Tuesday, December 11, 2012

எழுதிய பாடல் 2: மாங்காடு காமாட்சி


பாடல்: மாங்காட்டில் வாழும் எங்கம்மா
பாடுபொருள்: மாங்காடு காமாட்சி
பாடியவர்: உண்ணி கிருஷ்ணன், ஹரிணி
ஆல்பம்: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி
இசை: மண்ணச்சநல்லூர் கிரிதரன்

கணவன் சீரியசாக ஒன்றைச் செய்யும் போது, மனைவி விளையாட்டாய், ஆசையாய்க் குறுக்கிட, அது சண்டையில் முடியாத வீடுண்டா? வீட்டுக்கு வீடு வாசற்படிதான். கயிலை வீட்டுக்கும் வாசற்படிதான்.

உலக காரியத்தில் இருந்த சிவனின் கண்களை, பார்வதி விளையாட்டாய் மூட, அது சண்டையாகி, பின் சாபமாகி பார்வதியைப் பிரிக்கிறது.

மீண்டும் சிவகரம் பிடிக்க, மாங்காட்டில் காமாட்சியாய் தீ குண்டங்களின் நடுவே, ஒற்றைக் காலில் நின்று கடும் தவமிருக்கிறாள் பார்வதி.

சிவன் கோபமிளகிப் புறப்பட, ஹையா... தங்கைக்குக் கல்யாணம் என விஷ்ணுவும் கணையாழியை சீதனமாய் எடுத்துக் கொண்டு புறப்பட கதையில் டிவிஸ்ட்.

இழந்த பார்வையைக் கேட்டு சுக்ராச்சாரியாரும் (வெள்ளி) மாங்காட்டில் சிவனை நோக்கித் தவமிருக்கிறார் (பார்வை இழந்தது தனி கிளைக் கதை). பத்தினியைவிட எனக்கு பக்தனே முக்கியம் என வெள்ளிக்கு அருளி வெள்ளீஸ்வரர் ஆகிறார் சிவன். பார்வதியை காஞ்சிக்குச் சென்று தவத்தைத் தொடரப் பணிக்கிறார்.

ஏமாந்து, வைகுண்டம் திரும்ப நினைத்த பெருமாளை, அங்கேயே தங்கும்படி மார்க்கண்டேயன் வேண்ட, அவரும் பக்த பக்திக்கு உருகி கணையாழியைக் கையில் பிடித்தபடியே அங்கு படுத்துக் கொள்கிறார். சிவன் பிற்பாடு, ஏகாம்பரநாதனாய், ஏகனாய் காஞ்சியில் காமாட்சியைக் கரம் பிடிக்கிறார்.

காமாட்சி, வெள்ளீஸ்வரர், வைகுண்ட பெருமாள்... மூவருக்கும் தனித்தனி கோயில்கள் மாங்காட்டில் அருகருகே. இளங்காலையில் இங்கு சென்று வருவதே ரம்மியமான அனுபவம்.

காமாட்சியின் கருவறையில், ஆதி சங்கரர் ஸ்தாபித்த மகாமேருவே இங்கு பிரதானம். மூல விக்கிரகத்தின் முன் ஒளிரும் விளக்கே காமாட்சி விளக்கு.

இங்கு வேண்டுதல் நிறைவேற, எலுமிச்சையுடன் ஆறுவாரங்கள் வழிபடுகிறார்கள்.

இத்தல வரலாற்றைப் பாடி, காதல் மனங்களாய் திருமணம் வேண்டி, பின் தம்பதியாய் நல்மகவை வேண்டுவது போல பாடலை வடித்திருக்கிறேன்.

முதல் சரணத்தை உண்ணி தொடங்கி ஹரிணி தொடர, அடுத்த சரணத்தை ஹரிணி தொடங்கி, உண்ணி தொடர... இது ஒரு பக்தி டூயட்!

கோரஸ்:
எங்கம்மா மாதங்கி
என்றும் நீ தாதங்கி
விரும்பி விரும்பிதான்
கொடுப்பாய் நீயே வா வா வா வா

பல்லவி:
மாங்காட்டில் வாழும் எங்கம்மா - நீ
பூங்காட்டின் வாசம் தெய்வம்மா

அனுபல்லவி:
ஆடிப் பொன் மாதம்தான் கூடிக் கூழ் சாதம்தான்
பந்தல் தச்சி பந்தி வெச்சுத்தான் கும்பிட்டேன் (மாங்காட்டில்)

சரணம் 1:
ஆதிகாமாட்சி தாயே அக்கினி் தவசியே
ஏகனின் காதலும் நீயே

வைகுண்ட வாசனின் கணையாழி காக்கும்
தீகுண்ட வரத்தை காஞ்சியில் பார்க்கும்

சிவமண தவத்தை நான் பாடி
திருமண வரத்தை நான் நாடி

ஆறு வாரந் தோறும் எலுமிச்சை கொண்டும்
மஞ்சள் கட்டி மேரு சுத்தித்தான் கும்பிட்டேன் (மாங்காட்டில்)

