Wednesday, October 26, 2016

எம். எஸ். தோனி (சினிமா)


அபூர்வமாக சில படங்கள் மன நிறைவைத் தரும். எம். எஸ். தோனி அவ்வகைப் படம்.

வில்லனின்றி, வன்முறையின்றி, அபத்தக் காமெடியின்றி மூன்று மணி நேரம், ஒரு 20-20 கிரிக்கெட் மேட்சைப் போலவே செல்கிறது  தோனியின் வாழ்க்கைப் படம்.

மனிதன் ரசிக்கும் ஒரு விஷயம் சாயல்.

தந்தையின்/தாயின் ஜாடையிலேயே இருக்கிறது குழந்தை. அவரைப் போலவே இவன் செய்கிறான். இது மனிதனின் அன்றாடப் பேச்சு. அதற்குச் சிறந்த வடிவமாய் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். தோனியின் அச்சில் தன்னைக் கச்சிதமாய் வார்த்தெடுத்திருக்கிறார்.

அமைதியான முகபாவங்கள், இக்கட்டிலும் புன்னகைக்கும் விதம், நடை, தோரணை, தன்னம்பிக்கை, தலைமை, தோனியின் ட்ரேட்மார்க் ஷாட்டுக்கள், குறிப்பாக ஹெலிகாப்டர் ஷாட்... அனைத்தையும் அப்படியே பிரதிபலிக்கிறார்.

ஒரு தந்தையின் தவிப்பு/கண்டிப்பு, தாயின்/தமக்கையின் அரவணைப்பு,  நண்பர்களின் ஆதரவு, கோச்/அதிகாரியின் வழிகாட்டுதல்கள்... இத்தளத்தின் மீதுதான் தோனியெனும் பெருந்தூண் எழுகிறது.

இவர்களின் கோணத்திலும் கதை நகர்வதில், இவர்களின் உணர்ச்சிகள் பார்ப்பவரையும் பற்றி நெகிழ வைக்கிறது.

2011 பைனலில், மூன்று விக்கெட்டுகள் விழுந்து விட்ட நெருக்கடி நிலையில், துணிந்து முன் இறங்கி விளையாடி, இமாலய சிக்ஸருடன் கோப்பையை வென்றதே, தோனியின் வாழ்வில் சிகரம். இதை மையப்படுத்தியே திரைக்கதை சுழல்கிறது. அதில் சின்னச் சின்ன காட்சிகள் அழகாகக் கோர்க்கப் பட்டிருக்கிறது.

குளிர் இரவில் பிட்சிற்கு நீர் ஊற்ற தந்தை (அனுபம் கேர்) செல்வதை சிறுவன் தோனி பார்ப்பது, கோல்-கீப்பிங்கிலிருந்து விக்கெட் கீப்பிங்கிற்கு மாறும் தோனி பந்தைத் தட்டி விடுவது(!), முதல் மேட்சில் பேட்டிங் செய்ய இறங்கியதும் உயரமான கட்டிடத்தையும், மரத்தையும் பார்ப்பது, நண்பனும் அவன் காதலியும் கண்கள் கலந்த நிலையில் ஹெலிகாப்டர் ஷாட் அறிமுகமாவது, யுவராஜுடன் நேருக்கு நேர், இரு காதலிகளுடனான முதல் சந்திப்பு, திடீரென தோனியை நேரில் கண்டதும் திக்குமுக்காடும் சாக்‌ஷியின் தோழி, நிஜ மேட்சுகளில் நடிக தோனியின் முகம்...  இப்பட்டியல் நீளம். திரையில் ரசிப்பதே உத்தமம்.

பல காட்சிகள் மனதில் அழுத்தமாகப் பதிவதால், பிற்பாதியில் வரும் சில குறைகள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

பொதுவாக தன்னம்பிக்கையை விதைக்கும் படங்கள் இனிப்பைப் போன்றவை. நாவில் கரையும் வரைதான் இனிப்பின் சுவை. அதைப் போல, படம் பார்த்த நான்கு நாட்களுக்குள் கதா நாயகனின் பிம்பம் தந்த தன்னம்பிக்கை மறைந்துவிடும். காரணம் அது வெறும் நடிப்பு என்னும் யதார்த்தம்.

ஆனால் இது சாதித்த மனிதனின் கதை. இந்திய கிரிக்கெட்டை முதல் நிலைக்கு உயர்த்தியவனின் கதை. பல இக்கட்டுக்களை, சர்ச்சைகளை கலங்காமல் கடந்தவனின் கதை. இவனது  நிதானம் மிக அபூர்வம். தன் வாழ்க்கையை மாற்றக் கூடிய பயணத்திற்கான விமானத்தைத் தவற விட்ட நிலையிலும், முறுவலிக்கும் பாங்கே இவனை இந்நிலைக்கு உயர்த்தியது.

எவ்வயதினருக்கும் இப்படம் பிடிக்கும்.

கடைசியில் கண்களில் நீர் கோர்க்க நிற்கும் அனுபம் கேரின் பெருமிதத்தை, நம் தந்தைக்குச் சிறிதளவேனும் அளிக்க முடிந்தால் நாமும் தோனியே.

1 comment:

  1. கடைசி வாக்கியம் படத்தை போலவே உற்சாகமூட்டுகிறது.

    ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...