Wednesday, December 24, 2014

வயல்வெளிப் பறவை

ஃபேஸ்புக் பாக்கலாமா? ம்ஹூம் முடியாது.

டிவிட்டர்? நெட்-டே இல்லடா.

போன்? அட உன்கிட்ட எந்த டிஜிட்டல் டிவைஸும் இல்லடா. மனம் சொல்லிச் சிரித்தது.

என்ன பண்ணலாம்? கட்டிலைப் போட்டுப் படு.

ஆஹா நல்லது.

பம்ப் செட் ரூமிற்குச் சென்று, கயிற்றுக் கட்டிலைத் தூக்கி வந்து, வரப்பின் மேல், குட்டைத் தென்னை மரம் தன் ஓலைக் கிளைகளை விரித்து, நிழல் பரப்பி விசிறிய இடத்தில் போட்டு, ஹாயாகப் படுத்தேன்.

நண்பகல் வெயில் தெரியா வண்ணம் காற்று பலமாக வீசியதில், உழுத களைப்பில் மெல்ல கண் சொக்கியது.

என் உறவினர் கிராமம். (இவ்விடத்தை ஏற்கனவே இரு பதிவுகளில் வர்ணித்து விட்டேன்)

அன்று அவருக்கு வேறு வேலை இருந்ததால், நான் உழுகிறேன் என்று வயலிலிறங்கி விட்டேன். உழவு மிஷினை இயக்க, வயலைச் சீராக உழ, குறிப்பாக வரப்பு ஓரங்களில் மிஷினைத் திரும்பும் முறையைச் சொல்லிக் கொடுத்தபின் அவர் வீட்டிற்குச் சென்று விட்டார். அடுத்த வயலில் அன்றுதான் நாற்று நட்டிருக்கிறார்கள். சற்று பிசகினால், மிஷின் வரப்பை உடைத்துச் சென்று, பயிரைப் பாழ் செய்து விடும். வம்பு வளரும். கவனம் என்றும் சொல்லிச் சென்றார்.

மிஷினின் கியர், கார் கியரைப் போல அத்தனை சுலபமாக விழவில்லை. நான் அதை பலம் கொண்டு இழுக்க, டங்-கென்று கியர் விழ, மிஷின் திடுமெனக் கிளம்பி என்னையும் இழுத்துக் கொண்டு ஓடியது. தட்டுத் தடுமாறி, சேற்று நீரை, தையா தையாவென மிதித்து ஓடி, திமிறும் காளையை அடக்குவது போல, சீறும் மிஷினை (சும்மா ஒரு வர்ணனை சார்) வரப்பின் விளிம்பில் பிரயத்தனப்பட்டுத் திருப்பி ஆசுவாசப் படுவதற்குள், முதுகுத் தண்டு விண்ணென்று வலித்தது.

முதல் 15 நிமிடத்திற்கு மிஷினை, தாறுமாறாகத்தான் ஓட்டினேன். மண் இளகத் தொடங்கியதும் லாவகமானது. அடுத்த அரை மணி நேரத்தில் சீராக உழத் தொடங்கியதும், மிஷின் டயரிலிருந்து படபடவென வயற்சேறு என் மீது அடிக்கத் தொடங்க, அதன் மண் வாசத்திலும் குளிர்ச்சியிலும் உடல் மகிழ்ந்தது.

மண் மீதிருக்கும் உழவனின் காதல் புரிந்தது.

அடி மண்ணை மிஷின் கிளரத் தொடங்கியதும் திகைத்தேன். எங்கிருந்தோ சடசடவென பறந்து வந்த வளையம் பறவைகள், விர்விர்ரென கீழிறங்கி எதையோ கொத்திக் கொண்டு மீண்டும் பறந்தன.

ஓ, மண் புழுக்கள்.

அவ்வளவு புழுக்களா என் காலிடையே நெளிகின்றன?! உற்றுப் பார்த்ததில் ஒன்று கூட என் கண்ணில் படவில்லை. ஆனால் பல அடி உயரத்திலேயே பறவைகளின் கண்களுக்கு, வாழை இலையில் ஜவ்வரிசிப் பாயசமாய் புழுக்கள் தெரிந்திருக்கின்றன. இது படைத்தவனின் விந்தையே.

நான் நகர நகர, பின்னே சிறகு படபடக்க அவை இறங்கி எழும் காட்சியை விவரிக்க வார்த்தைகள்... இருக்கு சார். இதை அப்படியே ஒரு செல்ஃபி எடுத்தால், பல ஹீரோக்களின் இண்ட்ரோ காட்சியை மிஞ்சிடலாம் சார்!

