Tuesday, August 24, 2010

சமஸ்கிருதமும் ஜாவாவும், தமிழும் டாட்நெட்டும்

கோவில்களில் சமஸ்கிருதமா தமிழா என்ற சர்ச்சை பல நாட்களாகத் தொடர்கிறது. என்னைப் பொருத்தவரை இரண்டையும் சமவிகிதத்தில் பயன்படுத்தலாம் என்றே நினைக்கிறேன். இதை, கணினி மொழிகளான ஜாவா (Java) மற்றும் டாட்நெட்டைக் (.Net) கொண்டு விளக்குகிறேன்.

நான் கல்லூரிகளுக்குச் செமினார் எடுக்கச் செல்லும்போது (அதைப்பற்றி ஒரு நகைச்சுவைப் பதிவு: முனியின் செமினார்)  மாணவக் கண்மணிகள் (இருபாலரையும் குறிப்பிட இதுதான் வசதியாக இருக்கிறது!) என்முன் வைக்கும் பிரதான கேள்வி: ஜாவா, டாட்நெட் இந்த இரண்டில் எதைப் படிப்பது?

இதில் எந்த மொழியில் ப்ரோக்ராம் எழுதினாலும் அவை ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ள மொழி கடந்த ப்ரோட்டோகால்கள் (Protocol) வந்து விட்ட நிலையில், நான் இரண்டையுமே படிக்கச் சொல்கிறேன்.

இப்போதெல்லாம் எந்த ப்ராஜெக்ட்டானாலும் சர்வர் கம்ப்யூட்டரில் (Server Computer) இயங்கும் ப்ரோக்ராம்களும், க்ளையண்ட் கம்ப்யூட்டரில் (Client Computer) இயங்கும் ப்ரோக்ராம்களும் எழுதி அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் வகையில் வடிவமைக்க வேண்டியிருக்கிறது. (Web ப்ராஜெக்ட்கள் விதிவிலக்கு).

பெரும்பாலான க்ளையண்ட் கம்ப்யூட்டர்கள் விண்டோஸில்தான் இயங்குகின்றன. இதில் நாம் பயன்படுத்துவதற்கு வசதியாக ப்ரோக்ராம் எழுத டாட்நெட் சிறப்பாக இருக்கிறது.

சர்வர் கம்ப்யூட்டர்களை இன்விசிபிள் (Invisible) கம்ப்யூட்டர் என்றும் சொல்வார்கள். எங்கே இருக்கின்றன, எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்க முடியாது. அவற்றின் பெயர் கொண்டு (உதா: yahoo.com) தொடர்பு கொள்ளலாம். அவை நீங்கள் கேட்கும் சர்வீஸைத் தரும். உதா: இமெயில்.

இந்த சர்வர்கள், இதில் பயன்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டம், கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும். அதனால் அனைத்திலும் இயங்கும்படி சர்வீஸ் ப்ரோக்ராம்களை வடிவமைக்க வேண்டியிருக்கிறது. இதற்கு ஜாவா சிறப்பாக உதவுகிறது.

ஆக, நான் கையாளும் ப்ராஜெக்ட்களில் இரண்டையுமே பாகுபாடின்றி சரியான விகிதத்தில் பயன்படுத்துகிறேன். அவை வெற்றியும் கண்டு கோலோச்சுகின்றன.

சரி, கோவிலுக்கு வருகிறேன். இங்கே இறைவன்தான் சர்வர்.  இவரும் கண்ணுக்குத் தெரிய மாட்டார். எப்படி இருப்பார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. நாம் கேட்கும் வரத்தை சர்வ் செய்வதால் இறைவனும் சர்வரே.

எங்கும் நீக்கமற இருக்கும், சர்வ வல்லமை படைத்த, உருவம் கடந்த பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட சக்தியாக சிவனாகவோ, விஷ்ணுவாகவோ (yahoo, google மாதிரி), ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் டியூன் செய்ய சமஸ்கிருதம் சிறப்பாக இருக்கிறது. இங்கே செய்யப்படும் ப்ரோக்ராம்கள்தான் யாகங்கள், யக்ஞங்கள், குடமுழுக்குகள். இவை சமஸ்கிருததில் இருக்கலாம் என்பது என் கருத்து.

