Monday, May 24, 2010

தீக்குச்சியுடன் ஓர் இரவு...

என் பேச்சுலர் பருவத்தில் அவ்வவப்போது நானே சமைத்துக் கொள்வேன். ஒரு முறை, வீடு மாற வேண்டியிருந்தது. உறவினர் ஒருவர் அவர் வீட்டுக்கு எதிர் வீடு காலியாக இருப்பதைச் சொல்ல, எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு அந்த வீட்டுக்கு வந்து விட்டேன். ஆபிஸிலிருந்து இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்பிக் கொண்டிருந்ததால், எந்த மூட்டையையும் பிரிக்காமல் இரண்டு மாதத்திற்கு அப்படியே கிடப்பில் போட்டிருந்தேன்.

சமையல் எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். முதலில் இரவு (முதலிரவு என்று படிக்காதீர்கள்!) குடிப்பதற்கும், மறு நாள் காலை காப்பிக்கும் பால் வாங்கிக் காய்ச்சலாம் என முடிவெடுத்து, கியாஸ் ஸ்டவ்வையும் சிலிண்டரையும் செட் பண்ணி வைத்தேன். ஆனால் கியாஸ் பற்ற வைக்கும் லைட்டரைக் காணவில்லை.  இரண்டு நாட்கள் ஒவ்வொரு மூட்டையாகத் தேடினேன்.  ம்ஹும், கிடைக்கவில்லை.  சே! கியாஸ் ஸ்டவ்வோடு லைட்டரையும் சேர்த்துக் கட்டி வைத்திருக்கலாம்.  

எல்லா மூட்டையையும் பிரித்து விட்டதால், ஒவ்வொரு பொருளுக்கும் புதுவீட்டில் இடமறிந்து அடுக்கி வைத்தேன். இந்த லைட்டர் புண்ணியத்தில் வீட்டை செட் பண்ணி விட்டேன். ஆனால் லைட்டர்தான் கிடைத்தபாடில்லை. சரி, நாளைக்கு தீப்பெட்டி வாங்கிக் கொள்ளலாம் என நினைத்தேன்.

மறுநாள் இரவு, வழக்கமான மெஸ்ஸில் உணவை முடித்துக் கொண்டு ஒரு பாக்கெட் ஆவின் பால் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன். பதினோரு மணிவரை, நண்பர்களிடம் செல்போனில் பேசிவிட்டு, பால் காய்ச்ச முனைந்தபோதுதான் தீப்பெட்டி வாங்க மறந்து போனதை உணர்ந்தேன். சே! இந்த கியாஸை பற்ற வைப்பதற்குள் மறதி என்னமாய்ப் படுத்துகிறது என சலித்துக் கொண்டேன். சரி, எதிர் வீட்டு உறவினரிடம் வாங்கலாம் என நினைத்து வெளியே வந்தேன்.

பதினோரு மணி ஆகிவிட்டதால், வீட்டுக்காரர் கேட்டை பூட்டிவிட்டிருந்தார். எதிர் வீட்டு கேட்டும் பூட்டப்பட்டிருந்தது. என்ன செய்வது, பால் கெட்டுவிடுமே! கேட் ஏறிக் குதித்தேன். என்னை திருடன் என்று யாரவது பிடிக்கிறார்களா என நிதானித்தேன். வீதி வெறிசோடி இருந்தது. அப்பாடா! எதிர் வீட்டு கேட்டையும் தாண்டிக் குதித்து, காலிங் பெல் அழுத்தி தீப்பெட்டியை வாங்கி விட்டேன்.

சிறு வயதில், ஜாக்கிச்சான் படத்தில், அவர் அனாயசமாக கேட் தாண்டுவதை பிரமிப்புடன் பார்த்தது ஞாபகதிற்கு வர, அது மாதிரி செய்து பார்க்கும் ஆசையும் வந்து தொலைத்தது.

இரண்டடி பின்னோக்கி, ஒரு ஜம்ப் செய்து, இடது காலை கேட்டில் ஊன்றி, அலேக்காக தாவி தெருவில் குதித்தேன். ஆஹா! நாம் ஜாக்கிச்சானின் சீடனாகி விட்டோம் என்று சிலாகித்தபோதுதான் அதன் விபரீதம் புரிந்தது. நான் முன்பு கேட் தாண்டியதை மோப்பம் பிடித்துவிட்ட தெரு நாய்கள், ஒன்று கூடி எனக்காக காத்துக் கொண்டிருந்தன.

