Friday, December 7, 2012

எழுதிய பாடல் - 1: சமயபுர மாரியம்மன்

சமீபத்தில் சென்னை வந்திருந்த எழுத்தாளர் என். சொக்கனைச் சந்தித்தேன்.

‘நீங்கள் எழுதிய பாடல்களை, அதன் குறிப்புடன் ஒவ்வொன்றாகப் பதிவிடலாமே...’

கம்ப ராஜனை, இளையராஜாவைப் பற்றி தொடர்ந்து எழுதும் இவர், இப்படிச் சொல்லி என்னை ஊக்கிவிட..

இதோ எனது பாடல்களின் பதிவு வரிசை.

பாடல்: அம்மா... மாரியம்மா...
பாடுபொருள்: சமயபுர மாரியம்மன்
பாடியவர்: ஹரிணி, மண்ணச்சநல்லூர் கிரிதரன், குழுவினர்
ஆல்பம்: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி
இசை: மண்ணச்சநல்லூர் கிரிதரன்

ஆடி சமயத்தில், சமயப் பாடல்களை எனக்கு அருளியவள் சமயபுர மாரியே.

திருச்சி பெருவளை வாய்க்கால் கரையோரம், கண்ணபுரம் என்றழைக்கப்பட்ட சமயபுரத்தில் கொலு வீற்றிருந்து, குழந்தைகளை அம்மை நோயிலிருந்து காக்க, தானே கடும் விரதமிருக்கும் பெருந்தகை அவள்.

அவள் தலைமேல் ஐந்து தலை நாகம் குடை விரிக்க, அதுவே சொற்பதமாகி முதல் சரணம் துவங்கியது...

    சர்ப்பக் குடை ஆட்சிகள் கண்ணபுரக் காட்சிகள்
    அன்னை மாரி தந்த தரிசனம்...

அவளிடம் சரணடையும் விதமாக, ஹரிணி சரணங்களைப் பாட, சரணத்தின் இடையிரு வரிகளை சிலிர்க்க வைக்கும் குரலில் கிரிதரன் பாடியிருக்கிறார்.

பல்லவி:
அம்மா... மாரியம்மா...

சமயபுரத்தாயி நீ அபய கரம் தாயேன் மாயி
பெருவளை வாய்க்காலில் நீ இருக்கிறாயே தீர்த்தமாயி (அம்மா)

சரணம்:
சர்ப்பக் குடை ஆட்சிகள் கண்ணபுரக் காட்சிகள்
அன்னை மாரி தந்த தரிசனம்

வெப்பம் பொங்க தவிக்கிறேன் நோயும் அண்ட அழுகிறேன்
வேப்பந் தரித்துக் கேட்கிறேன் அம்மை தடுத்து காக்க வேணும் (அம்மா)

புள்ள பெத்த ஆத்தா சிரிச்சா
விரதம் கொண்டு நோயுந் தீர்த்தா

மகத்துவமே... மகத்துவமே...
மருத்துவமே... மருத்துவமே...

மகத்துவம் எங்களுக்கு பொங்கலுக்கு வந்து உண்ணு (அம்மா)

சரணம்:
தீ மிதிக்கும் அங்கங்கள் அலகு தாங்கும் உள்ளங்கள்
அன்னை மாயி காக்கும் கரிசனம்

சேறு பூசிக் கொள்கிறேன் சோறு மண்ணில் உண்கிறேன்
பாதம் அண்டி கேட்கிறேன் சொந்தங் கொஞ்சங் காக்க வேணும் (அம்மா)

ஏழு உலகை ஆத்தா படைச்சா
ஏழை உறவை காத்து அணைச்சா

பரவசமே... பரவசமே...
பரிமளமே... பரிமளமே...

பரவசம் எங்களுக்கு பந்தலுக்கு வந்து உண்ணு (அம்மா)

சரணம்:
மாயன் தந்த ஆடைகள் ஈசன் தந்த மாலைகள்
மங்கை மாயி கொண்ட சீதனம்

பூவை சிரசில் கொட்டுறேன் பாதம் அலம்பிக் கேட்கிறேன்
அங்கம் புரண்டு வேண்டுறேன் தாலி காத்து அருள வேணும் (அம்மா)

ஆதி பீட ஆத்தா உதிச்சா
வீடு வந்து சோகம் துடைச்சா

கற்பகமே... கற்பகமே...
அட்சயமே... அட்சயமே...

