்டாப்... ஸ்டாப்..." என கத்தியதோடு மட்டுமில்லாமல் எல்லோரிடமிருந்து பேப்பரை பிடுங்கவும் தொடங்கியிருந்தார்.

இன்னும் ஒரு பத்தி மட்டுமே பாக்கி. எப்படியாவது முடித்து விட பெஞ்ச் அதிர எழுதிக் கொண்டிருந்தேன். அதற்குள் என் பேப்பரை பிடுங்கி விட்டார்.

”சார்.. சார்.. பேர் எழுதல.... ”

பளார்!!!!!!

”எழுதுடா... எழுத சொன்னபோது என்ன பண்ணிட்டிருந்த” என கர்ஜித்தார்...

வாங்கிய அறையில் உடம்பு நடுங்கியது... கன்னம் ஜிவுஜிவுத்தது... கையில் உதறல் எடுக்க, பேனா பூரானாய் நெளிந்தது... பெயரெழுத முனைந்தேன்... ர... ர... ர.... அதற்கு மேல் எழுத்து வரவில்லை... விழி பிதுங்கியது... மூச்சு ஸ்தம்பித்தது... ஐயோ கடவுளே...

”டேய், சீக்கரம் எழுதுடா...”

”சார்... சார்... பேர் மறந்து போச்சு சார்....”

”என்னது??” மீண்டும் அவர் உறும எனக்கு அழுகையே வந்து விட்டது...

அதற்குள் பின்னாலிருந்த பையன் இன்னமும் எழுதிக் கொண்டிருக்க அவனை நோக்கி பாய்ந்துவிட்டார். நின்ற மூச்சு வந்தது. ஆனால் போன பெயர்தான் நினைவிற்கு வரவில்லை.

பக்கத்தில் நிதானமாக கிளம்பிக் கொண்டிருந்த நண்பனை அழைத்து கேட்டேன்... ”டேய்.. என் பேர் என்னடா?”

அவன் என்னை வினோதமாக பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் சென்று விட்டான்.

'ஐயோ.. என்பேர் என்ன?'.. மண்டை கிறுகிறுத்தது... ஏதாவது ஒரு பாட புத்தகம் எடுத்துப் போயிருந்தால் லேபிள் பார்த்துக் கண்டுபிடித்திருக்கலாம்.

அப்போது எனக்காக வாயிலில் காத்துக் கொண்டிருந்த மற்றொரு நண்பன் சொன்னான்...

"டேய் ரகு, என் அப்பா வந்துட்டார்... நான் கிளப்பறேன்..."

'ஆங்.. ரகு...' எழுதி விட்டேன்.

'ஐயோ, இது பாதி பேர் தானே... மீதி பேர் என்ன?'

அதற்குள் மிலிட்டரி திரும்பி வர இன்னொரு அறைக்கு பயந்து பேப்பரை மடித்துக் கொடுத்து விட்டு திரும்பி பார்க்காமல் வெளியே ஓட்டமாய் ஓடி வந்து விட்டேன்.

தெருவில் பாதி பெயர் கொண்ட பையனாய் நடந்து கொண்டிருந்தேன். கன்னம் இன்னமும் வலித்துக் கொண்டிருந்தது. அதைவிட பெயரைத் தேடி மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. ஐயோ.. நான் யாரு, எனக்கு வைத்த பெயர் யாது? என்றெல்லாம் எழுதலாம் தான். ஆனால், அந்த வயதில் கவிதையாவது, மோனையாவது... என் பெயரில் யாராவது கடை வைத்திருக்கிறார்களா என்று ஒவ்வொரு கடையின் பெயர் பலகையை படித்துக் கொண்டே நடந்தேன்.

அப்போது என் பக்கத்து வீட்டுக்காரர் எதிரே வந்தார். அவருக்கு நான் போட்டிக்குச் சென்றது தெரியும். அவரிடம் என் மீதிப் பெயரை கேட்கலாமா என யோசித்தேன். எப்படி கேட்பது என தயங்கினேன். ஆனால் அவரோ நிலைமை தெரியாமல் திருவிளையாடல் படத்தில் சிவபெருமான் தருமியிடம் கேட்பது போல..

”தம்பியே.. பரிசு கிடைத்ததா..?” என்று கேட்டார்.

”அறை ஒண்ணுதான் கெடச்சுது...” என கடுப்பில் முணுமுணுத்துவிட்டு நகர்ந்தேன்.

சிறிது தூரத்தில் கோதண்ட ராமர் பஜனை கோயிலை கடந்தேன். 'ராமா... இது என்ன சோத... ஹாங்... ராமன்...'

“யுரேகாஆஆஆ... கண்டு பிடிச்சிட்டேன்... கண்டு பிடிச்சிட்டேன்... நான் ராமன்.. ரகுராமன்...” என கத்தியபடியே ஓடி என் வீட்டுக் கண்ணாடி முன் மூச்சிறைக்க நின்றேன்.

‘ரகுராமா... கொஞ்ச நேரம் காணாம போய்ட்டியேப்பா’ என சந்தோசத்தில் கதறினேன். உற்றுப் பார்த்தால், மிலிட்டரியின் மூன்று விரல்கள், செவ்வரிகளாய் என் கன்னத்தில் பதிந்திருந்தன.

ஹூம், அந்த ராமன் பரிவுடன் தடவியதில், அணிலுக்கு மூன்று கோடு விழுந்ததாம். என் கன்னத்தில் விழுந்த மூன்று கோடுகளை ரகுராமனாகிய நான் பரிவுடன் வெகுநேரம் தடவிக்கொண்டிருந்தேன்.

Tuesday, June 8, 2010

இடி அமீன்கள்...

இன்று காலை நான் வேலை செய்யும் ஐ.டி பார்க்கினுள் நுழையும் போது, எதிரில் வந்தவர் பலமாக இடித்து விட்டார். தினமும் ஒரு நூறு பஸ்கி எடுப்பார் போல. அவரின் ”திண்”ணென்ற தோள் இடித்ததில் எனக்கு ”விண்”ணென்று வலித்தது. ஆனால் அவரோ, எதையும் சட்டை செய்யாமல், தன் பாட்டுக்கு ஏதோவொரு கனவுலகில் சஞ்சரித்தபடி சென்று விட்டார்.

