Monday, January 24, 2011

பேயோனின் ‘திசை காட்டிப் பறவை’


புத்தகங்களை வாசிக்கும் அனுபவத்தில் புதியதொரு திசையைக் காட்டுகிறது, ரைட்டர் பேயோனின் ‘திசை காட்டிப் பறவை’.

வரிகளின் ஓட்டத்தை விழிகளால் இடைவிடாமல் தொடர்ந்து, பக்கங்களைப் புரட்டிக் கொண்டேச் செல்வது ஒருவித சுகமென்றால், சில வரிகளைப் படித்ததுமே மனம் அதில் சிக்கி, சற்றுத் திகைத்து, வாய்விட்டுச் சிரித்து (பேருந்தில் படித்தால் வாய் பொத்திச் சிரித்து), பின் படிப்பைத் தொடந்து மீண்டும் மீண்டும் சிக்கிக் கொள்வது மற்றொரு சுகம்.

பேயோன் தரும் இந்த இரண்டாவது சுகத்தை எழுத்துலகில் கோலோச்சும் ஜெமோ, பாரா போன்றவர்களே சிலாகிக்கிறார்கள் என்றால், மேற்கொண்டு நான் எதைச் சொல்ல?  இருப்பினும் இது ஒரு கடைக்கோடி வாசகனின் வாசிப்பனுபவம்.

பொதுவாக ஒருவரின் தற்புகழ்ச்சியில் நமக்கு எரிச்சலே மிஞ்சும். ஆனால் இவர், எவர் மனதையும் புண்படுத்தாமல் தன்னைத்தானே புகழ்ந்து உயர்த்திக் கொள்வதெல்லாம் சிரிப்புச் சரவெடி. சர்வ நிச்சயமாக இது பேயோனுக்கு மட்டுமே சாத்தியம்.

பறவை நொடிமுள்ளிலிருந்து திசை காட்டத் தொடங்குகிறது.

இணையத்தில் பேயோனை நான் முதன்முதலில் வாசிக்கத் தொடங்கியதும், இந்த ‘நொடிமுள்ளின் கதை’-யிலிருந்துதான். எச்சூதுமறியா இளம்பிள்ளையாய் இக்கதையை வாசித்து, அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த புத்தகங்களை கூகுளில் தேடினேன். சொற்களை டைப் அடிக்கத் தொடங்கியதுமே தேடியதை சரமாரியாகக் கொட்டும் கூகுள் விழி பிதுங்கத் தொடங்கியதும்தான் இவை அனைத்துமே பகடி என்பது புரிந்தது. இப்படிக் கூட ஒருவரால் இட்டுக்கட்டி எழுத முடியுமா என்ற பிரமிப்பிலிருந்து விடுபடவே எனக்கு வெகு நேரம் பிடித்தது.

அதுமுதல் அவருக்கு வாசக ரசிகனானேன்.

நிஜங்கள் கசக்கும்போது கற்பனை உலகே நமக்கு மீட்சி. அதை அள்ளிக் கொடுத்த கவிதைகளும் இன்று நிஜங்களுக்கு வந்துவிட்ட பிறகு, பத்திகளால் அனுமான எல்லைகளுக்கு அப்பாற்பட்ட கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்று நம் மனதை அலசித் தருகிறார் ரைட்டர் பேயோன்.

இவர் பார்த்து நடந்த ‘பிரெஞ்சுப் புரட்சி’, இவர் பாத்திரம் பிச்சை போட்ட ‘ரஷ்ய புரட்சி’ போன்றவற்றின் பத்திகள் சிரிப்பை வெடிக்க வைப்பதெல்லாம் பதிவுலகில் ஒரு புதிய புரட்சி!

நுணுக்கமான வரி வார்த்தைகளால் நகைச்சுவையை ஊசியாய் நுழைப்பது போலவே சோகம், பயங்கரத்தையும் நுழைக்கிறார். ‘கனவினூடே’-வைப் படித்த இரவே, ஒரு ஆட்டோவின் ஒவ்வொரு சக்கரத்தின் மேல் பகுதி தனித்தனியாக கழன்று என்னுடலை ஊடுருவிக் கூறுபோடுவதுபோல் எனக்கு கனவு வந்ததென்றால், இதன் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

