Wednesday, March 13, 2013

எப்படி இருந்த பள்ளி...


டாண்... டாண்... டாண்...

பள்ளி துவங்குவதற்கான முதல் மணியோசை.

‘அம்மா... வரேன்மா..’ பையை தோளில் மாட்டிக் கொண்டு கிளம்புவேன். என் வீட்டுச் சுவரை ஒட்டியே பள்ளி, சில நொடி நடை தூரத்தில்.

காலை பத்து மணிக்குத்தான் பள்ளி. ஒன்பது மணிக்கே நான் ரெடியாகி விடுவதால், தினத்தந்தியில் சிந்துபாத், சாணக்கியன் சொல், ஆண்டியார் பாடுகிறார் (இவையெல்லாம் இன்னும் கூட வருது சார்!) எல்லாவற்றையும் நிதானமாகப் படித்துக் கொண்டிருப்பேன். முதல் மணி அடிக்கத் துவங்கியதும்தான் கிளம்புவேன்.

கல்யாணக் கூடம் போல் அமைந்திருக்கும் முதல் கூடத்தின் நடுவில், ஒரு கோபுரக் கூண்டில் பழங்கால பெரிய மணி. அதன் மேல் அரை வட்ட இரும்பில், சைக்கிள் செயின் மாட்டப்பட்டு இருபுறமும் தொங்கும். பள்ளியின் பியூன் அதை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, அந்தரத்திலிருந்து மத்தைக் கடைபவர் போல் மாறிமாறி இழுக்க, மணி ஊஞ்சல் போலாடி, தன் நாக்கை ஆட்டி, தேவ கானமாய் ஒலியெழுப்ப, அதுவே அன்றைய பள்ளி தினத்தைத் துவங்க உற்சாகத்தைத் தரும்.

பியூன் மணியை ஒரு நிமிடம் வரை தொடர்ந்து அடிப்பார். பள்ளியின் இரண்டாம் கட்டத்தில் விளையாட்டுத் திடல். அதைச் சுற்றி வகுப்பறைகள் நல்ல காற்றோட்ட வெளிச்சத்துடன்.

முதல் மணி அடித்து முடிவதற்குள் அனைத்து மாணவர்களும் திடலில் கூடி, எவருடைய கட்டுப்படுத்தலும் இன்றி, ஒழுங்கான வரிசைகளில் நிற்போம்.

இது ஒரு இடைநிலைப் பள்ளி. 6, 7, 8 வகுப்புகள் மட்டுமே.

திடலில் ஒவ்வொரு திசையிலும், ஒரு வகுப்பு அதன் பிரிவுகளுடன் நிற்க, நான்காம் திசையில் கொடிக் கம்பத்தைச் சுற்றி ஆசிரியர்கள்.

மாணவர் தலைவன், என்.எஸ்.சி மிடுக்குடன் தலைமை ஆசிரியருக்குச் சல்யூட் அடித்து, கொடிக் கயிறை எடுத்துக் கொடுக்க, தினமும் தேசியக் கொடி ஏற்றப்படும்.

துணைத் தலைமை ஆசிரியர், இளைய ராஜாவின் ரசிகர். அவரைப் போலவே கைகளை ஆட்டி ஸ்ருதியைச் சொல்ல, எல்லாரும் கோரஸாக ஏற்ற இறக்கங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவோம்.

திடலில் நடு நாயகமாக ஒரு மாணவன், தினமணியைப் பிரித்து சில முக்கிய செய்திகளை கணீரென்று வாசிக்க, நாட்டு நடப்புகளை அறிந்து கொண்டு தத்தம் வகுப்பறைகளில் ஆஜராவோம்.

எவ்வித படபடப்பும், நிர்பந்தமும், படிப்புச் சுமைகளும், டியூசன் செல்ல வேண்டிய அவசியம் இன்றி, வகுப்புகள் இனிமையாகத் துவங்கும்.