கற்பகம் எங்களுக்கு திங்களுக்கும் இங்கு தங்கு (அம்மா)

ராகாவில் பாடல்: அம்மா... மாரியம்மா...

Friday, November 30, 2012

சபரிமலை வா சரணம் சொல்லி வா - உண்ணி கிருஷ்ணன்



‘பாட்டைப் பாடும் போது, நானே மலைக்கு நடந்து செல்வது போல ஒரு உணர்வு எழுந்தது’ - உண்ணி கிருஷ்ணன் விழா மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.

சென்னை மகாலிங்கபுரம், ஐயப்பன் கோவிலில், ‘சபரிமலை வா சரணம் சொல்லி வா’ இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா. அவர் வார்த்தைகள் என் மனசை மிருதுவாக வருடின.

1974-ல் என் தந்தை, காஞ்சியிலிருந்து மதுரை, குமுளி, கோழிகானம், தேவிகுளம், உறைகுழி தீர்த்தம் வழியாக சபரிமலைக்கு பாத யாத்திரை சென்றதை நினைத்து, நான் எழுதிய பாடல் அது. கானாஞ்சலி கிரிதரனின் ஐந்தாவது இறையிசை ஆல்பம்.


கூட்டாக ஐயப்பனைக் காண்பது போலவே, கூட்டாக பாடல்கள் எழுதினோம். கிரிதரன் மூன்று, அவரது குருசாமியும், நண்பர் ஸ்ரீதரும் ஒவ்வொன்று, நான் இரண்டு எழுத, அவற்றை உண்ணி கிருஷ்ணன் அழகாகப் பாடிக் கொடுத்தார்.

எத்தனையோ நிறுவனங்களை நிர்வகித்து நடத்திய கிரிதரனை, இறையிசையில் லயிக்க, நேரடியாகக் கட்டளையிட்டது ஐயப்பனே!

இரு வருடங்களுக்கு முன், ஆலபுழா மாவட்டத்தில் முக்கால் வட்டம் என்னும் இடத்திலிருக்கும் பழைமையான ஐயப்பன் கோவிலுக்குச் சென்றிருந்தார் கிரிதரன். இது ஐயப்பன் களரி பயின்ற இடம். அங்கே ஒருவர் எதிர்பட்டு இவர் தலையில் கை வைத்து, ‘அடுத்த வருடம் இந்தக் கோவிலுக்கு வருவதற்குள், நீயே இசையமைத்து பாட்டும் எழுதி ஐயப்பனுக்கு கீதாஞ்சலி செய்து வருவாய்’ என அருள்வாக்காய்ச் சொல்ல, அதனால் உந்தப்பட்டு கிரிதரன் வெளியிட்டதே ‘ஐயன் மலை எங்கள் மலை’

தொடர்ந்து ‘விந்தைகள் புரிந்தாய் நீ என் வாழ்விலே’ (பெருமாள்), ‘ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி’, ‘உச்சி பிள்ளையாரே சரணம்’ ஆல்பங்களை வெளியிட்டு இப்போது மீண்டும் இசைக்க வைத்த ஐயப்பனுக்காக. இதில் முக்கால் வட்ட ஐயனைப் போற்றிப் பாடலையும் எழுதியிருக்கிறார்.

மூன்றாம் ஆல்பத்திலிருந்து எனக்கு பாடல்கள் எழுத வாய்ப்பளித்து, அந்த விழா மேடையில் கௌரவமும் தந்தார். அவருக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையில்லை.

