Friday, June 25, 2010

ட்விட்டருக்கு ஆபத்து?


உலக கோப்பை கால்பந்தாட்ட ஜூரத்தின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், அதன் ரசிகர்கள் எழுதும் ட்வீட்ஸ் (Tweets)-களின் எண்ணிக்கையை தாக்குப் பிடிக்க முடியாமல் ட்விட்டர் நிலைகுலையக் கூடும் என்று சில மென்பொருள் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதைப் படிக்கையில் எனக்கு சிரிப்புதான் வந்தது. ஏனென்றால், "எத்தனை கோடி டேட்டா (data) தந்தாய் உலகே" என்று ஜாலியாகப் பாடிக் கொண்டிருக்கும் ட்விட்டர், இன்னும் எத்தனை கோடி டேட்டா தந்தாலும், இது எனக்கு கவுரவப் பிரசாதம் என்று ஸ்வாஹா செய்து விடும். காரணம் அது ட்வீட்ஸ்களை சேமிக்கும் டேட்டாபேஸ் (Database)-ஐ கட்டிக் காப்பது சர்வ வல்லமை பொருந்திய இளவரசி காசண்ட்ரா (Cassandra).

பண்டைய துருக்கி நாட்டின் புகழ்பெற்ற ட்ராய் (Troy) நகரின் இளவரசி காசண்ட்ராவிற்கும் ட்விட்டருக்கும் என்ன சம்பந்தம்? இதன் நதிமூலம் கூகுள். அங்கிருந்தே விளக்குகிறேன்.

இன்று இன்டர்நெட்டின் மொத்த ட்ராஃபிக்-இல் 45 சதவீதம் கூகுளை நோக்கியே. கூகுள் எப்படி இதைத் தாக்கு பிடிக்கிறது? அது எப்படி அதன் டேட்டாவை சேமித்து வைக்கிறது? எதைக் கேட்டாலும் எப்படி அதனால் உடனே தர முடிகிறது என்றெல்லாம் யோசித்ததுண்டா?

ஒன்று வாங்கினால் இன்னொன்று ஃப்ரீ, மாடு வாங்கினால் ஆடு ஃப்ரீ, ஆடு வாங்கினால் வாத்து ஃப்ரீ என்ற ரீதியில் மற்ற நிறுவனங்களெல்லாம் செயல்பட, நீ எதுவுமே வாங்க வேண்டாம் ராசா, உனக்கு எல்லாமே ஃப்ரீ என்று எப்படி கூகுளால் தர முடிகிறது என்றாவது யோசித்ததுண்டா?

பொதுவாக பெருமளவு டேட்டாவை சேமிக்க பெரிய பெரிய ஹார்ட்வேர் (hardware), டேட்டாபேஸ் சர்வர்கள் (database servers), சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றில் மில்லியன் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் கூகுள் தனக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இதற்கு வீணடிக்காமல் மாத்தியோசித்தது.

டேட்டா தின்று கொட்டை போட்ட Oracle, SQL Server ஆகியவற்றை ஒதுக்கித்தள்ளி பிக் டேபிள் (Big Table) என்ற புதிய டேட்டாபேஸ்-ஐ உருவாக்கிக் களமிறக்கியது. இது மின்னல் வேகத்தில் செயல்படக் கூடியது. ஆனால் இதனை சாதாரண கம்ப்யூட்டரில் கூட நிறுவ முடியும். மலிவான சிறிய சிறிய கம்ப்யூட்டர்களை பிக் டேபிளுடன் உலகெங்கும் நிறுவி அவற்றை மேகம் போன்ற ஒரு நெட்வொர்க்-கில் இணைத்தது.  இதற்கு க்ளவுட் கம்யூட்டிங் (Cloud Computing) என்று பெயர்.