அதட்டல், மிரட்டல் இன்றி, சக மாணவன் போல கல்வி கற்பித்த அப்பள்ளி ஆசிரியர் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதலாம். அதிலும் தலைமை ஆசிரியர். சதா நிதானத்துடன், எப்பொழுதும் புன்னகைக்கும்  முகத்துடன், இலைமறைவான கண்டிப்புடன் அவர் நடத்திய பாடங்கள் வாழ்க்கைப் பாடங்கள்.

என் தந்தை, சித்தப்பா, மாமா... முன் தலைமுறை உறவுகளுக்கும் அவரே தலைமை ஆசிரியர். அவர் கற்பித்த ஆங்கிலப் புலமை எந்தக் கான்வென்ட்டிலும் கிடைக்காதது.

வரையும் கலை, பேசும் கலை, எழுதும் கலை என அனைத்தையும் கற்பித்து எங்களை படிப்படியாக வளர்த்த பள்ளி அது.

காஞ்சியில் நெசவு உச்சத்தில் இருந்த காலம் அது. பல மாணவர்கள் நெசவுக் குடும்பத்தின் வாரிசு. பள்ளியிலும் நெசவுக் கூடம் இருந்தது (என் வீட்டு சன்னல் வழியாக எட்டிப் பார்க்கலாம்!)

நூல்களை சிக்கல் பிரிப்பது, அறுந்த நூல்களை தறிச் சட்டத்தின் துளைகளில் இலகுவாகச் செல்லும் வகையில் முடிச்சிடுவது, ராட்டினம் சுற்றுவது அதன்பின் நெய்வது என தொழிலையும் பள்ளி போதித்தது.

டக்... டக்... டக்... டக்... சீராக, ரிதமாக எந்தவித தவறுமின்றி அதிக நேரம் நெய்வதில் போட்டியே நடக்கும்.

நான் கூட ஒரு ஜமுக்காளமும், கட்டிலுக்கான பட்டை நாடாவையும் நெய்திருக்கிறேன். அதையெல்லாம் காதி கிராப்ட் மூலம் விற்கவும் செய்திருக்கின்றனர்.

1987. இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட். மேட்ச் என்ன ஆச்சோ. ஆசிரியர்களுக்கும் டென்ஷன் எகிறும். வகுப்பின் இடைவேளையில்...

‘ரகு, ஸ்கோர் பார்த்துச் சொல்லேன்...’

அல்வாத் துண்டாய் விழும் வார்த்தையைக் கேட்டதும், வீட்டிற்கு ஓடி, ஒரு ஓவர் பார்த்து, அதே வேகத்தில் திரும்பி... கபில்தேவ் எடுத்த விக்கெட் பற்றியோ, நம்ம தயிர்சாதம், அதான் சார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விளாசிய ஃபோர் பற்றியோ, நான் வர்ணித்துச் சொல்ல, ஆரவாரத்துடன் வகுப்புகள் தொடரும்.

அப்பள்ளியின் ஆண்டு விழா மேடையில் நான் பேசிய நாடக வசனங்கள்தான், என் ப்ரொஃபஷனில் எடுத்த செமினார்களுக்கு அடித்தளம்.

எத்தனையோ நல்ல ஆபீஸர்களை, உயர் அதிகாரிகளை உருவாக்கிய பள்ளி அது.

அதன் பெயர் - தேவள்ள ராமசாமி ஐயா இடைநிலைப் பள்ளி (DRS Secondary School).

இருபது ஆசிரியர்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சிறந்து விளங்கிய இப்பள்ளி, கால மாற்றத்தில் மெல்ல இறங்கு முகத்தைக் கண்டது.

அதை உயர்நிலைப் பள்ளியாக்க பலர் எடுத்த முயற்சிகள் தோற்றன. என்னுடன் படித்த நண்பர்கள் குழுவாக இணைந்து பள்ளியை வளர்க்க எடுத்த முயற்சிகளும் நீர்த்தன.

இப்போது நான்கு ஆசிரியர்கள். வெறும் பதினாறு மாணவர்கள். இதற்கு மேல் நடத்த முடியாததால், இதோ இந்த மார்ச் மாதத்துடன், இப்பள்ளி மூடப்படும் நிலையில் இருக்கிறது.