Wednesday, December 17, 2014

இராஜராஜ சோழனின் அனுக்கி

பஞ்சவன் மாதேவி.

இராஜராஜ சோழனின் மனைவியருள் ஒருவர். இவர் அரச குலமல்ல. தேவரடியார். ஆனால்...

தனக்குப் பிள்ளை பிறந்து, அவன் இராஜேந்திரனுக்கு எந்த விதத்திலும் அரியணைப் போட்டியைத் தந்து விடக்கூடாது எனக் கருதி, மருத்துவரின் உதவியுடன் தன்னை மலடாக்கிக் கொண்டவள்.

இராஜராஜனுக்கு அனைத்து விதத்திலும் அனுசரணையாக (அனுக்கியாக)... தஞ்சைக் கோவில் கட்டும் பெரும் பணியிலும், அரசு நிர்வாகத்திலும், ஏன்... யுத்தக் களத்திலும் துணை நின்றவள். இதனால், இராஜராஜனின் பிற மனைவியர் முதல், மறவர், மந்திரிகள், மக்கள்... யாவரும் அவளைப் போற்றினர்.

இராஜேந்திரன், இவளை தன்னைப் பெற்ற அன்னையாகவே நினைத்து வணங்கினான். இதனால், இவள் இறையடி சேர்ந்த பின், இவள் அஸ்தியை வைத்து, அதன் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, பள்ளிப்படை கோவில் எழுப்பினான். (இடம் பட்டீஸ்வரம்).

இதையெல்லாம் உடையார் நாவலில் விரிவாய், நெஞ்சம் நெகிழும் விதமாய்ச் சொல்லியிருந்தார் அதன் ஆசிரியர் பாலகுமாரன். சிதிலமடைந்திருந்த இக்கோவில் இப்போது புனரமைக்கப் பட்டுவிட்டது என்பதையும் நாவலின் இறுதியில் சொல்லியிருந்தார்.

இக்கோவிலைக் காணும் ஆவலுடன் சென்றேன். குடந்தையிலிருந்த ஒரு அலுவலால், பட்டீஸ்வரத்தை அடையவே மதியம் ஒரு மணியாகிவிட்டது.

கோவில் நிச்சயம் சாத்தப்பட்டிருக்கும் எனத் தெரிந்தும் ஒரு நம்பிக்கையுடன் வழி விசாரித்தபடி நடந்தேன். பலருக்கு இக்கோவில் பற்றித் தெரியவில்லை (ராமசாமி கோவில் என்று பெயர் மாறிவிட்டிருந்ததும் ஒரு காரணம்). கோபுரமும் தென்படவில்லை.

‘கஷ்டம் வந்தாதான் கோவிலுக்கு வருவியா” என்று ஒரு குடிமகன் வேறு சண்டைக்கு வந்து விட்டார்! அவரைச் சமாளித்துக் கடந்து, ஒரு குறுகலான தெருவின் முனையில், ஒரு வீட்டில் விசாரிக்க, என்னை ஒரு கணம் உற்றுப் பார்த்த அவ்வீட்டுப் பெரியவர்...

‘இதோ இந்தப் பக்கம்தான், கொஞ்சம் இருங்க’

‘ஏம்மா...’ இரண்டு வீடு தள்ளி, துணி துவைத்துக் கொண்டிருந்த சிறுமியை அழைத்து, ‘இவருக்கு, கோவில் சாவியை வாங்கிக் குடும்மா’ என்று சொல்ல அச்சிறுமி அவள் வீட்டினுள் சென்றாள்.

‘நீங்களே கோவிலைத் திறந்து பார்த்துட்டு, பூட்டி சாவியை அந்த வீட்டிலேயே குடுத்துடுங்க’

சிறுமியிடமிருந்து சாவியைப் பெற்று, அப்பெரியவருக்கு நன்றி சொல்லி, அவர் காட்டிய திசையில் ஒரு நிமிடம் நடக்க அங்கே...

பசுமையான, குளுமையான தோப்பின் மத்தியில், அமைதியாய், அழகாய், கம்பீரமாய் கோவில். கோபுர வாயிலின் பூட்டைத் திறந்த போது...

அடடா... ‘இக் கோவிலுக்குச் சென்று ஒரு தீபமாவது ஏற்றிவிட்டு வாருங்கள்’ என்று பாலகுமாரன் எழுதியிருந்தாரே. அதற்கு எதையுமே நான் கொண்டு வரவில்லையே. வருந்தினேன். அருகில் கடைகளும் இல்லை. உள்ளே நுழைந்த பின்னும் வருத்தம் தொடர்ந்தது.

முன் மண்டபத்தில், ஒரு பேனரில் ‘பஞ்சவன் மாதேவீஸ்வரம்’ என்று தலைப்பிட்டு, அவளது சிறப்புகள் பட்டியலிடப்பட்டிருந்தது. பெருமிதமாய்ப் படித்துக் கொண்டே வாயில் பக்கம் கண் திரும்ப, பிரமித்தேன்.

ஒரு முதியவர் நுழைந்தார். அவர் கையில்... எண்ணெய் பாட்டில், அகண்ட அகல், சாண் நீளத் திரி.

என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். நேரே கருவறை சென்றார். லிங்கத்தினடியே அகலை வைத்து, அது நிரம்பும் வரை எண்ணை விட்டு, திரியிட்டு, தீபம் ஏற்றி, பின் கற்பூரமும் காட்டினார்.

அவரிடம் ‘சாவியை உங்க கிட்ட குடுக்கனுமா? ஒரு பத்து நிமிடம் இருக்க முடியுமா?’

‘இல்லை தம்பி, நான் தீபம் ஏற்றவே வந்தேன். நீங்க கோவிலை நிதானமாகப் பார்த்தபின் வாங்கிய வீட்டிலேயே சாவியைக் குடுத்துடுங்க’. மீண்டும் புன்னகைத்துச் சென்று விட்டார்.

உணர்ச்சிகள் பலவாறு கிளர்ந்தன.

அம்மா, பஞ்சவன் மாதேவி, இன்னமும் இங்கே நீ உறைகிறாயா?

சாவி தந்ததும், தீபமேற்ற வந்ததும் தற்செயலா? இல்லை உன் செயலா?

எனக்கென நீ செய்ததாய் எண்ணுவதில்தான் எத்தனை ஆனந்தம்.

உன் பாதம் பணிகிறேன்.

உன்னைப் போன்ற மனைவிகள் பெருக வேண்டும். இராஜராஜன்கள் உருவாக வேண்டும்.

அருளம்மா.

தொடர்புடைய பதிவுகள்:

1) பாலகுமாரனின் உடையார், கங்கை கொண்ட சோழன் - விமர்சனம்
2) இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-ஆவது ஆண்டு விழா

2 comments:

  1. koodiyaviraivil akkovilai kaana vizhaigiren, padhivittamaikku mikka nandri,
    surendran guntur

    ReplyDelete
  2. Hi! Today only I got a chance to visit your blog. Your articles were awsome with your writing style. Do keep it up. Congrats
    GMR

    ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...