Sunday, September 5, 2021

கோவிலுக்குக் குடிபெயர்ந்த விநாயகர்

ஒன்றரை வருடமாக எங்கள் வீட்டில் குடியிருந்த விநாயகர், தனக்கென கட்டி முடிக்கப்பட்ட கோவிலுக்கு இன்று குடிபெயர்ந்தார்.

என் உறவினர் கிராமம். இதன் ஏரிக்கரை அருகே கிராமத்தார் விநாயகர் கோவிலை கட்டத் தொடங்கியிருந்தனர். கொரோனா காலத்தினாலும், பொருளாதாரச் சிக்கல்களாலும் கோவிலின் பணிகள் நீண்டு கொண்டிருந்தன.

கோவிலின் மூல விக்கிரகமாக வடிக்கப்பட்ட நான்கடி உயர கற்சிற்ப கற்பக விநாயகரை ஜலவாசம் முடிந்தபின், தான்ய வாசத்திற்கு எங்கள் வீட்டில் கிராமத்தார் வைத்திருந்தனர்.

இவருக்கென ஓர் அறை ஒதுக்கப்பட்டது. இவருக்கு இருபுறம் சுவர் இருக்க, இருபுறம் மரப்பலகைகள் வைக்கப்பட்டு உச்சிவரை நெல் குவிக்கப்பட, அதனுள் இவர் தன் தான்ய வாசத்தைத் தொடங்கினார். அன்றே எங்கள் குடும்பத்தில் ஒருவராய் உணர்வோடு ஒன்றிவிட்டார். 

அலுவல் பணியும், பள்ளிப் படிப்பும் வீட்டிலிருந்தே... என மருவிவிட்டதால், குடும்பமாய் இவ்வீட்டிற்கு வந்துவிட்டேன். 

நெற்குவியலின் மேல், பிரபையின் நடுவில் இருக்கும் சிங்க முகத்தின் பிடரி மட்டும் சற்றே வெளிப்பட்டிருப்பதைக் கண்டது முதலாய், ஒரு மகிழ்ச்சி என்னைத் தொற்றிக் கொண்டது. தினம் தோட்டத்திலிருந்து பூப்பறிக்கப்பட்டதும், முதலில் இவருக்கே, பிரபையின் மேல் சாற்றப்படும். ஒவ்வொரு முறையும் இவரைக் கடக்கும் போதெல்லாம், பிள்ளையாரப்பா... ஐங்கரா... பார்வதி மைந்தா என ஒரு பெயரை மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. 

தான்ய வாச காலம் முடிந்தது. இவருக்கு வெள்ளிக் கவசம் செய்ய அளவெடுப்பதற்கு கிராமத்தார், ஆச்சாரியை அவரது குழுவுடன் அழைத்து வந்தனர். 

நெற்குவியலை மெல்ல விலக்கியதும், அற்புதக் கலைநயத்துடன், சொக்க வைக்கும் அழகுடன் வெளிப்பட்டார் விநாயகர்.  

பீடத்தின் அடியிலிருந்து புடைத்துக் கொண்டிருந்த தாமரையின் மேல் வலது காலை வைத்து, அதன் முழங்கால் பகுதியைத் தடவியபடித் தொங்கும் நீண்ட ஆபரணத்தின் விளிம்பை இடது கால் விரல்கள் தொட்டபடி சம்மணமிட்டு பீடத்தின் மேல் ஆனந்த வடிவாய்க் காட்சி தந்தார். 

பாசாங்குசத்தை பிடித்திருக்கும் கைவிரல்களின் கோடுகள், அதன் நகத்தின் விளிப்புகள்,  இடக்கை கொள்ளளவிற்கு லட்டு,  வலமாய் வளைந்த தும்பிக்கையின் நுனியில் கொழுக்கட்டை, தந்தங்களுக்கிடையே மணி பூட்டிய சிறு ஆபரணம், பேழை வயிற்றின் வட்ட வடிவம், அதை இறுக்கியபடி ஒட்டியாணம், தோளையும், மேல் மார்பையும், நெற்றியின் இரு பகுதியில் பிறை வடிவாக அலங்கரிக்கும்  ஆபரணங்கள், மணிக்கட்டில் மணிகள் கோர்க்கப்பட்ட ஆபரணம், அக்னி சுடர்விடும் வடிவாய் கிரீடம்... கோபத்தில் மூக்கு புடைத்த சிங்க முகப் பிரபைதான், ஆனால் வாய்ப் பகுதி வேலைப்பாடுகளால் கோரைப் பற்கள் வெளிப்பட்டும் அது சிரிக்கும் சிங்கமாகவே காட்சி தந்தது. இவ்வளவு அழகுடன் வடித்த சிற்பி யாரோ, அவர் வளமுடன் வாழ்க.

வந்தவர் யாவரும் இவ்வழகில் லயித்து, மகிழ்வோடு தத்தம் செல்போனில் பலவாறு படம் பிடித்துக் கொண்டனர். (அப்பாடா, செல்ஃபி எடுக்கும் எண்ணமெல்லாம் யாருக்கும் வரவில்லை!).

கவசத்திற்கு அச்சு எடுக்கும் பணி துவங்கியது. 

பெரிய அண்டாவில் நீர் ஊற்றப்பட்டு கொதிக்க வைக்கப்பட்டது. ஒரு மூட்டை நிறைய மெழுகும் சாம்பிராணியும் கலந்த பெரிய பெரிய கட்டிகள் இருந்தன. அவை கொதிநீரில் போடப்பட்டதும், குழைந்து சாந்தாக மாறியது. நீண்ட மரக் கரண்டி மூலம் அதைக் கிண்டி எடுத்து தரையில் கிடத்தினர். 

கையால் தொடுமளவிற்குச் சூடு இறங்கியதும், அதை எடுத்து தலை, முகம், கழுத்து, தோள் பகுதிகளில் தனித்தனியாய் பொறுமையாய் அழுத்தி ஒட்டினர். சில நிமிடங்களுப்பின் அதைக் கவனமாய்ப் பிடித்து இழுக்க, அது எந்தவிதச் சிக்கலும் இன்றி, சிலை மேல் எந்தவித ஒட்டுதலும் இன்றி அழகாகப் பிரிந்து வந்தது. அதன் உட்பகுதியில் சிலையின் வடிவங்கள் பதிந்திருந்தன. ஆபரணத்தின் குண்டு மணிகள் கூட கச்சிதமாய்ப் பதிந்திருந்தன. அன்னக்கூடையில் நிரப்பட்ட குளிர்ந்த நீரில் இவற்றை வைக்க, இவை இறுகிக் கொண்டன. 

சிலையின் அனைத்து பகுதிக்கும் அச்செடுக்கும் வரை மெழுகை சாந்தாக்குவதும், அச்செடுப்பதும், அதைக் குளிர்விப்பதும் தொடர்ந்தது. (வெள்ளியை உருக்கி இவற்றில் விட அவை கவச வடிவு பெறும்).

பணி முடிந்தது. தான்ய வாசம் காலம் முடிந்து விட்டதால், துணியால் போர்த்தப்பட்டு அவர் அறையில் வைக்கப்பட்டார். 

இவர் யானை முகத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. யானையின் எடையையும்தான் கொண்டிருக்கிறார். ஆறு பேர் சேர்ந்து முயன்றால் அரையடி மட்டும் நகர்ந்து சிரிக்கிறார். கனமான இரும்புக் குழாய்களையும், உருளைக் கட்டைகளையும் அடியில் வைத்து உருட்டித்தான் இவரை நகர்த்த முடிந்தது.

கோவில் பணிகள் மேலும் மாதங்களாய் நீண்டு கொண்டே செல்ல, இவரும் எங்கள் குடும்ப நபராகத் தொடர்ந்தார். 

மண்ணச்சநல்லூர் கிரிதரன் இசையில் விநாயகர் ஆல்பத்திற்கு (உச்சி பிள்ளையாரே சரணம்), உன்னி கிருஷ்ணன்,  ஹரிணி  இருவரின் குரலில் பாடல்கள் எழுதியது முதல் விநாயகரின் வடிவை அணுவணுவாக ரசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆல்பத்தில் கிரிதரன், ஔவையின் விநாயகர் அகவலுக்கும் இசையமைத்துப் பாடியிருந்தார். அதுமுதலாக தினமும் அகவலை ஓதிக்கொண்டுதான் இருந்தேன். 

ஆனால் இந்த விநாயகரின் வடிவை உள்வாங்கிக் கொண்டபின், தினசரி இவருக்கு ஒரு பூவைச் சூடி, அகவலைப் பாடத் தொடங்கியதும், பல சொற்கள் ஆழமாக விளங்கத் தொடங்க திகைத்துத்தான் போனேன். 

“வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)”... 

“சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி”...

போன்ற சொற்பதங்கள் எல்லாம் மனதை என்னன்னவோ செய்யத்தொடங்கின. 

மெய்யோகம் ரகுராமின், வசு-பிராணாயாமம் வகுப்புகளில் பங்கெடுத்து இடகலை, பிங்கலை, சுழுமுனை மூச்சு முறையை, முறையாகக் கற்றபின், 

“இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி” - வரிகளும், அதைத் தொடர்பவையும்  வேறொரு பரிமாணத்தில் புரிபடத் தொடங்கியது.

ஔவை வெறும் தமிழ் புலவர் மட்டும் அல்லர். விஞ்ஞானமும் மெய்ஞானமும் தெளிந்த ஞானி. அவர் அகவலை எளிமையாகத்தான் எழுதியிருக்கிறார். விநாயகரை வர்ணித்துத்தான் தொடங்குகிறார். ஆனால் அவரை வேண்டும் விதமாய்த் தொடரும்போது ஒரு மகோன்னத வாழ்விற்கான சூட்சுமத்தையே சொற்களில் மந்திரமாய்ப் பொதித்து வைத்திருக்கிறார்.  

அவற்றை விநாயகரின் வடிவை மனதில் நிறுத்தி சொல்லச் சொல்ல, காலம் செல்லச் செல்ல, சமயத்தில் நமக்குத் துணை வரும் விதமாய் அவை வெளிப்படுகின்றன.

அந்த நிலையை, இந்த விநாயகர் இப்போதே தந்தருளியிருக்கிறார்.

கோவில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இன்னும் மூன்று நாட்களில் கும்பாபிஷேகம்.

இன்று காலை கிராமத்தினர் எங்கள் வீட்டிற்கு வந்து, விநாயகரையும், சிறிய மூஞ்சூறு, பலிபீட சிலைகளையும் வண்டியில் ஏற்றினர். வண்டி கோவிலை நோக்கிப் புறப்பட... 

சட்டென்று உள்ளமும், இல்லமும் வெறிச்சோடியது.

Wednesday, December 2, 2020

பாம்பும் பூனையும்

சட்டென்று அந்தப் பாம்பு தோட்டத்தின் புற்களிடையே சீறி எழுந்து படமெடுத்து நிற்க, அதனுடன் சண்டைக்குச் சென்ற பூனை ஓரடி பின்வாங்கி நிற்க... ஆஹா, இன்று இவைகளின் சண்டையைப் படமெடுத்து விடலாம் என்று மொபைல் போனை எடுத்து வர வீட்டினுள் ஓடினேன்.

இந்த கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலையென்பதால், உறவினரின் கிராமத்திற்குச் சென்று விட்டேன். மழைக்காலம் தொடங்கியதில் பல ஜீவராசிகள் தத்தம் இடங்களிலிருந்து வெளியே வந்து சுற்றிக் கொண்டிருந்தன. ஒரு சிறு முதலை அளவிற்கு ஒரு உடும்பு தோட்டத்துப் பக்கம் வந்து சென்றது. சைனாவிலிருந்தே வந்து விட்டனவோ என அஞ்சும்படி இருபது வௌவ்வால்கள் கூட பெரும் சப்தம் எழுப்பிப் பறந்தன. ஆனால் அதிகப்படியாக சுற்றுவது என்னவோ பாம்புகள்தாம். 

வீட்டு வாசற் பகுதியில், ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் நிலத்தடி குழாய் வேலையாய் ஊராட்சி பள்ளம் தோண்ட, பூமியினுள் நாகலோகம் திறந்து கொண்டதோ என்னமோ?!, அப்பள்ளத்தின் வழியே பாம்புகள் வெளிவந்து செல்வதும் சகஜமானது. ஒரு முறை டூ-வீலர் ஸ்டேண்டின் மீது நான் கால் வைக்க, வெகு அருகில், வண்டியின் அடியிலிருந்து ஒரு பாம்பார் எட்டிப் பார்த்து, தன் பிளவுபட்ட நாக்கு நுனியை, வெளியே உள்ளேயென சிலமுறை நீட்டி இழுத்து காட்சி தந்தபின் சென்றுவிட்டார். நாம் அதை அடிக்க முயலாமல் சிவனே என்று இருந்தால், அவைகளும் அதே சிவனே என்று போய்விடுகிறன. 

ஆனால் இங்கே நான்கு பூனைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவைகளுக்கு அக்கம்பக்கத்து வீடுகள் எதுவும் ஒரு எல்லையில்லை.  எந்தச் சுவர்களும் ஒரு தடையுமில்லை. வீட்டுக்கு வீடு சுவரேறிச் சென்று, சமையல் அறை சன்னல் வழியே உள்ளே நுழைந்து பாலைக் குடித்துவிட்டு, வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியரிடம் கொஞ்சிக் குலவிவிட்டுச் சுற்றிக் கொண்டிருக்கும். 

பாரதியார் பாடியதுபோல சாம்பல் நிறத்தில் ஒரு பூனை, வெள்ளைப் பாலின் நிறத்தில் ஒன்று, பாம்பின் நிறத்தில் ஒன்று... அட விடுங்க... பாம்பின் நிறத்தில் பூனை இருப்பதெல்லாம் தேவையில்லை. இவை நாலுமே, பாம்பைக் கண்டால் சண்டைக்கு வந்து விடுகின்றன. ஏரியா பிரித்து, உனக்கு அந்தப் பாம்பு எனக்கு இந்தப் பாம்பு என்றெல்லாம் பங்கு பிரித்து சண்டைக்கு வருகின்றன.

டூ-வீலரின் அடியே ஓய்வெடுக்கும் பாம்பை ஒரு பூனை தாவி அதன் தலையருகே கவ்விப் பிடிக்க, பாம்பு சடசடவென தன் உடலை பூனையின் கழுத்தை சுற்றி இறுக்க முயல... இவைகளின் சண்டையின் களம், தெருவுக்கு மாறி, பின் பள்ளத்தினுள் விழுந்து புரண்டு, மறுபடியும் மேலேறி, ஒரு புதரினுள் சென்று மறைந்து விட்டன. கிளைமாக்ஸ் தெரிய  இரண்டு நாட்கள் ஆனது. எதற்கும் பாதிப்பில்லை. மறுபடியும் டூ-வீலரின் அடியே பாம்பார் ஓய்வெடுக்க வந்தார். பூனையார் வழக்கம் போல் தோட்டத்துப் பக்கம் சுற்றித் திரியத் தொடங்கினார்.