பிரிமியம் பாண்ட் பேப்பரில் பிராஜெக்ட் ரிப்போர்ட்டை பிரிண்ட் எடுப்பதையே நாங்கள் பெருமையாகக் கருதிய கல்லூரிக் காலங்களுண்டு. ஆனால் ஒரு புள்ளி கூட வைக்காத ஒரு பாண்ட் பேப்பரை வைத்தே ‘அந்த வெற்று காகிதமே’ எழுதியிருப்பது இவரின் கற்பனை ஊற்றுக்குச் சாட்சி என்றால், இனி எழுத எதுவுமே இல்லை என அங்கலாய்க்கும் பதிவர்களுக்கு, இல்லை என்ற ஒரு வார்த்தையை வைத்தே, இல்லை இல்லை என்று சொல்லியே அவர் ‘இல்லை’-யை எழுதியிருப்பது பாலபாடம்.

பூத உடலின் பயணத்தின் கணங்கள், சிந்தனை உலவின் கணங்களை வரையறுக்க வல்லவை. குறிப்பாக ஒரு தேர்ந்த எழுத்தாளன், தன் ‘சமகால’ எழுத்தாளனை ஒரு பயணத்தில் சந்தித்து கணங்களை பரிமாறிக் கொண்டால் அக்கணமே ஒரு இலட்சத்து எழுபத்தி ஆறாயிரம் சிந்தனைச் செல்கள் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படும்.  இப்படித்தான் ஒரு முறை, அண்டார்டிகா நீர்ப்பரப்பிலுள்ள அலக்டோரியா தீவினில் நடக்க இருந்த ‘சமகால எழுத்தரின் கணங்கள்’ மாநாட்டில் கலந்து கொள்ளப் பயணித்தேன். ஒரு ‘கேப் பெட்ரல்’ பறவை திசை காட்டிச் செல்ல, அதன் வெள்ளெச்சம் விழும் தடத்தை ஒற்றிச் சென்ற படகில் என்னுடன் பேயோனும் இருப்பதைக் கண்டு அதிசயத்து...

ஹஹ்ஹஹ்ஹா... வேறொன்றுமில்லை... ‘என்னைப் போல் பத்தி எழுதுவது எப்படி’ படித்ததன் பின்வினையே கடந்து சென்ற நிறைவேறாத பகடிப்பத்தி.

ஒற்றிலக்க பத்திகளில் ஒரு கதையும், இரட்டையிலக்க பத்திகளில் வேறொரு கதையும் நகர்ந்து, கடைசி பத்தியின் கடைசி வரிகளில் இணையும் ‘அடுத்த வாரத் தொடர்ச்சி’ கிளாசிக்.

அவரின் நினைவுக் கூர்மையும், பார்வைக் கூர்மையுமே அவரின் எழுத்தின் கூர்மைக்கு அடிப்படை. கண்ணின் நிழலில் அசைவதற்குக் கூட சுவாரஸ்ய எழுத்து வடிவம் தருகிறார்.

‘மயிலிறகிற்கு நட்ராஜ் பென்சில் சீவல் பிடிக்கும்’

‘உதவுதல் நாடி சுலைமான் அபெக்கேவுக்கு கடிதம்’ போன்ற இடங்கள் இரண்டே இதற்கு அத்தாட்சி.

பறவை ‘சியாமள விகாச பட்சியாய்’ நம்மை விகாசிக்க வைத்து, சிறகுதாரியாய் நம் மனதை சிறகடிக்க வைத்து, ‘வாழும் கணங்களில்’ நிறைகிறது.

பத்திகளின் வரிசையை மாற்றிப் படித்தாலும் தொடரும் ‘வாழும் கணங்கள்’, உண்மையில் வாசிக்கும் கணங்கள்.

இவரெழுத்தை ஆப்சன்மைண்டட்டாக வாசிக்க முடியாது. இன்னமும் சொல்ல எண்ணிக்கை இருந்தும், இப்பதிவு ‘நெடுங்கதையாகத்’ தொடர்வதால், என்னையும் சேர்த்து ஒற்றையிலக்க வாசிப்பாகும் எனத் தயங்கி, இத்துடன் புள்ளி வைக்கிறேன்.

புத்தக கண்காட்சியில், ஆழி பதிப்பகத்தில் இவர் யாரென்ற புலன் விசாரணை அனுதினமும் நடந்திருக்கும். அங்கே நான் இப்புத்தகத்தைக் கேட்டபோது, அங்கிருந்தவர்கள் என்னை நிமிர்ந்துப் பார்த்தார்கள். ஆனால் நான் ஒரு சொல் வினவாமல், புத்தகம் வாங்கி அமைதியாக நகர்ந்தேன். ஏனெனில்...