கடந்த பத்து நாட்களில், இந்த ஐ.டி பார்க்கினுள்ளேயே நான் படும் மூன்றாவது இடி இது. நான்கு நாட்களுக்கு முன், லிஃப்டில் தரை தளத்திற்கு வந்து கொண்டிருந்தேன். அருகில் யாருமில்லாததால், ஹாயாக நின்று கொண்டு,

அடடா மழடா... அட மழடா...

என்று சன்னமான குரலில் முணுமுணுக்க, தரை தளத்தில் லிஃப்ட் திறந்தது. ஒரு பத்து பேர், தரையையே பார்த்தபடி ஒருவரை ஒருவர் முண்டிக் கொண்டு, என்னையும் முட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தனர். கர்ச்சீப் போட்டு சீட்டா பிடிக்கப் போகிறார்கள்? அட! ஒருவர் கூட நான் வெளியே போக வழியே விடவில்லை!

ஆபீஸாக இருந்தாலும் சரி, ஹாஸ்பிட்டலாக இருந்தாலும் சரி, சொல்லி வைத்தது மாதிரி, வெளியே போக வழி விடாமல், டவுன் பஸ்ஸில் ஏறுவது போலத்தான், பெரும்பாலானவர்கள் லிஃப்டினுள் நுழைகிறார்கள். ஒரு பக்கம் வழி விட்டபடியாவது நுழையலாம்! இந்த அடிப்படை யோசனை கூட இல்லாமல் ஏதோ கோட்டையைப் பிடிப்பது போல வாயிலை அடைத்தபடி நுழைகிறார்கள்.

ஒரு வழியாக வெளியே வந்து பெருமூச்சு விட்டேன். கதவு மூடிக் கொள்வதற்குள் நுழைந்து விட, மேலும் இரண்டு பேர் வேகமாக ஓடி வந்து, Y ஷேப்பில் பிரிந்து, என் இரு தோள்களையும் ஆளுக்கு ஒன்றாக இடித்துத் தள்ளி, லிஃப்டினுள் பாய்ந்து விட்டனர். அவர்களை பிடித்து சண்டை போடுவதற்குள், லிஃப்ட் மூடிக் கொண்டது. லிஃப்ட் மீண்டும் வர அரை மணியா ஆகப் போகிறது? ஏன் இந்த அவசரம்!? என்ன மனிதர்கள் இவர்கள் என நொந்தபடி நடக்க, ஈனமான குரலில் உதடு முணுமுணுத்தது...

அடடா இடிடா... இடி மழடா...

இதெல்லாம் பரவாயில்லை. முதல் இடிதான்... இல்லை மிதிதான் ரொம்ப மோசம். என் ஆபீஸுக்குள்ளேயே நடந்தது. ஆபீஸ் வளாகம் என்ற இங்கிதம் கூட இல்லாமல், இரண்டு பேர் சத்தம் போட்டு அட்டகாசமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர், மானாட மயிலாட எல்லாம் தோற்கும்படி கை காலை உதைத்தபடி தன்னிலை மறந்து பேசிக் கொண்டிருந்தார்.

நான் சற்று எச்சரிக்கையாகத்தான் அவர்களை கடந்தேன். இருந்தும் அந்த மானானவர் பின்னாலே ஆடி நகர்ந்ததில் ஓங்கி என் காலை மிதித்து விட்டார். என் ஷூவையும் மீறி, சுண்டு விரல் எறும்பாய் நசுங்கிவிட்டது. வலி பொறுக்காமல் ஷூவைக் கழற்றி, சாக்ஸைக் கழற்றி விரலை தேய்த்துவிட்டேன்.

ஒரு நிமிடம் கழித்துதான், அந்த மானுக்கு தான் உதைத்தது தரையல்ல என உறைத்திருக்கிறது. திரும்பி பார்த்து விட்டார். ஸாரி கேட்கப் போகிறார் போல! வலியையும் மீறி பரவாயில்லை என்று சொல்ல என்னை திடப்படுத்திக் கொண்டேன்.

ஆனால் அவரோ, என்னை ஒரு அப்பிராணியாய்ப் பார்த்துவிட்டு, தன் மானாட்டத்தை செவ்வனே தொடர்ந்தார். தலையிலடித்துக் கொண்டேன்.

டை கட்டினாலும் சரி, நிஜாரின் மேல் கைலி கட்டினாலும் சரி. ஐ.டி பார்க்கானாலும் சரி, பேட்டையானலும் சரி. பெரும்பாலானவர்களுக்கு மற்றவரைப் பற்றி அக்கறையில்லை. தங்களால் மற்றவருக்கு ஏற்படும் இடைஞ்சல்கள் பற்றியோ, துன்பங்கள் பற்றியோ அணுவளவும் கவலையில்லை.

இந்த கசப்பான உண்மையை நினைத்த போது, இருபது வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் படித்த ஜோக் ஞாபகத்திற்கு வந்தது.

முதலாமவர்: ஸாரி சார், கவனிக்காம இடிச்சுட்டேன்.
இரண்டாமவர்: நீங்க ஊருக்கு புதுசா?
முதலாமவர்: அட, எப்படி கண்டுபிடிச்சீங்க?
இரண்டாமவர்: ஹிஹி... நாங்கெல்லாம் இடிச்சுட்டா, ஸாரியெல்லாம் சொல்லிக்கிறதில்லை...

ஓ அப்பவே சென்னை இப்படித்தானா?

Tuesday, June 1, 2010

முனியின் செமினார்

சில சமயம், கல்லூரிகளில் ஐ.டி டிபார்ட்மெண்டிற்கு செமினார் எடுக்க எனக்கு அழைப்பு வரும். அவர்கள் கேட்கும் தலைப்பில் அல்லது நானே ஒரு தலைப்பில் செமினார் எடுப்பேன்.