நான் பெரும்பாலும் தோட்டத்தின் அருகேதான் லேப்டாப்பில் பணிசெய்து கொண்டிருக்கிறேன். வெள்ளைப் பூனை மெல்ல ஓட்டின் மேலே பதுங்கிப் பதுக்கி முன் நகர்வது ஓரக் கண்ணில் தெரிய திரும்பியவன் திகைத்தேன். இதுவரைக் கண்ட பாம்புகள் எல்லாம் இரண்டு முதல் இரண்டரை அடி நீளம் மட்டுமே இருந்தன. ஆனால் இப்போது கண்டதோ ஆறடிக்கும் மேலான நீளத்தோடு மிரள வைக்கும் தேகவனப்போடு ஒரு பாம்பு. மெல்ல ஓட்டின் மீதிருந்து, தூணின் வழியே கீழே இறங்கிக் கொண்டிருந்த இதன் வாலைப் பிடிக்கத்தான், பூனையார் பதுங்கி வந்து கொண்டிருந்தார்.

எனக்கும் தூணுக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் நாலைந்து அடிதான். பூனை, பாம்பின் வாலைப் பிடித்து இழுத்து, இது சீறி எழுந்தால், என்பக்கம் வந்து விழும் வாய்ப்பு அதிகம்,. சுதாரித்து நான் எழுவதற்குள். பூனை தாவிப் பிடிக்க, அதன் விரல் நகங்களுக்கிடையே, மாட்டிக் கொள்ளாமல், பாம்பின் வால் வழுக்கிச் செல்ல, பாம்பு காம்பவுண்ட் சுவர் ஓரமாய் பல மாதமாய் கிடக்கும் கட்டைகளுக்கிடையே சென்று மறைந்து விட்டது. அவ்வப்போது வெளியே வந்து ஓட்டின் மேலேறி, இரைதேடித் திரும்புவது இதன் வாடிக்கையானது.

எந்தக் காட்சியும் இமைபொழுதில் மறைந்து விடுகின்றன. ஒருமுறைகூட படம் எடுக்க முடிந்ததில்லை. இந்த ஆறடிப் பாம்பும் வெள்ளைப் பூனையும்தான் இப்போது நேருக்கு நேர் போர் முரசு கொட்டின.

சிறு வயதில் Snake in the monkey's shadow என்றொரு குங்ஃபூ படம் பார்த்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.  பாம்பின் ஸ்டைலில் சண்டை போட்டு பலரை வீழ்த்தும் வில்லன்கள் இருவரை வெல்ல முடியாமல் திணறும் நாயகன், காட்டில் பாம்புடன் சண்டையிட்டு ஜெயிக்கும் குரங்கைக் கண்டு, பின் அதைப் போலவே சண்டையிட்டு வெல்கிறான். அந்த பாம்பும் ஆறடிக்கு மேல் நீளமிருந்ததும் நினைவுக்கு வந்தது. அது போல ஒரு சண்டையை நாம் இப்போது படமெடுக்கப் போகிறோம்... அட மொபைலில்தாங்க... என்று எண்ணிக் கொண்டே, கேமிராவை ஆன் செய்து கொண்டே விரைந்து திரும்பினேன்.

பூனை அப்படியே அசையாமல் கூர்மையான பார்வையோடு நின்று கொண்டிருந்தது. ஆனால் பாம்பைக் காணோம். புற்களிடையே ஏதாவது சலசலப்பு தெரிகிறதா எனப் பார்த்தேன். ம்ஹூம். பாம்பிருக்கும் சுவடே இல்லை. அதுவரை வீரச் சவால் நாயகனாய் நின்றிருந்த பூனை என்னை திரும்பிப் பார்த்து விட்டு அதுவும் சிவனே என்று சென்று விட்டது. 

சை... இன்றும் படமெடுக்க முடியவில்லை என சலித்து, கேமராவை அணைக்கும் போது, யூ.டியூப் ஆப் மீது விரல் பட்டுவிட்டது. ஆப் திறந்து கொள்ள... ரஜினி, குஷ்பு, பாம்பு என அண்ணாமலை படத்தின் பாம்புக் காட்சி முதலாவதாய் வந்து நின்றது. என்ன டிசைனோ!

Monday, October 26, 2020

விடாப்பிடி (குறுநாவல்)

சுஜாதா அவர்களின் தமிழ் மூலம்தான் கம்ப்யூட்டரைப் பற்றி பள்ளிப் பருவத்தில் அறிய முடிந்தது. பின் ஐ.டி. துறையே வாழ்க்கையான பிறகு, எழுத்தாளர் இரா. முருகன் அவர்களின் நட்பு கிடைக்க, “சுஜாதா சார் பெரிய அளவில் செய்ததை நானும் என் நண்பர்களும் நம்மால் முடிந்த அளவில் செய்து வருகிறோம். நீங்களும் எழுத வாருங்கள்” என அன்போடு அழைத்தார். அது முதல் ஐ.டி. துறை சார்ந்த கதை எழுதும் ஆசை வேர் விட்டிருந்தது. 

ஒரு தொலைபேசி உரையாடலில் எழுத்தாளர் பா. ராகவன் அவர்கள்  “சுஜாதா நினைவு போட்டி நடக்க இருக்கிறது. அதற்கு ஒரு குறுநாவல் எழுதி அனுப்புங்கள்” என ஊக்குவிக்க... இரு பெரும் எழுத்தாளுமைகளின் ஆசியால் விளைந்ததே இந்த ’விடாப்பிடி’ குறுநாவல்.

கொரோனாவினால்  போட்டி நடக்க இயலாமல் போனதால், இது கிண்டிலில் புத்தகமானது. 

ஐ.டி. துறையில், டாட்.காம் குமிழி வெடித்து பெரும் பிரளயமே நிகழ்ந்த இறுதி ஆண்டில் (2001), அதில் சிக்கிக் கொண்ட ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் நாயகன் ஒரு சி.டி.யை (குறுந்தகடு) வைத்து புது ப்ராஜெக்டை உருவாக்கி கம்பெனியை மீட்க முயலும் கதையே இந்த “விடாப்பிடி”.

எதை எழுதினாலும் முதல் நபராகப் படித்து, திருத்தங்கள் யோசனைகள் சொல்லும் நண்பர் சித்ரன் ரகுநாத் அவர்களின் உதவியின்றி இந்த “விடாப்பிடி” முழுமை அடைந்திருக்காது.  மூவருக்கும் நன்றி.

இக்குறுநாவல் சற்றே ஒரு த்ரில்லர் வகையாக அமைந்திருக்கிறது. தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் அறிய ஆவல். நன்றி.

அமேசான் சுட்டி: விடாப்பிடி  

விலை: ரூ 49.


Sunday, February 23, 2020

சத்யானந்தனின் புது-பஸ்டாண்ட்

சிலருக்கு பண்டைய வரலாறு இனிக்கும். சிலருக்கு இக்கால அரசியலும் காதலும் தித்திக்கும். சிலருக்கு எதிர்கால விஞ்ஞானம் சுவைக்கும். இவ்வனைத்தையும் புலிவலம், திருவள்ளரை, துறையூர், திருச்சி சுற்றிய பகுதிகளை ஒட்டி கடந்த காலம் கி.பி 600-1300, நிகழ்காலம், சற்று எதிர்காலம் 2040-2070 கொண்டு 180 பக்கங்களுடன் ஒரு கையடக்க நாவலாய் ‘புது பஸ்டாண்ட்’-ஐ எளிமையான நடையில் படைத்திருக்கிறார் சத்யானந்தன்.

இந்நாவல், படிப்பவர் தன் ஞாபகச் சக்தியைப் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளும்படியாகவும் வடிக்கப்பட்டிருக்கிறது. சட்டெனக் கீழே விழுந்துச் சிதறும் குண்டு மணிகளைப் போல் பல சம்பவங்கள் - மூன்று காலப் பரப்பில் - ஒரே  நேர்க் கோட்டில் அல்லாமல், விதவித வழிகளில் தொகுக்கப்பட்டிருகின்றன. சற்று அசந்தால், அல்லது சிறு இடைவெளி விட்டுப் படித்தால் பாத்திரங்களின் பெயர்களும் சம்பவங்களும் மறந்தே போய்விடும்.

திருவள்ளரை வைணவக் கோவிலின் பூர்த்தியாகாத ராஜகோபுரத்தை மையப்படுத்தி கதையின் களம் அமைக்கப்பட்டிருக்கிறது. பல சிந்தனைகளைத் தூண்டிவிடுகிறது முன்னுரையில் வரும் ஒரு வரி - “இன்று நாம் ஓர் இரவுப் பயணத்துக்குள் கடந்து விடும் நிலப்பரப்பை ஒரு காலத்தில் நான்கு மன்னர்கள் ஆண்டனர்”. ம்ம், பல்லவன் போரில் தோற்க, சோழனிடம் ஆட்சி மாறியபின் கோபுரம் கட்டும் பணி நிற்கிறது. ஆனால் இப்பணியாலும், போராலும் சாமானிய மக்களிடம் நிகழும் தாக்கமே பிரதானமாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. கோவில் பணிக்குச் கல்தச்சர்கள் சென்று விட, அம்மி, ஆட்டுகல் கொத்தித் தருவதற்குக் கூட ஆளில்லை. ஒரு போர் நிகழும் போது கள்வரிடமிருந்து காக்கவும் வீரரில்லை... எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு இடத்திலும் ஒரு பெரும் தொழில்/வேலை தொடங்கப்படும் போது, சுற்றுப் புற மக்களுக்கு வேலை கிடைக்கும் அதே சமயம், கடைப் பணிக்கும், வீட்டுப் பணிக்கும், கூலிக்கும் ஆட்கள் அற்றுப் போகும் அவலமும் சேர்ந்தே நிகழ்கிறது. 

அதனுடன் காலங்காலமாய்த் தொடரும் சாதிப் பிரச்சினைகளும், தீண்டாமைகளும், இதையும் மீறிப் பூக்கும் காதல்களும், காமமும், அதன் விளைவுகளும் காட்சிப் படுத்தப்படுகின்றன. ஆயர் குலப் பெண், கல்தச்சனின் வீட்டு வாயிலிலேயே நிற்பதும், இளவயதில் திருமணமாகி பூப்பெய்தும் முன்பே கணவனை இழந்த புலையர் பெண் வள்ளி, போரில் முடவனான சஞ்சீவனைக் காதலிப்பதும், சங்கரனின் தந்தை நடுநிசியில் தேவதாசி பெருந்தேவி வீட்டிற்குச் செல்வதும்... பலவாறு படிப்பவரின் மனதை அசைத்து விடுகின்றன.

இவை இப்படியே இன்றும் தொடர்வது, இவைதான் நம் அடையாளங்களா என்றும் திகைக்க வைக்கிறது. ஆனால் மாலா தன் தாய்க்காகத் தெளிந்து அறிவழகனை விட்டு விலகும் முதிர்ச்சி நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. இவள் குலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம், கொடுக்கப்படாமல் ஏமாற்றப்படுவதும், புது பஸ்டாண்டை  அரசியல் லாபங்களுக்காக கொண்டு வர முனைவதும், அதை ஒட்டிய போராட்டங்களும், வாழ்வாதாரங்களும், திரைமறைவு செயல்பாடுகளும்... குவாரி, கிரானைட், ரியல் எஸ்டேட், செம்மரக் கடத்தல், கந்து வட்டி, நக்ஸலைட்கள், ஃபைனான்ஸ் கம்பெனி, ஆள் கடத்தல் எனப் பலதும் இங்கே கோர்க்கப்பட்டிருக்கிறது. அற்புத திராவிட கழகம் (அ.தி.க), தமேஸான் என்றெல்லாம் சூட்டப்பட்ட பெயர்களால் இக்காலத்தின் பிரதிபலிப்பை படிப்பவர் சுலபமாக உணரலாம். மக்களின் கவனத்தை திசை திருப்பும் உத்திகள் அரசாட்சி முதலாய் நடப்பது சில பத்திகளிலேயே பட்டவர்த்தனம்.

ஒரு பேட்ஸ்மென், முதல் சில பந்துக்களை விட்டுவிட்டு, பிட்சின் தன்மையை உணர்ந்தபின் ஆடத் தொடங்குவது போலத்தான், இந்நாவலின் முதல் சில அத்தியாங்களை நிதானமாகப் படித்தபின்பே வேகமெடுக்க வேண்டும். எந்த ஒரு அறிகுறியுமின்றி, அடுத்த பத்தியிலேயே காலமும் காட்சியும் மாறும். அச்சுப் பிழையோ என்றும் நினைத்தேன். ஆனால் இது ஒரு உத்தி  எனப் புலப்பட்டபின், நினைவில் நிறுத்திப் படிக்கும் விதமாய்த் தொடர்ந்தேன். ஆனாலும், பல சம்பவங்கள் தொடர்ச்சியின்றி தனித்தீவுகளாய் நிற்கும். அதனுடன், பட்சிகளுக்குள் உரையாடல், நாய்க்கும் மனிதனுக்கும், ஒட்டகத்துக்கும் மனிதனுக்கும் உடைரயாடல் என்று துணுக்குகளும் உண்டு. சிலதில் ஒரு தகவலிருக்கும். சிலது வெறுமனே கடந்தும் செல்லும்.

எதிர்காலச் சம்பவங்கள் மிக நேர்த்தியாகத்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வெகு விரைவில் மாற்றங்களைக் காணும் நமக்கு  இதன் சில பகுதிகளில் பட்டம் படிக்கும் விதம், உணவகத்தில் ரோபோக்கள், வேற்று கிரக உயிருடன் உரையாடல்... போன்றவை வசீகரிக்கவில்லை.

எங்கோ தடம் மாறி சென்று விட்ட நாம், இயற்கை விவசாயத்தை நோக்கி மெல்ல திரும்பத் தொடங்கியிருக்கிறோம். இதன் உச்சம் இனி வரும் சில பத்தாண்டுகளிலேயே நிகழ்வதாய்... அறிவழகனின் தந்தை மணவாளன் மூலம், வானம் பார்த்த பூமிகளில் சொட்டு நீர்ப் பாசனம்... விதை நடும் ரோபோக்கள்... பூச்சிக் கொல்லி மருந்துகளை அறவே தவிர்த்து பெரிய பெரிய வெட்டுக் கிளிகளை உண்ணும் க்ளோனிங் செய்யப்பட்ட ராட்சதத் தவளை... சரியும் மக்கள் தொகை.. விரியும் காடுகள் / நீர்ப் பரப்புகள் என்றெல்லாம், பலரின் கனவுகளும், ஆசைகளும்,  முன்னெடுப்புகளும் இப்புத்தகத்தில் பூர்த்தியாவது போல நிகழ வேண்டுமென்பதே படித்து முடிப்பவரின் வேண்டுதலாய் இருக்கும்.

ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும், திருச்சி ராஜ கோபுரம் எழும்பியதைப்போல்,  திருவள்ளரை கோபுரத்தோடு தமிழகமெங்கும் இன்னமும் வலுவான அடித்தளமுடன் இருக்கும் பீடங்களின் மேல் கோபுரங்கள் எழும்பட்டும். அதனுடன் இம்மண்ணின் வளமும், மக்களின் நலமும் உயரட்டும். அதைக் கண்டு இந்நூலாசிரியரின் மனம் நிறையட்டும்.

வெளியீடு: Zero Degree Publishing
சுட்டி: புது-பஸ்டாண்ட்

Wednesday, September 4, 2019

Unwinding - ஒரு முன்னோட்டம்



தமிழ் சிறுகதை வடிவம் எடுத்து ஒரு நூற்றாண்டு கடந்திருக்கிறது. இத்தருணத்தில் உலகெங்கும் பரந்திருக்கும், ஆளுமை கொண்ட தமிழ் எழுத்தாளர்களின், தேர்ந்தெடுக்கப்பட்ட 43 சிறு கதைகள்,  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கும் நூல் “Unwinding".

தமிழின் முதல் சிறுகதையான வ.வே.சு. ஐயரின் “குளத்தங்கரை அரச மரம்”, 1914-ஆம் ஆண்டிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அது முதல் அவ்வப்போது  தமிழ்க் கதைகள் ஆங்கிலத்திலும் வந்து கொண்டிருந்தன. இப்போது ஒரு குறிப்பிடும் முயற்சியாக இந்நூல். இந்த அசாத்தியப் பணியை, கடும் சவால்களுக்கிடையில், சில வருடங்கள் கடந்தாலும், தளராமல் சாத்தியப்படுத்தியவர், சிங்கப்பூர் வாழ் எழுத்தாளர் @ஜெயந்தி சங்கர் அவர்கள்.

புலம் பெயர்ந்தவர்களின் கதைகளையும் உள்ளடக்கி, உலகத் தளத்தில், உலகத் தரத்தில், தமிழ் சிறுகதைத் தொகுப்பு, ஆங்கில மொழிபெயர்ப்பில் அற்புதமாக வந்திருக்கிறது.

முதல் முத்தான கதையே அ. முத்துலிங்கத்தினுடையது. கிரேக்க எல்லையில், அந்நாட்டு காவலரிடம் மாட்டிக் கொள்ளும் இலங்கைத் தமிழன்... துருக்கி, பிரேசில், சுவிட்சர்லாந்து.. ஜெர்மனி, இத்தாலி... என தன் பயண வாழ்க்கைக் கதையைச் சொல்ல, அதைக் கேட்டுக் காவலர் மலைக்க, நமக்கும் அந்நிலையே.

கடைசி வரி திருப்பத்தை தன் கதையின் மூலதாரமாய் வைக்கும் சத்யராஜ்குமாரின் அமெரிக்க மண்ணின் கதை, அசல் ஆங்கிலக் கதையாகவே புலப்படுகிறது.

சில கதைகளின் ஆசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் வேறு வேறு. சிலவற்றை ஜெயந்தி சங்கரே மொழிபெயர்த்திருக்கிறார். சில கதைகளின் ஆசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் ஒருவரே. குறிப்பாக இரா. முருகன் தன் இளைப்பாறுதல் கதையைத் தானே மொழிபெயர்த்துத் தர, அதுவே “Unwinding". இந்நூலிற்கு மிகப் பொருத்தமான தலைப்பாக அமைந்திருக்கிறது. 

இது போன்றவை மொழி பெயர்ப்பின் சூட்சுமங்களையும், தர்மங்களையும் மிக அழகான பாடங்களாய்த் தருகின்றன. மொழிபெயர்ப்பின் போது, மூல மொழியின் சில பத்திகள், இலக்கு மொழிக்குத் தக்கபடி சுருங்கவோ, விரியவோ செய்யும். உதாரணமாக, Unwinding-ல், ஜப்பானிய புராஜெக்ட் மேனேஜர் தன் குழுவினரிடம் கடந்த இரவின் கலவியைக் குறித்து எழுப்பப்படும் கேள்விகள்... தமிழில் ஒரு வரி மிகுந்தாலும் விரசமாகிவிடும். ஆனால் ஆங்கிலத்தில் முறுவலிக்கும் விதமாய் சில வரிகளைச் சேர்த்திருக்கிறார் இரா. முருகன். இது ஒரு பால பாடம்.

மூல மொழியின் ஜீவனை, இலக்கு மொழியில் அப்படியே தருவிப்பது பெரும் பணி. ஒவ்வொரு கதையின் ஒவ்வொரு வரியையும், ஒவ்வொரு பதத்தையும் சரிபார்த்தல் பெரும் சவால். அதற்கான போராட்டங்களை சளைக்காமல், சலிக்காமல் செய்து சாத்தியப்படுத்திய ஜெயந்தி சங்கரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  

இவர் முயற்சியால், தமிழ் இலக்கியம் உலத் தளத்தில் தாளமிடும்.

இறுதியாக... பெரும் வானரங்கள் சேது பாலம் கட்ட... ஒரு சிறு கல் கொடுத்த அணிலாய்... ஆருயிர் நண்பன் சித்ரன் ரகுநாத்தின், கல்கியில் வெளியாகி கவனம் பெற்ற லிஃப்ட் கதையை மொழிபெயர்த்து, அவனுடன் யானும் இணைந்து இடம் பெற்றுள்ளேன் :)

வெளியீடு:

EMERALD PUBLISHERS
15A, I Floor, Casa Major Road, Egmore,
Chennai 600008.
Ph: 044 - 28193206, 42146994
Mail: info@emeraldpublishers.com
https://www.emeraldpublishers.com

Wednesday, August 14, 2019

அத்தி வரதா... காஞ்சி வரதா...



1979-ல் பாலகனாய் ஒரு கையால் என் தந்தையைப் பற்றி, மறு கையால் படிகள் இறங்கும் கற்சுவற்றை மெள்ளப் பற்றி, அனந்தசரஸ் குளத்திற்கு அடியில், மண்டபத்திற்கு கீழ் இருக்கும் இவ்வறைக்கு (படம்),  அத்தி வரதர் சயனம் செய்யும் இடத்திற்குச் நான் சென்று வந்தது, இன்னமும் பசுமையாய் நினைவிருக்கிறது.

2019... நாற்பது வருடங்களுக்குப் பின் மீண்டும் அத்தி வரதரை தரிசித்த பரவசத்தில்... புராண கதையையும், ராமானுஜர் காலத்தையும், சிவகாஞ்சியில் இருக்கும் வைணவ தலங்களையும், தொகுத்து 2-4 சந்தத்தில் ஒரு பாடல் இயற்றியுள்ளேன்:



அத்தி வரதா காஞ்சி வரதா
  காட்சி தருகிறாய்
கோடி சுடரை முகத்தில் தரித்து
 முறுவல் செய்கிறாய்
கருணை மின்னும் விழியின் ஒளியால்
 அருளைத் தருகிறாய்
உந்தன் வருகை எந்தன் வாழ்வை
 முழுமை ஆக்குதே
வேத வல்லி கோபம் தணித்த
 வேத நாயகா
பிரம்மன் வேள்வித் தீயில் உதித்த
 பிரம்ம நாயகா
குளத்தில் மறையும் மறையில் உறையும்
 ஞான தேசிகா
தேவ ராஜா உன்தேக ஜோதியில்
 உள்ளம் கரைகிறேன்
 
அத்தி கிரியில் வாசம் செய்யும்
 கருடன் வாகனா
வேடன் உருவில் உடையவர் காத்த
 சேடன் ஆசனா
கூரத் தாழ்வான் கண்ணுள் வசித்த
 ஜீவன் ரட்சகா
நம்பி நண்பா உன்சொல் கேட்க
 நம்பி வருகிறேன்
பச்சை வண்ண பவள வண்ண
 மேனி கொள்கிறாய்
பேருரு கொண்டு சக்தியின் அருகே
 உலகை அளக்கிறாய்
தூதுரு கண்ணா மாவடி மண்ணில்
 பார்வைத் தருகிறாய்
ஏகன் உடனாய் உன்னைத் துதித்து
 மேன்மை அடைகிறேன்
காஞ்சி ஆளும் தங்கை கண்டு
  சித்தம் குளிர்கிறாய்
சாலைக் கிணற்றின் நீரில் ஆடி
  நித்தம் மிளிர்கிறாய்
நெறிகள் தந்து குடிகள் காக்க
 வரங்கள் தருகிறாய்
பேரருளாளா நின் திருவடிப் பணிந்து
 சக்தி பெறுகிறேன்
                                           - காஞ்சி ரகுராம்.

Saturday, May 18, 2019

பாலகுமாரனின் முதலாம் ஆண்டு ஆராதனை விழா

நாள்: மே 15, 2019
இடம்: வாணி மஹால்

இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரையும் புன்னகையுடன் வரவேற்று புத்தகத்துடன் ஒரு பையைக் கொடுத்தனர்.

ஓர் ஆர்வம் மேலிட்டது. இது படித்துவிட்ட புத்தகமா? வாங்கியபின் இன்னும் படிக்காமல் வைத்திருக்கும் புத்தகமா? இனிமேல் வாங்கவேண்டிய புத்தகமா? என குறுகுறுக்கும் எண்ணத்துடன், அரங்கினுள் சென்றமர்ந்து, பையிலிருந்து எடுத்துப் பார்த்ததும் பிரமித்தேன்.

அய்யனின் அமர ஜீவிதங்கள் - சரஸ்வதி சுவாமிநாதன்.

முன் தினத்தில்தான், இந்த நிகழ்ச்சி நடக்கப் போவதைப் பற்றி தந்தையிடம் பேசினேன். சில நாவல்கள் எப்படியெல்லாம் பாடம் கற்பித்தன என்று பேச்சு நீண்டது. உடலும், மனதும், வாழ்வும் திடமாக இருந்த போது படித்தவை சில, வாழ்வு சுழலில் சிக்கிக் கொண்டபோது படித்தவை சில. இன்னமும் படிக்க வேண்டியது பல. இன்றைய நிலையில் படித்தால் பெரும் புரிதலே கிடைக்கும். மீண்டும் தேந்தெடுத்துப் படிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

இதோ கையில்... பாலகுமாரனின் அத்தனைப் படைப்புகளின் சாராம்சமாய், அமர ஜீவிதங்கள். ஒவ்வொரு நாவலிலிருந்தும் முக்கிய வரிகளை எடுத்துத் தொகுத்திருக்கிறார் சரஸ்வதி சுவாமிநாதன். இப்படி ஒரு புத்தகம் வருவது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். தாம் படித்து உணர்ந்தவற்றை அசைபோடலாம். இனி படிக்க வேண்டியதையும் தேடிக் கண்டறியலாம். இவர் செய்தது ஒரு வணங்கத்தக்க பெரும் பணி. பாலா தந்த வாழ்க்கைப் பாடங்களுக்கு ஒரு கோனார் வடிவாய் இந்நூல் அமைந்திருக்கிறது. இப்பணிக்காக அவருக்கும், வருகை தந்த ஒவ்வொருவருக்கும் இப்புத்தகத்தை வழங்கிய பாலாவின் குடுப்பத்தினருக்கும் நன்றிகள் ஆயிரம். நிச்சயம் பாலாவின் ஆன்மா முறுவலித்திருக்கும்.

பையில் மற்றொரு புத்தகமும் உடன் இருந்தது. பிரித்தவன் திகைத்தேன். பாலகுமாரன் நினைவுத் தடங்கள் - கிருஷ்ணா.

அவர் வாழ்க்கை பற்றிய தகவல்கள் என்றுதான் நினைத்தேன். இல்லை. காவேரி மருத்துவமனையில், உயிர் பிரியும் தருவாயில் உடனிருந்த கிருஷ்ணா, அதை அப்படியே பதிவு செய்திருக்கிறார். // என் குழந்தை கௌரிகிட்ட போகும்போது சொல்லிட்டு போகணும்டா, ஃபேஸ் புக்ல விடைபெறுகிறேன்னு ஸ்டேட்டஸ் போடணும். போனைக் கொடு.. என்று மகன் சூர்யாவிடம் கேட்டிருக்கிறார். // நடுங்கி விட்டேன். நிஜ மரணத்தின் பதிவு இது. மேற்கொண்டு புரட்ட இது தருணமல்ல. பையில் வைத்து விட்டேன்.

நிகழ்ச்சி துவங்கியது. OS அருணின் இன்னிசைக்குப் பின் பாலகுமாரனின் பெயரால் “கண்மணித் தாமரை” விருதை இல. கணேசன், இளம் எழுத்தாளர் நரனுக்கு வழங்கினார். விருது பற்றிய சூர்யா பாலகுமாரனின் உரை, நரனின் ஏற்புரை, பாரதி பாஸ்கரின் சிறப்புரை... அனைத்தும் எளிமையாக அழகாக அமைந்தது.

பாலகுமாரனைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது. இதை இயக்கியவர், ‘தமிழ் இந்து’ துணை ஆசிரியர் ராம்ஜி. நாற்பது நிமிட நீளத்தில் மிக அற்புதமாக வந்திருக்கிறது. பாலாவைப் பற்றி பலதும் அறிய முடிந்தது. பல எழுத்தாளர்களும், திரைத் துறையினரும், வாசகர்களும் பேசினார்கள்.

அவரைப் பற்றி பலரும் பல விஷயங்கள் பேசினாலும், அதன் அடி நாதம் ஒன்றுதான். வாழ்வு நொடிந்துவிட்ட நிலையிலும், நம்பிக்கையை விதைத்து, மீண்டும் வாழ வைத்த பாடங்கள்தான் அவரது படைப்புகள்.

ராம்ஜி வெளிப்படையாகவே கூறினார். இருபது வயதில், தீய பழக்கங்களுடன், தறுதலையாக சுற்றிக் கொண்டிருந்த என்னை, என்னென்னவோ செய்து நல்வழிக்குத் திருப்பியது அவரது எழுத்துக்களே என்று. அவருக்கு மட்டுமா, அந்த எழுத்து சிறப்பித்த வாழ்வினால் அங்கு வந்திருந்த வாசகர் அனைவருமே, ஒருவித உருகும் உணர்வோடு பிணைக்கப்பட்ட சொந்த பந்தமாகவே தென்பட்டனர். அது அபூர்வம். எழுத்தாளன் என்பதைக் கடந்து, பலருக்கு நல்வழிப் படுத்தும், ஆற்றுப் படுத்தும் குருவாகவே வாழ்ந்திருக்கிறார் பாலா.

அரங்கம் நிரம்பிவிட்டதால், இருபுறச் சுவர் ஓரங்களிலும், இரு பகுதி இருக்கைக்கு இடைப்பட்ட இடம் முழுவதும், வீடு திரும்பும் அவசரமின்றி, மூன்று மணி நேரம் நிற்கிறார்கள் என்றால், இவர்கள் பாலாவிற்கு நன்றி சொல்கிறார்கள் என்றே பொருள்.

