Tuesday, August 24, 2010

சமஸ்கிருதமும் ஜாவாவும், தமிழும் டாட்நெட்டும்

கோவில்களில் சமஸ்கிருதமா தமிழா என்ற சர்ச்சை பல நாட்களாகத் தொடர்கிறது. என்னைப் பொருத்தவரை இரண்டையும் சமவிகிதத்தில் பயன்படுத்தலாம் என்றே நினைக்கிறேன். இதை, கணினி மொழிகளான ஜாவா (Java) மற்றும் டாட்நெட்டைக் (.Net) கொண்டு விளக்குகிறேன்.

நான் கல்லூரிகளுக்குச் செமினார் எடுக்கச் செல்லும்போது (அதைப்பற்றி ஒரு நகைச்சுவைப் பதிவு: முனியின் செமினார்)  மாணவக் கண்மணிகள் (இருபாலரையும் குறிப்பிட இதுதான் வசதியாக இருக்கிறது!) என்முன் வைக்கும் பிரதான கேள்வி: ஜாவா, டாட்நெட் இந்த இரண்டில் எதைப் படிப்பது?

இதில் எந்த மொழியில் ப்ரோக்ராம் எழுதினாலும் அவை ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ள மொழி கடந்த ப்ரோட்டோகால்கள் (Protocol) வந்து விட்ட நிலையில், நான் இரண்டையுமே படிக்கச் சொல்கிறேன்.

இப்போதெல்லாம் எந்த ப்ராஜெக்ட்டானாலும் சர்வர் கம்ப்யூட்டரில் (Server Computer) இயங்கும் ப்ரோக்ராம்களும், க்ளையண்ட் கம்ப்யூட்டரில் (Client Computer) இயங்கும் ப்ரோக்ராம்களும் எழுதி அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் வகையில் வடிவமைக்க வேண்டியிருக்கிறது. (Web ப்ராஜெக்ட்கள் விதிவிலக்கு).

பெரும்பாலான க்ளையண்ட் கம்ப்யூட்டர்கள் விண்டோஸில்தான் இயங்குகின்றன. இதில் நாம் பயன்படுத்துவதற்கு வசதியாக ப்ரோக்ராம் எழுத டாட்நெட் சிறப்பாக இருக்கிறது.

சர்வர் கம்ப்யூட்டர்களை இன்விசிபிள் (Invisible) கம்ப்யூட்டர் என்றும் சொல்வார்கள். எங்கே இருக்கின்றன, எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்க முடியாது. அவற்றின் பெயர் கொண்டு (உதா: yahoo.com) தொடர்பு கொள்ளலாம். அவை நீங்கள் கேட்கும் சர்வீஸைத் தரும். உதா: இமெயில்.

இந்த சர்வர்கள், இதில் பயன்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டம், கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும். அதனால் அனைத்திலும் இயங்கும்படி சர்வீஸ் ப்ரோக்ராம்களை வடிவமைக்க வேண்டியிருக்கிறது. இதற்கு ஜாவா சிறப்பாக உதவுகிறது.

ஆக, நான் கையாளும் ப்ராஜெக்ட்களில் இரண்டையுமே பாகுபாடின்றி சரியான விகிதத்தில் பயன்படுத்துகிறேன். அவை வெற்றியும் கண்டு கோலோச்சுகின்றன.

சரி, கோவிலுக்கு வருகிறேன். இங்கே இறைவன்தான் சர்வர்.  இவரும் கண்ணுக்குத் தெரிய மாட்டார். எப்படி இருப்பார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. நாம் கேட்கும் வரத்தை சர்வ் செய்வதால் இறைவனும் சர்வரே.

எங்கும் நீக்கமற இருக்கும், சர்வ வல்லமை படைத்த, உருவம் கடந்த பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட சக்தியாக சிவனாகவோ, விஷ்ணுவாகவோ (yahoo, google மாதிரி), ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் டியூன் செய்ய சமஸ்கிருதம் சிறப்பாக இருக்கிறது. இங்கே செய்யப்படும் ப்ரோக்ராம்கள்தான் யாகங்கள், யக்ஞங்கள், குடமுழுக்குகள். இவை சமஸ்கிருததில் இருக்கலாம் என்பது என் கருத்து.