இந்தக் க்ளவுடில் இருக்கும் கம்ப்யூட்டர்கள், "என்கிட்ட இது இருக்கு, உன்கிட்ட என்ன இருக்கு, நீ இத வச்சுக்கோ, நான் இத வச்சுக்கிறேன்" என்றெல்லாம் வளவள லொடலொட எனப் பேசி டேட்டாவை பண்டமாற்றிக் கொள்ளும். இதற்கு காஸிப் ப்ரோட்டோகால் (Gossip Protocol) என்று பெயர். இதன் மூலம் இந்த நெட்வொர்க்கில் ஒரு கோடியில் நுழையும் டேட்டாவானது சில நிமிடங்களிலேயே மேகமாக ஆனால் சற்று வேகமாக நகர்ந்து, வழியெங்கும் பிரதி (copy) எடுத்தபடியே, மறு கோடிக்குச் சென்று விடும். இதனால், உலகின் எந்த மூலையிலிருந்து கேட்டாலும், உங்களுக்கு அருகிலுள்ள கூகுளின் கம்யூட்டர் "இதானே கேட்டீங்க, இந்தாங்க வெச்சுக்கோங்க" என உடனே கொடுத்துவிடும். இதுவே கூகுள் வெற்றியின் ரகசியம்.

கூகுள் தன் பிக் டேபிளின் சூட்சுமங்களை வெளி உலகிற்குக் கோடிட்டுக்காட்ட, அதை வைத்து ஃபேஸ்புக் (Facebook), கணினிச் செம்மொழியான ஜாவாவைப் (Java) பயன்படுத்தி, பிக் டேபிள் என்ற சக்ரவர்த்திக்கு மகளாக ஒரு புதிய டேட்டாபேஸ்-ஐ உருவாக்கியது. அதற்கு காசண்ட்ரா என்ற நாமகரணமும் சூட்டியது. ஆக துருக்கி தேச இளவரசி, இப்பிறவியில் டேட்டாபேஸ்-ஆக அவதரித்து விட்டாள். ஆனால் ஃபேஸ்புக்கில் அவள் வளர போதுமான வசதிகளில்லை.  Apache.org என்ற ஓபன் ஸோர்ஸ் (Open Source) அரண்மனைக்கு அவள் அனுப்பப்பட்டாள். அங்கே அவள் சகல வித்தைகளையும் கற்று, யௌவனங்கள் நிறைந்த அரசிளங்குமரியாய்த் திரும்பி ஃபேஸ்புக்கில் அரியணை ஏறினாள்.  அன்று முதல் ஃபேஸ்புக்கின் முகம் மேலும் பிரகாசிக்கத் தொடங்கியது.

காசண்ட்ராவின் கொடியிடை அழகிலும் (Smallest Database), ஆட்சித் திறத்திலும் (Replicating the database), மாட்சித் திறத்திலும் (Maintaining the database) மயங்கிய ட்விட்டர் அவள் தலைமையை ஏற்றது (அப்பாடா!! கூகுளில் தொடங்கி ஃபேஸ்புக் வழியாக ட்விட்டரில் முடித்து விட்டேன்!). Digg.com, Outbrain.com போன்ற ஜாம்பவான்களும் தங்களை காசண்ட்ராவுடன் இணைத்துக் கொண்டன.

காசண்ட்ராவின் ஆட்சி விரியத் தொடங்கியது. அவள் சாம்ராஜ்யத்தில் கால்பந்தாட்ட மைதானங்களெல்லாம் கால் தூசிற்குச் சமம். இப்போது நான் சிரித்ததன் அர்த்தம் புரிகிறதா?!!

பெரும் ராஜ்ஜியங்களைப் பிடித்தபின், குழந்தையிடம் விளையாட வருவது போல் காசண்ட்ரா இப்போது என்னிடம் வந்துள்ளாள். டெரா பைட்ஸ் (Tera Bytes) கணக்கில் டெட்டா புரளும் என் ப்ராஜெக்ட்-ன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நான் பணிபுரியும் கம்பெனியில் இளவரசியை களமிறக்கிக் கொண்டிருக்கிறேன்.

