Wednesday, September 22, 2010

குரங்கு

என் உறவினரின் கிராமத்திற்கு நான் அடிக்கடிச் செல்வதுண்டு. எங்கள் வீட்டைச் சுற்றி மரங்களும், பின் பகுதியில் வயல்களும், சற்றுத் தள்ளி குன்றுகளும் சூழ்ந்த ரம்மியமான கிராமம்.

இங்கே தினமும் குரங்குக் கூட்டம் எங்கள் வீட்டை கடந்துச் செல்லும். எங்கள் வீடு மாடியில் உள்ளதால் அதன் சன்னல்களில் வசதியாக அமர்ந்துகொண்டு கம்பிகளுக்கிடையே தலையை நுழைத்து எட்டிப் பார்க்கும்.

U-வடிவத்தில் இருக்கும் கம்பிகளுக்கிடையே, கீழே இரண்டு குரங்குகளும், மேலே ஒரு குரங்கும் நெருக்கிக் கொண்டு தலையை நுழைக்கும்போது, அவை மூன்று முகத்தான் போல அழகாகத் தேரியும். ஆனால் அதன் கண்களில் பசியும், ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கமும் பட்டவர்த்தனமாகத் தெரியும்.

அவைகளுக்குக் கொடுப்பதற்கென்றே வாழைப்பழம், பிரெட், பிஸ்கெட் ஆகியவை வீட்டில் இருக்கும். அதைக் கொண்டுவர உள்ளே சென்றால், கம்பியில் தலைசாய்த்து படுத்துக் கொண்டு எங்களை நோக்கி விழி வைத்து ஆவலாய்க் காத்திருக்கும்.

சற்றுப் பெரிய குரங்காய் இருந்தால், கொடுப்பதை கை நீட்டி வாங்கி, நிதானமாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும். சின்ன வாலுக்(!) குரங்குகள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு, கொடுக்கும் முன்பே பிடுங்கிக் கொண்டு, சண்டையும் போட்டுக் கொண்டு, வாங்கியதை கீழேயும் போட்டு ரகளை செய்துதான் சாப்பிடும்.

பெரிய குரங்குகள் பெரிய மனிதர்களைப் போல பக்குவம் அடைந்தவை. ஒரு முறை மொட்டை மாடியில், கைப்பிடிச் சுவரில் சாய்ந்துகொண்டு சாண்டில்யனின் “யவன ராணி” படித்துக் கொண்டிருந்தேன். அருகில் ஏதோ நிழலாடியது. படிக்கும் சுவாரஸ்யத்தில் அதைச் சட்டை செய்யவில்லை. இரு நிமிடங்கள் கழித்துதான் திரும்பிப் பார்த்தேன். ஐயோ... நிழலாடவில்லை... வாலாடியிருக்கிறது... ஒரு திம்மாங் குரங்கு என் அருகில் அமர்ந்து கொண்டு நான் படிப்பதை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. எனக்கு இடப்பக்கம் அதன் சகாக்கள் வேறு அமர்ந்து கொண்டிருந்தனர். எனக்கு சப்தநாடியும் ஒடுங்கிப்போனது. அலறவோ, ஓடவோ வாய்ப்பின்றி வெலவெலத்துப் போனேன்.

ஆனால், அவை அமைதியாக இருந்தன. இக்கலிகால சாமியார்களிடம் காணமுடியாத சாந்தமும், நிதானமும் அதன் முகங்களிலும், கண்களிலும் தெரிந்தது.

”இப்பத்தான் இதெல்லாம் படிக்கிறயா?” என்பதுபோல என்னை ஒரு அற்பப் பார்வை பார்த்துவிட்டு, திம்மாங் குரங்கு கைப்பிடிச் சுவருக்குத் தாவி, வாலை ஆட்டியபடி செல்ல, அதன் சகாக்களும் ரயில்பெட்டி போல வரிசையாகத் தொடர்ந்தன.

அன்று முதல் எனக்கு குரங்குகளின் மேல் பாசம் அதிகரித்தது. (பின்னே, என் பெயரில் வேறு ’ராம்’ இருக்கிறதே!). அவைகளுக்கு அன்னமிட்ட கையனாய் அதனுடன் நட்பு கொண்டொழுக, ஒருநாள்...

பால்கனியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தேன். எதிர்வீட்டு மாடியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் குரங்குக் கூட்டம்.

ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு மூன்று குரங்குகள் பேன் பார்த்துக் கொண்டிருந்தன (அட, கர்ப்பிணியும் குரங்குதான்). வாலைக் கடித்து, காலைக் கடித்து, காதைக் கடித்துக் கொண்டு குட்டிக் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. அந்த வீட்டைச் சுற்றியிருந்த தென்னை, புளி, முருங்கை, மா மரங்களில் பல குரங்குகள் போட்டி போட்டுத் தாவிக் கொண்டிருந்தன. மரங்களின் கிளைகள் காற்றினால் அசைந்ததைவிட குரங்குகளின் தாவலால், பறவைகளின் இறக்கைபோல படபடவென அசைந்தன.

அருகில் இருந்த பி.எஸ்.என்.எல் டவரிலும் சில குரங்குகள். அவை விறுவிறுவென உச்சிக்கு ஏறுவதும், பின் அங்கிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஒயரில் சர்ர்ர்...ரென இறங்குவதுமாக பரமபதம் ஆடிக்கொண்டிருந்தன.