கடவுளைத் தேடும் வரைதான் ஆராதனைகள். பேயோன் என்ற தேடல் உள்ளவரைதான் அவர் எழுத்து சுவை ஊற்றெடுக்கும் சுனைகளாக இருக்கும்.


Monday, January 17, 2011

பேண்ட் போட்டு ‘மேத்தமேட்டிக்ஸ்’

“இத்துடன் எல்லா பாடமும் முடிச்சாச்சு. இனி நீ சென்ட்டம் எடுப்பது மட்டுமே பாக்கி” என்றார் என்னுடைய பிரத்யேக டியூசன் வாத்தியார்.

நானூறு பக்க லாங்-சைஸ் நோட்டில் ஸ்கேல் வைத்து அழகாக மூன்று கோடுகள் போட்டு ‘முற்றும்’ எழுதி, ஒரு குருவுக்கு உண்டான மரியாதையுடன் அவருக்கு நன்றி சொல்லி, ஆசி பெற்று, வீட்டிற்குப் புறப்படத் தயாரானேன்.

அந்த லாங்-சைஸ் நோட்டு என்னுடைய பிரதான பொக்கிஷம். அதை எடுத்துச் செல்ல தனியாக பேண்ட் துணி வாங்கி, நோட்டின் சைஸூக்கு ஜிப்புடன் ஒரு பை தைத்துக் கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

அப்போது நான் சுவாசித்த காற்றிலிருந்த ஈரம், மழை பெய்ந்து ஓய்ந்திருப்பதை எனக்கு உணர்த்தியது.

நோட்டை இரண்டு பாலித்தீன் பைகளால் வாட்டர்-ப்ரூஃப் செய்துகொண்டு, பேண்ட்டை(பையை) அதற்கு அணிவித்து, அதை என்னுடைய  டி.வி.எஸ் சேம்ப்-பின் ஹேண்டில் பார் கொக்கியில் மாட்டிக் கொண்டு புறப்பட்டேன்.

அடைமழை கொட்டி இருந்திருக்கிறது. கட்டிடங்களும், காற்றும் மழையில் நினைந்திருந்தன. வீதிகள்தோறும் நீரோட்டம்.

டி.வி.எஸ் சேம்ப்பில் அப்போதுதான் எலட்ரானிக்-ஸ்டார்ட் அறிமுகமாகியிருந்தது. அந்தக் காலத்தில் பரவலாக ஓடிக் கொண்டிருந்த டி.வி.எஸ்-50கள் ஆங்காங்கே நின்று ஸ்டார்ட் ஆகாமல் முனகிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்து, நான் ராசா(!) மிடுக்கோடு காஞ்சி ராஜவீதியில் சென்று கொண்டிருந்தேன். ராஜவீதி, சாண் உயர நீர்வீதியாக இருந்தது. சர்வ ஜாக்கிரதையாகத்தான் வண்டி ஓட்டினேன். ஆனாலும்...

டொடுக் என்ற சப்தத்துடன் ஏதோ ஒரு பெரிய பள்ளத்தில் முன்சக்கரம் பயங்கரமாக இறங்கியது. முழு பிரேக்கையும் பிடித்தேன். வண்டி நிற்கவில்லை. திமிங்கிலம் விழுங்குவது போல எதனாலோ என் வண்டி கீழ் நோக்கி இழுக்கப் பட்டது. காலூன்ற முயன்றேன். பயங்கர அதிர்ச்சி. தரை தட்டுபடவே இல்லை. காலும் கீழே போய்க்கொண்டிருந்தது.

பட்டெனப் புரிந்தது. கடவுளே! திறந்து வைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடையில், நான் வண்டியுடன் செங்குத்தாக கீழிறங்கிக் கொண்டிருந்தேன்.

வண்டி உரசிக்கொண்டே சப்தம் எழுப்ப, உடல் முட்டிகள் எதனெதனுடனோ இடிபட, கண்கள் இருட்டிக் கொண்டன. அது பயத்தினாலா? நீரின் நிறத்தினாலா?  அது அந்தச் சாக்கடைக்கே வெளிச்சம்!

“தூக்கு அவன” என்ற குரலைத் தொடர்ந்து திமுதிமுவென நாலைந்து பேர் ஓடி வரும் காலடியோசைக் கேட்டது. அவர்கள் என் தலையைப் பிடித்து, பின் கைகளைப் பிடித்து அலேக்காகத் தூக்கி நிலத்தில் நிறுத்தினார்கள்.