ஒரு கணம் அதிர்ந்தேன். அவை என்னை நோக்கி முன்னேற, சட்டென்று சுதாரித்து படக்கென்று ஒரு தீக்குச்சியை பற்ற வைத்துக் காண்பித்தேன். என்னவோ ஏதோ என்று பயந்த நாய்ப் படை சற்று பின் வாங்கியது.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று சும்மாவா சொன்னார்கள். எப்படி நமது சமயோசித்தம் என்று எனை நானே மெச்சிக் கொள்வதற்க்குள் தீக்குச்சி அணைந்து போனது. நாய்ப் படை மீண்டும் முன்னேற, அவசர அவசரமாய் இன்னொரு குச்சியைப் பற்ற வைத்தேன்.

நாமெல்லாம் தீபாவளியன்று, ஒரு மத்தாப்பிலிருந்து வரிசையாக பல மத்தாப்புகளை பற்ற வைத்த டெக்னிக் ஞாபகத்திற்கு வர, அது போல தீக்குச்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக பற்ற வைத்து, என்னைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் ஏற்படுத்திக் கொண்டு நாய்களை பயமுறுத்தி என் வீட்டு கேட் ஏறி உள்ளே குதித்து விட்டேன். ஏமாந்து நின்ற நாய்களைப் பார்த்து “இப்ப இன்னா பண்ணுவ! இப்ப இன்னா பண்ணுவ!“ என்று கத்தி விட்டு, என்னை யாரும் பார்த்து பைத்தியமென்று நினைக்கவில்லை என உறுதி படுத்திக்கொண்டு வீட்டினுள் நுழைந்தேன்.  

தீப்பெட்டி கணிசமாக காலியாகியிருந்தது. நாளை அதை திருப்பிக் கொடுக்கும் போது, சே! ஒரு கியாஸ் பத்த வைக்க இத்தனை குச்சி செலவழித்திருக்கிறானே! இவன் எதற்கும் உருப்படமாட்டான் என்று உறவினர் நினைப்பாரே எனத் தோன்றியது.  நாய் கடிக்கும், நாய் கடி ஊசிக்கும் இது பரவாயில்லை என தேற்றிக் கொண்டேன்.  

மீண்டும் ஒரு குச்சியைப் பற்ற வைத்து, இடது கையால் ஸ்டவ் நாப்-பை திறந்தேன்.  திறந்ததுதான் தாமதம்; டப்-பென்ற ஒலியுடன் ஸ்டவ் தானாகவே ஜிகுஜிகுவென எரியத் தொடங்கியது.

அட தேவுடா!

என் ஸ்டவ் ஆட்டோமேட்டிக் என்பதும், நான் லைட்டரே வாங்கவில்லை (தேவையில்லாததால்) என்பதும் அப்போதுதான் என் மண்டையில் உறைத்தது.

கொள்-ளென்று நாயின் சப்தம் வேளியே கேட்டது.

9 comments:

 1. எழுத்துநடை அருமை

  தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஒரு ’தலைசொறிதல்’ ஞாபக மறதி சமசாரத்தை த்ரில்லர்மாதிரி எழுதிட்டீங்களே - சூப்பர் :)

  - என். சொக்கன்,
  பெங்களூரு.

  ReplyDelete
 3. நேற்றுதான் ஜாக்கி சானின் The Spy Next Door பார்த்தேன். அதே ஆக்'ஷன் கலந்த நகைச்சுவை எபக்ட் இந்த பதிவிலும் இருக்கிறது!

  ReplyDelete
 4. வாழ்த்துக்களுக்கு நன்றி உலவு.காம்.

  ReplyDelete
 5. நன்றி சொக்கன், SRK. இந்த The Spy Next Door-ரை பார்க்கணும்னு ஆவலாய் இருந்தேன். அதற்குள் சுறா ரிலீஸாக, அதை எடுத்துவிட்டார்கள் :(

  ReplyDelete
 6. சூப்பர் பல்பு..!! ரசித்து சிரித்தேன்..

  ReplyDelete
 7. செம்ம கலக்கல் :)

  ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...