Monday, September 6, 2010

வெள்ளைக்காரியும் குருவிக்காரியும்

செங்கல்பட்டு பஸ் நிலையத்தில், மாமல்லபுரம் செல்லும் பஸ்ஸூக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது சற்றுத் தள்ளி இரண்டு வெள்ளைக்காரிகள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்நிய நாட்டினரைப் பார்த்தால் சிறு வயது முதல் ஏற்படும் சுவாரஸ்யத்துடன் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சரியம்!

ப்ளாட்பாரத்தில், தனக்கே உரிய பாணியில் அமர்ந்திருந்த நரிக்குறவர்களுடன் அவர்கள் வெகு சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். குறவர்களின் தலைவன் - தலைவி போன்று தெரிந்தவர்கள், இவர்களிடம் எந்த அந்நியமும் பார்க்காமல், தங்கள் கூட்டதின் அங்கமாகவே கருதிப் பேசிக் கொண்டிருந்தது எனக்கு படா படா ஆச்சரியம்!

(இவர்களில் ஒருவரை எமி என்றும், மற்றொருவரை லிண்டா என்றும், இப்பதிவின் வசதிக்காக அழைக்கப் போகிறேன்!... சரிதானே!...)

எமியும், லிண்டாவும் மாமல்லபுரத்திற்கு வந்த டூரிஸ்ட் என்பதும், அங்கே இந்தக் குறவர்களுடன் எப்படியோ நட்பு ஏற்பட்டு, அவர்களுடன் செங்கல்பட்டிற்கு வந்து, இப்போது திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்கு ஒருவாறு புரிந்தது.

அப்போது ஒரு பஸ், நிலையத்தினுள் நுழைய, லிண்டா என்னிடம் வந்து...

“டஸ் இட் கோ டு மாமல்லபுரம்?” என வினவினாள்.

நான் “எஸ்” என்றதுதான் தாமதம்... தன் இருகைகளையும் தன் உதட்டருகே குவித்து...

“எவ்ரூரூரூ...... ப...ஸ்...” என்று குறவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே கூவ, நான் அசந்து போனேன்.

பஸ் வளைவில் திரும்பிக் கொண்டு வரும்போதே ரன்னிங்கில் ஏறினால்தான் இடம் கிடைக்கும். ஓடத் தயாரான நான் ஸ்தம்பித்து நின்றேன். என்னை முந்திக்கொண்டு, பஸ்ஸில் இடம் பிடிக்க அதிவேகமாகப் பாய்ந்தாள் லிண்டா. அவள் சற்று வாட்டசாட்டமாக இருந்தாள். வாலிபால் எல்லாம் ஆடுவாள் போல!  பஸ்ஸைத் தாவிப் பிடித்த கையில் உறுதி தெரிந்தது.

வேட்டியை மடித்துக்கட்டி பஸ்ஸில் ஏற முற்பட்ட உள்ளூர் வீரர்கள் சற்று சோப்ளாங்கிகள். லிண்டாவிடம் இடிபட்டதில், நிலை தடுமாறி தொபுக்கடீரென கீழே விழுந்து விழி பிதுங்கினர்.

பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட ஒருவர் ”ஏம்மா, இப்டி முட்ற” என்று கத்த...

“எலே... கோ...” என லிண்டா பதில் சவுண்ட் விட, அவர் அரண்டு போய்...

“அம்மா.. தாயீ... ஆள வுடு” என கும்பிடுபோட்டு நகர, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஒருவழியாக நானும் பஸ்ஸில் ஏறினேன். ஒரு மூன்றுபேர் சீட்டைப் பிடித்திருந்தாள் லிண்டா. ஆனால்...

அடடா... நம்ப ஊர் டெக்னிக் முழுமையாக அவருக்குத் தெரியவில்லை. சன்னல் வழியாக கூடையைப் போட்டு அதில் ஒரு சீட்டைப் பிடித்திருந்த நபர், அங்கே வந்து கூடையைக் காட்டி, “அது என் சீட்” என்று அங்கலாய்த்தார்.

“ஓ, இட் ஈஸ் யுவர் பேக்?” என்று லிண்டா கூடையை எடுத்து அவரிடம் கொடுக்க, அந்த இடமே ஏக ரகளையானது.