குறையின்றி எழுத்தில்லை. இவரது சில நாவல்களில் சில குறைகளிருக்கலாம். கதையைப் படிப்பதைவிட கதை மாந்தர்களைப் படித்தறிவதே இங்கு பிரதானம். வாழ்வின் யதார்த்தங்களும் சிக்கல்களும் இம்மாந்தர் ரூபத்தில்தான் அலசப்படுகின்றன. இதில் லயிக்கும் போது குறைகள் உறுத்துவதில்லை. அப்படித்தான் குறையின்றி மனிதருமில்லை. நெருங்கிய உறவோடு, அவர்களின் மனத்தின் லயத்தோடு இணைந்து விட்டால், அவர்களின் குறைகள் ஒரு பொருட்டில்லை. இதனால் கோபங்களும் சண்டைகளும் நீர்த்து வசந்தம் வசப்படும். இக்கலையை இவரின் எழுத்துக்கள் துளிர்க்க வைத்திருக்கின்றன.

படிப்பது ஒரு இயல்பான செயல். படித்ததை உணர்வது ஒரு வரம். உணர்ந்ததை வாழ்வோடு இணைப்பது ஒரு தவம். அத்தவம் முயல்வதை பலரின் முக உணர்வுகள் சொல்லின. எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காத பாக்கியம் இது. அவரால் நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியமும் இது.

இந்நிகழ்ச்சியை நடத்திய விதம் அருமை. வருகையில் பாந்தமாய் சிற்றுண்டியும், பெண்களுக்கு மல்லிகை முழமும், கிளம்புகையில் பாலாவின் முதல் நாவலும் (ஏதோ ஒரு நதியில் - குடும்ப நாவல் - முதலாமாண்டு நினைவாஞ்சலி மலர்), வீடு சேரும் வரை பசிக்காமலிருக்க சிறிதளவு உப்புமாவும் கொடுத்து வழியனுப்பிய விதம்... பண்பட்ட விதம்... எழுத்தும், கனிவும், அக்கறையும் விளைந்த இடம் என்பதை உணர்த்தியது.

புத்தகப் பையில் விபூதி, குங்குமப் பிரசாதங்கள் இருந்தன... புன்னைநல்லூர் மாரியம்மன், கர்ப்பரட்சாம்பிகை, பாபநாசம், வைத்தீஸ்வரன், உறையூர் வெக்காளியம்மன், மண்ணச்சநல்லூர் பிரம்மபுரீஸ்வரர், அண்ணாமலையார்...  இது பலரையும், அவர் வீட்டினரையும் மகிழ்விக்கும், ஆசிர்வதிக்கும்! (புத்தகப் பக்கங்களைப் புரட்டிய போது, அதிலிருந்தும் குங்கும வாசம் வந்தது :))

நிகழ்ச்சி நிறைவாகும்போது, அதைத் தொகுத்து வழங்கிய சம்பத் லஷ்மி கூறினார்...

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...
ஊர் சொல்லி விட்டது... இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...


ஆவணப் படத்தின் சுட்டி: https://youtu.be/1CDvz9TUgy8

Thursday, November 29, 2018

பா. ராகவனின் யதி

திரு. பா. ராகவன் அவர்கள், தினமணி.காம்-இல் ‘யதி’ என்னும் பெருந் தொடரை எழுதியிருக்கிறார். அதற்கான எனது விமர்சனம் அவரது வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

அடேய் கிராதகா! உன் யதியைப் படிக்க, மூச்சுப் பயிற்சியெல்லாம் செய்ய வேண்டுமா?
இதயம் அதிகமாய்ப் படபடத்தது. சமயத்தில் சில துடிப்புகள் சில நொடிகளுக்கு நின்று மீண்டன. படித்து முடித்த போது புயல் தாண்டவமாடிக் கடந்த நிலமாய் என் மனம். நிசப்தத்தில் செவி. வானை வெறித்தபடி விழிகள். இன்னும் சில நாட்களுக்கு யதிலிருந்து மீள முடியாது என்று நினைக்கிறேன்.
இது வீட்டை விட்டு விலகி துறவு பூண்ட நான்கு சகோதரர்களின் கதை...

நன்றி பா. ராகவன்.

Wednesday, October 26, 2016

எம். எஸ். தோனி (சினிமா)


அபூர்வமாக சில படங்கள் மன நிறைவைத் தரும். எம். எஸ். தோனி அவ்வகைப் படம்.

வில்லனின்றி, வன்முறையின்றி, அபத்தக் காமெடியின்றி மூன்று மணி நேரம், ஒரு 20-20 கிரிக்கெட் மேட்சைப் போலவே செல்கிறது  தோனியின் வாழ்க்கைப் படம்.

மனிதன் ரசிக்கும் ஒரு விஷயம் சாயல்.

தந்தையின்/தாயின் ஜாடையிலேயே இருக்கிறது குழந்தை. அவரைப் போலவே இவன் செய்கிறான். இது மனிதனின் அன்றாடப் பேச்சு. அதற்குச் சிறந்த வடிவமாய் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். தோனியின் அச்சில் தன்னைக் கச்சிதமாய் வார்த்தெடுத்திருக்கிறார்.

அமைதியான முகபாவங்கள், இக்கட்டிலும் புன்னகைக்கும் விதம், நடை, தோரணை, தன்னம்பிக்கை, தலைமை, தோனியின் ட்ரேட்மார்க் ஷாட்டுக்கள், குறிப்பாக ஹெலிகாப்டர் ஷாட்... அனைத்தையும் அப்படியே பிரதிபலிக்கிறார்.

ஒரு தந்தையின் தவிப்பு/கண்டிப்பு, தாயின்/தமக்கையின் அரவணைப்பு,  நண்பர்களின் ஆதரவு, கோச்/அதிகாரியின் வழிகாட்டுதல்கள்... இத்தளத்தின் மீதுதான் தோனியெனும் பெருந்தூண் எழுகிறது.

இவர்களின் கோணத்திலும் கதை நகர்வதில், இவர்களின் உணர்ச்சிகள் பார்ப்பவரையும் பற்றி நெகிழ வைக்கிறது.

2011 பைனலில், மூன்று விக்கெட்டுகள் விழுந்து விட்ட நெருக்கடி நிலையில், துணிந்து முன் இறங்கி விளையாடி, இமாலய சிக்ஸருடன் கோப்பையை வென்றதே, தோனியின் வாழ்வில் சிகரம். இதை மையப்படுத்தியே திரைக்கதை சுழல்கிறது. அதில் சின்னச் சின்ன காட்சிகள் அழகாகக் கோர்க்கப் பட்டிருக்கிறது.

குளிர் இரவில் பிட்சிற்கு நீர் ஊற்ற தந்தை (அனுபம் கேர்) செல்வதை சிறுவன் தோனி பார்ப்பது, கோல்-கீப்பிங்கிலிருந்து விக்கெட் கீப்பிங்கிற்கு மாறும் தோனி பந்தைத் தட்டி விடுவது(!), முதல் மேட்சில் பேட்டிங் செய்ய இறங்கியதும் உயரமான கட்டிடத்தையும், மரத்தையும் பார்ப்பது, நண்பனும் அவன் காதலியும் கண்கள் கலந்த நிலையில் ஹெலிகாப்டர் ஷாட் அறிமுகமாவது, யுவராஜுடன் நேருக்கு நேர், இரு காதலிகளுடனான முதல் சந்திப்பு, திடீரென தோனியை நேரில் கண்டதும் திக்குமுக்காடும் சாக்‌ஷியின் தோழி, நிஜ மேட்சுகளில் நடிக தோனியின் முகம்...  இப்பட்டியல் நீளம். திரையில் ரசிப்பதே உத்தமம்.

பல காட்சிகள் மனதில் அழுத்தமாகப் பதிவதால், பிற்பாதியில் வரும் சில குறைகள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

பொதுவாக தன்னம்பிக்கையை விதைக்கும் படங்கள் இனிப்பைப் போன்றவை. நாவில் கரையும் வரைதான் இனிப்பின் சுவை. அதைப் போல, படம் பார்த்த நான்கு நாட்களுக்குள் கதா நாயகனின் பிம்பம் தந்த தன்னம்பிக்கை மறைந்துவிடும். காரணம் அது வெறும் நடிப்பு என்னும் யதார்த்தம்.

ஆனால் இது சாதித்த மனிதனின் கதை. இந்திய கிரிக்கெட்டை முதல் நிலைக்கு உயர்த்தியவனின் கதை. பல இக்கட்டுக்களை, சர்ச்சைகளை கலங்காமல் கடந்தவனின் கதை. இவனது  நிதானம் மிக அபூர்வம். தன் வாழ்க்கையை மாற்றக் கூடிய பயணத்திற்கான விமானத்தைத் தவற விட்ட நிலையிலும், முறுவலிக்கும் பாங்கே இவனை இந்நிலைக்கு உயர்த்தியது.

எவ்வயதினருக்கும் இப்படம் பிடிக்கும்.

கடைசியில் கண்களில் நீர் கோர்க்க நிற்கும் அனுபம் கேரின் பெருமிதத்தை, நம் தந்தைக்குச் சிறிதளவேனும் அளிக்க முடிந்தால் நாமும் தோனியே.

Wednesday, April 13, 2016

நம்ம சென்னையிலா இப்படி?!

சென்னை ஓப்பன் டென்னிஸ் நடந்த சமயம். செமி ஃபைனல் போட்டிகள். மாலை 5 மணி முதல்.

ஸ்டேடியத்தை நான் அடைந்தபோது மாலை மணி 4.45. ஆன்லைனில் டிக்கெட்டை வாங்கியிருந்தும் கவுண்டரில், அதற்கு ஈடான பேப்பர் டிக்கெட்டை வாங்காமல் நுழைய முடியாதாம். தெருவின் இரு முனை வரை க்யூ நீண்டிருந்தது. முதல் எரிச்சல்.

அங்கே மூன்று கவுண்ட்டர்கள் இருக்க, எது/எவை ஆன்லைன் டிக்கெட்டிற்கான கவுண்ட்டர் என சட்டென புரிபடவில்லை. நிற்பவரிடம் விசாரிக்க எல்லாருமே ஆங்கிலத்தில் பதிலளித்தார்கள். நான் தமிழில் கேட்டதை புரிந்து கொள்ளக் கூட முடியாமல் அவர்கள் தப்பாக பதிலளித்தது இரண்டாவது எரிச்சல்.

மணி 5.20. சரியாக 5 மணிக்கே போட்டி துவங்கிவிட்டதை அரங்கினுள்ளிருந்து கேட்ட சப்தங்கள் சொல்லின. என்னால் இன்னும் கவுண்ட்டரை நெருங்கக்கூட முடியவில்லை.

சென்னை புறநகர் ரயில்களில் கூட மொபைல் App மூலம் டிக்கெட் வாங்கி பயணிக்கும் வசதி வந்துவிட்ட நிலையில், இண்டர் நேஷனல் டென்னிஸ் போட்டிகளுக்கு ஆன்லைன் டிக்கெட்டின் ப்ரிண்ட் அவுட்டைக் கூட அனுமதிக்காதது மகா எரிச்சல்.

மணி 5.40. ஒரு புறம் எரிச்சல் நீள, மறு புறம் பிரமித்தேன்.

நிற்கும் மூன்று க்யூவிலும் தள்ளு முள்ளு இல்லை. யாரும் எவரையும் முந்த முயலவில்லை. டிக்கெட் வழங்கும் முறையை விமர்சித்தார்களே தவிர, எவரும் பொறுமை இழக்கவில்லை.

முதல் போட்டியில் 4-ம் தர வரிசை வீரர் வாவ்ரின்கா விளையாடுகிறார். அவரைக் காணவே அங்கு வந்தவர்கள் அதிகம். பெரும்பாலானவர்கள் கவுண்டரை அடைவதற்குள் அப்போட்டி முடிந்து விடுவதற்கான வாய்ப்பும் அதிகம். அதனால் அவர்களிடமிருந்து ப்ச்.. மொச்.. மட்டும் வெளிப்பட்டது. அவ்வளவுதான்.

கவுண்ட்டர் எனக்கு இன்னும் சில அடி தூரமிருக்க...

ஒரு இளம் தம்பதியினர் வந்தனர். எனக்கு முன் நிற்பவர் அவர்களுக்குப் பரிச்சயம். சில விசாரிப்புகள்.

முன்னவர்: என் கூட வந்திடுங்களேன். (நான் அவர்களை அனுமதிக்கும் எண்ணத்தில் இருக்க...இளம் தம்பதி என்ற காரணமெல்லாம் இல்லை!)

தம்பதி: இல்ல... பரவாயில்லை சார்.

முன்னவர்: ஏன்?

கணவன்: இவ்வளோ பேர் இருக்காங்க. நாங்க லைன்லியே வரோம்.

சொன்னபடி அவர்கள் பின் சென்றனர்.

அரங்கினுள்ளிருந்து ஒலி கேட்டது.

வாவ்.... ரின்கா...

Wednesday, October 28, 2015

பாலகுமாரனின் ஒரு காதல் நிவந்தம் - விமர்சனம்

தந்தையின் புத்தக அலமாரி.

ஒரு புத்தகத்தைத் தேடும் போது, கண்ணில் பட்டது பாலகுமாரனின் மாத நாவல் ‘ஒரு காதல் நிவந்தம்’. படித்ததில்லை. ஆனால் அது இராஜேந்திரனைப் பற்றியது எனத் தெரியும். அழகிய தலைப்பு சொல்லியது, இது இராஜேந்திரனுக்கும், அவனது அனுக்கி நக்கன் பரவைக்கும் உள்ள பிணைப்பு என்று. படிக்கும் ஆசை வர, உடன் தயக்கமும் ஒட்டிக் கொண்டது.

உடையார், கங்கை கொண்ட சோழன் தந்த பிம்பத்தை, உணர்ச்சிகளை இது கலைத்து விடுமோ? 12 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. சம்பவங்கள் மாறியிருக்கும். பாத்திரங்களின் பிம்பங்கள் கூட உருமாறியிருக்கும்.

நாவல் கடிகை ஞாபகத்திற்கு வந்தது. அதில் ஆதித்த கரிகாலனைக் கொன்ற ரவிதாஸன், பரமேஸ்வரனே கதா நாயகர்கள்.

இருப்பினும் மனம் உந்த, படித்தேன்.

ஆம், சம்பவங்கள் மாறியே இருந்தன. கங்கை வரை வென்ற பிறகும், கங்கை கொண்ட சோழபுரத்திற்குச் சுவடே இல்லை. இராஜராஜ சோழனின் அனுக்கி பஞ்சவன் மாதேவி இன்னமும் நலமுடன் இருக்கிறாள். கங்கைக்கு முன் சாளுக்கிய தேசத்தை நோக்கிய படையெடுப்பின் போதே, இராஜேந்திரனின் மகன்கள், சேர, பாண்டிய, ஈழ தேசங்களை ஆளத் தொடங்கியிருப்பார்கள். இங்கே இவர்கள் சிறுவராய்த் தெரிகிறார்கள். உடையாரில் தந்தையுடனான நீண்ட உரையாடலில் பலதும் உணர்ந்திடும் இராஜேந்திரன், இங்கே இன்னமும் பக்குவப்படவில்லை. நக்கன் பரவையின் அறிமுகமே இனிதான் நடக்கிறது. இப்படிச் சில.