போர் அடிக்காமல் இருக்க, ஜோக்குகள், சிறு கதைகள், கிளைக் கதைகள் எல்லாம் சொல்லி, அதிலிருந்து டெக்னிகல் சமாச்சாரத்திற்குத் தாவி செமினார் எடுத்து வந்தேன்

எப்படிப்பட்ட கல்லூரியாக இருந்தாலும், வம்பு செய்வதற்கென்றே சில மாணவர்கள் இருப்பதுதானே விதி. இவர்கள் செய்த அலம்பலில் செமினார் அடிக்கடி தடைபட்டது.

இவர்களை வழிக்கு கொண்டுவர ஒரு டெக்னிக்கை கையாண்டேன். ராஜேஷ்குமார் கதைகளில், விவேக் கேள்வி கேட்கும்போது மாட்டிக் கொண்ட குற்றவாளிக்கு அந்த ஏசியிலும் வியர்க்குமே! அது மாதிரி சுலபமான, ஆனால் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்டு அவர்களை வியர்க்க வைத்தேன். அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று, அன்னியோன்னியமாக அவர்களின் தோளில் கைபோட்டு, நடு சந்திக்கு இழுத்துவிட்டு, கேள்வியைக் கேட்டு, பதில் சொல்ல அவர்கள் கையில் மைக்கையும் திணித்து விடுவேன்.

தங்கள் அபிமான ஃபிகர்கள் மத்தியில், மானம் பறிபோவதால், அந்த மாணவர்கள் கப்சிப்பென அடங்கினர். மேடையிலேயே நிற்காமல், ஹால் முழுக்க ரவுண்ட் அடித்தபடியே செமினார் எடுத்ததால், கேள்விக்கு பயந்து, சலசலப்புகள் தானே அடங்கின.

ஒரு முறை ஒரு பெரிய கல்லூரியில் செமினார் எடுக்க வேண்டியிருந்தது. ஒட்டுமொத்த ஐ.டி டிபார்டிமெண்டும் பங்கு பெற்றதால், எண்ணிக்கை 400-ஐ தாண்டியிருந்தது. ஒரு ஜோக்குடன் துவங்கினேன்.

“இப்படித்தான், ஒரு மத்யான நேரம். எல்லாரும் வயிறுமுட்ட சாப்ட்ட பிறகு செமினாருக்கு வந்தாங்க. ஆரம்பிக்கிறதுக்குள்ளயே முதல் ரோல டொபுக்-னு ஒரு தல சாஞ்சு விழுந்துச்சு. பயந்து வேற பக்கம் போனா, அங்க கொர்ர்ர்ர்...னு சத்தம். உடனே பக்கத்திலிருந்த பையனுக்கு செம கோவம் வந்துடுச்சு. அவன் சொன்னான்.. டேய்... எவ்ளோ பெரிய செமினார் நடக்குது. நீ இவ்ளோ சத்தம் போட்டு குறட்ட உட்ற... நாங்கெல்லாம் தூங்க வேணா...?

அரங்கம் கலகலக்க, செமினார் துவங்கியது.

ஒரு கட்டத்தில் செமினார் மந்த நிலைக்கு வர, கேள்வி பாணிக்குத் தாவினேன். இரண்டாவது வரிசையில் இருந்த ஒரு மாணவரை கேள்வி கேட்க, அவர் மலங்க மலங்க முழித்தபடி தப்பாக பதிலளிக்க, ஒட்டு மொத்த அரங்கமும் சுவாரஸ்யமானது. தூக்கம் கலைந்து அனைவரும் சடுதியில் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். இதைக் கவனித்துவிட்ட நான், அந்த மாணவரையே குறிவைத்து அடிக்கடி கேள்விகளைக் கேட்க, ஒவ்வொருமுறையும் அவர் சொதப்ப செமினார் டாப் கியரில் சென்றது.

கடைசியாக ஒரு படு சுலபமான கேள்வியைக் கேட்க, அதற்கு அவர் சரியான விடையளித்துவிட, “அப்பாடா, ஃபைனலி ஐ காட் எ ரைட் ஆன்ஸர் ஃப்ரம் யு” என்று நான் அவரை பாராட்ட அரங்கமே அதிர்ந்தது.

செமினார் இனிதே முடிந்தது. முதல்வர் அறையில் (அட, பிரின்சிபால் ரூமுங்க) டீ பார்ட்டி. ஹாலில் இருந்த கேமிரா மூலம், தன் இடத்திலேயே செமினாரைப் பார்த்திருந்த முதல்வர் என்னை பெரிதும் பாராட்டினார் (பாராட்டு விழாவெல்லாம் இல்லீங்க). “படு ஜோவியலாகவும், டெக்னிக்கலாகவும் நடத்தினீர்கள். அதைவிட எங்கள் ஸ்டூடண்ட்சை கட்டுக் கோப்பாக வைத்திருந்தீர்கள். நீங்க அடிக்கடி வந்து செமினார் எடுக்கணும்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது, ஹெச்.ஓ.டி என் காதருகே கிசுகிசுத்தார். “சார், எல்லாம் பிரமாதம். ஆனா ஒரு சின்ன வருத்தம்”.

“ஐயோ, என்னாச்சு சார்?”

“நீங்க கேள்வி கேட்டு தெணறடிச்சது ஸ்டூடண்ட் இல்ல சார், எங்க டிபார்ட்மெண்டில் ஒரு புரொபசர். அங்க பாருங்க முனி அடிச்சதுபோல நிக்கறாரு” என்றார்.

அடப் பாவமே!

Monday, May 24, 2010

தீக்குச்சியுடன் ஓர் இரவு...

என் பேச்சுலர் பருவத்தில் அவ்வவப்போது நானே சமைத்துக் கொள்வேன். ஒரு முறை, வீடு மாற வேண்டியிருந்தது. உறவினர் ஒருவர் அவர் வீட்டுக்கு எதிர் வீடு காலியாக இருப்பதைச் சொல்ல, எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு அந்த வீட்டுக்கு வந்து விட்டேன். ஆபிஸிலிருந்து இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்பிக் கொண்டிருந்ததால், எந்த மூட்டையையும் பிரிக்காமல் இரண்டு மாதத்திற்கு அப்படியே கிடப்பில் போட்டிருந்தேன்.