பக்தர்களான நாம்தான் க்ளையண்ட். நம் சார்பில் செய்யப்படும் அர்ச்சனைகள், பூசைகள் தமிழில் நடந்தால் அது நமக்கு ரொம்ப வசதி.

தன்னிலை மறந்து மனமுருகிச் செய்யும் மொழி கடந்த பிரார்த்தனையே, நம்மையும் இறைவனையும் இணைக்கும் ப்ரோட்டோகால்.

ஆக, கடவுளென்றாலும் கணினியென்றாலும் எச்செம்மொழியும் நமக்குச் சம்மதமே.

Monday, August 16, 2010

என். சொக்கனின் ‘முத்தொள்ளாயிரம்’


மதராசபட்டினம் ஒரு கவிதையாய் நம்பளை அறுபது வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்லுமென்றால், செம்மொழிக் கவிதைகள் ஆயிரம் வருடங்கள் கூட பின்னோக்கி அழைத்துச் செல்லும். அப்படி சங்ககாலத்திற்கு அழைத்துச் செல்ல என்.சொக்கன் பயன்படுத்தியிருக்கும் காலயந்திரம் முத்தொள்ளாயிரம்.

சேர சோழ பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே முத்தொள்ளாயிரம். இலக்கியச் சுவை மிகுந்த இந்த நூலை, எஸ்.எம்.எஸ் மட்டுமே படிக்கும் இந்த தலைமுறைக்கும் புரியும்படி மறுபிறப்பெடுக்க வைத்திருக்கிறார் சொக்கன்.

”ஐயோ, வெண்பாவா? அதெல்லாம் நமக்கு ஒவ்வா!” என அலறி ஓடும் தமிழ்தாசர்களை நிறுத்தி, படித்துதான் பாரேன் எனச் சவால் விடுகிறது சொக்கனின் எளிய தமிழ் நடை.

பாடல்களின் மையக்கருத்தினைக் குழைத்து ஓரிரு வார்த்தைகளில் சுவாரஸ்யமாக இவர் வைத்திருக்கும் தலைப்புகளே இச்சவாலுக்கான அறைகூவல். உதாரணங்கள்: தீப்பிடித்த தண்ணீர், தரையில் வானவில், யானையின் வெட்கம், சிலந்தி (க)வலை, கவிதை எழுதும் யானைகள், சாவித்துளைக்கு நன்றி!

இதைத் தொடர்ந்து உடனடியாக பாடலுக்குச் சென்றுவிடாமல், ஒரு பக்கக் கதைகளைப் புனைந்திருக்கிறார். சங்கப் புலவர்களின் கற்பனைகளை சிறிதும் காயப்படுத்திவிடாமல், பாடல்களின் ஓட்டத்திலேயே தனது கற்பனை, நகைச்சுவை மற்றும் தற்கால மேற்கோள்களையும் அளவாக பதமாகக் கலந்து கதைகளை/விளக்கங்களை புனைந்திருக்கிறார். 

புலவர்களிடம் கற்பனை வளம் செழித்திருந்திருக்கிறது. அதில் சில புன்னகைக்க வைக்கின்றன. சில ”அட!” போட வைக்கின்றன. சில ”வாவ்!” சொல்ல வைக்கின்றன. அத்தனைக்கும் அடித்தளமமைப்பது சொக்கனின் விளக்கக் கதை. 

உதாரணமாக இமையார் என்று தேவர்களைக் குறிப்பதை, எந்நேரமும் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை என்று பேரழகிகளைப் பார்த்துப் பழகியதாலோ என்னவோ, தேவர்களின் கண்கள் எப்போதும் இமைப்பதில்லை என்று சுவையாக விரித்திருக்கிறார் (ஏனோ மேனகையை டீலில் விட்டுவிட்டார்).

கதையைத் தொடர்ந்து பாடலையும், அதன் பின் சில சொற்களுக்கான அர்த்தங்களை குட்டி டிக்ஸனரி போலவும் கொடுத்திருக்கிறார்.

சுவையான விளக்கத்தை படித்தபின் பாடலைப் படிக்கும்போது, அது தெளிவாகப் புரிகிறது. அறியாத சொற்களின் அர்த்தத்தையும் ஊகிக்க முடிகிறது. பின்தொடரும் டிக்ஸனரியில் அதைச் சரிபார்க்கும்போது, அட நமக்கும் தமிழ்ப்புலமை கிட்டுகிறதோ என்று துள்ளிக் குதிக்கத் தோன்றுகிறது. நன்றி சொக்கன். நிச்சயம், பாடலெழுதிய புலவர்களின் ஆன்மா தங்களை வாழ்த்தும்.

