Monday, March 29, 2010

வாழைக்காய்க்கு இப்படி ஒரு உபயோகமா?

இரண்டு மாதத்திற்கு முன்பு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு சற்று அருகில் குடி வந்த பிறகு, டைடல் பார்க்கிலுள்ள எனது ஆஃபீஸூக்கு வருவது பெரும் பாடகிவிட்டது. இரண்டு ஸ்டாப்பிங் தொலைவிலுள்ள பஸ் ஸ்டாண்டுக்கு டவுன் பஸ்ஸிலோ அல்லது ஆட்டோவிலோ வந்து, பிறகு வேளச்சேரி வழியாக திருவான்மியூர் செல்லும் M70-யைப் பிடித்து டைடல் வருவதற்குள் 2 மணி நேரம் வீணாகி விடுகிறது.

எட்டு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பியும் (ஐ.டி மக்களுக்கு 8 மணி என்பது நிலாக் காயும் நேரம் தானே!), ஊரைச் சுற்றிச் செல்லும் M70-யைத் தவிர வேறு நேரடி பஸ் எதுவும் இல்லாததால் பத்தரை மணியைத் தாண்டியே ஆஃபீஸூக்கு செல்ல முடிந்தது. ECR வழியாக பாண்டிக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் பஸ்கள் டைடல் வழியாகச் சென்றாலும் அதன் கண்டக்டர்கள், டைடல் டிக்கெட்டெல்லாம் ஏற்ற மறுத்து விட்டார்கள். பத்து வருடங்களுக்கும் மேலாக, சென்னையில் நினைத்த இடங்களுக்கு நினைத்த நேரத்தில் பைக்கிலேயே சென்று பழகிவிட்ட எனக்கு, அளவே இல்லாமல் பஸ்ஸூக்காக காத்திருப்பதும், செல்லும் இடத்திற்கு அதைவிட அளவே இல்லாமல் பஸ்ஸினுள் காத்திருப்பதும் பெரும் அலுப்பைத் தந்தன.

விரைவிலேயே சென்னை மாநகர பேருந்துக் கழகம், OMR வழி மாமல்லபுரம் செல்லும் 586C - AC பஸ்ஸை காலை 8 மணிக்கு அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் 9 மணிக்கே ஆஃபீஸூக்கு வந்து சேர்ந்தேன். அப்பாடா ஒரு வழியாக எனக்கு விடிவு கிடைத்து விட்டது என்று நினைத்தேன். ஆனால் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. OMR-லிலுள்ள ஐ.டி கம்பெனிகளில் பணிபுரியும் மக்கள் இந்த பஸ்ஸிற்குப் படையெடுக்கத் தொடங்கியதும், பஸ்ஸினுள் நிற்கவே இடமில்லாமல் போனது.

முதலில் இந்த குளுகுளு பேருந்தில் கால் நீட்டி அமர்ந்து இந்து பேப்பர் படித்தேன். பிறகு டயருக்கு மேல் இருக்கும் சிறிய கட்டை சீட்டுதான் கிடைத்தது. பிறகு அதுவும் கிடைக்காமல் நிற்க வேண்டி வந்தது. பிறகு கொக்கு பொல ஒற்றைக் காலிலெல்லாம் நிற்க வேண்டி வந்தது. கொக்கிற்காவது உறுமீன் கிடைக்கும். எனக்கு கால் வலிதான் கிடைத்தது.

சில நாட்களிலிலேயே நிலைமை படுமோசமானது. சொகுசு பேருந்து, தாழ்தள சொகுசு பேருந்து, குளிர்சாதன சொகுசு பேருந்து என எதுவும் இந்த சிங்காரச் சென்னை நகரில் பிரேக்டவுனுக்கு விதிவிலக்கல்ல என்பதுபோல் இந்த புத்தம் புது பேருந்தும் பிரேக்டவுனாகி என்னை வடபழனியிலேயே இறக்கி விட்டது. தலையிலடித்துக் கொண்டு தேமே என்று நின்றுகொண்டிருந்தேன்.

அப்போது ECR வழி கல்பாக்கம் செல்லும் 118 வந்தது. ஒரு நப்பாசையுடனும், ஒரு ஏக்கத்துடனும் அதன் கண்டக்டரிடம் டைடல் என்றேன். அவர் வாங்க என்றார். அடடா, அந்த அழைப்பு, கல்யாண வீட்டில் வெற்றிலை பாக்கு வைத்து, பன்னீர் தெளித்து, சர்க்கரை தந்து வரவேற்பது போல் இனித்தது. இது பஸ் ஸ்டாண்டிலிருந்து 7.50க்கு கிளம்புகிறது, டைடல், திருவான்மியூர் டிக்கெட்டெல்லாம் ஏற்றுவோம் என்று அவர் தேவகானமாய்க் கூறினார். இது OMR வழி செல்லாததால் 586-Cயில் வந்த பெரும்பாலானவர்கள் இதில் ஏறவில்லை. அதனால் இதில் தாராளமாக இடமிருந்தது. அப்பாடா எனக்கு ஒரு நல்ல பஸ் கிடைத்து விட்டது. ஆனால் வேறொரு பிரச்சனை. இதைப்பிடிக்க 7.15-க்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும். பஸ் ஸ்டாண்டில் அது நிற்கும் இடத்திற்கு சிறிது தூரம் வேறு நடக்க வேண்டும்.