ஒவ்வொரு குரங்கின் சேஷ்டையையும் நான் அணுவணுவாக ரசித்துக் கொண்டிருந்தபோது, அந்த விபரீதம் நிகழ்ந்தது...

எதிர்வீட்டு மாடியில் துணிக் கொடியை குரங்குகள் பிடித்துக்கொண்டு ஆடியபோது, பட்டென்று அறுந்த கொடி, ஒரு குட்டிக் குரங்கின் கழுத்தில் சுருக்கிட்டு இழுபட, நொடியில் மூச்சு நின்று அது சடலமாய்த் தொங்கியது.

நான் அதிர்ச்சியில் உறைந்தேன். தெருவில் இருந்தவர்கள் இதைக் கவனித்துவிட, மாடியை நோக்கி விரைந்தனர். ஆனால் அதற்குள் குரங்குகளுக்குள் எப்படியோ தகவல் பரிமாறிவிட்டது. அனைத்து குரங்குகளும் அந்த மாடியில் குவிந்து விட்டன. அவை குட்டியைச் சக்கரவட்டமாய்ச் சுற்றிக் கொண்டன. எந்த மனிதரையும் நெருங்கவிடவில்லை.

கீழே ஊர் சனம் கூடிவிட்டது. அவர்கள் பேசிக் கொண்டனர். குரங்குகளும் மனிதர்களைப் போலவே, அதற்கென தனி இடத்தில் தகனம் செய்யும் என்று.

இரு பெரிய குரங்குகள் கொடியிலிருந்து குட்டியை விடுவிக்கப் பார்த்தன. முடியவில்லை. பின் அவை குட்டியைத் தொட்டுத்தொட்டுப் பார்க்க, அதைக் காணத் திராணியற்று குலுங்கியது என்னுடல்.

அனைத்து குரங்குகளும் நடந்ததை ஏற்றுக் கொண்டது போல அமைதியாக அமர்ந்தன. சில நிமிடங்களுக்கு முன்வரை அதகளப்பட்ட மாடியில் இப்போது கனத்த நிசப்தம். அழு குரல்கள் இல்லை. போலியான ஒப்பாரிகள் இல்லை. மெளனமாக ஒரு அஞ்சலி மட்டுமே நடந்தது. பின் தலைவன் குரங்கு எழுந்து நடந்தது. அதைத் தொடர்ந்து அனைத்து குரங்குகளும் எந்தவொரு ஆர்ப்பாட்டமுமின்றி கலைந்து சென்றன.

ஊர் சனம் செயல்பட்டது. ஒருவர் குரங்கை ஜாக்கிரதையாக விடுவித்து கீழே படுக்கவைத்தார். இருவர் தென்னை மட்டையை உடைத்துக்கொண்டு வர, மடமடவென பாடை தயாரானது. பூமாலைகளும் வந்து சேர்ந்தது. அருகிலிருக்கும் பெருமாள் கோயிலின் பட்டர் வரவைக்கப்பட்டார்.

மந்திரங்கள் ஓதி, ஊர் மயானத்திற்குக் குரங்கை எடுத்துச் சென்று சகல மரியாதைகளுடன் தகனம் செய்துவிட்டு திரும்பியது சனம்.

அன்றிரவு உறக்கம் பிடிபடாமல் பால்கனியில் அமர்திருந்தேன். எதிர்வீட்டில் குரங்கு ஊஞ்சலாடி அறுந்த கொடி, காற்றில் ஊசலாடிக் கொண்டிருப்பது நிலவொளியில் தெரிய, அதையே வேகு நேரம் வெறித்துக் கொண்டிருந்தேன்.

3 comments:

 1. //மந்திரங்கள் ஓதி, ஊர் மயானத்திற்குக் குரங்கை எடுத்துச் சென்று சகல மரியாதைகளுடன் தகனம் செய்துவிட்டு திரும்பியது சனம்.//

  ஒரு குரங்குக்கு!

  இதே இந்தியாவில் இதே சனம் பார்க்கத்தான் பல ஏழைகள் தெருவில் சடமாகி, அனாதைப் பிணமாக
  எந்த மந்திரமோ சடங்கோ இன்றி மண்ணில் புதைகிறார்கள்.

  மேலும் விலங்கு ஆய்வாளர்கள், வலவிலங்குகளுக்கு நம் உணவு வகைகளைக் கொடுத்து அவற்றின் இயல்பைக் கெடுப்பது
  தவறு எனக் கூறுகிறார்கள். இதனால் நாட்போக்கில் அவை தொல்லையாக மாறும் நிலையுள்ளது.
  வட இந்தியாவில் குரங்கால் தொல்லையுறும்;கடிபடும் மனிதர்களை டிஸ்கவரியில் பார்த்தேன்.

  ReplyDelete
 2. மனதை கனமாக்கும் சம்பவம்..!! நான் ஒரு உயிரின் மரணத்தைதான் பார்க்கிறேன்.. குரங்கென்ன மனிதனென்ன..!!

  ReplyDelete
 3. மரணம் அமைதியானது தான்.
  ஆனால், அது நம்மைச் சலனமடையாமல் விடுவதில்லை.
  உங்கள் எழுத்தும் அப்படித்தான் இருக்கிறது ரகுராம்.

  ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...