பக்தர்களான நாம்தான் க்ளையண்ட். நம் சார்பில் செய்யப்படும் அர்ச்சனைகள், பூசைகள் தமிழில் நடந்தால் அது நமக்கு ரொம்ப வசதி.

தன்னிலை மறந்து மனமுருகிச் செய்யும் மொழி கடந்த பிரார்த்தனையே, நம்மையும் இறைவனையும் இணைக்கும் ப்ரோட்டோகால்.

ஆக, கடவுளென்றாலும் கணினியென்றாலும் எச்செம்மொழியும் நமக்குச் சம்மதமே.

8 comments:

 1. //இறைவனும் சர்வரே// அதான் சர்வேஸ்வரர் என்றும் சொல்கிறோமா?? :-)

  ReplyDelete
 2. //ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் டியூன் செய்ய சமஸ்கிருதம் சிறப்பாக இருக்கிறது. இங்கே செய்யப்படும் ப்ரோக்ராம்கள்தான் யாகங்கள், யக்ஞங்கள், குடமுழுக்குகள். இவை சமஸ்கிருததில் இருக்கலாம் என்பது என் கருத்து.// ஏன் சாமிக்கு சமஸ்கிருதம் மட்டும்தான் பிடிக்குமோ!

  ReplyDelete
 3. நல்ல சுவராஸ்யமான ஒப்பீடு.

  நான் இப்படியும் கூட நினைப்பது உண்டு. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று சொல்வதற்கு இணங்க, இப்ப சாமி எல்லாம் ATM ஆக்கி விட்டுருச்சு..சர்வராக சாமி பேலன்ஸ்க்கு தகுந்தமாதிரி பணத்தை தள்ளும்.

  //சர்வேஸ்வரர் என்றும் சொல்கிறோமா// சத்யாவின் சொல்லாட்டம் அருமை.

  ReplyDelete
 4. what an ஒப்பீடு sirji :) பிரமாதம் :))))

  - என். சொக்கன்,
  பெங்களூரு.

  ReplyDelete
 5. //எங்கும் நீக்கமற இருக்கும், சர்வ வல்லமை படைத்த, உருவம் கடந்த பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட சக்தியாக சிவனாகவோ, விஷ்ணுவாகவோ (yahoo, google மாதிரி), ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் டியூன் செய்ய சமஸ்கிருதம் சிறப்பாக இருக்கிறது. இங்கே செய்யப்படும் ப்ரோக்ராம்கள்தான் யாகங்கள், யக்ஞங்கள், குடமுழுக்குகள். இவை சமஸ்கிருததில் இருக்கலாம் என்பது என் கருத்து. //


  தமிழில் அது சிறப்பாக இல்லை என்பதற்கான காரணங்களை விளக்குங்களேன் ?

  ReplyDelete
 6. நன்றி SRK, அப்பாதுரை, பத்மநாபன், சொக்கன்

  @ Jeeves

  தமிழில் சிறப்பாக இல்லை என்று சொல்ல வரவில்லை. இரண்டு மொழிகளின் நோக்கங்கள் வேறு. பெரும்பாலான மொழிகள் மனிதர்களிடையே தொடர்புகொள்ள ஏற்பட்டவை. தமிழும் அப்படியே. ஆனால் சமஸ்கிருதம் அப்படியல்ல. மீண்டும் கணினி மொழிகளைக் கொண்டு விளக்குகிறேன்.

