Thursday, October 20, 2011

சிவா... மஹாதேவ்!


கி.மு 1900 - காஷ்மீர் - ஸ்ரீநகர்.

- படுக்கையறையுடன் இணைக்கப்பட்ட குளியலறையில் சோப்பு தேய்த்துக் குளிக்கிறார்... சிவா... மஹாதேவ்!

- பின் பருத்தி வேட்டியை அணிந்து கொள்ள, அவரது புலித்தோல் ஆடை hygienic காரணங்களுக்காக சுத்தம் செய்ய எடுத்துச் செல்லப்படுகிறது.

இப்படி ரகளையான கற்பனைகளுடன் துவங்கும் நாவல் - Immortals of Meluha. (ஆங்கில நாவலுக்கு தமிழில் விமரிசனம் எழுதக்கூடாது என ஏதாவது விதி இருக்கிறதா?!)

கைலாஷ் மலையடிவாரத்தில், ஒரு சிறு கூட்டத்திற்குத் தலைவனாக இருக்கும் சிவா, சூரியவம்ச சாம்ராஜ்யத்தின் அழைப்பை ஏற்று, தன் கூட்டத்துடன் காஷ்மீருக்குக் குடிபெயர்ந்தபின் படிப்படியாக மஹாதேவ் நிலைக்கு உயர்வதே கதைக்களம்.

பயங்கொள்ளும் கோபம், தீவிரக் காதல், கடும் வீரம், அட்டகாச நடனம், தீயதை அழிக்கும் சக்தி... அனைத்தையும் உள்ளடக்கிய மஹாதேவ், கடவுளாக இல்லாமல் நம்மைப்போல் இரத்த சதை மனிதனாக இருந்தால்... இக்கற்பனையே இக்கதையின் கரு.

வானத்தின் வர்ணனையுடன், நீர்க் கரையில் இளம் கதாநாயகனுடன் துவங்கும் சாண்டில்யனின் சரித்திரக் கதை போலவே, மானசரோவரின் கரையில் சூரிய அஸ்தமனத்தை தீவிர சிந்தனையுடன் சிவா காண, முதல் காட்சி விரிகிறது.

அட்டைப் படத்தைப் பாருங்கள். திரிசூலத்தின் முன், ஜடாமுடியுடன், எஃகு தேகத்துடன், தோள்பட்டைகளில் தைக்கப்பட்ட நீண்ட போர் வெட்டு காயங்களுடன் சிவா... இப்பிம்பத்துடன் முதல் காட்சியை மனத்திரையில் விரித்தால்... நமக்குள் ஒரு ஆகர்ஷண சக்தி ஊற்றெடுக்கத் தொடங்குகிறது.

பின்னாளில், இவர் தலைமையில் சூர்யவம்ச சேனை, சந்திர வம்சத்துடன் போரில் மோதும் போது... ‘ஹர் ஹர் மஹாதேவ்... ஹர் ஹர் மஹாதேவ்...’ என அடிநாதத்தில் கூக்குரலிடும்போது, அந்த ஆகர்ஷண சக்தி நம்முள் பிரவாகமெடுக்கிறது.

தலை வணக்கங்கள் அமிஷ். இவர்தான் நூலாசிரியர். கொல்கத்தாவைச் சேர்ந்த 35 வயது IIM பட்டதாரி. சிவ கதையின் அனுபவத்தினால், தான் வேறு மனிதனாக உணர்கிறேன் என முன்னுரையில் சொல்கிறார். உண்மைதான். படிக்கும் நமக்குள்ளும் சில மாற்றங்கள் இயல்பாக நிகழ்கின்றன. தக்க வைப்பது நம் பொறுப்பு.