இரண்டு நாள் முயற்சித்தேன். பிடிக்க முடியவில்லை. 7.50-க்கு கிளம்பினால் அது பின்புற வாயில் வழியாக வெளியில் வர குறைந்தது கால் மணி நேரமாவது ஆகும். நான் வீட்டிலிருந்து வரும் போது பின்புற வாயிலைக் கடந்துதான் வருகிறேன். அங்கேயே பஸ்ஸைப் பிடிப்பது எனக்கு எளிது என்றாலும், பஸ் சென்று விட்டால் அது தெரியாது என்பதால் அங்கே நிற்கத் தயங்கினேன்.

ச்சே! என்ன கவர்மண்ட் இது! கொஞ்சம்கூட முன்னேறவே மாட்டேன் என்கிறார்களே! இந்த பஸ்ஸில் ஒரு GPRS டிவைஸைப் பொருத்தினால் அதற்கு SMS பண்ணி, வரும் பதிலை வைத்து, லேட்டிட்யூட், லாங்கிட்டியூட் எல்லாம் தெரிந்து கொண்டு, அதை கூகுள் மேப்பில் பிளாட் செய்து, பஸ் உள்ளே இருக்கிறதா? வந்து கோண்டிருக்கிறதா அல்லது சென்று விட்டதா என்று சுலபமாத் தெரிந்து கொள்ளலாம் என என் டெக்னாலஜி புலமை எல்லாம் பயன்படுத்தி ஒரு ஐடியா பண்ணிப் பார்த்தேன். அது எனக்கே அபத்தமாய்ப் பட்டது

சரி, என்னைப் போல் யாரேனும் டைடல் பார்க்கிற்கு இந்த பஸ்ஸில் செல்லக்கூடும். அவரை நண்பராக்கிக் கொண்டு அவருக்கு SMS பண்ணித் தெரிந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். மறுநாள் அதிகாலையில் எழுந்து, காலைச் சிற்றுண்டியைத் தியாகம் செய்து, ஏழு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி அந்த பஸ்ஸைப் பிடித்து விட்டேன். அதில் நான்கு பேர் மட்டுமே இருந்தனர். அவர்கள் டைடல் செல்வது பொலவும் தெரியவில்லை, அவர்களிடம் மொபைல் போன் இருப்பது போலவும் தெரியவில்லை.

சரி, பஸ் டிரைவரையே சிநேகம் பண்ணிக் கொண்டு அவருக்கு SMS பண்ணலாம் என்று முடிவெடுத்து (எப்படி எல்லாம் யோசனை பாருங்கள்), அவர் சீட்டுக்கு அருகில் இருக்கும் ஒற்றைச் சீட்டிற்குச் சென்று அமர்ந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் பஸ்ஸில் ஏறிய டிரைவர், பஸ் முழுக்க காலியாக இருக்க இவன் ஏன் இங்கு உட்கார்ந்திருக்கிறான் என்பதுபோல் என்னை விநோதமாகப் பார்த்தார். என் எண்ணம் அவருக்கு புரிந்துவிட்டதோ எண்ணமோ, அவர் பார்வையில் சிநேகம் தென்படவில்லை. ஆக அவரிடம் என் ஜகதலப்பிரதாப பேச்சைக் கொடுப்பது இன்று சாலச் சிறந்தது அல்ல என்று புரிந்து கொண்டு அமைதி காத்தேன்.

சரியாக 7.50-க்கு புறப்பட்ட பஸ் தொடர்ச்சியாக ஏர் ஹாரன் அடித்து (ஏன்தான் அந்தச் சீட்டில் உட்கார்ந்தோம் என்றாகிவிட்டது) குறுக்கும் நெடுக்குமாக நின்றிருந்த மற்ற பஸ்ஸையெல்லாம் வழி விட வைத்து 8.05-க்கு பின்புற வாயில் வழியாக வெளியில் வந்ததும் ரோடு ஓரமாக ஒதுங்கி நின்றது. அங்கே ஒரு இருபது வாழைத்தார்களுடன் ஒரு ட்ரைசைக்கிள் நின்று கொண்டிருந்தது. இரண்டு பேர் அதை கடகடவென பஸ்ஸில் ஏற்றி என் சீட்டிக்கு அருகில் அடுக்கி வைத்ததும், பஸ் புறப்பட்டது. திடீரென என் மண்டையில் ஒரு மின்னல் பளிச்சிட்டது. அன்று வடபழனியில் இந்த பஸ்ஸில் ஏறிய போது இதே சீட்டுக்கருகில் வாழைத்தார்கள் இருந்ததைப் பார்த்த ஞாபகம் வந்தது. புரிந்துவிட்டது. அருகிலுள்ள கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வாழைத்தார்களை வாங்கி இந்த பஸ்ஸில் அதை கல்பாக்கத்திற்கு யாரோ ஒருவர் தினமும் அனுப்புகிறார் என்பதும் புரிந்துவிட்டது.

ஆக, அந்த வாழைத்தார் ட்ரைசைக்கிள் அங்கே இருந்தால், அந்த பஸ் இனிமேல்தான் வரப்போகிறது என்று அர்த்தம். இல்லையென்றால் போயே போய்விட்டது. மொபைல் சிஸ்டம், GPRS சிஸ்டமெல்லாம் இந்த வாழைத்தாரிடம் தோற்றது போங்கள்

அன்று முதல் இந்த ட்ரைசைக்கிள் அருகில் நின்று, வாழைக்காய் பஸ்ஸை சரியாகப் பிடித்து 9 மணிக்கெல்லாம் ஆஃபீஸூக்கு வந்து லேட்டாக வருபவர்களை பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறேன்.