சரணம் 2:
வெள்ளீஸ்வரனின் தேவி ஒற்றைக்காலில் நின்றாய் நீ
ஏழையின் காவலும் நீ

கிளி உந்தன் கையில் உன்னருள் பேசும்
அளி எந்தன் பிள்ளை என்மனம் பொங்கும்

காமாட்சி விளக்கொளியை தேடி
என் மனவொளி வேண்டி தேவி

ஆடி வெள்ளி தோறும் செவ்வரளி கோத்தும்
தொட்டில் கட்டி மேரு ஒத்தித்தான் கும்பிட்டேன்  (மாங்காட்டில்)

ராகாவில் இந்த ஆல்பத்தின் சுட்டி: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி
ஹரிணி Solo-வாகவும் பாடியிருக்கிறார்.

Friday, December 7, 2012

எழுதிய பாடல் - 1: சமயபுர மாரியம்மன்

சமீபத்தில் சென்னை வந்திருந்த எழுத்தாளர் என். சொக்கனைச் சந்தித்தேன்.

‘நீங்கள் எழுதிய பாடல்களை, அதன் குறிப்புடன் ஒவ்வொன்றாகப் பதிவிடலாமே...’

கம்ப ராஜனை, இளையராஜாவைப் பற்றி தொடர்ந்து எழுதும் இவர், இப்படிச் சொல்லி என்னை ஊக்கிவிட..

இதோ எனது பாடல்களின் பதிவு வரிசை.

பாடல்: அம்மா... மாரியம்மா...
பாடுபொருள்: சமயபுர மாரியம்மன்
பாடியவர்: ஹரிணி, மண்ணச்சநல்லூர் கிரிதரன், குழுவினர்
ஆல்பம்: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி
இசை: மண்ணச்சநல்லூர் கிரிதரன்

ஆடி சமயத்தில், சமயப் பாடல்களை எனக்கு அருளியவள் சமயபுர மாரியே.

திருச்சி பெருவளை வாய்க்கால் கரையோரம், கண்ணபுரம் என்றழைக்கப்பட்ட சமயபுரத்தில் கொலு வீற்றிருந்து, குழந்தைகளை அம்மை நோயிலிருந்து காக்க, தானே கடும் விரதமிருக்கும் பெருந்தகை அவள்.

அவள் தலைமேல் ஐந்து தலை நாகம் குடை விரிக்க, அதுவே சொற்பதமாகி முதல் சரணம் துவங்கியது...

    சர்ப்பக் குடை ஆட்சிகள் கண்ணபுரக் காட்சிகள்
    அன்னை மாரி தந்த தரிசனம்...

அவளிடம் சரணடையும் விதமாக, ஹரிணி சரணங்களைப் பாட, சரணத்தின் இடையிரு வரிகளை சிலிர்க்க வைக்கும் குரலில் கிரிதரன் பாடியிருக்கிறார்.

பல்லவி:
அம்மா... மாரியம்மா...

சமயபுரத்தாயி நீ அபய கரம் தாயேன் மாயி
பெருவளை வாய்க்காலில் நீ இருக்கிறாயே தீர்த்தமாயி (அம்மா)

சரணம்:
சர்ப்பக் குடை ஆட்சிகள் கண்ணபுரக் காட்சிகள்
அன்னை மாரி தந்த தரிசனம்

வெப்பம் பொங்க தவிக்கிறேன் நோயும் அண்ட அழுகிறேன்
வேப்பந் தரித்துக் கேட்கிறேன் அம்மை தடுத்து காக்க வேணும் (அம்மா)

புள்ள பெத்த ஆத்தா சிரிச்சா
விரதம் கொண்டு நோயுந் தீர்த்தா

மகத்துவமே... மகத்துவமே...
மருத்துவமே... மருத்துவமே...

மகத்துவம் எங்களுக்கு பொங்கலுக்கு வந்து உண்ணு (அம்மா)

சரணம்:
தீ மிதிக்கும் அங்கங்கள் அலகு தாங்கும் உள்ளங்கள்
அன்னை மாயி காக்கும் கரிசனம்

சேறு பூசிக் கொள்கிறேன் சோறு மண்ணில் உண்கிறேன்
பாதம் அண்டி கேட்கிறேன் சொந்தங் கொஞ்சங் காக்க வேணும் (அம்மா)

ஏழு உலகை ஆத்தா படைச்சா
ஏழை உறவை காத்து அணைச்சா

பரவசமே... பரவசமே...
பரிமளமே... பரிமளமே...

பரவசம் எங்களுக்கு பந்தலுக்கு வந்து உண்ணு (அம்மா)

சரணம்:
மாயன் தந்த ஆடைகள் ஈசன் தந்த மாலைகள்
மங்கை மாயி கொண்ட சீதனம்

பூவை சிரசில் கொட்டுறேன் பாதம் அலம்பிக் கேட்கிறேன்
அங்கம் புரண்டு வேண்டுறேன் தாலி காத்து அருள வேணும் (அம்மா)

ஆதி பீட ஆத்தா உதிச்சா
வீடு வந்து சோகம் துடைச்சா

கற்பகமே... கற்பகமே...
அட்சயமே... அட்சயமே...