Saturday, June 12, 2010

பேர் சொல்லாத பிள்ளை

மறதி ஒரு வரப்பிரசாதம். சிலவற்றை மறக்க முடிவதால்தான் வாழ்க்கை தொடர்கிறது. ஆனால், இதெல்லாம் மறக்கும், இப்படியெல்லாம் மறக்கும் என்ற நிலைகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, மறக்கவே கூடாத, மறக்கவே முடியாததை நான் மறந்திருக்கிறேன். குழம்புகிறதா? சொல்கிறேன்!

அப்போது நான் ஏழாங் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். வேறொரு பள்ளியில் கட்டுரை போட்டி. அப்பள்ளியின் பி.டி மாஸ்டர் தான் போட்டிக்குச் சூப்பர்வைசர். அவர் மிலிட்டரியிலிருந்து ரிடையர் ஆனவராம். இன்னமும் அதே மிடுக்குடன் அறிவித்தார்.

"போட்டி நேரம் இருபது நிமிடம் மட்டுமே. அதற்குள் கண்டிப்பாக எழுதி முடித்து விட வேண்டும்" என கட்டளையிட்டு விசிலடித்தார்.

என்னுடைய கட்டுரைக்கு இருபது நிமிடம் ரொம்ப குறைவு என்பதால், உடனடியாக பரபரவென எழுதத் தொடங்கினேன். மிலிட்டரி அடுத்த அறிவிப்பை செய்திருக்கிறார். “இப்பொழுதே உங்கள் பெயர், வகுப்பு, பள்ளி ஆகியவற்றை, பேப்பரின் வலது ஓரத்தில் எழுதி வைத்து விட வேண்டும்.” இருபது நிமிடம் முடிந்த உடனேயே பேப்பரை வாங்கி விடுவேன் என சொல்லியிருக்கிறார். ஆனால் எழுதும் மும்முரத்தில் அதை நான் கவனிக்கத் தவறியிருந்தேன்.

இரண்டொரு முறைதான் கண் சிமிட்டியிருப்பேன். அதற்குள் இருபது நிமிடம் கரைந்து விட்டது. மிலிட்டரி மீண்டும் விசிலடித்து "ஸ்டாப்... ஸ்டாப்..." என கத்தியதோடு மட்டுமில்லாமல் எல்லோரிடமிருந்து பேப்பரை பிடுங்கவும் தொடங்கியிருந்தார்.

இன்னும் ஒரு பத்தி மட்டுமே பாக்கி. எப்படியாவது முடித்து விட பெஞ்ச் அதிர எழுதிக் கொண்டிருந்தேன். அதற்குள் என் பேப்பரை பிடுங்கி விட்டார்.

”சார்.. சார்.. பேர் எழுதல.... ”

பளார்!!!!!!

”எழுதுடா... எழுத சொன்னபோது என்ன பண்ணிட்டிருந்த” என கர்ஜித்தார்...

வாங்கிய அறையில் உடம்பு நடுங்கியது... கன்னம் ஜிவுஜிவுத்தது... கையில் உதறல் எடுக்க, பேனா பூரானாய் நெளிந்தது... பெயரெழுத முனைந்தேன்... ர... ர... ர.... அதற்கு மேல் எழுத்து வரவில்லை... விழி பிதுங்கியது... மூச்சு ஸ்தம்பித்தது... ஐயோ கடவுளே...

”டேய், சீக்கரம் எழுதுடா...”

”சார்... சார்... பேர் மறந்து போச்சு சார்....”

”என்னது??” மீண்டும் அவர் உறும எனக்கு அழுகையே வந்து விட்டது...

அதற்குள் பின்னாலிருந்த பையன் இன்னமும் எழுதிக் கொண்டிருக்க அவனை நோக்கி பாய்ந்துவிட்டார். நின்ற மூச்சு வந்தது. ஆனால் போன பெயர்தான் நினைவிற்கு வரவில்லை.

பக்கத்தில் நிதானமாக கிளம்பிக் கொண்டிருந்த நண்பனை அழைத்து கேட்டேன்... ”டேய்.. என் பேர் என்னடா?”

