Friday, August 5, 2011

முரளீதரனின் காயின் பால்

“நத்திங் ஈஸ் இம்பாசிபிள் ஃபார் முரளி”

என்.டி டிவியில் இப்படி ஒரு தலைப்புடன் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. ரிடையர் ஆன பிறகு அப்படி என்ன செய்துவிட்டார் முரளீதரன்?! சற்று அசுவாரஸ்யமாகத்தான் செய்தியைப் பார்த்தேன். இங்கிலாந்து ஸ்பின் பெளலர் ஸ்வானும் முரளீதரனும் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டனர். சுற்றிலும் வீடியோ, ஃபோட்டோகிராஃபர்கள். மூன்று ஸ்டம்புகள் நடப்பட, ஆஃப் ஸ்டம்பின் மேல் ஒரு கண்ணாடி டம்ளர் வைக்கப்பட்டது. அதன் ஆஃப் சைட் விளிம்பில் சற்று வெளித்தள்ளி ஒரு நாணயம் வைக்கப்பட்டது. புரிந்துவிட்டது! சின்ன வயசில் ஒரு கதை படித்தோமே! தன் புத்திரனின் தலையில் ஒரு ஆப்பிள் வைக்கப்பட அதை குறி தவறாமல் பிளந்த வில்லாளனின் கதை! அது மாதிரி இது ஒரு போட்டி. சுவாரஸ்யம் தட்டுப்பட சீட்டு நுனிக்கு நகர்ந்தேன்.

இருவரும் தலா இரண்டு பந்துகள் வீசினர். பந்து எதன் மேலும் படவில்லை. மூன்றாவது முயற்சியாக முரளீதரன் பந்து வீசினார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்த பந்து, அழகாக ஸ்பின் ஆகி, கண்ணாடி டம்ளரை உரசுவது போல் ஆனால் அதை தொட்டுவிடாமல் எழும்பி காயினை மட்டும் தட்டிச் செல்ல, அங்கு ஒரே ஆரவாரம்.

அம்பு விடுவதைவிட பந்து விடுவது எவ்வளவு கடினம்! குஷியில் நானும் கை தட்டி குதிக்க, சத்தம் கேட்டு அங்கு வந்த என் தந்தை, ரீ-ப்ளே-வை ரசித்து விட்டு, பழைய கிரிக்கெட் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவை:

1950-60. பத்து வருடத்தில் இரண்டு மூன்று முறை இங்கிலாந்திற்கு இந்தியா டூர் சென்றிருந்தது.

நம்ம பேட்ஸ்மென்களின் வேகம் நம்மை அலற வைத்த காலம் அது. அவுட் ஆவதில்! மதிய இடைவேளைக்குள் 56 ரன்னுக்குள் சுருண்டனர். உண்ட உணவு செரிப்பதற்கு முன்பே சாயங்காலத்திற்குள் 86 ரன்கள் எடுத்து சற்று நீட்டிச் சுருண்டனர். ஒரே நாளில் தன் இரண்டு இன்னிங்ஸையும் முடித்த பெருமையெல்லாம் இந்தியா கொண்ட காலம் அது.

இந்தியாவின் பேட்ஸ்மேன் குலாம் அஹமது. லாட்ஸ் மைதானத்திற்கு வெளியே ஒரு மணிக்கூண்டில் கடிகாரம் தெரிய, இதனை நான் சிக்ஸர் அடித்து உடைக்கிறேன் என்று சவால் விட்டார். இங்கிலாந்து பெளலர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் இது தெரிய, எல்லோரும் பகபகவெனச் சிரித்தனர். அந்த டெஸ்ட் மாட்சில், இவருக்கு ஸ்பெஷலாக பெளன்சர்கள், பம்பர்கள் வீசப்பட்டன. குலாம் அசரவில்லை. உறு மீனுக்கான கொக்கு போல, சரியான பந்திற்குக் காத்திருந்து, முழு பலங்கொண்டு அடிக்க கடிகாரம் தூள் தூள். குலாம் சொல்லி அடித்த கில்லி.

1963.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் மாட்ச். 5-ம் நாள். இங்கிலாந்து பாட்டிங்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன், கண்களில் சூரிய ஒளிக்குச் சொந்தக்காரர் என வருணிக்கப்பட்ட ஃபாராங் ஒரல். தனி நபரின் அதிகபட்ச ஸ்கோராக 375 ரன்னை வெகு காலத்திற்கு முடிசூடிக் கொண்ட காரி சோபர்ஸ் அப்போது சின்னப் பையன். வெஸ்ட் இண்டீஸின் வேகப் பந்து வீச்சிற்கே முன்னோடிகளான வெஸ் ஹால் மற்றும் சார்லி கிரிஃபித்; இருவரும் கடுமையாக பந்து வீசிக் கொண்டிருந்தனர். எந்த அணியும் வெற்றி பெறக் கூடிய சூழ்நிலை. ஹாலின் பந்து வீச்சில், இங்கிலாந்தின் முக்கிய பேட்ஸ்மேன் காலின் கெளட்ரி-இன் கை உடைந்துவிட அவர் வெளியேறினார்.