ஆனாலும் பாதகமில்லை. கதையின் கரு அட்டகாசம். கடந்த விமர்சனத்தில் எழுதியிருந்தேன்.

இராஜேந்திரன் வென்ற தேசத்தவனாய் நினைக்கையில் குலை நடுங்குகிறது. கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ஜிம்பாப்வேயை அடித்து நொறுக்குவதைப் போலத்தான், பல இலட்சம் வீரர்களுடன் சென்று... மேலைச் சாளுக்கியம், தட்சிணலாடம், உத்திரலாடம்... பல தேசங்களைத் துவம்சம் செய்திருக்கிறான். 

யுத்ததின் வலியை, அதன் நாசம் பெண்களிடம் விதைக்கும் வேதனையை குந்தவை, பரவை மூலம் இராஜேந்திரனுக்கு உணர்த்த முயல்வதே களம்.

பலதும் அறிந்திருந்தும், ஒப்பற்ற நிர்வாகத் திறமையிருந்தும், வெற்றி மட்டுமே கண்டவனெனினும், அவன் செயல்களுக்கு வேறொரு கோணத்தில் பாதக முகமுண்டு என்பதை இராஜேந்திரனுக்கு மட்டுமல்ல, படிப்பவருக்கும் புரியவைக்கிறார் பாலகுமாரன். கூடவே சில பாடங்களும் நயமாகக் கிடைக்கின்றன.

மூன்று சோழ அரசர்களுக்கு முதல் அமைச்சராய், சேனாதிபதியாய் இருப்பவர், கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர். சபையில் தன் வருகைக்கு எழுந்திருக்க வேண்டாமே என இராஜேந்திரன் வேண்ட...

“ஒரு நாள் உமது மகன் ராஜாதிராஜன் அரியணை ஏறி சபை வரினும் நாம் எழுந்து நிற்போம். அரசனை அதிகாரி மதிக்கவில்லையெனில் அதிகாரியை குடி படை மதிக்காது. வளையாத மூங்கில் வில்லாகாது”

அதைப் போல தளிச்சேரிப் பெண் சரபை. “உண்பதும் உடுப்பதும் சோழர் சொத்து, எனக்கும் நன்றிக் கடன் உண்டல்லவா?” எனத் தாமாக அரச குடும்பச் சிக்கலுக்கு உதவ முன் வருகிறாள்.

ம்ம், பணிவும், மரியாதையும், நன்றிக் கடனும் இருப்பின் சாம்ராஜ்யமே சீராக இயங்கும். இவை நீர்ப்பின், ஒரு வீட்டின் இயக்கம் கூட ஸ்தம்பிக்கும்.

- எவன் மனதிற்குள் சஞ்சலமின்றி அமைதியோடு இருக்கிறானோ அவனே வீரன்

- ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி எதற்கெல்லாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது

- கோபத்தை விட கேடான விஷயம் எதுவுமில்லை

- தான் என்ற அகம்பாவம் அற்றவர், கற்றல் எளிது

- கூட்டமின்றி, கோலாகலமின்றி, சாமானியனாய் இருப்பது விடுதலையாய் இருக்கிறது

- வளர்ச்சியைச் சொல்வதே ஆன்றோர் புத்தி

இப்படி பல ஒற்றை வரிகள் நாவலில் பளிச்சிடுகின்றன. ஆசிரியரின் அனுமானங்களும் முறுவலைத் தருகின்றன.

மனைவிக்குப் பயந்து, அலுவலகத்தில் நடுநிசி வரை உழைக்கும் (நெட்டில் படம் பார்ப்பதுதான்) கணவர்கள் இன்று சகஜம்தானே. மனைவிகளின், சிற்றனைகளின் இம்சையைத் தவிர்க்கத்தான் இராஜேந்திரன் கங்கைவரை சென்று விட்டானாம் :)

பரவை, ‘அற்றைத் திங்கள், அவ்வெண்ணிலவில் யாம் எந்தையும் உடையோம்..’ என பாரி மகளிரின் கவிதையைச் சொல்லி, போரின் கொடுமையை விளக்க, படிக்கும் நமக்கும், எதற்கு இந்தச் சண்டை என்ற எண்ணம் வரத்தான் செய்கிறது.

இந்த நாவலில் ஒரே ஒரு பிழை. திருவாரூரில் இராஜராஜனும், அவன் சேனாதிபதி அருண்மொழியும் மாறு வேடத்தில், பரஞ்சோதி, நம்பி என்ற மாற்றுப் பெயர்களில் இருக்கிறார்கள். இது தனக்கு தெரியாது என்றே பரவை இராஜேந்திரனிடம் பழகுகிறாள். மன்னராய் வெளிப்படும் முந்தின தினமே அருண்மொழி என்ற பெயரை இருவருமே பயன்படுத்தி விட்டார்கள்!

திருவாரூரில் பெரும் வெள்ளம் ஏற்பட, கடைசி பகுதியை அற்புதமாய் முடித்திருக்கிறார் பாலகுமாரன். இது படித்து உணர வேண்டிய அனுபவம். செங்கல் தளியாய் இருக்கும், வீதி விடங்கர், தியாகேசர் கோவில் கற்றளியாய் மாற்றும் உபயம் இங்குதான் பரவையால் விதைக்கப்படுகிறது. முடிவில் அவள் இராஜேந்திரனிடம் சொல்லும் ஒரு வாக்கியம்...

‘நீங்கள் தூசு ஒட்டிக் கிடந்த மாணிக்கம். சற்று துடைத்தேன். மாணிக்கம் தானாய் பிரகாசிக்கிறது’

உடையார், கங்கை கொண்ட சோழன் பிரம்மாண்ட கதைகளுக்கு, இந்நாவல் ஒரு டீஸர்.

நன்றி ஐயா (பாலகுமாரன்).

Wednesday, August 5, 2015

குழந்தைக்குப் பெயர் வைப்பது எப்படி?

நண்பனின் வீடு. அவன் குழந்தைக்குப் பெயர் வைக்கும் வைபவம்.

‘நவநீத்’ என்று பெயர் சூட்டப்பட திகைத்தேன்.

நவநீதம் என்றால் (புது)வெண்ணெய். அதை விரும்பி உண்டதால், உண்டவனுக்கு ஏற்பட்ட காரணப் பெயர் நவநீத கிருஷ்ணன்.

அதை இப்படி சுருக்கிவிட்டதால் குழந்தையை ‘வெண்ண... வெண்ண...’ என்றல்லவா அழைப்போம்.

பெயர் ஸ்டைலாக, மாடர்னாக இருப்பதற்காகச் சுருக்கும் போது அதன் அர்த்தம் சிதைகிறது.

உதாரணங்கள்: நரேன், விஸ்வம்.

இந்திரன் என்றால் அரசன். தேவர்களின் அரசன் தேவேந்திரன். மனிதர்களின் அரசன் நரேந்திரன். (பிரதமரின் பெயரும் நரேந்திரர்தானே!)

விஸ்வம் என்றால் உலகம். அதன் அதிபதி விஸ்வநாதன். தமிழில் உலகநாதன்.

சுருக்கியதும் மனிதன் (நரேன்), உலகம் (விஸ்வம்) என்று பொருள் மாறி வருகிறதே தவிர, இதில் அழைப்பே தொனிக்கவில்லையே. (ஓ குழந்தைதான் அவர்களின் உலகம் என்பதால், அப்படி பெயர் வைக்கிறார்களோ!).

பெயர் வைப்பதன் பிரதான நோக்கமே அழைப்பதற்குத்தானே!

இறைவனின் பெயர்களைப் பாருங்கள்: சிவன், கணேசன், முருகன், ராமன். கண்ணன்... அழைக்கும் போது சிவா, கணேசா, முருகா, ராமா, கண்ணா...

கடைசி எழுத்தில் ‘ஆ’ என்ற நெடில் வருவதால்... அன்புக்காக, ஆசைக்காக, அவசரத்திற்காக, ஆபத்திற்காக... எந்தத் தொனியிலும் பெயர்களைக் கூவி அழைக்கலாம்.

உகரமும் சிறப்பு: விஷ்ணு. பெண்களுக்கு இகரம்: பார்வதி, லஷ்மி, சரஸ்வதி, அபிராமி, காயத்ரி. இகர, உகர ஒலியை எப்படி வேண்டுமானாலும் நீட்டலாம். அபிராமீமீமீ... என்று மனமுருகியும் அழைக்கலாம்.

ஸ்டைலாக ‘த்’-ல் முடித்தால் (நவநீத், அஸ்வத்) வேகமாக எழும் அழைப்பொலி கடைசி எழுத்தில் முழுங்கப்பட்டு நம்மிடமே நின்றுவிடும். பலர் திரும்பாமல் போவதற்கு, அழைப்பொலி காற்றில் பரவி அவர்களை எட்டாததும் ஒரு காரணம். (கண்டுக்காம போறவங்க வேற ரகம்!).

பெயரைச் சுருக்காமல் வைத்தாலும், இருபெயராக வரும் காரணப் பெயர்களில் வேறோரு சிக்கலும் இருக்கிறது. முருகனை, சிவ குமாரா என்று விளிப்பதை வைத்து, ஒருவனுக்கு சிவகுமார் என்று பெயரிட்டால், பெரும்பாலும் சிவா என்றே, முதல் பாதி பெயரால் அவனை அழைப்பார்கள். முருகனாக இருக்க வேண்டியவன் சிவனாகி விடுவான்! இறைவனை சிறுவனாக பாவிக்கையில் பாலமுருகா, பாலகிருஷ்ணா என்று அழைக்கிறோம். இதை பெயராகக் கொண்டவனை (அவன் பெரியவனான பிறகும்... எல்லோராலும்...) பாலா பாலா... பையா பையா...என்றே அழைக்கப்படுவான்.

அர்த்தம் பொதிந்த பெயர்களை சிதைய விடாதீர்.

திடீரென தமிழ்ப் பற்று பொங்கிட,  ஒரு நண்பன், தன் பெண் குழந்தைக்கு வண்டார்குழலி என்று பெயர் வைத்து விட்டான். பின்னாளில் பள்ளியில் மாணவர்களால் கேலிக்கு ஆளாகி, அவளுக்கு ஏற்படும் மன உளைச்சல்களைப் பற்றி யோசிக்க வேண்டாமா?

ஆக, பெயர் வைக்கும் அடிப்படை:

1) அழைப்பு தொனிக்க வேண்டும்
2) அர்த்தம் மாறாதிருக்க வேண்டும்
3) கடைசி எழுத்தொலி நீள வேண்டும்

செல்லப் பெயர்கள் அழைப்பவருக்குச் சந்தோஷம். நல்ல பெயர்கள் அழைக்கப்படுபவருக்குச் சந்தோஷம். இரண்டையும் தனித்தனியாக வைத்துக் கொள்ளுதல் இருவருக்கும் பரம சந்தோஷம்.

Thursday, July 30, 2015

இனி முளைக்கட்டும் அக்னிச் சிறகுகள்!












(திரு. அப்துல் கலாம், ஜனாதிபதியாகப் பதவி
ஏற்ற போது, அவருக்கு அனுப்பிய கவிதை)

ஓயாத கடலலைகள்,
தாளமிடும் கரையினில்,
சத்திய உள்ளமுடன்,
கருணை வெள்ளமுடன்,
நித்திய ஊக்கமுடன்,
இடையறா உழைப்புடன்,
பிறந்து - நீர்
இன்றமரும் பதவி,

முப்படைத் தளபதிகளும்,
முதல் மரியாதை செலுத்தும்,
மூத்த பதவி.

நாற்பது ஆண்டுகளாய்,
மெய் வடித்த சாதனைகளால்,
பாரத வானை,
கோள்கள் வலமிட வைத்து,
ராணுவத் தூணியில்,
ஏவுகணைகள் நிரப்பியபின்,
இன்று நீர்,
முதல் குடிமகனாவதில்,

படித்தவர்க்கு ஆனந்தம்!
பாமரர்க்கோ பேரானந்தம்!

பிரதி தினமும் நீரோதும்,
குரானின் ஒலிகளும்,
கீதையின் வரிகளும்,
மதங்கள், தவறி வகுத்திட்ட
எல்லைகளை இணைக்கட்டும்!

தன்னலமற்ற உம் சேவைக் கண்டு,
கட்சிகள் ஓரணி ஆகட்டும்!
உம் தாயக விசுவாசம் கண்டு,
ஆயுதமேந்திய கைகள்,
தவறுணர்ந்து பணியட்டும்!

இனி உம்
ஒவ்வொரு அசைவினிலும்,
மாணவர் விஞ்ஞானம் படிக்கட்டும்!
நீர் மீட்டும் வீணையின் இசையில்,
மெய்ஞானம் கற்கட்டும்!

இனி ஒவ்வொரு
இந்தியனுக்கும் முளைக்கட்டும்,
அக்னிச் சிறகுகள்.
மெய்ப்படட்டும் உம் இந்தியக் கனவு!

இனி நிகழட்டும்,
எங்கு காணினும் வளர்ச்சி!
எவரிடம் காணினும் மலர்ச்சி!
எங்கு சென்றிடினும் செழிப்பு!
எவரிடம் பேசிடினும் நட்பு!

இனி பாரதம்,
மக்களுக்கு ஒரு நல்லரசாகட்டும்!
உலகினில் பெரும் வல்லரசாகட்டும்!

-- காஞ்சி ரகுராம்

Friday, July 10, 2015

பொன்னியின் செல்வன் நாடகம் - விமர்சனம்

‘நீங்க நெஜ வந்தியத் தேவரா’ - என் மகன் கேட்டான்.

‘இல்லை தம்பி, வந்தியத் தேவரா நடிக்கிறேன்’ - அவர் சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

இடம்: மியூசிக் அகாடமி. SS International, Magic Lantern Theatre-இன் பொன்னியின் செல்வன் நாடகம்.


இன்று ஒரு திரைப்படம் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் சென்றாலே... நீளமா இருக்கு, ஸ்லோவா போகுது என்ற எண்ணங்கள் ஊன்றிவிட்ட நிலையில்...

மூன்று மணி நேரம் கடந்தும், சுவாரஸ்யக் குறைவின்றி நாடகம் தொடர்ந்தது. ஆனால் இரவு 9 மணியைக் கடந்து விட்டதால், மகனை கேன்டீனுக்கு அழைத்து வர, அங்கே வந்தியத்தேவன்.

‘எனக்கு டிவெண்டி மினிட்ஸ் பிரேக், அந்த கேப்ல நானும் சாப்பிட வந்துட்டேன்’ என்னிடம் சொன்னவர், மகனிடம் தொடர்ந்தார். ‘சீக்கிரம் சாப்ட்டு உள்ள போ தம்பி, யானையெல்லாம் வரும்’

அவர் ஒரு நாடகக் கலைஞர் என்ற எண்ணமே எனக்கு வரவில்லை. அசல் வல்லவராயன் வந்தியத்தேவராகவே காட்சி தந்தார்.