அவன் என்னை வினோதமாக பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் சென்று விட்டான்.

'ஐயோ.. என்பேர் என்ன?'.. மண்டை கிறுகிறுத்தது... ஏதாவது ஒரு பாட புத்தகம் எடுத்துப் போயிருந்தால் லேபிள் பார்த்துக் கண்டுபிடித்திருக்கலாம்.

அப்போது எனக்காக வாயிலில் காத்துக் கொண்டிருந்த மற்றொரு நண்பன் சொன்னான்...

"டேய் ரகு, என் அப்பா வந்துட்டார்... நான் கிளப்பறேன்..."

'ஆங்.. ரகு...' எழுதி விட்டேன்.

'ஐயோ, இது பாதி பேர் தானே... மீதி பேர் என்ன?'

அதற்குள் மிலிட்டரி திரும்பி வர இன்னொரு அறைக்கு பயந்து பேப்பரை மடித்துக் கொடுத்து விட்டு திரும்பி பார்க்காமல் வெளியே ஓட்டமாய் ஓடி வந்து விட்டேன்.

தெருவில் பாதி பெயர் கொண்ட பையனாய் நடந்து கொண்டிருந்தேன். கன்னம் இன்னமும் வலித்துக் கொண்டிருந்தது. அதைவிட பெயரைத் தேடி மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. ஐயோ.. நான் யாரு, எனக்கு வைத்த பெயர் யாது? என்றெல்லாம் எழுதலாம் தான். ஆனால், அந்த வயதில் கவிதையாவது, மோனையாவது... என் பெயரில் யாராவது கடை வைத்திருக்கிறார்களா என்று ஒவ்வொரு கடையின் பெயர் பலகையை படித்துக் கொண்டே நடந்தேன்.

அப்போது என் பக்கத்து வீட்டுக்காரர் எதிரே வந்தார். அவருக்கு நான் போட்டிக்குச் சென்றது தெரியும். அவரிடம் என் மீதிப் பெயரை கேட்கலாமா என யோசித்தேன். எப்படி கேட்பது என தயங்கினேன். ஆனால் அவரோ நிலைமை தெரியாமல் திருவிளையாடல் படத்தில் சிவபெருமான் தருமியிடம் கேட்பது போல..

”தம்பியே.. பரிசு கிடைத்ததா..?” என்று கேட்டார்.

”அறை ஒண்ணுதான் கெடச்சுது...” என கடுப்பில் முணுமுணுத்துவிட்டு நகர்ந்தேன்.

சிறிது தூரத்தில் கோதண்ட ராமர் பஜனை கோயிலை கடந்தேன். 'ராமா... இது என்ன சோத... ஹாங்... ராமன்...'

“யுரேகாஆஆஆ... கண்டு பிடிச்சிட்டேன்... கண்டு பிடிச்சிட்டேன்... நான் ராமன்.. ரகுராமன்...” என கத்தியபடியே ஓடி என் வீட்டுக் கண்ணாடி முன் மூச்சிறைக்க நின்றேன்.

‘ரகுராமா... கொஞ்ச நேரம் காணாம போய்ட்டியேப்பா’ என சந்தோசத்தில் கதறினேன். உற்றுப் பார்த்தால், மிலிட்டரியின் மூன்று விரல்கள், செவ்வரிகளாய் என் கன்னத்தில் பதிந்திருந்தன.

ஹூம், அந்த ராமன் பரிவுடன் தடவியதில், அணிலுக்கு மூன்று கோடு விழுந்ததாம். என் கன்னத்தில் விழுந்த மூன்று கோடுகளை ரகுராமனாகிய நான் பரிவுடன் வெகுநேரம் தடவிக்கொண்டிருந்தேன்.

Tuesday, June 8, 2010

இடி அமீன்கள்...