சமையல் எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். முதலில் இரவு (முதலிரவு என்று படிக்காதீர்கள்!) குடிப்பதற்கும், மறு நாள் காலை காப்பிக்கும் பால் வாங்கிக் காய்ச்சலாம் என முடிவெடுத்து, கியாஸ் ஸ்டவ்வையும் சிலிண்டரையும் செட் பண்ணி வைத்தேன். ஆனால் கியாஸ் பற்ற வைக்கும் லைட்டரைக் காணவில்லை.  இரண்டு நாட்கள் ஒவ்வொரு மூட்டையாகத் தேடினேன்.  ம்ஹும், கிடைக்கவில்லை.  சே! கியாஸ் ஸ்டவ்வோடு லைட்டரையும் சேர்த்துக் கட்டி வைத்திருக்கலாம்.  

எல்லா மூட்டையையும் பிரித்து விட்டதால், ஒவ்வொரு பொருளுக்கும் புதுவீட்டில் இடமறிந்து அடுக்கி வைத்தேன். இந்த லைட்டர் புண்ணியத்தில் வீட்டை செட் பண்ணி விட்டேன். ஆனால் லைட்டர்தான் கிடைத்தபாடில்லை. சரி, நாளைக்கு தீப்பெட்டி வாங்கிக் கொள்ளலாம் என நினைத்தேன்.

மறுநாள் இரவு, வழக்கமான மெஸ்ஸில் உணவை முடித்துக் கொண்டு ஒரு பாக்கெட் ஆவின் பால் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன். பதினோரு மணிவரை, நண்பர்களிடம் செல்போனில் பேசிவிட்டு, பால் காய்ச்ச முனைந்தபோதுதான் தீப்பெட்டி வாங்க மறந்து போனதை உணர்ந்தேன். சே! இந்த கியாஸை பற்ற வைப்பதற்குள் மறதி என்னமாய்ப் படுத்துகிறது என சலித்துக் கொண்டேன். சரி, எதிர் வீட்டு உறவினரிடம் வாங்கலாம் என நினைத்து வெளியே வந்தேன்.

பதினோரு மணி ஆகிவிட்டதால், வீட்டுக்காரர் கேட்டை பூட்டிவிட்டிருந்தார். எதிர் வீட்டு கேட்டும் பூட்டப்பட்டிருந்தது. என்ன செய்வது, பால் கெட்டுவிடுமே! கேட் ஏறிக் குதித்தேன். என்னை திருடன் என்று யாரவது பிடிக்கிறார்களா என நிதானித்தேன். வீதி வெறிசோடி இருந்தது. அப்பாடா! எதிர் வீட்டு கேட்டையும் தாண்டிக் குதித்து, காலிங் பெல் அழுத்தி தீப்பெட்டியை வாங்கி விட்டேன்.

சிறு வயதில், ஜாக்கிச்சான் படத்தில், அவர் அனாயசமாக கேட் தாண்டுவதை பிரமிப்புடன் பார்த்தது ஞாபகதிற்கு வர, அது மாதிரி செய்து பார்க்கும் ஆசையும் வந்து தொலைத்தது.

இரண்டடி பின்னோக்கி, ஒரு ஜம்ப் செய்து, இடது காலை கேட்டில் ஊன்றி, அலேக்காக தாவி தெருவில் குதித்தேன். ஆஹா! நாம் ஜாக்கிச்சானின் சீடனாகி விட்டோம் என்று சிலாகித்தபோதுதான் அதன் விபரீதம் புரிந்தது. நான் முன்பு கேட் தாண்டியதை மோப்பம் பிடித்துவிட்ட தெரு நாய்கள், ஒன்று கூடி எனக்காக காத்துக் கொண்டிருந்தன.

ஒரு கணம் அதிர்ந்தேன். அவை என்னை நோக்கி முன்னேற, சட்டென்று சுதாரித்து படக்கென்று ஒரு தீக்குச்சியை பற்ற வைத்துக் காண்பித்தேன். என்னவோ ஏதோ என்று பயந்த நாய்ப் படை சற்று பின் வாங்கியது.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று சும்மாவா சொன்னார்கள். எப்படி நமது சமயோசித்தம் என்று எனை நானே மெச்சிக் கொள்வதற்க்குள் தீக்குச்சி அணைந்து போனது. நாய்ப் படை மீண்டும் முன்னேற, அவசர அவசரமாய் இன்னொரு குச்சியைப் பற்ற வைத்தேன்.

நாமெல்லாம் தீபாவளியன்று, ஒரு மத்தாப்பிலிருந்து வரிசையாக பல மத்தாப்புகளை பற்ற வைத்த டெக்னிக் ஞாபகத்திற்கு வர, அது போல தீக்குச்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக பற்ற வைத்து, என்னைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் ஏற்படுத்திக் கொண்டு நாய்களை பயமுறுத்தி என் வீட்டு கேட் ஏறி உள்ளே குதித்து விட்டேன். ஏமாந்து நின்ற நாய்களைப் பார்த்து “இப்ப இன்னா பண்ணுவ! இப்ப இன்னா பண்ணுவ!“ என்று கத்தி விட்டு, என்னை யாரும் பார்த்து பைத்தியமென்று நினைக்கவில்லை என உறுதி படுத்திக்கொண்டு வீட்டினுள் நுழைந்தேன்.  

தீப்பெட்டி கணிசமாக காலியாகியிருந்தது. நாளை அதை திருப்பிக் கொடுக்கும் போது, சே! ஒரு கியாஸ் பத்த வைக்க இத்தனை குச்சி செலவழித்திருக்கிறானே! இவன் எதற்கும் உருப்படமாட்டான் என்று உறவினர் நினைப்பாரே எனத் தோன்றியது.  நாய் கடிக்கும், நாய் கடி ஊசிக்கும் இது பரவாயில்லை என தேற்றிக் கொண்டேன்.  

மீண்டும் ஒரு குச்சியைப் பற்ற வைத்து, இடது கையால் ஸ்டவ் நாப்-பை திறந்தேன்.  திறந்ததுதான் தாமதம்; டப்-பென்ற ஒலியுடன் ஸ்டவ் தானாகவே ஜிகுஜிகுவென எரியத் தொடங்கியது.

அட தேவுடா!