அறுபது வருடங்களுக்கு முன் கல்கி எழுதிய அமர காவியம். ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன், அருண்மொழி, குந்தவை... போன்ற சரித்திரப் பாத்திரங்களை, படிப்பவர் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருத வைத்தது, கல்கியின் உயிரோட்ட வரிகள் என்றால், அவர்களின் பிம்பங்களை மனதில் பதிய வைத்தவை மணியமின் அற்புத ஓவியங்கள். அதன் வடிவங்களை ஒட்டியே நாடகப் பாத்திரங்களுக்கு ஒப்பனை செய்தது, Magic Lantern Theatre-இன் முதல் மாஸ்டர் ஸ்ரோக்.

ஓவியங்களுக்கு ஏற்றவாறு முகம் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கடும் பயிற்சி தந்து, உடற்கட்டையும் வளர்த்து ஒப்பனை செய்தது பலருக்கு கச்சிதமாய்ப் பொருந்துகிறது. குறிப்பாக, குந்தவையின் மேல் நோக்கும் கொண்டை, ஆழ்வார்க்கடியானின் முன் குடுமி, அருண்மொழியின் தலைப்பாகை, வந்தியத்தேவனின் அலைபாயும் கேசம், அரும்பு/குறும்பு மீசை... இன்னும் பலப்பல.

முக்கிய பாத்திரங்களின் அறிமுகக் காட்சிகள் அற்புதம். பின்னணி இசையும் பிரமாதம். தடியைச் சுழற்றியபடி ஆழ்வார்க்கடியான் நுழைந்த போது அரங்கம் கலகலத்தது. வந்தியத்தேவனும், அருண்மொழியும் தோன்றிய போது புது உற்சாகம் வந்தது. அதற்கு மாறாக உக்கிரமாய் நுழைந்த கரிகாலனின் தோற்றமும், வேகமும் அதற்கேற்ற பின்னணி இசையும், ஒரு மிரட்சியையும், திகைப்பையும், பெருமிதத்தையும் தந்தன.

நாவலை பலமுறை ஊன்றிப் படித்து, அந்தந்த பாத்திரங்களாகவே கலைஞர்கள் தங்களை சுவீகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அருண்மொழிக்கே அதிக பொறுப்பு. நாவலைப் படிக்காத பாமரனின் உள்ளங்களிலும் வாழும் மாமன்னன் ராஜராஜ சோழனின் இளமைப் பருவமது. அதற்குரிய கண்ணியம், கம்பீரம், வீரம், தீட்சண்யத்தை கண்ணசைவில், முக பாவத்தில், உடல் மொழியில், ராஜ நடையில் வெளிப்படுத்த வேண்டும். அந்தக் கலைஞர் பிரமாதப்படுத்தி விட்டார்.

கோட்டை வாயிலில் யானைப் பாகனாய் முக்காடிட்டு, வானதியை அழைத்து வரும் காட்சி... கோட்டையை முற்றுகையிட்டிருக்கும் பெரிய வேளாளர் வானதியை வெட்ட வாளை ஓங்க, அதை தன் வாளால் தடுத்து வீழ்த்தியபின், முக்காட்டைக் களைந்து தான் அருண்மொழியென வெளிப்படுத்திய சமயம்... எதிர்பாராத விதமாய் தலைப்பாகை கழன்று முதுகில் தொங்கியது. சற்றும் அசராமல், தீ விழிகளுடன், கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகளை பேசியபடியே, பாகையை எடுத்து, படு கம்பீரமாய்ப் பொருத்தி நின்ற ராஜதோரணையே அந்தக் கலைஞரின் அர்ப்பணிப்பை பறை சாற்றும்.

ஓகே கண்மணி திரைப்படக் காட்சிகள் கூட தூண்டாத காதலுணர்வை, குந்தவை வந்தியத்தேவனின் சந்திப்பு கிளறுகிறது. கண்கள் கலந்த நொடியே அவர்கள் ஸ்தம்பித்து நிற்பதும், வந்தியத்தேவன் இலங்கைக்குக் கிளம்பும் போது, குந்தவையின் பின்னே காதருகே மென்மையாய் ‘வருகிறேன்’ என்றதும் அவள் உடல் சிலிர்ப்பதும், அவர் பத்தடி சென்றபின் திரும்பி உடலுருக, முகமலர, கண்ணில் காதல் பெருக சில கணம் நின்று பார்த்தபின் விரைந்த போது, கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது.

நாற்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். ஐந்து பாக நாவலை 4 மணி நேரத்திற்கு அழகாகச் சுருக்கி நாடகமாக்கியிருக்கிறார்கள். வெகு காலத்திற்குப் பிறகு, நல்ல தமிழ் உச்சரிப்பைக் கேட்டது காதிற்கு இனிமை.

சிலம்பு வீச்சும், சிறு சிறு வாட்போர்களும், இரு கைகளாலும் வாட்களை கரகரவென சுழற்றும் காட்சிகளும் நன்று. இடையில் வாளுறையைத் தரிக்காமல், ஒரு வளையம் போன்றதைக் கட்டியிருக்கிறார்கள். இதனால் அதிலிருந்து வாளை உருவுவதில் இருக்கும் கம்பீரம், மீண்டும் அந்த வளையத்தை சரியாகப் பிடித்து வாளைச் சொருகும்போது இல்லை. இவ்விடத்தை சற்று கவனிக்கலாம்.

தோட்டா தரணியின் பிரதான செட்டும், அதிலேயே செய்யும் சிறு மாற்றங்களும் அழகு. ஆனால் சிறு வயதில் மனோகரின் புராண நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். காட்சிகளுக்கு ஏற்ப, சபை, வீதி, காடு என் முழுமையாய் மாறும் செட்கள் இதில் இல்லாதது சிறு குறையே.

பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். நந்தினியே ஊமைப் பெண்ணாகவும் வருகிறார். தேவராளனே பார்த்திபேந்திர பல்லவன். ஆனால் ஆழ்வார்க்கடியானே ஜோதிடராய் வருவது ஒட்டவில்லை. இதைத் தவிர்க்கலாம்.

பெரிய பழுவேட்டரையர். கதைகேற்றபடியே வயோதிகம். ஆனால் கனைப்பும், கர்ஜனையும் பிரமாதம். ‘பராசக்தீ... சோழ தேசத்தைக் காப்பாற்று’ எனக் கூவி, உடல் துடிக்க உயிர்விடும் நடிப்பில் அரங்கே சிலிர்த்தது. (சோழர்குல தெய்வமான நிசும்பசூதனியைத்தான் பராசக்தீ என்பது போன்ற பெயரில் அழைத்தார்)

முதலை, யானை வேட தந்திரங்கள் குழந்தைகளை குஷி படுத்துகின்றன. சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரையும் கட்டிப் போட்ட, இந்த நாடகமும் குழுவும் மேன்மேலும் வளர வேண்டும்.

இவர்களையும், பிற பாத்திரங்களையும் குறிப்பாக நந்தினியைப் பற்றியும் பலவாறு சிறப்பித்துச் சொல்லலாம். ஆனால் ஒரே வரியில் முடிக்கிறேன். வெளியே வரும் போது, என் ஐந்து வயது மகன் கேட்கிறான்...

‘இன்னோரு வாட்டி பாக்கலாமாப்பா’

சுட்டிகள்:

Wednesday, December 24, 2014

வயல்வெளிப் பறவை

ஃபேஸ்புக் பாக்கலாமா? ம்ஹூம் முடியாது.

டிவிட்டர்? நெட்-டே இல்லடா.

போன்? அட உன்கிட்ட எந்த டிஜிட்டல் டிவைஸும் இல்லடா. மனம் சொல்லிச் சிரித்தது.

என்ன பண்ணலாம்? கட்டிலைப் போட்டுப் படு.

ஆஹா நல்லது.

பம்ப் செட் ரூமிற்குச் சென்று, கயிற்றுக் கட்டிலைத் தூக்கி வந்து, வரப்பின் மேல், குட்டைத் தென்னை மரம் தன் ஓலைக் கிளைகளை விரித்து, நிழல் பரப்பி விசிறிய இடத்தில் போட்டு, ஹாயாகப் படுத்தேன்.

நண்பகல் வெயில் தெரியா வண்ணம் காற்று பலமாக வீசியதில், உழுத களைப்பில் மெல்ல கண் சொக்கியது.

என் உறவினர் கிராமம். (இவ்விடத்தை ஏற்கனவே இரு பதிவுகளில் வர்ணித்து விட்டேன்)

அன்று அவருக்கு வேறு வேலை இருந்ததால், நான் உழுகிறேன் என்று வயலிலிறங்கி விட்டேன். உழவு மிஷினை இயக்க, வயலைச் சீராக உழ, குறிப்பாக வரப்பு ஓரங்களில் மிஷினைத் திரும்பும் முறையைச் சொல்லிக் கொடுத்தபின் அவர் வீட்டிற்குச் சென்று விட்டார். அடுத்த வயலில் அன்றுதான் நாற்று நட்டிருக்கிறார்கள். சற்று பிசகினால், மிஷின் வரப்பை உடைத்துச் சென்று, பயிரைப் பாழ் செய்து விடும். வம்பு வளரும். கவனம் என்றும் சொல்லிச் சென்றார்.

மிஷினின் கியர், கார் கியரைப் போல அத்தனை சுலபமாக விழவில்லை. நான் அதை பலம் கொண்டு இழுக்க, டங்-கென்று கியர் விழ, மிஷின் திடுமெனக் கிளம்பி என்னையும் இழுத்துக் கொண்டு ஓடியது. தட்டுத் தடுமாறி, சேற்று நீரை, தையா தையாவென மிதித்து ஓடி, திமிறும் காளையை அடக்குவது போல, சீறும் மிஷினை (சும்மா ஒரு வர்ணனை சார்) வரப்பின் விளிம்பில் பிரயத்தனப்பட்டுத் திருப்பி ஆசுவாசப் படுவதற்குள், முதுகுத் தண்டு விண்ணென்று வலித்தது.

முதல் 15 நிமிடத்திற்கு மிஷினை, தாறுமாறாகத்தான் ஓட்டினேன். மண் இளகத் தொடங்கியதும் லாவகமானது. அடுத்த அரை மணி நேரத்தில் சீராக உழத் தொடங்கியதும், மிஷின் டயரிலிருந்து படபடவென வயற்சேறு என் மீது அடிக்கத் தொடங்க, அதன் மண் வாசத்திலும் குளிர்ச்சியிலும் உடல் மகிழ்ந்தது.

மண் மீதிருக்கும் உழவனின் காதல் புரிந்தது.

அடி மண்ணை மிஷின் கிளரத் தொடங்கியதும் திகைத்தேன். எங்கிருந்தோ சடசடவென பறந்து வந்த வளையம் பறவைகள், விர்விர்ரென கீழிறங்கி எதையோ கொத்திக் கொண்டு மீண்டும் பறந்தன.

ஓ, மண் புழுக்கள்.

அவ்வளவு புழுக்களா என் காலிடையே நெளிகின்றன?! உற்றுப் பார்த்ததில் ஒன்று கூட என் கண்ணில் படவில்லை. ஆனால் பல அடி உயரத்திலேயே பறவைகளின் கண்களுக்கு, வாழை இலையில் ஜவ்வரிசிப் பாயசமாய் புழுக்கள் தெரிந்திருக்கின்றன. இது படைத்தவனின் விந்தையே.

நான் நகர நகர, பின்னே சிறகு படபடக்க அவை இறங்கி எழும் காட்சியை விவரிக்க வார்த்தைகள்... இருக்கு சார். இதை அப்படியே ஒரு செல்ஃபி எடுத்தால், பல ஹீரோக்களின் இண்ட்ரோ காட்சியை மிஞ்சிடலாம் சார்!

நண்பகல் வரை, இடைவெளியின்றி, இடைஞ்சலுமின்றி உழுதேன். வேலையையே துவங்க விடாமல் யாரும் Work plan கேட்கவில்லை. துவங்கும் போதே Status கேட்டு நச்சரிக்கவும் இல்லை. Inbox-ஐ திறப்பதற்குள், மெயிலாய்க் கடுகி வந்து, மெயில் அனுப்பியிருக்கிறேன் படி, என்று யாரும் அணத்தவும் தொணத்தவும் இல்லை. மனித தலைகளே தென்படவில்லை. இரண்டு செல்போன் டவர்களைத் தவிர மருத நிலத்தின் பசுமை மட்டுமே கண்ணிற்கு விருந்தளித்தன.

இதையெல்லாம் அசை போட்டபடி, கட்டிலில் நான் படுத்திருக்க, தங்கமணி வந்து எழுப்பினார். கம்பக் கூழும் வடு மாங்காவும் கொண்டு வந்திருந்தார். அவருடன் பேசியபடி... ம்ம் இது என்ன, பாரதிராஜா படக் காட்சியா? இதை மேலும் விவரிப்பதாய் இல்லை!

உண்டபின், அவர் வீடு திரும்பியபின் நிதானமாக சுற்றிக் கவனித்தேன்.

வரப்புகளின் சந்திப்பில் பூத்த பூக்களின் மேல் பட்டாம்பூச்சி. க்ளக்.. க்ளக்... அருகே பெருங்கிணற்றில், தளும்பும் நீரில், தாவும் தவளை. கிணற்றிலிருந்து, மோட்டார் ரூமிற்கு பைப் செல்லும் பொந்தின் வழியே இரண்டு பூனைக் குட்டிகள் எட்டிப் பார்த்தன. அதன் கண்களில், என்னைக் கண்டதில் ஒரு மிரட்சி.

ம்ம். அதை அப்புறம் ரசிக்கலாம். சரியான நேரத்திற்கு உழுது முடிக்காவிட்டால், நீர் இறைக்க, மோட்டார் இயக்க, மின்சாரம் இருக்காது.

அந்தி வரை உழுதேன். பின் மோட்டாரை இயக்கினேன். வாய் அகண்ட பைப்பின் வழியே பெரும் தூணாய் விழுந்த நீர், வரப்பில் ஓடி, கழனிகளில் கலக்கத் தொடங்கியது.

உடல் மீது அப்பியிருந்த சேற்றை, நீரில் நனைத்து, தேய்த்துக் குளித்தேன். நீரின் வெண்மையால், சேற்றின் வன்மையால், மறுநொடியே என் பால்ய பருவ வண்ணத்தில் உடல் மின்னத் தொடங்கியது. (மெட்ராஸ் தண்ணில குளிச்சே கருத்துட்டேன் சார்.)

உற்சாகம் பொங்க, கிணற்றினுள் டைவ் அடித்து, சற்று நேரம் நீந்தி, மேலேறி வந்து, நீர் விழும் இடத்தில், பள்ளத்தில் கால் நீட்டிப் படுத்தேன்.