இன்று காலை நான் வேலை செய்யும் ஐ.டி பார்க்கினுள் நுழையும் போது, எதிரில் வந்தவர் பலமாக இடித்து விட்டார். தினமும் ஒரு நூறு பஸ்கி எடுப்பார் போல. அவரின் ”திண்”ணென்ற தோள் இடித்ததில் எனக்கு ”விண்”ணென்று வலித்தது. ஆனால் அவரோ, எதையும் சட்டை செய்யாமல், தன் பாட்டுக்கு ஏதோவொரு கனவுலகில் சஞ்சரித்தபடி சென்று விட்டார்.

கடந்த பத்து நாட்களில், இந்த ஐ.டி பார்க்கினுள்ளேயே நான் படும் மூன்றாவது இடி இது. நான்கு நாட்களுக்கு முன், லிஃப்டில் தரை தளத்திற்கு வந்து கொண்டிருந்தேன். அருகில் யாருமில்லாததால், ஹாயாக நின்று கொண்டு,

அடடா மழடா... அட மழடா...

என்று சன்னமான குரலில் முணுமுணுக்க, தரை தளத்தில் லிஃப்ட் திறந்தது. ஒரு பத்து பேர், தரையையே பார்த்தபடி ஒருவரை ஒருவர் முண்டிக் கொண்டு, என்னையும் முட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தனர். கர்ச்சீப் போட்டு சீட்டா பிடிக்கப் போகிறார்கள்? அட! ஒருவர் கூட நான் வெளியே போக வழியே விடவில்லை!

ஆபீஸாக இருந்தாலும் சரி, ஹாஸ்பிட்டலாக இருந்தாலும் சரி, சொல்லி வைத்தது மாதிரி, வெளியே போக வழி விடாமல், டவுன் பஸ்ஸில் ஏறுவது போலத்தான், பெரும்பாலானவர்கள் லிஃப்டினுள் நுழைகிறார்கள். ஒரு பக்கம் வழி விட்டபடியாவது நுழையலாம்! இந்த அடிப்படை யோசனை கூட இல்லாமல் ஏதோ கோட்டையைப் பிடிப்பது போல வாயிலை அடைத்தபடி நுழைகிறார்கள்.

ஒரு வழியாக வெளியே வந்து பெருமூச்சு விட்டேன். கதவு மூடிக் கொள்வதற்குள் நுழைந்து விட, மேலும் இரண்டு பேர் வேகமாக ஓடி வந்து, Y ஷேப்பில் பிரிந்து, என் இரு தோள்களையும் ஆளுக்கு ஒன்றாக இடித்துத் தள்ளி, லிஃப்டினுள் பாய்ந்து விட்டனர். அவர்களை பிடித்து சண்டை போடுவதற்குள், லிஃப்ட் மூடிக் கொண்டது. லிஃப்ட் மீண்டும் வர அரை மணியா ஆகப் போகிறது? ஏன் இந்த அவசரம்!? என்ன மனிதர்கள் இவர்கள் என நொந்தபடி நடக்க, ஈனமான குரலில் உதடு முணுமுணுத்தது...

அடடா இடிடா... இடி மழடா...

இதெல்லாம் பரவாயில்லை. முதல் இடிதான்... இல்லை மிதிதான் ரொம்ப மோசம். என் ஆபீஸுக்குள்ளேயே நடந்தது. ஆபீஸ் வளாகம் என்ற இங்கிதம் கூட இல்லாமல், இரண்டு பேர் சத்தம் போட்டு அட்டகாசமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர், மானாட மயிலாட எல்லாம் தோற்கும்படி கை காலை உதைத்தபடி தன்னிலை மறந்து பேசிக் கொண்டிருந்தார்.

நான் சற்று எச்சரிக்கையாகத்தான் அவர்களை கடந்தேன். இருந்தும் அந்த மானானவர் பின்னாலே ஆடி நகர்ந்ததில் ஓங்கி என் காலை மிதித்து விட்டார். என் ஷூவையும் மீறி, சுண்டு விரல் எறும்பாய் நசுங்கிவிட்டது. வலி பொறுக்காமல் ஷூவைக் கழற்றி, சாக்ஸைக் கழற்றி விரலை தேய்த்துவிட்டேன்.