  கணினியின் ஆரம்ப காலகட்டங்களில் Cobol, Fortran, C போன்று பல மொழிகள் அதிகம் பயன்பட்டதை அறிந்திருப்பீர்கள். ஏன் பல மொழிகள்? ஒவ்வொரு மொழியும் ஒரு குறிப்பிட்ட வகை ப்ரொக்ராம்களை எழுதும் விதத்தில் அதற்கான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டன. உதாரணமாக, கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட ப்ரொக்ராம்கள் Fortran-ல் எழுதப்பட்டன, வர்த்தகம் சம்பந்தப்பட்டவை Cobol-லிலும், ஆபரேட்டிங் சிஸ்டம் சம்பத்தப்பட்டவை C-யிலும் எழுதப்பட்டன.

  அதுபோலத்தான் சமஸ்கிருதமும்.

  எங்கும் பரந்து செல்லும் ரேடியோ அலைவரிசைகளை சரியான விதத்தில் டியூன் செய்தால்தான், ரேடியோவில் பாட்டு கேட்கிறது, செல்போனில் பேச முடிகிறது, டிஷ் டிவிகளில் படம் பார்க்க முடிகிறது.

  அதுபோல பிரபஞ்சம் முழுதும் பரந்து செல்லும் இறையின் அலைவரிசைக்கு ஏற்ப டியூன் செய்யப்பட்ட ரேடியோ, செல்போன், டிவிகளே இங்கே கோவில்கள். அதன் கோபுரங்களே அதன் டிஷ் ஆண்டனா! சன்னதிகளே சானல்கள்!

  ஒவ்வொரு சானலிலும் சக்திகளை டியூன் செய்ய அந்தந்த அலைவரிசைகளை எழுப்பும் விதத்தில் மந்திரங்களை வடிவமைக்க சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டது, வடிவமைக்கப்பட்டது என்பது என்னுடைய புரிதல்.

  சாமிக்கு சமஸ்கிருதம் மட்டும்தான் புரியுமா என்று ஒருவர் கேட்டிருக்கிறார். சாமிக்கு மட்டுமல்ல ஆசாமிக்கும் புரியாத மந்திரங்கள் அதில் ஏராளம். அவைகள் அர்த்தமற்றவை. அலைவரிசைகளை எழுப்பப் பயன்படும் வெறும் சப்தங்கள்/ஸ்வரங்கள் மட்டுமே.

  இருமொழிகளையும் இரு கண்களாக அதனதன் நோக்கத்திற்கு செவ்வனே பயன்படுத்துவோமே!

  ReplyDelete
 7. @raghu:
  பதிவில் உள்ள படத்தில் ஒரு திருத்தம் தேவை: Hindi-இல் "संस्कृत" என்றால் "இயற்கை" என்று அர்த்தம். संस्कृतम् (saṃskṛtam) என்பது மொழியை குறிக்கும்.

  சமஸ்க்ருதம் கோவில்களில் உபயோக படுதபடுவதற்கு பல வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.

  வேதங்கள் எழுதபட்டதாக சொல்லப்படும் காலங்களில் தமிழ் நாட்டில் எந்த மதம் பின்பற்றபட்டது எனற ஒரு கேள்விக்கு விடை தெரிய வேண்டும்.

  தமிழ் நாட்டில் உள்ள இந்து மத கோவில்களில் தமிழ் உபயோகபடுத்தவேண்டும் என்பாது சரியான வாதம் தான்.

  கிறித்தவ கோவில்களில் லத்தின் (Latin) உபயோகபடுத்துறார்கள். இஸ்லாமிய தர்காக்களில் உருதுவில் (Urdu) தொழுகை செய்கிறார்கள்.

  அங்கே எல்லாம் தமிழ் உபயோகபடுத்தவேண்டும் என்று யாரும் சொல்ல முன் வருவார்களா? வந்தால் நல்லது.

  மக்களுக்கு எது வேண்டுமோ அதைத்தான் கோவில்கள் செய்ய வேண்டும்.

  கொவில்கில் உள்ள முறையை மாற்ற அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது.

  India is a secular country. And it should be like that. State does not want any religion to interfere with its operations. Likewise, state should never interfere with a religion's operations as long as it is not illegal.

  ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...