இப்புத்தகத்தைப் படிக்க தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. விளக்கங்கள் ஜெட் வேகத்தில் பறப்பதால் கிடைக்கும் ஐந்து நிமிட அவகாசத்திலும் ஒரு பாடலைப் படித்துவிடலாம். சொக்கனின் கைவண்ணத்தில்... ஸாரி... எழுத்து வண்ணத்தில் பாடலின் நல்ல சொற்றொடர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. சமயத்தில் அவை பயன்படும்.

உதாரணமாக, உங்கள் மனைவி பொட்டிட்டு வருகையில், “திலகம் கிடந்த நல்நுதலாய்” எனக்கொஞ்சி செல்லமாகக் குட்டு வாங்கலாம். (மாறாக, “ஐயோ என் புருஷனுக்கு கிறுக்கு புடிச்சிடுச்சு” என்று உங்கள் அன்பு நாயகி அலறினால் அதற்கு சொக்கனோ, நானோ பொறுப்பல்ல!)

அனைத்து பாடல்களும் நான்கடி (நான்கு வரிகள்) கொண்ட பாக்கள். ஆனால் பல பாடல்களில் கருத்து இரண்டு அடிகளிலேயே முடிந்து விடுகிறது. ஓரடி மன்னனை,  தேர்ந்தெடுத்த மலர்மாலையை அணிந்தவனே, ஆய்ந்தெடுத்த மணிகளைச் சூடியவனே, கடல்சூழ் உலகை ஆள்பவனே என்றெல்லாம் புகழ்ந்து பாராட்டவும் (சேனைத் தலைவனுக்குப் பாராட்டு விழா!) அடுத்த அடி இணைப்புச் சங்கிலியாகவும் செலவிடப்பட்டிருக்கிறது. இத்தகைய குறுகிய பாடல்களை ஒரு பக்கக் கதைகளாக வடித்திருப்பது சொக்கனின் தனித்திறமை. வணக்கங்கள் சொக்கன்.

இக்கதைகள் குழந்தைகளுக்குச் சொல்ல பெரிதும் பயன்படும். அன்றைய அன்னை குழந்தைக்கு வீரம் ஊட்டினாள். இன்றோ செரிலாக்தான் ஊட்டுகிறாள். நாம் குறைந்த பட்சம் வீரக் கதைகளைச் சொல்லி சோறும் உடன் கொஞ்சம் தமிழையும் ஊட்டலாம் (பசலை படியும், சங்கு வளையல்கள் கழன்று விழும் காதல் கதைகள் சொல்வதற்கில்லை, அவை நமக்கு மட்டும்!) .

இவ்வளவு பயனுடன் எளிமையாக சொக்கன் எழுதினாலும், அவரது பணி எளிமையானதல்ல என உணரமுடிகிறது. ஒவ்வொரு பாடலையும் தீவிரமாகப் படித்து அலசியிருக்கிறார். காதல் பாடல்களுக்கு, திருக்குறள் கா. பாலிலிருந்து வரும் மேற்கோள்களும், ஓரிடத்தில் வரும் குறுந்தொகை, கலிங்கத்துப்பரணி மேற்கோள்களும் அவரது உழைப்பை பளிச்சிடுகின்றன. வாழ்த்துக்கள் சொக்கன்.

சேரனைவிட (கோதை) சோழனிடத்திலும் (கிள்ளி), சோழனைவிட பாண்டியனிடத்திலும் (மாறன்) பலவகைகளில் பாடல்கள் இருக்கின்றன. அவற்றை ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.

முடித்தபோது சந்தோஷத்துடன் ஒரு ஏக்கமும் இணைந்தது. மூன்று தொள்ளாயிரம் பாடல்களில் வெறும் 108 மட்டுமே கிடைத்திருக்கிறதாம். அவையே இவ்வளவு சுவையென்றால்....

மற்ற பாடல்களில் சில நூறாவது கிடைக்க காலமும், அவற்றை சொக்கன் எழுத தமிழன்னையும் அருள வேண்டுகிறேன் தொழுது.