Tuesday, June 8, 2010

இடி அமீன்கள்...

இன்று காலை நான் வேலை செய்யும் ஐ.டி பார்க்கினுள் நுழையும் போது, எதிரில் வந்தவர் பலமாக இடித்து விட்டார். தினமும் ஒரு நூறு பஸ்கி எடுப்பார் போல. அவரின் ”திண்”ணென்ற தோள் இடித்ததில் எனக்கு ”விண்”ணென்று வலித்தது. ஆனால் அவரோ, எதையும் சட்டை செய்யாமல், தன் பாட்டுக்கு ஏதோவொரு கனவுலகில் சஞ்சரித்தபடி சென்று விட்டார்.

கடந்த பத்து நாட்களில், இந்த ஐ.டி பார்க்கினுள்ளேயே நான் படும் மூன்றாவது இடி இது. நான்கு நாட்களுக்கு முன், லிஃப்டில் தரை தளத்திற்கு வந்து கொண்டிருந்தேன். அருகில் யாருமில்லாததால், ஹாயாக நின்று கொண்டு,

அடடா மழடா... அட மழடா...

என்று சன்னமான குரலில் முணுமுணுக்க, தரை தளத்தில் லிஃப்ட் திறந்தது. ஒரு பத்து பேர், தரையையே பார்த்தபடி ஒருவரை ஒருவர் முண்டிக் கொண்டு, என்னையும் முட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தனர். கர்ச்சீப் போட்டு சீட்டா பிடிக்கப் போகிறார்கள்? அட! ஒருவர் கூட நான் வெளியே போக வழியே விடவில்லை!

ஆபீஸாக இருந்தாலும் சரி, ஹாஸ்பிட்டலாக இருந்தாலும் சரி, சொல்லி வைத்தது மாதிரி, வெளியே போக வழி விடாமல், டவுன் பஸ்ஸில் ஏறுவது போலத்தான், பெரும்பாலானவர்கள் லிஃப்டினுள் நுழைகிறார்கள். ஒரு பக்கம் வழி விட்டபடியாவது நுழையலாம்! இந்த அடிப்படை யோசனை கூட இல்லாமல் ஏதோ கோட்டையைப் பிடிப்பது போல வாயிலை அடைத்தபடி நுழைகிறார்கள்.

ஒரு வழியாக வெளியே வந்து பெருமூச்சு விட்டேன். கதவு மூடிக் கொள்வதற்குள் நுழைந்து விட, மேலும் இரண்டு பேர் வேகமாக ஓடி வந்து, Y ஷேப்பில் பிரிந்து, என் இரு தோள்களையும் ஆளுக்கு ஒன்றாக இடித்துத் தள்ளி, லிஃப்டினுள் பாய்ந்து விட்டனர். அவர்களை பிடித்து சண்டை போடுவதற்குள், லிஃப்ட் மூடிக் கொண்டது. லிஃப்ட் மீண்டும் வர அரை மணியா ஆகப் போகிறது? ஏன் இந்த அவசரம்!? என்ன மனிதர்கள் இவர்கள் என நொந்தபடி நடக்க, ஈனமான குரலில் உதடு முணுமுணுத்தது...

அடடா இடிடா... இடி மழடா...

இதெல்லாம் பரவாயில்லை. முதல் இடிதான்... இல்லை மிதிதான் ரொம்ப மோசம். என் ஆபீஸுக்குள்ளேயே நடந்தது. ஆபீஸ் வளாகம் என்ற இங்கிதம் கூட இல்லாமல், இரண்டு பேர் சத்தம் போட்டு அட்டகாசமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர், மானாட மயிலாட எல்லாம் தோற்கும்படி கை காலை உதைத்தபடி தன்னிலை மறந்து பேசிக் கொண்டிருந்தார்.

நான் சற்று எச்சரிக்கையாகத்தான் அவர்களை கடந்தேன். இருந்தும் அந்த மானானவர் பின்னாலே ஆடி நகர்ந்ததில் ஓங்கி என் காலை மிதித்து விட்டார். என் ஷூவையும் மீறி, சுண்டு விரல் எறும்பாய் நசுங்கிவிட்டது. வலி பொறுக்காமல் ஷூவைக் கழற்றி, சாக்ஸைக் கழற்றி விரலை தேய்த்துவிட்டேன்.

ஒரு நிமிடம் கழித்துதான், அந்த மானுக்கு தான் உதைத்தது தரையல்ல என உறைத்திருக்கிறது. திரும்பி பார்த்து விட்டார். ஸாரி கேட்கப் போகிறார் போல! வலியையும் மீறி பரவாயில்லை என்று சொல்ல என்னை திடப்படுத்திக் கொண்டேன்.

ஆனால் அவரோ, என்னை ஒரு அப்பிராணியாய்ப் பார்த்துவிட்டு, தன் மானாட்டத்தை செவ்வனே தொடர்ந்தார். தலையிலடித்துக் கொண்டேன்.

டை கட்டினாலும் சரி, நிஜாரின் மேல் கைலி கட்டினாலும் சரி. ஐ.டி பார்க்கானாலும் சரி, பேட்டையானலும் சரி. பெரும்பாலானவர்களுக்கு மற்றவரைப் பற்றி அக்கறையில்லை. தங்களால் மற்றவருக்கு ஏற்படும் இடைஞ்சல்கள் பற்றியோ, துன்பங்கள் பற்றியோ அணுவளவும் கவலையில்லை.

இந்த கசப்பான உண்மையை நினைத்த போது, இருபது வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் படித்த ஜோக் ஞாபகத்திற்கு வந்தது.

முதலாமவர்: ஸாரி சார், கவனிக்காம இடிச்சுட்டேன்.
இரண்டாமவர்: நீங்க ஊருக்கு புதுசா?
முதலாமவர்: அட, எப்படி கண்டுபிடிச்சீங்க?
இரண்டாமவர்: ஹிஹி... நாங்கெல்லாம் இடிச்சுட்டா, ஸாரியெல்லாம் சொல்லிக்கிறதில்லை...

ஓ அப்பவே சென்னை இப்படித்தானா?

5 comments:

 1. hahah nice experience boss

  ReplyDelete
 2. ’இடி’ பலமோ? ;) அந்த வலியை நல்லா எழுத்தில கொண்டுவந்திருக்கீங்க :)

  அது சரி, லிஃப்ட் எதிகுட்டியெல்லாம் நம்மாளுங்களுக்கு யார் சொல்லித்தர்றது? --> http://office-politics.suite101.com/article.cfm/elevator_etiquette

  - என். சொக்கன்,
  பெங்களூரு.

  ReplyDelete
 3. ஆம் சொக்கன், படும் அவஸ்தையில், உங்களுடைய சுட்டியை போஸ்டரடித்து, லிஃப்ட் இருக்குமிடமெல்லாம் ஒட்ட வேண்டும் போல இருக்கு.

  ReplyDelete
 4. சித்ரன் மூலமாக இங்கே வந்தேன்.
  இயல்பாய் வருகிறது நகைச்சுவை உமக்கு.
  எல்லாம் அருமை...!

  ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...