கற்பகம் எங்களுக்கு திங்களுக்கும் இங்கு தங்கு (அம்மா)

ராகாவில் பாடல்: அம்மா... மாரியம்மா...

Friday, November 30, 2012

சபரிமலை வா சரணம் சொல்லி வா - உண்ணி கிருஷ்ணன்



‘பாட்டைப் பாடும் போது, நானே மலைக்கு நடந்து செல்வது போல ஒரு உணர்வு எழுந்தது’ - உண்ணி கிருஷ்ணன் விழா மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.

சென்னை மகாலிங்கபுரம், ஐயப்பன் கோவிலில், ‘சபரிமலை வா சரணம் சொல்லி வா’ இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா. அவர் வார்த்தைகள் என் மனசை மிருதுவாக வருடின.

1974-ல் என் தந்தை, காஞ்சியிலிருந்து மதுரை, குமுளி, கோழிகானம், தேவிகுளம், உறைகுழி தீர்த்தம் வழியாக சபரிமலைக்கு பாத யாத்திரை சென்றதை நினைத்து, நான் எழுதிய பாடல் அது. கானாஞ்சலி கிரிதரனின் ஐந்தாவது இறையிசை ஆல்பம்.


கூட்டாக ஐயப்பனைக் காண்பது போலவே, கூட்டாக பாடல்கள் எழுதினோம். கிரிதரன் மூன்று, அவரது குருசாமியும், நண்பர் ஸ்ரீதரும் ஒவ்வொன்று, நான் இரண்டு எழுத, அவற்றை உண்ணி கிருஷ்ணன் அழகாகப் பாடிக் கொடுத்தார்.

எத்தனையோ நிறுவனங்களை நிர்வகித்து நடத்திய கிரிதரனை, இறையிசையில் லயிக்க, நேரடியாகக் கட்டளையிட்டது ஐயப்பனே!

இரு வருடங்களுக்கு முன், ஆலபுழா மாவட்டத்தில் முக்கால் வட்டம் என்னும் இடத்திலிருக்கும் பழைமையான ஐயப்பன் கோவிலுக்குச் சென்றிருந்தார் கிரிதரன். இது ஐயப்பன் களரி பயின்ற இடம். அங்கே ஒருவர் எதிர்பட்டு இவர் தலையில் கை வைத்து, ‘அடுத்த வருடம் இந்தக் கோவிலுக்கு வருவதற்குள், நீயே இசையமைத்து பாட்டும் எழுதி ஐயப்பனுக்கு கீதாஞ்சலி செய்து வருவாய்’ என அருள்வாக்காய்ச் சொல்ல, அதனால் உந்தப்பட்டு கிரிதரன் வெளியிட்டதே ‘ஐயன் மலை எங்கள் மலை’

தொடர்ந்து ‘விந்தைகள் புரிந்தாய் நீ என் வாழ்விலே’ (பெருமாள்), ‘ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி’, ‘உச்சி பிள்ளையாரே சரணம்’ ஆல்பங்களை வெளியிட்டு இப்போது மீண்டும் இசைக்க வைத்த ஐயப்பனுக்காக. இதில் முக்கால் வட்ட ஐயனைப் போற்றிப் பாடலையும் எழுதியிருக்கிறார்.

மூன்றாம் ஆல்பத்திலிருந்து எனக்கு பாடல்கள் எழுத வாய்ப்பளித்து, அந்த விழா மேடையில் கௌரவமும் தந்தார். அவருக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையில்லை.

பாடுபொருள், தல வரலாறு, அனுபவம், இறையிடம் சரணடையும் போது மடை திறக்கும் உணர்ச்சிகளை, சந்ததிற்கு ஏற்ப பாடலாய் இதுவரை வடித்தேன். கிரிதரன் இசையின் தரத்தை அடுத்தடுத்த ஆல்பங்களில் உயர்த்த, அதற்கு ஈடு கொடுக்க, ‘கவிதை இயற்றிக் கலக்கு’-வில் தொடை நயத்தையும், சந்த இலக்கணத்தையும் படித்தபின், இம்முறை எழுதிய வரிகளில் எளிமையும், சந்தமும் சற்றுக் கூடியது. நூலாசிரியர் பசுபதிக்கும், ‘அறுசீர்’ பதிவில் இந்த நூலைக் குறிப்பிட்ட என். சொக்கனுக்கும் என் நன்றிகள்.

ஒரு பாடலை யாத்திரை வடிவிலும், மறு பாடலை யாசக தொனியிலும் வடித்திருக்கிறேன்.

இந்த ஆல்பம் ராகா.காம்-இல் ஐயப்பன் ஆல்பங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தை எட்டியிருக்கிறது. இங்கே கேட்கலாம்.