ம்ம். தினம் ஸ்கூல் வேனைப் பிடிக்க (பையனுக்குச் சார்), பின் ஆபீஸ் பஸ்ஸைப் பிடிக்க, அரை பக்கெட் நீருக்கு மேல் குளிக்க நேரமில்லை; இன்றோ குளித்து முடிக்கவே மனமில்லை.

உழுத உடலை, நீர் நீவி விட்டது. களைத்த கால்களுக்கு ரம்பை பிடித்து விடுவது போல் இதமாக சுகமாக இருந்தது. (தங்கமணி திட்டமாட்டாங்கனு நம்பி எழுதியிருக்கிறேன்!).

தொலைவில், மலை முகடுகளின் மேல், சிவந்தவன் மெல்ல அஸ்தமித்தான்.

மூன்றாண்டுகளுக்குப் பின்...

அதே இடத்தில் நிற்கிறேன். கண்ணீருடன்.

நகரமயமாக்கலுக்கு இந்த கிராமமும் பலியானது.

நான் நீந்திய கிணறு மூடப்பட்டிருக்க, கண்ணுக்கெட்டிய தூரம் வரை, மருத நிலம் காய்ந்திருக்க, ஏரிக் கரை வரையிலும், பிளாட் கற்கள் நடப்பட்டிருந்தன. கிணற்றின் மீதும் ஒரு பிளாட்.

நான் உழுத நிலத்திற்கு வெகு அருகே ரோட் ரோலர் நிற்க, அதனருகே தார் கலக்கும் இயந்திரம், கரும் புகையைக் கக்கிக் கொண்டிருந்தது.

இக்கிராமம் தொடர்புடைய பதிவுகள்:

Wednesday, December 17, 2014

இராஜராஜ சோழனின் அனுக்கி

பஞ்சவன் மாதேவி.

இராஜராஜ சோழனின் மனைவியருள் ஒருவர். இவர் அரச குலமல்ல. தேவரடியார். ஆனால்...

தனக்குப் பிள்ளை பிறந்து, அவன் இராஜேந்திரனுக்கு எந்த விதத்திலும் அரியணைப் போட்டியைத் தந்து விடக்கூடாது எனக் கருதி, மருத்துவரின் உதவியுடன் தன்னை மலடாக்கிக் கொண்டவள்.

இராஜராஜனுக்கு அனைத்து விதத்திலும் அனுசரணையாக (அனுக்கியாக)... தஞ்சைக் கோவில் கட்டும் பெரும் பணியிலும், அரசு நிர்வாகத்திலும், ஏன்... யுத்தக் களத்திலும் துணை நின்றவள். இதனால், இராஜராஜனின் பிற மனைவியர் முதல், மறவர், மந்திரிகள், மக்கள்... யாவரும் அவளைப் போற்றினர்.

இராஜேந்திரன், இவளை தன்னைப் பெற்ற அன்னையாகவே நினைத்து வணங்கினான். இதனால், இவள் இறையடி சேர்ந்த பின், இவள் அஸ்தியை வைத்து, அதன் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, பள்ளிப்படை கோவில் எழுப்பினான். (இடம் பட்டீஸ்வரம்).

இதையெல்லாம் உடையார் நாவலில் விரிவாய், நெஞ்சம் நெகிழும் விதமாய்ச் சொல்லியிருந்தார் அதன் ஆசிரியர் பாலகுமாரன். சிதிலமடைந்திருந்த இக்கோவில் இப்போது புனரமைக்கப் பட்டுவிட்டது என்பதையும் நாவலின் இறுதியில் சொல்லியிருந்தார்.

இக்கோவிலைக் காணும் ஆவலுடன் சென்றேன். குடந்தையிலிருந்த ஒரு அலுவலால், பட்டீஸ்வரத்தை அடையவே மதியம் ஒரு மணியாகிவிட்டது.

கோவில் நிச்சயம் சாத்தப்பட்டிருக்கும் எனத் தெரிந்தும் ஒரு நம்பிக்கையுடன் வழி விசாரித்தபடி நடந்தேன். பலருக்கு இக்கோவில் பற்றித் தெரியவில்லை (ராமசாமி கோவில் என்று பெயர் மாறிவிட்டிருந்ததும் ஒரு காரணம்). கோபுரமும் தென்படவில்லை.

‘கஷ்டம் வந்தாதான் கோவிலுக்கு வருவியா” என்று ஒரு குடிமகன் வேறு சண்டைக்கு வந்து விட்டார்! அவரைச் சமாளித்துக் கடந்து, ஒரு குறுகலான தெருவின் முனையில், ஒரு வீட்டில் விசாரிக்க, என்னை ஒரு கணம் உற்றுப் பார்த்த அவ்வீட்டுப் பெரியவர்...

‘இதோ இந்தப் பக்கம்தான், கொஞ்சம் இருங்க’

‘ஏம்மா...’ இரண்டு வீடு தள்ளி, துணி துவைத்துக் கொண்டிருந்த சிறுமியை அழைத்து, ‘இவருக்கு, கோவில் சாவியை வாங்கிக் குடும்மா’ என்று சொல்ல அச்சிறுமி அவள் வீட்டினுள் சென்றாள்.

‘நீங்களே கோவிலைத் திறந்து பார்த்துட்டு, பூட்டி சாவியை அந்த வீட்டிலேயே குடுத்துடுங்க’

சிறுமியிடமிருந்து சாவியைப் பெற்று, அப்பெரியவருக்கு நன்றி சொல்லி, அவர் காட்டிய திசையில் ஒரு நிமிடம் நடக்க அங்கே...

பசுமையான, குளுமையான தோப்பின் மத்தியில், அமைதியாய், அழகாய், கம்பீரமாய் கோவில். கோபுர வாயிலின் பூட்டைத் திறந்த போது...

அடடா... ‘இக் கோவிலுக்குச் சென்று ஒரு தீபமாவது ஏற்றிவிட்டு வாருங்கள்’ என்று பாலகுமாரன் எழுதியிருந்தாரே. அதற்கு எதையுமே நான் கொண்டு வரவில்லையே. வருந்தினேன். அருகில் கடைகளும் இல்லை. உள்ளே நுழைந்த பின்னும் வருத்தம் தொடர்ந்தது.

முன் மண்டபத்தில், ஒரு பேனரில் ‘பஞ்சவன் மாதேவீஸ்வரம்’ என்று தலைப்பிட்டு, அவளது சிறப்புகள் பட்டியலிடப்பட்டிருந்தது. பெருமிதமாய்ப் படித்துக் கொண்டே வாயில் பக்கம் கண் திரும்ப, பிரமித்தேன்.

ஒரு முதியவர் நுழைந்தார். அவர் கையில்... எண்ணெய் பாட்டில், அகண்ட அகல், சாண் நீளத் திரி.

என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். நேரே கருவறை சென்றார். லிங்கத்தினடியே அகலை வைத்து, அது நிரம்பும் வரை எண்ணை விட்டு, திரியிட்டு, தீபம் ஏற்றி, பின் கற்பூரமும் காட்டினார்.

அவரிடம் ‘சாவியை உங்க கிட்ட குடுக்கனுமா? ஒரு பத்து நிமிடம் இருக்க முடியுமா?’

‘இல்லை தம்பி, நான் தீபம் ஏற்றவே வந்தேன். நீங்க கோவிலை நிதானமாகப் பார்த்தபின் வாங்கிய வீட்டிலேயே சாவியைக் குடுத்துடுங்க’. மீண்டும் புன்னகைத்துச் சென்று விட்டார்.

உணர்ச்சிகள் பலவாறு கிளர்ந்தன.

அம்மா, பஞ்சவன் மாதேவி, இன்னமும் இங்கே நீ உறைகிறாயா?

சாவி தந்ததும், தீபமேற்ற வந்ததும் தற்செயலா? இல்லை உன் செயலா?

எனக்கென நீ செய்ததாய் எண்ணுவதில்தான் எத்தனை ஆனந்தம்.

உன் பாதம் பணிகிறேன்.

உன்னைப் போன்ற மனைவிகள் பெருக வேண்டும். இராஜராஜன்கள் உருவாக வேண்டும்.

அருளம்மா.

தொடர்புடைய பதிவுகள்:

1) பாலகுமாரனின் உடையார், கங்கை கொண்ட சோழன் - விமர்சனம்
2) இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-ஆவது ஆண்டு விழா

Wednesday, December 10, 2014

பாலகுமாரனின் உடையார், கங்கை கொண்ட சோழன் - விமர்சனம்.


மனம் ஆட்டம் காணத் தொடங்கியது.

‘இராஜாதிராஜா, இனி சகலமும் உன் பொறுப்பு... எனக்கு விடை கொடு’ - என தன் மூத்த மகனிடம் மாமன்னன் இராஜேந்திரன் கூறி, சபையை வணங்கி விடை பெறும் போது, இனி இக்கதை அவரது இறுதி காலத்தை நோக்கிப் பயணிக்கும் என்பதால், அதைப் படிக்கும் திராணி இருக்குமா என எண்ணி மனம் கலங்கியது.

உடையார் நாவலில், இராஜராஜ சோழன் இறைவனடி சேர்ந்தார் என்பதை எழுத முடியாமல் கதறி அழுத ஆசிரியர் பாலகுமாரனின் உணர்ச்சிகள், படிக்கும் போது என்னையும் அழ வைத்தன. படிப்பது பேருந்தில் என்ற போதும், பிறர் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்தும், வழியும் கண்ணீரை என்னால் துடைக்கக் கூட முடியவில்லை.

மறுபடியும் அந்நிலைக்குப் பயந்தே, அதன் தொடர்ச்சியான ‘கங்கை கொண்ட சோழன்’ நாவலின் இறுதி அத்தியாயங்களைத் தனிமையில் படித்தேன்.

ஆனால், ஆஹா, தென்னகத்தின் இரு ஒப்பற்ற மாமன்னர்களின் வாழ்வு மட்டுமல்ல மரணமும் கூட இணையற்றதாய் நிகழ்ந்திருக்கிறது.

சேரனை அடக்கி, பாண்டியனை ஒடுக்கி, மேலைச் சாளுக்கியனை விரட்டி, கீழைச் சாளுக்கியனுக்குப் பெண் கொடுத்து பந்தமேற்படுத்தி, சோழ மக்களைப் பாதுகாத்த திருப்தியுடன், சிறை பிடித்த பகை வீரர்களையும் பாங்குடன் நடத்தி, தக்க சன்மானமும் தந்து, கோவில் பணியில் பங்கெடுக்க வைத்து... பிரமிக்க வைக்கும் கலையாய், உள்ளம் சிவனிடம் சரணடையும் வகையாய், பிரகதீஸ்வரர் கோவில் எழுப்பிவிட்ட பேரானந்தத்துடன்... உடையார்குடியில் ஒரு யோகியைப் போல, உடலை உயிர் நீங்குவதை, உணர்ந்து கொண்டே சிவபாதம் சேர்ந்திருக்கிறான் இராஜராஜன் (சிவபாத சேகரன்).

தனயன் இராஜேந்திரனும் அவ்வண்ணமே.

கங்கைவரை வென்று, அந்நதி நீராலேயே, தான் எழுப்பிய கோவிலுக்குக் குடமுழுக்குச் செய்து, சோழனின் பொருளாதாரத்தை, அனைத்து வருணத்தினரின் தரத்தை பலமடங்கு உயர்த்தி, கடல் கடந்து, கீழைத் தேசங்களையெல்லாம் வென்று, அங்கெல்லாம் தமிழரின் ஆளுமையை, ஆதிக்கத்தை, நாகரிகத்தைப் பரப்பிவிட்டு, தன் வயோதிகத்தில், அரசியலிலிருந்து முற்றிலும் விலகி, காஞ்சி அருகே, பிரம்மதேசம் என்னும் கிராமத்தில், பாணர்களின் மத்தியில் பாடல்கள் கேட்டபடி சில ஆண்டுளை இனிமையுடன் கழித்து, பெரும் மன நிறைவுடன், விண்ணுலகு சென்றான் இராஜேந்திரன்.

தமிழரின் இன்றைய நாகரிகத்திற்கு மையம் சோழ மண்டலம். அதன் சரித்திரத்தை, அம்மக்களின் வாழ்க்கையை, வீரத்தை, இவ்விரு மன்னர்களின் கால கட்டத்தை, இரு பெரும் நாவலாய், மொத்தம் பத்து பாகமாய் விவரித்த பாலகுமாரன் அவர்களை வணங்குகிறேன்.

கதாநாயக நாயகிகளை, அரச குடும்பத்தை மையப்படுத்தியே நகரும் சரித்திரக் கதைகளிலிருந்து வேறுபட்டு, பாத்திரங்களை, மக்களை மையப்படுத்தியே கதை நகருகிறது. அடர்த்தியின்றி, சரளமாக, பிரவாகமாகச் செல்லும் நடை. ஆனால் ஆங்காங்கே நின்று, படித்ததை மனம் அலசுகிறது.

இல்லத்தில் ஒரு குடும்பமாய், பணியில் ஒரு குழுவாய் இயங்கவே இன்று நாம் திணறுகிறோம். நேரமில்லை என்று தள்ளிப் போடும் செயல்கள்தான் எத்தனை எத்தனை! ஆனால் தேவரடியார்கள், வேளாளர்கள், வணிகர்கள், கம்மாளர்கள், தச்சர்கள், சிற்பிகள், பஞ்சமர்கள், அந்தணர்கள் என்று மக்கள் பலவாய், தேசம் ஒன்றாய் இயங்கி வளர்வதைக் கண்டுத் திகைக்கிறேன்.

ஏன் இத்தனை பிரிவுகள். ஆசிரியரின் விளக்கத்தில் பலதும் புரிகிறது.

இன்று மழை வருமா? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா? முடிவெடுக்க முடியாமல் திணறுகிறோம். செவ்வாய் கிரகத்தின் பாதையையும், பயணத்தையும் கணக்கிட்டு, இன்ன நேரத்தில் இன்ன திசையில் மங்கள்யான் ஏவப்பட்டால், அது செவ்வாயை சரியாக அடையும் என்று கணினிகளின் துணையுடன் கணக்கிடுகிறோம்.

எந்தப் பருவத்தில் விதைக்க வேண்டும், எந்த நாளில் படை / மரக்கலம் கிளம்ப வேண்டும், எப்போது பகை நாட்டைத் தாக்க வேண்டும் என்பதையெல்லாம் கணிக்க, நட்சத்திரங்களின் நிலைகளை, வானிலைகளை கவனித்து, கையில் வெறும் நூலைத் தொங்கவிட்டு அது அசைவதை வைத்து காற்றின் திசையை, வேகத்தை, அதில் படியும் ஈரத்தை வைத்து மழையின் நிலையை எல்லாம் கணக்கிட வேண்டி... அதற்கு மனம் கவனம் சிதறாமல் ஒருமுகப் பட்டு இருக்கவே வேறெந்தப் பணியிலும் ஈடுபடாமல் ஒரு சாரர் செயல்பட்டனர்.