நான் குறுக்கிட்டு விளக்க, “ஓ சாரி, டேக் யுவர் சீட்” என்று பார்டிக்குப் பெருந்தன்மையுடன் வழிவிட்டார். எமியும், குறவர்களும் வந்து சேர்ந்தனர். முதல் சீட்டில் எமி அமர, லிண்டா குறவப் பெண்ணின் குழந்தையை வாங்கி, வாஞ்சையோடு அதன் தலையைக் கோதி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.

சன்-சில்க் காணா கேசங்களும், ரின் காணா உடைகளும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மதர் தெரசாவைப் படித்திருப்பார்களோ?! பெரிய விஷயம்.

பஸ் புறப்படத் தாமதமாக, உள்ளே கூட்ட நெரிசலால் புழுங்கத் தொடங்கியது. எமியின் டி-சர்ட் வேர்வையில் நனைந்தது. அருகில் நின்று கொண்டிருந்த குறவப் பெண்,  எமியின் டி-சர்டின் முதுகுப்பகுதி U-கட்டை லேசாக இழுத்து (லேசாகத்தான்)   உள்ளே பூ... பூ... என்று ஊதத் தொடங்கினாள். எமியின் முகமும் வேர்க்கத் தொடங்க, குறவப் பெண் தன் முந்தானையால் விசிறவும் செய்தாள். இப்போது எமியின் முகத்தில் வேர்வைக்குப் பதில் கொள்ளை சந்தோசம். இந்த அபூர்வக் காட்சியில் என் மனம் லயித்தது. (விசிறியதில் எனக்குக் கூட கொஞ்சம் காற்று வந்தது!).

பஸ் புறப்பட இருவரும் பள்ளித் தோழிகள் போல அன்னியோன்யமாய்ப் பேசத் தொடங்கினர். எமி ஆங்கிலத்தில் எதையோ கேட்க, குறவப் பெண் அதற்கு தமிழில் பதில் கூறித் தன்பங்குக்கு எதையோ கேட்க அதற்கு எமி ஆங்கிலத்தில் பதில் சொல்ல, எனக்கு மண்டை கிறுகிறுத்தது.

எமியின் ஆக்சென்ட் எனக்கு பிடிபடவில்லை. குறவப் பெண்ணின் தமிழ் உச்சரிப்பும் என் செவிக்குள் நுழையவே இல்லை. இருவரும் கேட்டுக்கேட்டு, கூறிக்கூறி, மாறிமாறிப் பேசியதில் எனக்கு மயக்கமே வந்தது. என்னத்தான் பேசுகிறார்கள்?! எப்படித்தான் இது சாத்தியம்?!...

மெல்ல உண்மை புரியத் தொடங்கியது.

வார்த்தைகள் உச்சரிக்கவே தெரியாத குழந்தைப் பருவத்தில், நாம் தாயிடம் இப்படித்தானே பேசினோம்!

இரண்டு கள்ளமற்ற மனங்களின் உணர்வுகள் ஒன்றிவிட்டால்,  அது அன்பினில் நிறைந்து விட்டால், மொழிகளுக்கிடையே பேதமில்லை. வார்த்தைகளினூடே அர்த்தங்கள் இல்லை. நயன பாஷை, மெளன பாஷை, டெலிபதி ஆகியவை இதன் அடுத்தடுத்த நிலைகளே.

நிறம், மொழி, மதம், நாடு கடந்து அவர்கள் கொண்ட நட்பை மானசீகமாய்க் கைகூப்பி வணங்கினேன்.

என் ஊர் வந்துவிட, படியில் இறங்கிக் கொண்டே அவர்களை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். குறவப் பெண்ணின் குழந்தை, தன் தாய்மடி எனக் கருதியே, லிண்டாவின் மடியில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

3 comments:

  1. சொன்ன விதம் கதை விடுறீங்களோன்னு பயந்துகிட்டே படித்தேன்.அனுபவம் என்றதும் மனதுக்குள் மகிழ்ச்சி:)

    ReplyDelete
  2. //வார்த்தைகள் உச்சரிக்கவே தெரியாத குழந்தைப் பருவத்தில், நாம் தாயிடம் இப்படித்தானே பேசினோம்.//
    உண்மை.
    உணர்வுகள் புரியும் போது, மொழிகள் அர்த்தம் இழந்துதான் நிற்கின்றன.

    ரொம்ப அழகு...
    அந்த நிகழ்வும் அதை நீங்கள் சொன்ன விதமும்.

    ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...