பாடுபொருள், தல வரலாறு, அனுபவம், இறையிடம் சரணடையும் போது மடை திறக்கும் உணர்ச்சிகளை, சந்ததிற்கு ஏற்ப பாடலாய் இதுவரை வடித்தேன். கிரிதரன் இசையின் தரத்தை அடுத்தடுத்த ஆல்பங்களில் உயர்த்த, அதற்கு ஈடு கொடுக்க, ‘கவிதை இயற்றிக் கலக்கு’-வில் தொடை நயத்தையும், சந்த இலக்கணத்தையும் படித்தபின், இம்முறை எழுதிய வரிகளில் எளிமையும், சந்தமும் சற்றுக் கூடியது. நூலாசிரியர் பசுபதிக்கும், ‘அறுசீர்’ பதிவில் இந்த நூலைக் குறிப்பிட்ட என். சொக்கனுக்கும் என் நன்றிகள்.

ஒரு பாடலை யாத்திரை வடிவிலும், மறு பாடலை யாசக தொனியிலும் வடித்திருக்கிறேன்.

இந்த ஆல்பம் ராகா.காம்-இல் ஐயப்பன் ஆல்பங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தை எட்டியிருக்கிறது. இங்கே கேட்கலாம்.

Tuesday, September 18, 2012

மீண்டும் ஹரிணி...


ரெக்கார்டிங் பூத்.

சில நொடி கண்மூடியபின் உணர்வு பூர்வமாக பிள்ளையாரைப் பாடத் தொடங்கினார் ஹரிணி.

தந்தாணி கரத்தாய் ஆனந்த முகத்தாய்
தாயென வருவாய் - மன
சாந்தியை தருவாய்
ஐங்கரா... ஐம்புலா...
சதுர்த்தியில் எம்மை காத்திட வருவாய்...

விவரணத்திற்கு அப்பாற்பட்டு சொக்க வைக்கும் அவரது குரலை, கன்சோல் ரூமில் தன்னிலை மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். பாட்டை எழுதிய போது மெல்ல நடந்த உணர்ச்சிகள் இப்போது அவர் குரலொலியில் தடதடத்தன.

கிரிதரன் இசையமைத்து ஆடி மாதம் வெளிவந்த கானாஞ்சலியின் ஓம் நவ சக்தி ஜெய ஜெய சக்தி-க்கு கிடைத்த வரவேற்பு தந்த சக்தியில், அதைப் போலவே உண்ணி கிருஷ்ணன், ஹரிணியின் அற்புதக் குரல்களில் பிள்ளையாருக்கு இசையாஞ்சலி செய்ய முடிவானது.

கிரிதரன், உண்ணி கிருஷ்ணனுக்கான பாடல்களை மடமடவென எழுதிவிட்டு, ஹரிணிக்கான பாடல்களை என்னை எழுதச் சொன்னார். நாளை ரெக்கார்டிங் என்றும் சொல்லி அதிர வைத்தார்.

பிள்ளையாரப்பா, இதுக்கு மேல எந்த வார்த்தையும் இந்தப் பிள்ளைக்கு வரலையேப்பா. முறையிட்டேன்.

கணங்களின் அதிபதி ரெக்கார்டிங்கை இரண்டு நாள் தள்ளி வைத்து, பாடல்களை கிள்ளிக் கொடுத்தார். தந்தத்தை எழுத்தாணியாக்கி பாரதம் எழுதியவனை தந்தாணி கரத்தாய் என்று விளித்தே துவங்கினேன்.

ஆறு பாடல்களுடன், விநாயகர் அகவலுடன் ரெக்கார்டிங் இனிதே நிறைந்தது. கிரிதரன் இரண்டு பாடல்களையும், அகவலையும் பாடியிருக்கிறார்.

ஒளவையின் வரிகளை இசையுடன் கேட்கும்போது, வெட்கம் என்னை வானமாய்க் கவ்விக் கொள்கிறது!

எழுதிய சில வார்த்தைகளும், அதைத் தந்த தந்தன் காலடிக்கே சமர்ப்பணம்.

இந்த உச்சிப் பிள்ளையாரே சரணம் ஆல்பத்தின் பாடல்களையும், நவசக்தியின் பாடல்களையும் raaga.com-ல் கேட்கலாம், வாங்கலாம். அதன் சுட்டிகள் கீழே:

ராகாவில்: உச்சிப் பிள்ளையாரே சரணம்
ராகாவில்: ஓம் சக்தி நவசக்தி ஜெய ஜெய சக்தி