என் ஸ்டவ் ஆட்டோமேட்டிக் என்பதும், நான் லைட்டரே வாங்கவில்லை (தேவையில்லாததால்) என்பதும் அப்போதுதான் என் மண்டையில் உறைத்தது.

கொள்-ளென்று நாயின் சப்தம் வேளியே கேட்டது.

Wednesday, April 7, 2010

ஐ.பி.எல் எல்லாம் ஜுஜுபி

ஐ.பி.எல்-3 பாதிதூரம் கடந்து விட்டது. சில போட்டிகள் சுவாரஸ்யமாகவும், சில போட்டிகள் படு டென்ஷனாகவும் சென்று கொண்டிருக்கின்றன. இன்று இருபது-இருபது ஓவர்களைக் கொண்டு விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் உலகெங்கும் மிகப் பிரபலமடைந்து விட்டன.

நண்பர்களே, நாம் கல்லூரியில் படிக்கும் போது இருபது-இருபது ஓவர்கள் கொண்ட மேட்சுக்கள்தாம் விளையாடியிருக்கிறோம் இல்லையா? என்ன அதனை ட்வெண்டி-20 என்று அழைக்காமல் பொதுவாக மேட்ச் என்று மட்டுமே அழைத்துக் கொண்டோம். ஆனால் அவை, இன்று நடக்கும் போட்டிகளுக்கு எந்த விதத்திலும் குறையாத ரகளைகளுடன் நடந்தன இல்லையா? அப்படி நடந்த ஒரு மேட்சின் ஒரு பகுதியை இங்கே பகிர்கிறேன்.

நாங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்ட். எங்களுக்கும் பயோ-கெமிஸ்ட்ரிக்கும் மேட்ச். முதலில் பேட் செய்த அவர்கள், நாங்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நல்லவர்கள் எனக் கருதி, அடி அடி என அடித்து 140 ரன்களுக்கு மேல் குவித்து விட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் நாங்களும் சளைக்காமல் ரன் குவித்தோம். 

ஹாஸ்டலிலிருந்து கொண்டுவந்த பக்கெட்டுகளை கவிழ்த்து வைத்து அதை ட்ரம்ஸாகப் பாவித்து, அருகிலிருந்த மரத்திலிருந்து உடைத்த கிளைகளால் அதில் மேளம் அடித்துக் கொண்டு...

பயோவுக்கு சவாலே! கம்ப்யூட்டர்னா சும்மாவா!
இந்த பேட்டிங் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா!
தில்லானா, தில்லானா கம்ப்யூட்டர்னா தூள்னா!

என்றெல்லாம், கத்தி எங்கள் அணியை ஊக்குவித்துக் கொண்டிருந்தோம்.  
   
மேட்சின் க்ளைமேக்ஸ் நெருங்கியது. 13 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டும். கைவசம் மூன்று விக்கெட்டுக்கள் இருந்தன. கேப்டன் வினோத்தும், ஆல்ரவுண்டர் மதனும் ஆடிக்கொண்டிருந்தனர். கிருஷ்ணன் என்பவரும், நானுமே பாக்கி. இந்தக் கிருஷ்ணன், நாங்கள் படிக்கும் யுனிவெர்சிட்டியில் மிகப் பிரபலமானவர். சகல திறமைகளையும் தன்னுள் கொண்டவர். ஆனால், அவரை கலாய்ப்பதில் எங்களுக்கெல்லாம் அவ்வளவு பிரியம்.  இவர்தான் இப்பதிவின் நாயகன்.

18வது ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் அவுட்டாக, கிருஷ்ணன் விளையாட இறங்கினார்.  19வது ஓவரை அவர்தான் எதிர் கொண்டார். இந்த ஓவரை வீசுவது எங்கள் யுனிவெர்சிட்டியின் அதிவேகப் பந்து வீச்சாளர் வசந்த் என்பவர். அதுவரை எந்த பேட்ஸ்மெனும் காட் எடுக்கவில்லை. ஆனால் இந்தக் கிருஷ்ணன், அம்பயரை அழைத்து லெக் ஸ்டெம்ப்புக்கும், மிடில் ஸ்டெம்ப்புக்கும் காட் எடுத்துக் கொண்டார். சுற்றிப் பார்த்து பீல்டிங்கை சர்வே செயதார். சந்தேகம் வந்து 11 பேர்தான் இருக்கிறார்களா என்றும் எண்ணிச் சரி பார்த்துக்கொண்டு படு நேர்த்தியாக ஸ்டேன்ஸ் எடுத்தார். ஆஹா, வசந்தை தொலைத்து விடுவார் தொலைத்து என்று நாங்கள் எல்லாம் எழுந்து நின்று கரகோஷம் செய்தோம்.
   
12 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டும்.

முதல் பந்து. மிக வேகமாக பேட்டை வீசி ஸ்கொயர் கட் அடித்தார் கிருஷ்ணன்.

ஷாட்..ரா... கிருஷ்ணா... என ஆரவாரித்த நாங்கள், பந்து எந்தப் பக்கம் சென்றது எனத் தேடினோம். அப்புறம்தான் புரிந்தது, அது பேட்டில் படவே இல்லை என்று.  

இரண்டாவது பந்து. முன்பை விட படு வேகமாக பேட்டை வீசினார். இம்முறை பறந்தே விட்டது. ஆனால் அது பந்தல்ல. கை நழுவிப் பறந்த பேட், ஒரு இருபது அடி தள்ளி விழுந்தது.

ச்சீ! இந்த கிளவுஸ் சரியில்லை என்று அதைக் கழற்றி வீசி, வெறுங்கையுடன் பேட் பிடித்தார். “ஐயோ, கிருஷ்ணா! பால் போடறது வசந்துப்பா!. ஸ்டெம்ப் ஒடைஞ்சாலும் பரவால்ல! உன் கை ஒடைஞ்சா, நாளைக்கு எப்படிப்பா எக்ஸாம் எழுதுவே?. நீ எழுதாட்டி, நாங்களெல்லாம் எப்படி காப்பி அடித்து பாஸ் பண்றது” என்று கத்தினோம்.