புராணம், வரலாறு, நவீன உலகம்... மூன்றையும் கலந்து கதை புனையப்பட்டிருக்கிறது. ராமயணப் பாத்திரங்களை நவீனப்படுத்தியிருப்பார் ராவணன் படத்தில் மணிரத்தினம். அது போலவே சதி (பார்வதி), தக்கன், நந்தி, வீரபத்திரன், பர்வதேஸ்வர், பிரகஸ்பதி (இவர் இங்கே விஞ்ஞானி!)... என அனைத்து பாத்திரங்களும் கச்சிதம். படத்திற்குத் தீர்ப்பு எப்படியோ?! இந்நாவல் சூப்பர் ஹிட்.

கதையின் காலம் ராமனுக்குப் பின் 1200 வருடங்கள். ராமனின் சோமபானம் சர்ச்சைக்கு வித்திட்டது நினைவிருக்கும். ஆனால் அது இங்கே சோம்ராஸ் மருந்தாக, ஆயுளை நீட்டும் மருந்தாக வருகிறது. (தக்கனின் வயது 185!)

ராமனால் அனைத்து சூர்யவம்ச பிரஜைகளுக்கும் கிடைக்கச் செய்யப்பட்ட இம்மருந்திற்கு முக்கிய மூலப்பொருள் சரஸ்வதி நதிநீர். நதியை சந்திரவம்சிகள் தடை செய்ய, போர் மூள்கிறது. தோல்வியடையும் சந்திரவம்சி தீவரவாதத் தாக்குதல்களில் இறங்குகிறார்கள். அடடா! இந்தியா-பாக் பிரச்சனையைக் கூட நுழைத்து விட்டார் ஆசிரியர் (பின்னே காஷ்மீரில் வேறு கதை துவங்குகிறதே!).

தீவிரவாதத் தாக்குதல்களில் திணறும் சூர்யவம்சி, நீலகண்டர் அவதரிப்பார் என காத்திருக்க, சோம்ராஸ்-ஐப் பருகும் சிவனின் கழுத்து நீலமாகிறது! வாவ்... கற்பனை எல்லாம் மத்தாப்பு சிமிட்டல். (ஹூம்... காவரி நதிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க இன்னொரு நீலகண்டன் அவதரித்தால் நலம்)

கதையோடு பிணைந்து வரும் சிவாவின் காதலும், போர்க்களத்தில் சதியிடத்து (பார்வதி) அது கனியும் விதமும் வீர அழகு.

தன்னை சாதாரண மனிதனாகவே கருதும் சிவா, சந்திரவம்சியை வீழ்த்தியபின், பல உணர்ச்சிகளுக்கு ஆளாகி, அயோதி இராமர் கோவிலில் மஹாதேவனாக உணர்ந்து பயணத்தைத் துவங்கும் போது ‘தொடரும்’ என நாவல் முடிகிறது. ஆம், இது இன்னும் இரு பகுதிகள் கொண்ட தொடர் நாவல் - The secret of the Nagas, The Oath of the Vayuputras. மூன்றாம் நாவல் இனிதான் வெளிவரும்.

முதல் நாவல் தந்த புது ரத்தப் பாய்ச்சலில், இரண்டாவதை படிக்கத் தொடங்குகிறேன். http://shivatrilogy.com/

Wednesday, October 19, 2011

காற்றடைத்த பையடா!


பேசும் வசதியுடன் மட்டும் பிறந்த செல்போன், இன்று பல வசதிகளைக் கொண்டு ஸ்மார்ட் ஃபோனாக வளர்ந்திருக்கிறது. ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய ஸ்மார்ட் போன் கீழே விழுந்து உடைந்தால் நம் மனதும் சுக்கு நூறாகாதா?

கொஞ்சம் பழைய செய்திதான். என்றாலும் சொல்கிறேன். நம் ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க, அதில் காற்றுப் பைகளைப் பொருத்தலாம் என ஓர் அசாத்தியமான அல்லது அபத்தமான(!) யோசனையை மொழிந்து அதற்குக் காப்புரிமையையும் பெற்று விட்டார் அமேசான் நிறுவனத்தின் CEO ஜெஃப் பெஜோஸ்.

மேலும்...