ஒரு நிமிடம் கழித்துதான், அந்த மானுக்கு தான் உதைத்தது தரையல்ல என உறைத்திருக்கிறது. திரும்பி பார்த்து விட்டார். ஸாரி கேட்கப் போகிறார் போல! வலியையும் மீறி பரவாயில்லை என்று சொல்ல என்னை திடப்படுத்திக் கொண்டேன்.

ஆனால் அவரோ, என்னை ஒரு அப்பிராணியாய்ப் பார்த்துவிட்டு, தன் மானாட்டத்தை செவ்வனே தொடர்ந்தார். தலையிலடித்துக் கொண்டேன்.

டை கட்டினாலும் சரி, நிஜாரின் மேல் கைலி கட்டினாலும் சரி. ஐ.டி பார்க்கானாலும் சரி, பேட்டையானலும் சரி. பெரும்பாலானவர்களுக்கு மற்றவரைப் பற்றி அக்கறையில்லை. தங்களால் மற்றவருக்கு ஏற்படும் இடைஞ்சல்கள் பற்றியோ, துன்பங்கள் பற்றியோ அணுவளவும் கவலையில்லை.

இந்த கசப்பான உண்மையை நினைத்த போது, இருபது வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் படித்த ஜோக் ஞாபகத்திற்கு வந்தது.

முதலாமவர்: ஸாரி சார், கவனிக்காம இடிச்சுட்டேன்.
இரண்டாமவர்: நீங்க ஊருக்கு புதுசா?
முதலாமவர்: அட, எப்படி கண்டுபிடிச்சீங்க?
இரண்டாமவர்: ஹிஹி... நாங்கெல்லாம் இடிச்சுட்டா, ஸாரியெல்லாம் சொல்லிக்கிறதில்லை...

ஓ அப்பவே சென்னை இப்படித்தானா?

Tuesday, June 1, 2010

முனியின் செமினார்

சில சமயம், கல்லூரிகளில் ஐ.டி டிபார்ட்மெண்டிற்கு செமினார் எடுக்க எனக்கு அழைப்பு வரும். அவர்கள் கேட்கும் தலைப்பில் அல்லது நானே ஒரு தலைப்பில் செமினார் எடுப்பேன்.

போர் அடிக்காமல் இருக்க, ஜோக்குகள், சிறு கதைகள், கிளைக் கதைகள் எல்லாம் சொல்லி, அதிலிருந்து டெக்னிகல் சமாச்சாரத்திற்குத் தாவி செமினார் எடுத்து வந்தேன்

எப்படிப்பட்ட கல்லூரியாக இருந்தாலும், வம்பு செய்வதற்கென்றே சில மாணவர்கள் இருப்பதுதானே விதி. இவர்கள் செய்த அலம்பலில் செமினார் அடிக்கடி தடைபட்டது.

இவர்களை வழிக்கு கொண்டுவர ஒரு டெக்னிக்கை கையாண்டேன். ராஜேஷ்குமார் கதைகளில், விவேக் கேள்வி கேட்கும்போது மாட்டிக் கொண்ட குற்றவாளிக்கு அந்த ஏசியிலும் வியர்க்குமே! அது மாதிரி சுலபமான, ஆனால் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்டு அவர்களை வியர்க்க வைத்தேன். அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று, அன்னியோன்னியமாக அவர்களின் தோளில் கைபோட்டு, நடு சந்திக்கு இழுத்துவிட்டு, கேள்வியைக் கேட்டு, பதில் சொல்ல அவர்கள் கையில் மைக்கையும் திணித்து விடுவேன்.

தங்கள் அபிமான ஃபிகர்கள் மத்தியில், மானம் பறிபோவதால், அந்த மாணவர்கள் கப்சிப்பென அடங்கினர். மேடையிலேயே நிற்காமல், ஹால் முழுக்க ரவுண்ட் அடித்தபடியே செமினார் எடுத்ததால், கேள்விக்கு பயந்து, சலசலப்புகள் தானே அடங்கின.