மூன்றாவது பந்து. எங்கள் கத்தலில் வெறிபிடித்து விட்டது அவருக்கு. ஏறி அடிப்பது என்று முடிவெடுத்து விட்டார் போலும். வசந்த் ஓடிவரத் துவங்க, இவரும் ஏறிவரத் துவங்கினார்.  அவர் ஓட, இவர் ஏற... ஓவராக வெறி பிடித்ததில், தன்னிலை மறந்து, கிட்ட தட்ட பாதி பிட்ச் ஏறிவந்து விட்டார்.

ஐயோ கிருஷ்ணா! என்ன பண்றே?!! என்று நாங்கள் கத்த, திரும்பிப் பார்த்த அவருக்கு அந்த விபரீதம் புரிந்தது. ஸ்டெம்பிற்கு அருகே வந்து விட்ட விக்கெட் கீப்பர், ஸ்டெப்பிங் செய்ய பவுலரைப் பார்த்து பந்தைத் தா.. தா.. எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அரண்டு போன கிருஷ்ணன் பவுலரைப் பார்த்துக் கொண்டே மீண்டும் கிரீசுக்கு ரிவர்ஸில் ஓடத் தொடங்கினார். பவுலரும், பேட்ஸ்மெனும் ஒரே திசையில் ஓடும் இந்த வினோத காட்சியை இங்கு மட்டுமே காண முடியும். பவுலரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கண்களில் குபுக்கென நீர் தளும்ப பந்தை போட முடியாமல், வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே திரும்பிச் சென்று விட்டார்.

இப்போது மதன் கத்திக் கொண்டிருந்தார். கிருஷ்ணா, நீ அடிக்கவே வேணாம். பந்தைப் போட்டதுமே நான் ஓடிவந்து விடுகிறேன். நீ எப்படியாவது ஒரு ரன் ஓடி வந்துவிடு. மத்ததை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று.  

மீண்டும் மூன்றாவது பந்து. பந்து போடப்பட்டதுமே ஓடத் தொடங்கிய மதன் அப்படியே திகைத்து நின்று விட்டார்.  காரணம், அந்தப் பந்தை அடிக்க கிருஷ்ணன் பேட்டை கண்ணை மூடிக் கொண்டு சுத்தினார். சுத்திய வேகத்தில், பேட்டுடன் சேர்ந்து அவரும் சுத்தினார்.  தலையும் சுத்த நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், எழுந்த வேகத்தில் திசை மாறி விக்கெட் கீப்பரை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார். இம்முறை விக்கெட் கீப்பரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அருகில் வந்து விட்ட கிருஷ்ணணை கட்டி பிடித்துக் கொண்டு வயிறு வலிக்க குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.

எங்கள் தப்படைகளின் சப்தம் சுத்தமாக நின்று போனது.

அடுத்த மூன்று பந்துகள்.  என்னென்னமோ மாய்மாலங்கள் செய்தார் கிருஷ்ணன். ம்ஹும்... பந்து பேட்டிலும் படவில்லை. ஸ்டெம்பிலும் படவில்லை.  ஒவ்வொரு பந்திற்கும் ரன்னிற்காக ஓடோடி வந்து, பின் ஏமாந்து திரும்பிச் சென்ற மதன் வெறுத்துப் போய் கால் நீட்டி கீழே அமர்ந்து விட்டார்.  12 பந்து 12 ரன் என்ற நிலையை, தன் அற்புதத்தால் 6 பந்து 12 ரன் என்று மாற்றிவிட்டார் கிருஷ்ணன்.  

நாங்கள் செய்வதறியாது தவித்து பக்கெட்டுகளை தலையில் கவிழ்த்துக் கொண்டு அம்போவென்று உட்கார்ந்து விட்டோம். சரி, இந்த ஓவரை மதன் பார்த்துக் கொள்வார், அதை கிருஷ்ணன் கெடுக்காமல் இருந்தால் சரி என்று தேற்றிக் கொண்டோம்.

ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் நொடிப்பொழுதில் துடைத்துக் கொண்டு, ஒரு உறுதியுடன் அந்த ஓவரை எதிர் கொண்டார் மதன்.

முதல் பந்து. இரண்டு ரன்கள்.
இரண்டாவது பந்து. நா..ன்கு ரன்கள்.
மூன்றாவது பந்து. மீண்டும்... இரண்டு ரன்கள்.

ஆக 8 ரன்கள் எடுத்தாகி விட்டது. மீண்டும் தப்படைகள் முழங்கத் தொடங்கின.

மதனிருக்க பயம் ஏன்... மதனிருக்க பயம் ஏன்...

நான்காவது பந்து. ரன் எடுக்க முடியவில்லை.

ஐந்தாவது பந்து. தூக்கி அடித்தார் மதன். துரதிஷ்டவசமாக அது கேட்ச் பிடிக்கப்பட அவுட்டானார் மதன்.  அதைவிட துரதிஷ்டம், பேட்டிங் சைடுக்குச் சென்று விட்டார் கிருஷ்ணன். ரன்னர் சைடிலில் நான் நிற்க வேண்டிய நிலை.  

கடைசி பந்து. நான்கு ரன்கள் வேண்டும்.

"கிருஷ்ணா, அன்னைக்கு ஷார்ஜா-ல சேட்டன் ஷர்மாவோட கடைசி பந்தை மியான்தாத் சிக்ஸர் அடிச்சது போல அடிப்பா. யுனிவெர்சிட்டி முழுக்க உன்னை தோளில் சுமந்து சுத்தி வர்ரேன்" என்று கத்தினேன்.

பவுலர் ஓடி வரத் தொடங்கினார்... ஸ்டேடியமே கத்தியது...

கிருஷ்ணாஆஆஆஆஆஆ.........!!! 
  
பவுலர் மிக ஆக்ரோஷமாகப் பந்தை வீசினார். அது ஒரு பீரங்கி குண்டை போல அதிபயங்கரமாக கிருஷ்ணனின் மார்பை நோக்கி எழும்பியது. அவ்வளவுதான், தொலைந்தார் கிருஷ்ணன் என்றே நினைத்தேன். ஆனால்...

