Thursday, November 10, 2011

நாகர்களின் ரகசியம்

சிவாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வீரபத்ரனிடமிருந்து வாங்கி, தன் ஆனை முகத்தைத் தூக்கி, அதை உள்ளிழுக்க முயன்று, புகைக்கத் தெரியாமல் கணேஷ் இரும, எல்லாரும் கொல்லென்று சிரிக்கிறார்கள்.

இந்து மத உணர்வுகளை புண்படுத்தாமல் இப்படி ஒரு காட்சி Secret of the Nagas நாவலில் மட்டுமே சாத்தியம்.

முதல் நாவலான The Immortals of Meluha (விமர்சனம் இங்கே: சிவா... மஹாதேவ்)-வில் தந்த ஆச்சரியம், திருப்தி, ஆனந்த உணர்ச்சிகளை அப்படியே இதிலும் தொடர்ந்திருக்கிறார் ஆசிரியர் அமிஷ்.

சூர்ய வம்சிகளிடையே நிகழ்ந்த சிவாவின் பயணம், இந்த நாவலில் சந்திர வம்சிகளுடன். வட இந்தியாவின் பல நிலப்பரப்புகள் (காசி உட்பட) இந்நாவலில் அழகான காட்சிகளாகுகின்றன.

ஊழலும், வஞ்சகமும், குழப்பமும், ஏற்றத் தாழ்வுகளும், அதனுள் நல்லுள்ளங்களும், ஞானமும், திறமையும், உழைப்பும் கொண்ட இந்தியாவின் கதம்ப முகத்தை சந்திர வம்சிகளை வைத்து வெளிப்படுத்தியிருப்பது பிரமாதம்.

இதில் ஒரு தமாஷ். இவர்களுக்கு நேர் எதிராக, அனைத்து பிரஜைகளுக்கும் சம நீதியுடன், கட்டுக் கோப்பான சட்ட ஒழுக்கங்களுடன் ஒட்டு மொத்தமாக முன்னேறிய சமுதாயமாக சூர்ய வம்சம். இதன் கோட்பாடுகளை இந்தியா முழுதும் பரப்பும் நோக்கத்துடன், தக்கன் கோலோச்சும் அதன் நிலப்பரப்புதான் இப்போது பாகிஸ்தான்!!

ஆசிரியரைப் பாராட்ட வேண்டிய பல அம்சங்களில் ஒன்று, சிவாவை ஒன்-மேன்-ஆர்மியாக மிகைப்படுத்தாதது. என்னதான் அவரை மஹாதேவ் நிலைக்கு படிப்படியாக உயர்த்தினாலும், இக்கட்டான சமயங்களில், மந்திரமாய் வந்து குதிக்கும் தமிழ் சினிமா கதாநாயகன் போல, சிவா தோன்ற வாய்ப்பிருந்தும், காட்சிகளிலிருக்கும் பிற பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களையே கையாள விட்டிருப்பது யதார்த்தம்.

சில சமஸ்கிருத வார்த்தைகள், கடவுள்களின் பெயர்கள், தத்துவங்களுக்கு வரும் ஒரு வரி விளக்கங்கள் அட்டகாசம். உதாரணங்களாக: ஏழு நதிகள் பாயும் வட இந்தியாவின் பெயர் சப்த சிந்து. மற்ற இந்திய நதிகளைவிட பிரம்மாண்டமாக கரைபுரளும் அந்த ஒரு நதிக்கு மட்டுமே ஆண்பால் பெயர்: பிரம்ம புத்திரா. இந்நதியும் கங்காவும் இணைந்து காத்து வளப்படுத்தும் நிலம் பிரங்கா!

சமஸ்கிருத காரணப் பெயர்களுடன் கடும் போட்டியிட்ட மொழி நம் தமிழ். சொன்னது கண்ணதாசன், அர்த்தமுள்ள இந்துமதத்தில். காசியிலிருந்து விசாலமான இந்திய நிலப்பரப்பை ஆள்வதால், அவள் பெயர் விசாலாட்சி!