நண்பகல் வரை, இடைவெளியின்றி, இடைஞ்சலுமின்றி உழுதேன். வேலையையே துவங்க விடாமல் யாரும் Work plan கேட்கவில்லை. துவங்கும் போதே Status கேட்டு நச்சரிக்கவும் இல்லை. Inbox-ஐ திறப்பதற்குள், மெயிலாய்க் கடுகி வந்து, மெயில் அனுப்பியிருக்கிறேன் படி, என்று யாரும் அணத்தவும் தொணத்தவும் இல்லை. மனித தலைகளே தென்படவில்லை. இரண்டு செல்போன் டவர்களைத் தவிர மருத நிலத்தின் பசுமை மட்டுமே கண்ணிற்கு விருந்தளித்தன.

இதையெல்லாம் அசை போட்டபடி, கட்டிலில் நான் படுத்திருக்க, தங்கமணி வந்து எழுப்பினார். கம்பக் கூழும் வடு மாங்காவும் கொண்டு வந்திருந்தார். அவருடன் பேசியபடி... ம்ம் இது என்ன, பாரதிராஜா படக் காட்சியா? இதை மேலும் விவரிப்பதாய் இல்லை!

உண்டபின், அவர் வீடு திரும்பியபின் நிதானமாக சுற்றிக் கவனித்தேன்.

வரப்புகளின் சந்திப்பில் பூத்த பூக்களின் மேல் பட்டாம்பூச்சி. க்ளக்.. க்ளக்... அருகே பெருங்கிணற்றில், தளும்பும் நீரில், தாவும் தவளை. கிணற்றிலிருந்து, மோட்டார் ரூமிற்கு பைப் செல்லும் பொந்தின் வழியே இரண்டு பூனைக் குட்டிகள் எட்டிப் பார்த்தன. அதன் கண்களில், என்னைக் கண்டதில் ஒரு மிரட்சி.

ம்ம். அதை அப்புறம் ரசிக்கலாம். சரியான நேரத்திற்கு உழுது முடிக்காவிட்டால், நீர் இறைக்க, மோட்டார் இயக்க, மின்சாரம் இருக்காது.

அந்தி வரை உழுதேன். பின் மோட்டாரை இயக்கினேன். வாய் அகண்ட பைப்பின் வழியே பெரும் தூணாய் விழுந்த நீர், வரப்பில் ஓடி, கழனிகளில் கலக்கத் தொடங்கியது.

உடல் மீது அப்பியிருந்த சேற்றை, நீரில் நனைத்து, தேய்த்துக் குளித்தேன். நீரின் வெண்மையால், சேற்றின் வன்மையால், மறுநொடியே என் பால்ய பருவ வண்ணத்தில் உடல் மின்னத் தொடங்கியது. (மெட்ராஸ் தண்ணில குளிச்சே கருத்துட்டேன் சார்.)

உற்சாகம் பொங்க, கிணற்றினுள் டைவ் அடித்து, சற்று நேரம் நீந்தி, மேலேறி வந்து, நீர் விழும் இடத்தில், பள்ளத்தில் கால் நீட்டிப் படுத்தேன்.

ம்ம். தினம் ஸ்கூல் வேனைப் பிடிக்க (பையனுக்குச் சார்), பின் ஆபீஸ் பஸ்ஸைப் பிடிக்க, அரை பக்கெட் நீருக்கு மேல் குளிக்க நேரமில்லை; இன்றோ குளித்து முடிக்கவே மனமில்லை.

உழுத உடலை, நீர் நீவி விட்டது. களைத்த கால்களுக்கு ரம்பை பிடித்து விடுவது போல் இதமாக சுகமாக இருந்தது. (தங்கமணி திட்டமாட்டாங்கனு நம்பி எழுதியிருக்கிறேன்!).

தொலைவில், மலை முகடுகளின் மேல், சிவந்தவன் மெல்ல அஸ்தமித்தான்.

மூன்றாண்டுகளுக்குப் பின்...

அதே இடத்தில் நிற்கிறேன். கண்ணீருடன்.

நகரமயமாக்கலுக்கு இந்த கிராமமும் பலியானது.

நான் நீந்திய கிணறு மூடப்பட்டிருக்க, கண்ணுக்கெட்டிய தூரம் வரை, மருத நிலம் காய்ந்திருக்க, ஏரிக் கரை வரையிலும், பிளாட் கற்கள் நடப்பட்டிருந்தன. கிணற்றின் மீதும் ஒரு பிளாட்.

நான் உழுத நிலத்திற்கு வெகு அருகே ரோட் ரோலர் நிற்க, அதனருகே தார் கலக்கும் இயந்திரம், கரும் புகையைக் கக்கிக் கொண்டிருந்தது.

இக்கிராமம் தொடர்புடைய பதிவுகள்:

1 comment:

  1. like it # வேலையையே துவங்க விடாமல் யாரும் Work plan கேட்கவில்லை. துவங்கும் போதே Status கேட்டு நச்சரிக்கவும் இல்லை. Inbox-ஐ திறப்பதற்குள், மெயிலாய்க் கடுகி வந்து, மெயில் அனுப்பியிருக்கிறேன் படி, என்று யாரும் அணத்தவும் தொணத்தவும் இல்லை. #

    ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...