ஆஹா, அந்த அற்புத்தை என்னவென்று சொல்ல. அதைக் காண கண்கள் நூறு வேண்டும். எவர் ஆவி அவர் உடலில் புகுந்து கொண்டதோ... மிக அற்புதமாக கபில்தேவின் ட்ரேட் மார்க் மிட் விக்கெட் புல் ஷாட்டை அடித்தார். காற்றைக் கிழித்து, விண்ணை நோக்கி எழும்பிய பந்து அனாயசமாக எல்லைக் கோட்டைத் தாண்டி விழுந்தது. 

சிக்ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

கிருஷ்ணா... சாதிச்சுட்டபா... என்று கத்திக் கொண்டே அவரை நோக்கி ஓடிய நான், அப்படியே ஸ்தம்பித்து நின்றேன். காரணம், கபில்தேவ் போல ஒற்றைக் காலில் நின்று அடித்தபின், அவரைப் போல் பேலன்ஸ் செய்யாததால், நிலை தடுமாறி ஸ்டெம்பின் மேல் குப்புற விழுந்திருந்தார் கிருஷ்ணன். அவர் பளு தாங்காமல் மூன்று திசைக்கு ஸ்டெம்புகள் சிதறி இருந்தன. பெயில்சுகளைக் காணவில்லை.

திரும்பிப் பார்த்தால், இரு கைகளையும் உயர்த்தி சிக்ஸர் என்பதற்குப் பதில், ஒரு கையை மட்டுமே உயர்த்தி அவுட் என்றார் அம்பயர்.

Monday, March 29, 2010

வாழைக்காய்க்கு இப்படி ஒரு உபயோகமா?

இரண்டு மாதத்திற்கு முன்பு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு சற்று அருகில் குடி வந்த பிறகு, டைடல் பார்க்கிலுள்ள எனது ஆஃபீஸூக்கு வருவது பெரும் பாடகிவிட்டது. இரண்டு ஸ்டாப்பிங் தொலைவிலுள்ள பஸ் ஸ்டாண்டுக்கு டவுன் பஸ்ஸிலோ அல்லது ஆட்டோவிலோ வந்து, பிறகு வேளச்சேரி வழியாக திருவான்மியூர் செல்லும் M70-யைப் பிடித்து டைடல் வருவதற்குள் 2 மணி நேரம் வீணாகி விடுகிறது.

எட்டு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பியும் (ஐ.டி மக்களுக்கு 8 மணி என்பது நிலாக் காயும் நேரம் தானே!), ஊரைச் சுற்றிச் செல்லும் M70-யைத் தவிர வேறு நேரடி பஸ் எதுவும் இல்லாததால் பத்தரை மணியைத் தாண்டியே ஆஃபீஸூக்கு செல்ல முடிந்தது. ECR வழியாக பாண்டிக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் பஸ்கள் டைடல் வழியாகச் சென்றாலும் அதன் கண்டக்டர்கள், டைடல் டிக்கெட்டெல்லாம் ஏற்ற மறுத்து விட்டார்கள். பத்து வருடங்களுக்கும் மேலாக, சென்னையில் நினைத்த இடங்களுக்கு நினைத்த நேரத்தில் பைக்கிலேயே சென்று பழகிவிட்ட எனக்கு, அளவே இல்லாமல் பஸ்ஸூக்காக காத்திருப்பதும், செல்லும் இடத்திற்கு அதைவிட அளவே இல்லாமல் பஸ்ஸினுள் காத்திருப்பதும் பெரும் அலுப்பைத் தந்தன.

விரைவிலேயே சென்னை மாநகர பேருந்துக் கழகம், OMR வழி மாமல்லபுரம் செல்லும் 586C - AC பஸ்ஸை காலை 8 மணிக்கு அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் 9 மணிக்கே ஆஃபீஸூக்கு வந்து சேர்ந்தேன். அப்பாடா ஒரு வழியாக எனக்கு விடிவு கிடைத்து விட்டது என்று நினைத்தேன். ஆனால் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. OMR-லிலுள்ள ஐ.டி கம்பெனிகளில் பணிபுரியும் மக்கள் இந்த பஸ்ஸிற்குப் படையெடுக்கத் தொடங்கியதும், பஸ்ஸினுள் நிற்கவே இடமில்லாமல் போனது.

முதலில் இந்த குளுகுளு பேருந்தில் கால் நீட்டி அமர்ந்து இந்து பேப்பர் படித்தேன். பிறகு டயருக்கு மேல் இருக்கும் சிறிய கட்டை சீட்டுதான் கிடைத்தது. பிறகு அதுவும் கிடைக்காமல் நிற்க வேண்டி வந்தது. பிறகு கொக்கு பொல ஒற்றைக் காலிலெல்லாம் நிற்க வேண்டி வந்தது. கொக்கிற்காவது உறுமீன் கிடைக்கும். எனக்கு கால் வலிதான் கிடைத்தது.

சில நாட்களிலிலேயே நிலைமை படுமோசமானது. சொகுசு பேருந்து, தாழ்தள சொகுசு பேருந்து, குளிர்சாதன சொகுசு பேருந்து என எதுவும் இந்த சிங்காரச் சென்னை நகரில் பிரேக்டவுனுக்கு விதிவிலக்கல்ல என்பதுபோல் இந்த புத்தம் புது பேருந்தும் பிரேக்டவுனாகி என்னை வடபழனியிலேயே இறக்கி விட்டது. தலையிலடித்துக் கொண்டு தேமே என்று நின்றுகொண்டிருந்தேன்.

அப்போது ECR வழி கல்பாக்கம் செல்லும் 118 வந்தது. ஒரு நப்பாசையுடனும், ஒரு ஏக்கத்துடனும் அதன் கண்டக்டரிடம் டைடல் என்றேன். அவர் வாங்க என்றார். அடடா, அந்த அழைப்பு, கல்யாண வீட்டில் வெற்றிலை பாக்கு வைத்து, பன்னீர் தெளித்து, சர்க்கரை தந்து வரவேற்பது போல் இனித்தது. இது பஸ் ஸ்டாண்டிலிருந்து 7.50க்கு கிளம்புகிறது, டைடல், திருவான்மியூர் டிக்கெட்டெல்லாம் ஏற்றுவோம் என்று அவர் தேவகானமாய்க் கூறினார். இது OMR வழி செல்லாததால் 586-Cயில் வந்த பெரும்பாலானவர்கள் இதில் ஏறவில்லை. அதனால் இதில் தாராளமாக இடமிருந்தது. அப்பாடா எனக்கு ஒரு நல்ல பஸ் கிடைத்து விட்டது. ஆனால் வேறொரு பிரச்சனை. இதைப்பிடிக்க 7.15-க்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும். பஸ் ஸ்டாண்டில் அது நிற்கும் இடத்திற்கு சிறிது தூரம் வேறு நடக்க வேண்டும்.