இந்த ஹால் அசகாய சூரர். சென்னையில் நடந்த ஒரு டெஸ்ட்டில் முதல் பந்தை அவர் பெளன்சராக வீசினார். குத்தினார் என்று சொல்வதே சரி. அந்தப் பந்தை எல்லாரும் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. ராக்கெட்டென எழும்பிய பந்து பேட்ஸ்மேனைத் தாண்டி, விக்கெட் கீப்பரைத் தாண்டி, ஏன் எல்லைக் கோட்டையையும் தாண்டி சைட் ஸ்கிரீனின் மீது மோதித்தான் விழுந்தது! கிரிக்கெட் வரலாற்றில் பை-யில் சிக்ஸர் சென்றது இது மட்டுமே என நினைக்கிறேன்!

அப்படிப் பட்ட ஹாலும், அவருக்கு எந்த விதத்திலும் குறையாத கிரிஃபித்தும் மற்ற பெளலர்களுக்கு உடல் நலமில்லாததால் அவர்கள் இருவராகவே காலை முதல் மாறிமாறி பந்து வீசிக் கொண்டிருந்தனர். ஹால் சோர்ந்து போனார். ஒரல் பந்து வீச சோபர்ஸ்-ஐ அழைக்க, பெரு மூச்சு விட்ட ஹால், அந்த ஓவர் முடிந்ததுமே அதிர்ந்து போனார். சோபர்ஸ்-ஐ ஒரு ஓவர் வீச வைத்ததே, ஹாலும் கிரிஃபித்தும் தங்கள் பந்து வீசும் சைடுகளை மாற்றி மீண்டும் வீசத்தான்! ஹாலுக்கு பிலுபிலுவென கோபம் வந்துவிட்டது. தன் ஆறடி இரண்டங்குல உடலை முறுக்கிக் கொண்டு, முறைத்துக் கொண்டு ஒரலிடம் சண்டை போட்டார். பந்து வீச முடியாதென கறாராகக் கத்தினார். அவர் கத்தி முடிக்கும் வரை அமைதி காத்த ஒரல், ஒரு முறுவலைச் சிந்தி, ஹாலின் முதுகில் செல்லமாத் தட்டி, புகழ்பெற்ற வாசகத்தை உதிர்த்தார்:

“ஜஸ்ட் கோ பாக் அண்ட் பெளல் அகெய்ன்”

வார்த்தைகளின் தொணியும், கண்களின் ஒளியும் கட்டிப் போட, நாய் வாலெனத் தலையாட்டியபடியே மீண்டும் பந்து வீசத் தொடங்கினார் ஹால்.

ரன்கள் குவிந்தன. விக்கெட்டுக்கள் சரிந்தன. கடும் போட்டி. ஒன்பதாவது விக்கெட்டும் வீழ்ந்தது. இன்னமும் ஒரே ஒரு ஓவர் பாக்கி. இங்கிலாந்திற்கு வேண்டிய ரன்கள் ஐந்தோ ஆறோ. ஏற்கனவே காலின் கெளட்ரி கை உடைந்து சென்று விட்டதில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதாகவே நினைத்தனர். ஆனால் யாருமே எதிர்பாரா வண்ணம் வலக்கை முழுக்க மாவுக் கட்டுடன், இடக்கையில் குச்சிபோல பேட்டை பிடித்துக் கொண்டு கெளட்ரி மீண்டும் களமிறங்கினார். எல்லாரும் வாய் பிளக்க ஹாலை எதிர் கொள்ளத் தயாரானார்.

பந்து வீச தன் நீண்ட ரன் அப்-இல் நடக்கத் தொடங்கினார் ஹால்.

யாருடைய வெற்றியையும் ஜீரணிக்க முடியாது. காலை முதல் தொடந்து வீசும் ஹாலின் பந்தில் வெற்றி ரன் எடுப்பதை ஏற்க முடியாது. கை உடைந்தும் திட சித்தத்துடன் இடக் கையில் விளையாட வந்த கெளட்ரியின் விக்கெட் பெயர்வதை பார்க்கவும் முடியாது.

பார்வையாளர்களின் இதயம் லபோதிபோ-வென அடிக்கத் தொடங்கியது.

ரன் அப்-இல் கடைசி ஸ்டெப் வைத்து, பந்து வீச ஹால் திரும்ப அது நிகழ்ந்தது. அதுவரை வெளுத்திருந்த வானம் சோ-வெனக் கொட்டித் தீர்க்க, கடைசி ஓவர் வீச முடியாததில் மேட்ச் ட்ரா.

ஃபிட்டிங் எண்ட். இறைவனுக்கே யார் தோற்பதும் பொறுக்கவில்லை என்றெல்லாம் பத்திரிக்கைகள் எழுதித் தள்ளின.

இப்படிப்பட்ட ஆச்சரியங்களும், சுவாரஸ்யங்களும் கொண்ட கிரிக்கெட்டை, வியாபாரமயமாக்கி கெடுத்துவிட்டது ஐ.பி.எல்.

7 comments:

 1. வாழ்த்துக்கள் முரளீதரன்.
  கிரிக்கெட்டைப் பற்றிய அருமையான பதிவு. மிகவும் சுவையான அரிய தகவல்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. முதல் சம்பவம் சுவாரஸ்யமாக இருந்தது.

  ReplyDelete
 3. murali video plz....

  ReplyDelete
 4. முரளீதரனின் வீடியோ இங்கே

  http://www.youtube.com/watch?v=PZTo9dlmju8

  ReplyDelete
 5. பட்டாசுங்க :) சிலிர்க்க வச்சிட்டீங்க!

  ReplyDelete
 6. West Indies Vs England 1963

  http://www.espncricinfo.com/ci/engine/match/62930.html

  ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...