இந்தியாவின் இரு கண்கள், இவ்விரு செம்மொழிகளும். அதை உணர்ந்தே, சங்கத் தமிழ் தந்த மனுதர்ம சாஸ்திரமே சூர்ய வம்ச சட்டங்களுக்கு அடிப்படை என கோடிட்டுக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

புராணங்கள் கற்பனையோ, கட்டுக் கதையோ, அதில் வரும் கணக்கற்ற குணசித்திர பாத்திரங்களை நவீன படைப்புகளில் வடிப்பது துர்லபம். ஆனால் கதைக் களம் புராணத்தை அடிப்படையாகக் கொண்டதால் இதை சாதித்துக் காட்டியிருக்கிறார் அமிஷ்.

முதல் நாவலில் வாயுபுத்திரர்கள் வரை வந்த பாத்திரங்கள் இதில் பகீரதன், பரசுராம், கார்த்திக், கணேஷ், காளி... என நீள்கிறது. கார்கோடன், சந்திரகேது, ஜமதக்னி, ரேணுகா, உமா... என ஒரு சில பத்தி பாத்திரங்களும் அடக்கம். புராண பாத்திரங்களின் உருவ குணங்களுடனேயே இவற்றை வடித்திருப்பது சிறப்பு.

சிவாவின் உருகும் மனசை,  சூழ்நிலைகளால் பின்னாளிலேயே ஏற்ற சதியின் காதல் தோசையை அப்படியே திருப்பிப் போட்டு, ஆனந்தமயி - பர்வதேஸ்வர் காதலை இங்கே சமைத்திருக்கிறார். சில இடங்கள் நாசூக்காக சிரிப்பை வரவழைக்கின்றன.

சிவாவின் பயணத்தை ஒட்டி கிட்டதட்ட ஒரே நேர்க் கோட்டில் சென்றது முதல் நாவல். ஆனால் இங்கே சிவா, சதி, நாகா... மூவரை முன்னிலைப்படுத்தி நகரும் அத்தியாயங்கள் க்ரைம் நாவலுக்கே உரிய த்ரில்லர்.

தீய சக்திகளை அழிப்பதே தனது கடமையென படையெடுக்கும் சிவா, சந்திர வம்சி, பரசுராம், நாகா என யாருமே தீயவராக இல்லாமல், அவரவர் சூழ்நிலை நியாயங்களுடன் வேறு ரூபத்தில் இருப்பது கண்டு திகைக்கிறார். கிட்டதட்ட எல்லாருமே தங்களைக் காக்க, இவர் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பது இவரை வெகுவாகக் குழப்புகிறது.

தேவர்களுக்காக அசுரர்களை ஒடுக்கிய ருத்ரன், ஒரு கட்டத்தில் அசுரர்கள் அப்படியொன்றும் தீயவரில்லை என உணர்ந்த கதையிலிருந்து சில தெளிவுகளைப் பெறுகிறார். உண்மையான தீய சக்தியை அடையாளம் காண ருத்ரனின் கோவில்களில் வாயுபுத்திரர்களுடன், முதலில் நேரிலும், பின் டெலிபதி மூலமாகவும் சிவா மேற்கொள்ளும் உரையாடல்கள், அவருக்கு மட்டுமல்ல நமக்கும் சில பக்குவங்களைத் தருகின்றன.

நம் யூகத்தின்படியே இந்நாவல் முடிந்தாலும், மூன்றாவது நாவலுக்கு (The Oath of the Vayuputras) எந்த க்ளூவும் இல்லாதது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. 

அவசரமில்லை அமிஷ். கைலாச சிகரமாய் மூன்றாம் நாவலைத் தர காலம் எடுத்துக் கொள்ளுங்கள். காத்திருக்கிறோம். http://shivatrilogy.com

1 comment:

  1. உண்மை, படித்து பார்த்தேன்....

    ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...