இரண்டு நாள் முயற்சித்தேன். பிடிக்க முடியவில்லை. 7.50-க்கு கிளம்பினால் அது பின்புற வாயில் வழியாக வெளியில் வர குறைந்தது கால் மணி நேரமாவது ஆகும். நான் வீட்டிலிருந்து வரும் போது பின்புற வாயிலைக் கடந்துதான் வருகிறேன். அங்கேயே பஸ்ஸைப் பிடிப்பது எனக்கு எளிது என்றாலும், பஸ் சென்று விட்டால் அது தெரியாது என்பதால் அங்கே நிற்கத் தயங்கினேன்.

ச்சே! என்ன கவர்மண்ட் இது! கொஞ்சம்கூட முன்னேறவே மாட்டேன் என்கிறார்களே! இந்த பஸ்ஸில் ஒரு GPRS டிவைஸைப் பொருத்தினால் அதற்கு SMS பண்ணி, வரும் பதிலை வைத்து, லேட்டிட்யூட், லாங்கிட்டியூட் எல்லாம் தெரிந்து கொண்டு, அதை கூகுள் மேப்பில் பிளாட் செய்து, பஸ் உள்ளே இருக்கிறதா? வந்து கோண்டிருக்கிறதா அல்லது சென்று விட்டதா என்று சுலபமாத் தெரிந்து கொள்ளலாம் என என் டெக்னாலஜி புலமை எல்லாம் பயன்படுத்தி ஒரு ஐடியா பண்ணிப் பார்த்தேன். அது எனக்கே அபத்தமாய்ப் பட்டது

சரி, என்னைப் போல் யாரேனும் டைடல் பார்க்கிற்கு இந்த பஸ்ஸில் செல்லக்கூடும். அவரை நண்பராக்கிக் கொண்டு அவருக்கு SMS பண்ணித் தெரிந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். மறுநாள் அதிகாலையில் எழுந்து, காலைச் சிற்றுண்டியைத் தியாகம் செய்து, ஏழு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி அந்த பஸ்ஸைப் பிடித்து விட்டேன். அதில் நான்கு பேர் மட்டுமே இருந்தனர். அவர்கள் டைடல் செல்வது பொலவும் தெரியவில்லை, அவர்களிடம் மொபைல் போன் இருப்பது போலவும் தெரியவில்லை.

சரி, பஸ் டிரைவரையே சிநேகம் பண்ணிக் கொண்டு அவருக்கு SMS பண்ணலாம் என்று முடிவெடுத்து (எப்படி எல்லாம் யோசனை பாருங்கள்), அவர் சீட்டுக்கு அருகில் இருக்கும் ஒற்றைச் சீட்டிற்குச் சென்று அமர்ந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் பஸ்ஸில் ஏறிய டிரைவர், பஸ் முழுக்க காலியாக இருக்க இவன் ஏன் இங்கு உட்கார்ந்திருக்கிறான் என்பதுபோல் என்னை விநோதமாகப் பார்த்தார். என் எண்ணம் அவருக்கு புரிந்துவிட்டதோ எண்ணமோ, அவர் பார்வையில் சிநேகம் தென்படவில்லை. ஆக அவரிடம் என் ஜகதலப்பிரதாப பேச்சைக் கொடுப்பது இன்று சாலச் சிறந்தது அல்ல என்று புரிந்து கொண்டு அமைதி காத்தேன்.

சரியாக 7.50-க்கு புறப்பட்ட பஸ் தொடர்ச்சியாக ஏர் ஹாரன் அடித்து (ஏன்தான் அந்தச் சீட்டில் உட்கார்ந்தோம் என்றாகிவிட்டது) குறுக்கும் நெடுக்குமாக நின்றிருந்த மற்ற பஸ்ஸையெல்லாம் வழி விட வைத்து 8.05-க்கு பின்புற வாயில் வழியாக வெளியில் வந்ததும் ரோடு ஓரமாக ஒதுங்கி நின்றது. அங்கே ஒரு இருபது வாழைத்தார்களுடன் ஒரு ட்ரைசைக்கிள் நின்று கொண்டிருந்தது. இரண்டு பேர் அதை கடகடவென பஸ்ஸில் ஏற்றி என் சீட்டிக்கு அருகில் அடுக்கி வைத்ததும், பஸ் புறப்பட்டது. திடீரென என் மண்டையில் ஒரு மின்னல் பளிச்சிட்டது. அன்று வடபழனியில் இந்த பஸ்ஸில் ஏறிய போது இதே சீட்டுக்கருகில் வாழைத்தார்கள் இருந்ததைப் பார்த்த ஞாபகம் வந்தது. புரிந்துவிட்டது. அருகிலுள்ள கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வாழைத்தார்களை வாங்கி இந்த பஸ்ஸில் அதை கல்பாக்கத்திற்கு யாரோ ஒருவர் தினமும் அனுப்புகிறார் என்பதும் புரிந்துவிட்டது.

ஆக, அந்த வாழைத்தார் ட்ரைசைக்கிள் அங்கே இருந்தால், அந்த பஸ் இனிமேல்தான் வரப்போகிறது என்று அர்த்தம். இல்லையென்றால் போயே போய்விட்டது. மொபைல் சிஸ்டம், GPRS சிஸ்டமெல்லாம் இந்த வாழைத்தாரிடம் தோற்றது போங்கள்

அன்று முதல் இந்த ட்ரைசைக்கிள் அருகில் நின்று, வாழைக்காய் பஸ்ஸை சரியாகப் பிடித்து 9 மணிக்கெல்லாம் ஆஃபீஸூக்கு வந்து லேட்டாக வருபவர்களை பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறேன்.