ஒரு கணம் நின்றுவிட்ட உயிர்நாடி மீண்டும் துடிக்கத்தொடங்க, பெருமூச்சு விட்டேன்.

பாதாள சாக்கடையை எதற்காகவோ நான்கு சதுரடிக்கு வெட்டி அப்படியே விட்டு விட்டார்கள். எமகாதகர்கள். வண்டியின் பின் சக்கரம் மட்டுமே தரைக்கு மேல் இருந்தது. அது மெதுவாக ரிவர்ஸில் சுத்திக் கொண்டிருந்தது. பின்விளக்கு அணைந்து அணைந்து எரிந்து என் முகத்தில் சிவப்பொளியைப் பாய்ச்சியது. (நம்பியார் முறைக்கும் போது அவர் முகத்திற்கு ஒரு ரெட்லைட் எஃபெக்ட் கொடுப்பார்களே, அது மாதிரி.)

வண்டியையும் மீட்டார்கள். முன் பகுதி சற்று நசுங்கியிருக்க, ஹேண்டில் பார் அஷ்ட கோணலாக வளைந்திருந்தது.

“ஏன் தம்பி, ஒரு கொம்ப நட்டு, செவப்பு கொடி வச்சிருக்குல்ல. பாத்து வரப்படாது?” ஒருவர் கடிந்துக் கொண்டார். அவருக்கு சாலை ஓரத்தைச் சுட்டினேன். பத்தடிக்கு ஒன்றாய் வரிசையாக கட்சிக் கொடிகள் நடப்பட்டு இருந்தன.

‘இதுவும் ஒரு கட்சிக் கொடி. கொஞ்சம் நடு ரோட்டுல நட்டுட்டாங்கனு நெனச்சு, நான் பாட்டுக்கு வந்துட்டேன் சார்’ அப்பிராணியாகச் சொன்னேன். (நம்ம ஊர் எல்லா கட்சிக் கொடிகளிலும்தான் சிவப்பு ஒளிருதே!)

அவர் தலையில் அடித்து கொண்டு, “சரி சரி, போய் குளி” என்றார். அப்போதுதான் கவனித்தேன். எங்கள் ஊரில் “செங்கழு நீரோடை வீதி” என்று ஒரு பிரபலமான வீதி உண்டு. ஆனால் இது என்ன கழுநீர் ஓடையோ?  அதில் தலைமூழ்கி எழுந்ததில் கார்மேக வண்ணனாகக் காட்சியளித்தேன். தார் வண்ணன் என்றும் சொல்லலாம். அவ்வளவு கருப்பு.

ஒருவாறு சமாளித்து வண்டியைக் கிளப்பினேன். என்னுடல் துர்வாசனையை நாசியால் தாங்க முடியவில்லை. “சே! நம்ம கதாநாயகர்கள் சாக்கடை வழியாக, கவர்னர் / மந்திரி வீட்டுக்குள் நுழைவது, ஹீரோயினை அனாயாசமாக தூக்கிக் கொண்டு வருவது, உள்ளேயே வில்லனுடன் ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடுவது எல்லாம் எவ்வளவு பெரிய கப்சா?!!” என்று அந்த நிலையிலும் யோசித்தேன்.

என்னிலையை கண்டு பொறுக்காத கார்மேகம் மீண்டும் அடைமழையைக் கொட்டி என்னை குளிப்பாட்டியது(!). வீதி வெறிச்சோடியதால், வண்டியை நிறுத்தி, நடு ரோட்டில் உடம்பை தேய்த்துவிட்டு ஆனந்தமாகக் குளித்தேன் (டிரஸ்சோடுதான்)!

மீண்டும் பால்வண்ணனாக மாறிய சந்தோசத்தில், ஈரம் சொட்டச்சொட்ட வீடு வந்து சேர்ந்தேன். மரணச் சாக்கடையை முத்தமிட்டுத் திரும்பியவன் என எண்ணிக் கொண்டே, வண்டியை ஸ்டேண்ட் போட்டு, ஹேண்டில் பாரைப் பார்த்த நான் துல்லியமாய் அதிர்ந்தேன்...

பேண்ட் போட்ட என் ‘மேத்தமேட்டிக்ஸ்’ நோட்டைக் காணோம்.