Monday, August 5, 2013

மதுரை பேருந்தில் மகளிர் இருக்கையில்...

கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கிய பின் பூவையர் பகுதிக்குக் கண் திரும்ப, மனம் ஆஹாவெனத் துள்ளியது.

இடம் மதுரை; பெரியார் நிலையத்திலிருந்து அழகர் கோவிலுக்குச் செல்லும் பேருந்து.

அழகான பெயர் கொண்ட திருமாலிருஞ்சோலை சென்று, அழகரைக் கண்டு, வழி நெடுங்கும் சோலையடர்ந்த மலைமீதேறி, உச்சியில், ராக்காயி கோயிலில், நூபுர கங்கையில் குளித்து, பழமுதிர் சோலை முருகனை தரிசித்து, அவ்வைப் பாட்டி அமர்ந்ததாய்க் கருதும் நாவல் மரத்தடியில் (சுட்ட பழம் வேண்டுமா கதை) சிறிது நேரம் அமர்ந்து வர தனியாகப் புறப்பட்டேன்.

கிளம்பிய பேருந்தில் அப்போதுதான் இருக்கைகள் நிரம்பியிருக்க, நின்றபடி மகளிர் பகுதிக்குத் திரும்பி, நான்  கண்டதை எப்படிச் சொல்ல...?

கல்லூரி மாணவிகள் சிலர். தாவணியில் சிலர். குடும்பப் பெண்கள் சிலர். மஞ்சளில் குளித்த முகங்கள் சில. தலையில் மல்லிகைச் சரடுடன் சிலர்... இன்னமும் அடுக்கலாம். ஆனால் வயதும் பருவமும் மாறுபட்டும், கிட்டதட்ட அனைத்து பெண்களின் கையில் இருந்தது தமிழ்ப் புத்தகங்கள்... இலக்கணப் புத்தகங்கள்! (இதுதான் சார், ஆஹாவுக்கான ஓஹோ காரணம் :) )

அவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். நான் ஈரடி முன்பின் நகர்ந்து புத்தகங்களைக் கவனிக்க... நச்சினார்க்கினியர், பரிமேலழகர், சீத்தலைச் சாத்தனார்... உரையாசிரியர், சங்கப் புலவர்களின் பெயர்கள் தொடர்ந்து தென்பட்டன. தமிழ் பேப்பர் இணைய இதழில், என்.சொக்கன் "அம்மா, ஆடு, இலக்கணம்" தொடர் எழுதி, இன்றைய இணைய தலைமுறைக்குப் புரியும்படி சொல்லித் தரும் ஐகார, ஔகார, மகர குறுக்கங்கள்... குற்றிய லிகர, லுகரங்கள் அளபடை எல்லாம் இங்கு சகஜமாகத் தென்பட்டன.

ஒரு மாணவி ஏதோ சந்தேகம் கேட்க, அவள் தோழி, சட்டென தன் பையிலிருந்து வேறோரு புத்தகமெடுத்து, சொல்லுறுப்புகளைப் பகுத்துப் பகுத்து விளக்கினாள். என்னால் முறுவலை மறைக்க முடியவில்லை. அதை அவள் பார்த்துவிட, சற்று வெட்கித் திரும்பிக் கொண்டாள். சில புத்தங்கள் சற்று கிழிந்திருந்தன. பழைய புத்தகக் கடையில் வாங்கியிருக்கக் கூடும். ஆனால் அவர்கள் படிப்பதில் புதிய ஆர்வம் இருந்தது.

இவர்கள் என்ன படிக்கிறார்கள். எங்கு படிக்கிறார்கள். இவர்களுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கிறது. விசாரிக்க நினைத்தேன். அதற்குள் k.புதூர் (ஆமாம் இனிஷியலுடன்!) என்னும் இடம் வர, அனைவரும் இறங்கிச் சென்று விட்டார்கள். அடுத்தமுறை அவ்வூர் சென்று, அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகத்தையோ கல்லூரியையோ கண்டு வர ஆவல்.

ம்ம். முதல் இடை கடை என்று சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் எச்சம், சொச்சம், மிச்சம் இருக்கத்தான் செய்கிறது.

நான் நின்ற இடம்வரை வந்து, தம்பி என்று கண்ணியமாக விளித்து டிக்கெட் கொடுத்த கண்டக்டர் முதல், எத்தனையோ விசயங்கள், சென்னை பேருந்திலிருந்து மாறுபட்டன. ஆனால் எவ்வூர் சென்றாலும் ஒன்று மட்டும் மாறவில்லை சார்.

அது, ஆண்கள் பகுதியில், அக்காலை வேளையிலும் அருந்தி விட்ட டாஸ்மாக் பான நெடி.

1 comment:

  1. ஆண்கள் பகுதியில், அக்காலை வேளையிலும் அருந்தி விட்ட டாஸ்மாக் பான நெடி.
    >>
    நல விசயம் பேசிக்கிட்டு இருக்கும்போது இது தேவையா?!

    ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...