ஒரு முறை ஒரு பெரிய கல்லூரியில் செமினார் எடுக்க வேண்டியிருந்தது. ஒட்டுமொத்த ஐ.டி டிபார்டிமெண்டும் பங்கு பெற்றதால், எண்ணிக்கை 400-ஐ தாண்டியிருந்தது. ஒரு ஜோக்குடன் துவங்கினேன்.

“இப்படித்தான், ஒரு மத்யான நேரம். எல்லாரும் வயிறுமுட்ட சாப்ட்ட பிறகு செமினாருக்கு வந்தாங்க. ஆரம்பிக்கிறதுக்குள்ளயே முதல் ரோல டொபுக்-னு ஒரு தல சாஞ்சு விழுந்துச்சு. பயந்து வேற பக்கம் போனா, அங்க கொர்ர்ர்ர்...னு சத்தம். உடனே பக்கத்திலிருந்த பையனுக்கு செம கோவம் வந்துடுச்சு. அவன் சொன்னான்.. டேய்... எவ்ளோ பெரிய செமினார் நடக்குது. நீ இவ்ளோ சத்தம் போட்டு குறட்ட உட்ற... நாங்கெல்லாம் தூங்க வேணா...?

அரங்கம் கலகலக்க, செமினார் துவங்கியது.

ஒரு கட்டத்தில் செமினார் மந்த நிலைக்கு வர, கேள்வி பாணிக்குத் தாவினேன். இரண்டாவது வரிசையில் இருந்த ஒரு மாணவரை கேள்வி கேட்க, அவர் மலங்க மலங்க முழித்தபடி தப்பாக பதிலளிக்க, ஒட்டு மொத்த அரங்கமும் சுவாரஸ்யமானது. தூக்கம் கலைந்து அனைவரும் சடுதியில் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். இதைக் கவனித்துவிட்ட நான், அந்த மாணவரையே குறிவைத்து அடிக்கடி கேள்விகளைக் கேட்க, ஒவ்வொருமுறையும் அவர் சொதப்ப செமினார் டாப் கியரில் சென்றது.

கடைசியாக ஒரு படு சுலபமான கேள்வியைக் கேட்க, அதற்கு அவர் சரியான விடையளித்துவிட, “அப்பாடா, ஃபைனலி ஐ காட் எ ரைட் ஆன்ஸர் ஃப்ரம் யு” என்று நான் அவரை பாராட்ட அரங்கமே அதிர்ந்தது.

செமினார் இனிதே முடிந்தது. முதல்வர் அறையில் (அட, பிரின்சிபால் ரூமுங்க) டீ பார்ட்டி. ஹாலில் இருந்த கேமிரா மூலம், தன் இடத்திலேயே செமினாரைப் பார்த்திருந்த முதல்வர் என்னை பெரிதும் பாராட்டினார் (பாராட்டு விழாவெல்லாம் இல்லீங்க). “படு ஜோவியலாகவும், டெக்னிக்கலாகவும் நடத்தினீர்கள். அதைவிட எங்கள் ஸ்டூடண்ட்சை கட்டுக் கோப்பாக வைத்திருந்தீர்கள். நீங்க அடிக்கடி வந்து செமினார் எடுக்கணும்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது, ஹெச்.ஓ.டி என் காதருகே கிசுகிசுத்தார். “சார், எல்லாம் பிரமாதம். ஆனா ஒரு சின்ன வருத்தம்”.

“ஐயோ, என்னாச்சு சார்?”

“நீங்க கேள்வி கேட்டு தெணறடிச்சது ஸ்டூடண்ட் இல்ல சார், எங்க டிபார்ட்மெண்டில் ஒரு புரொபசர். அங்க பாருங்க முனி அடிச்சதுபோல நிக்கறாரு” என்றார்.

அடப் பாவமே!