பந்தை எதிர் கொள்ளும் பேட்ஸ்மெனின் தேவையை பூர்த்தி செய்யவே, ட்வெல்த்-மேன் தேவைப்படுகிறான். பகையை எதிர் கொள்ளும் மறவனின் ஆயுதங்களைச் செய்ய, செப்பனிட, அவன் குதிரைகளுக்கு லாடம் அடிக்க கம்மாளர்கள், குதிரைகளைப் பராமரிக்க பஞ்சமர்கள் இயங்கினார்கள்.

மறவர்களுக்குள் தான் எத்தனைப் பிரிவுகள். வெறுங்கையாலேயே தாக்கும் கைகோளப்படை, முதுகு வாள் படை, மரணம் நிச்சயம் எனத் தெரிந்தே யுத்ததின் முன்னனிக்குச் செல்லும், முனை திரியார், மாமுனை திரியார்... பெரும் பட்டியலே நீள்கிறது. இவர்களை வழி நடத்த உபதளபதி, தளபதி, மாராயர்... மாதண்ட நாயகர் வரை பல நிலையில் தலைவர்கள். ஆசிரியரின் விவரணங்கள் வாய் பிளக்க வைக்கின்றன.

சரித்திரக் கதையின் யுத்த தந்திரங்கள் பெரும்பாலும் அதன் ஆசிரியரின் கற்பனைகளே.

ஆனால் பாலகுமாரன் போர்ப் பகுதிகளைச் சுருக்கி, போருக்கான ஆயத்தங்களை விரிவாக்கியிருக்கிறார். பல இலட்சம் வீரர்கள் புறப்படும் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. காடுவெட்டிகள் முன் சென்று மரங்களை வெட்ட, காடு சேறு சரிவுகளில் தச்சர்கள் பலகைகளுடன் பாதையமைக்க, சமைப்பவர்கள் தானியங்களைச் சேகரித்து உணவிட, மறவரில் முன்னனியினர் தாக்க, கைப்பற்றியதை பின்னனியினர் காக்க... ம்ஹூம், இதை மேலும் விளக்க, மீண்டும் நாவலை நான் புரட்ட வேண்டும்.

போர் விவரங்கள் மட்டுமல்ல...

சிற்பங்கள் செதுக்குவது, ஐம்பொன் சிலைகள் வடிப்பது, கோவில், மரக்கலம் கட்டுவது, கடலில் நீரோட்டம் பிடிப்பது... என்சைக்ளோபீடியா போல், ஆனால் புள்ளி விவரங்களாகத் தந்து விடாமல், கதையின் ஓட்டத்திலேயே பெரும் தகவல்களை ஆசிரியர் தந்த விதம் அற்புதம்.

பாத்திரப் படைப்புகள் வாழ்க்கைப் பாடமே நடத்துகின்றன. பெண் பாத்திரங்கள் படிப்பவரை நிச்சயம் ஆட்டம் காண வைக்கும். அவரவர் வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கதற வைக்கும். பெண்ணிற்குப் பிரதான இலக்கணம் இராஜராஜரின் அனுக்கி பஞ்சவன் மாதேவி. எதிர்மறை அவர் மகள் குந்தவை. இவளால் நிர்க்கதியில் உயிர்விடும் கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தனைப் போன்றவர் இன்றும் ஏராளம்.

காலம் போடும் கணக்குகள் திகைக்க வைக்கின்றன. 10+ மனைவிகளிருந்தும் இராஜராஜனுக்கு ஒரே மகன். இரு மகள்களும் தடம்மாற, இராஜேந்திரனோ மூர்க்கத் தனத்துடன் வளர்கிறான். பின் பக்குவப்படும் அவனுக்கு 7 மகன்கள். அவர்கள் கச்சிதமாக வளர்கிறார்கள். பரந்த சாம்ராஜ்யப் பகுதிகளை  திட்டம் போட்டு ஒற்றுமையாய் நிர்வகிக்கிறார்கள். சிறிது காலமே வாழும் கடைசி மகன், சோழ கேரளாந்தகன் (கேரளத்தை நிர்வகித்தவன்) உள்ளத்தை பெரிதும் கொள்ளை கொள்கிறான். மீண்டும் சரித்திரத்தின் விசித்திரம். இவர்கள் யாவருக்குமே பிள்ளையில்லை. (கதையின் காலத்திற்குப் பின் விமலாதித்தனின் பேரன் அநபாயன் குலோத்துங்கன் சோழ அரியணை ஏறுவான்.)

பல சம்பவங்கள், கதையைப் படித்து முடித்த பின்பும், பல நாட்களுக்குப் மனதில் பசுமையாகத் தொடர்கிறது.

உதாரணம். இருட்டில், சலசலக்கும் காவிரி நீரோட்டதின் மேல், ஆசனமிட்டு இராஜராஜனும் இராஜேந்திரனும் தனிமையில் உரையாடுவது அனாயாசமாக, 80 பக்கங்களைக் கடக்கிறது. அதுவரை தந்தையுடன் பலதில் முரண்பட்ட இராஜேந்திரன் மெல்ல மெல்ல உணரத் தொடங்குவதைப் படிக்கும் எந்த தந்தையின் உதடும் முறுவலிக்கும்.

இதைப் போலவே சின்னச்சின்ன காட்சிகளும்.

கோவில் கட்டுமிடத்தில் கட்டிலில் அமர்ந்து விவாதிக்கும் இராஜராஜன் அப்படியே கண்ணயர்ந்துவிட, அடுத்த நொடியே ஒரு தாதி வெண்பட்டைப் போர்த்த, இருவர் விசிறத் தொடங்க, மெய்க்காவல் படை தம் குதிரைகளின் கனைப்பு அரசரின் உறக்கத்தைக் கலைத்து விடக்கூடாது என்று அவற்றை சற்று தொலைவிற்கு அனுப்புவதெல்லாம் ஹைகூ.

உடையார் நாவலின் கரு, தஞ்சைக் கோவிலை எழுப்புதல். கங்கை கொண்ட சோழன் நாவலின் கரு கங்கை மற்றும் கடாரத்தின் மீது படையெடுப்பு. இரண்டுமே இரு மன்னரின் தனிப்பட்ட சிந்தனைகள். செயல்படுத்த இரண்டிற்கும் எந்த முன்மாதிரியும் கிடையாது. பலர் ஆதரவும் கிடையாது. அதை அவர்கள் சாதித்தபோது சோழனின், தமிழனின் வாழ்வு பலமடங்கு உயர்ந்து விட்டது.

இந்நோக்கங்களை அடைவதற்குள்தான் எத்தனை எத்தனை சோதனைகள். பிரச்னைகள். ஒரு பெண்ணோ, வீரனோ எந்த முன்யோசனையும் இன்றி செய்யும் ஒரு சிறு தவறு, ஒன்றன்பின் ஒன்றாய் பல்கிப்பெருகி, பெரும் கலவரமாகி, நோக்கத்திற்கே ஊறு விளைவிப்பதும், அதை இரு அரசர்களும் கடந்து சென்று, இலக்கை அடைவதை, ஆசிரியர் பாடமாய்ச் சொன்னது, நம் வாழ்க்கையில் எந்த முயற்சிக்கும் துணை வரும்.

இரு மன்னர்களை நினைத்து நினைத்து நெஞ்சு நிமிர்கிறது. பழையாறை, தஞ்சை, அமண்குடி, உடையார்குடி, மீன்சுருட்டி போன்ற பெயர்களைக் கேட்கும் போதே அது குளிர்கிறது. அவர்கள் வாழ்ந்த ஊர்களுக்கு, எழுப்பிய ஆலயங்களுக்குச் செல்லும் போது, பாலகுமாரன் விவரித்த காட்சிகளை கண்முன் நிறுத்தி, அக்காலத்திற்கே சென்று ஆனந்த சுகத்தில் லயிக்கிறது.

ஆனால் அதே கணம்...

இராஜேந்திரன் வென்ற தேசத்தவனாய் நினைக்கையில் குலை நடுங்குகிறது. கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ஜிம்பாப்வேயை அடித்து நொறுக்குவதைப் போலத்தான், பல இலட்சம் வீரர்களுடன் சென்று... மேலைச் சாளுக்கியம், தட்சிணலாடம், உத்திரலாடம், ரோஹணம், இலங்கா சோகம், கடாரம்... இன்னும் பல தேசங்களைத் துவம்சம் செய்திருக்கிறான்.

அடுத்த பத்து இருபது ஆண்டுகளுக்கு எழ முடியாமல் நகரங்களைத் தரைமட்டமாக்கி, கடுகை விதைத்து விளைநிலங்களையும் மலடாக்கியிருக்கிறான். பாத்திரங்கள், பெண்டிர், செல்வம், புத்தர் பொற்சிலைகள், ஏன் கோவிலிலிருந்து காளி சிலைகளையும் பெயர்த்துக் கொண்டு வந்திருக்கிறான். மெல்ல அந்த தேசம் துளிர்க்கின்ற போது அவன் மகன் இராஜாதிராஜன் மீண்டும் படையெடுத்து அழித்து வந்திருக்கிறான். யுத்தத்தின் கோரத்தை, தோற்குமிடத்தின் அவலத்தை, வென்ற தேசமே ஆயினும் மரணமடைந்த வீரர்களின் குடும்ப நிலையையும், விதவைகள் பெருகுவதையும் வேறு எந்த சரித்திரக் கதையிலும் இல்லாத அளவிற்கு விவரித்திருக்கிறார் பாலகுமாரன்.

இந்தப் பாவங்களினாலோ என்னவோ... முன்னூறு வருடங்களுக்குப் பின், பாண்டியனால், மற்றொரு தமிழனால், அற்புதமாக நிர்மாணிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம், ஒரு தூண்கூட நிற்க விடாமல், அழிக்கப் பட்டிருக்கிறது. தமிழன் மட்டும் ஒற்றுமையாய் இருந்திருந்தால், உலகையே ஆண்டிருப்பான். என்ன செய்ய, இது விதி, இது விதி, இது விதி என்று ஆசிரியர் முடித்த போது, அது தந்த வலி மறையவே எனக்கு சில நாட்கள் பிடித்தது.

ம்ம். இது பத்து பாகம் கொண்ட நெடுங்கதை. குறைகளும் உண்டு. பல சின்னச் சின்ன சம்பவங்கள், தொடர்ச்சியின்றி அப்படியே நின்று விடுகின்றன. உதா: நரேந்திரன் இராஜேந்திரனுக்கு எழுதும் ஓலை, மேலைச் சாளுக்கியரிடம் சிக்க, அவர்கள் அவர்களுடைய மன்னனுக்கு எழுதியது போல் மாற்றி, வேண்டுமென்றே சோழ ஒற்றர்களிடம் சிக்க விடுவது. பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிய இடம் இது. ஆனால் இது தொடரவே இல்லை. கால இடைவெளிகளும் குழப்புகின்றன. இராஜேந்திரனின் மனைவியின் பெயரும் பஞ்சவன்மாதேவி என்று வருவது சற்றே குழப்புகிறது. சொற்பிழைகளும் உண்டு: மூன்று மரக்கலம் (மரக்கால்) நெல். சின்னச் சின்னதாய் இது போன்ற பிழைகள், கதையை லயித்துப் படிக்கும் போது நெருடுகின்றன.

பாலகுமாரன் உயிரைப் பணயம் வைத்து எழுதிய கதை. மருத்துவர் நம்பிக்கையை இழந்த நிலையிலும், மீண்டும் எழுத வேண்டுமே என்ற எண்ண வலிமையினாலேயே மீண்டு படைத்த கதை. எழுத முடியாமல், வாயால் சொல்லி, ஒலிப்பதிவு செய்யப்பட்டு, அவரது உதவியாளரால் எழுத்தாக்கப்பட்ட கதை. இதனால் ஏற்பட்ட குறைகள் களையப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

பாலகுமாரன், வரலாற்றைச் சொல்லி, நம் பண்பாட்டைக் காட்டி, பற்பல சாதனைகளை, நெறிமுறைகளை விளக்கி, மனதிற்குப் பற்பல உணர்ச்சிகளைத் தந்து, அதைப் பக்குவப் படுத்தி புதிய தேடலுக்கும் வித்திட்டுவிட்டார்.

நன்றி ஐயா.

தொடர்புடைய பதிவு:

Thursday, July 31, 2014

இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-ஆவது ஆண்டு விழா

மாமன்னன் இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-ஆவது ஆண்டு விழா கங்கை கொண்ட சோழபுரத்தில்,  ஜூலை 25-ஆம் தேதி நிறைவாக நடந்தது. இம்மன்னன் தன் தந்தை இராஜராஜனைப் போல், இன்றைய தலைமுறை மக்களின் மனதில் அரியாசனமிட்டு அமர, இவ்விழா விதை விதைத்திருக்கிறது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல், இராஜராஜனை அருண்மொழி வர்மனாய், பல மக்களிடம் அவர்கள் குடும்பத்தில் ஒருவராய்ச் சொந்தமாக்கிவிட, அது போன்ற ஒரு பந்தம், தந்தையை மிஞ்சிய தனயன் இராஜேந்திரனுக்கு ஏனோ கிடைக்கவில்லை.

கல்கி, இராஜராஜன் இளவரசனாக இருக்கும் போதே கதையை முடித்துவிட, அங்கிருந்து அவன் மாமன்னனாகி, சிறந்த ஆட்சி தந்து, இம்மண் உள்ளளவும் தமிழரின் திறனை, நாகரிகத்தைப் பறைசாற்ற பெருங்கோவில் எழுப்பியதை, பாலகுமாரன் ஆறு பாக உடையார் நாவலில் அற்புதமாக விவரித்திருந்தார்.

தன் எண்ணங்களை, உணர்வுகளை, நினைவுகளை சோழ சரித்திரத்தில் சஞ்சரிக்கவிட்டு எழுதிய பெரும் பணியை, மேலும் தவமாக்கி, கர்மமாக்கி, அதன் வலிமையாலேயே தன் உயிரையும் மீட்டு, நான்கு பாகமாய் “கங்கை கொண்ட சோழன்” நாவலைப் படைக்க, இராஜேந்திரனின் கீர்த்தியின் மேல் இன்று புது வெளிச்சம் விழுந்துள்ளது.

இவ்விரு படைப்புகளும் என் சிந்தனைகளைப் புரட்டிப் போட்டன. இவன் தலைநகர் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு, பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்லும் ஆவல் எனக்கு அதிகரிக்க...

அவ்விடத்தில் வசிக்கும் ராஜாராம் கோமகன் என்பவர், இராஜேந்திரன் அரியணை ஏறிய 1000-ஆம் ஆண்டை, விழாவாகக் கொண்டாடுகிறார்... அனைவரும் வாருங்கள் என பாலகுமாரன் நாளிதழில், வார இதழில், தொலைக்காட்சியில் அழைக்க...

ஜூலை 25-ஆம் தேதி, கங்கை கொண்ட சோழபுரத்தில், சோழ அரண்மனை அகழாய்வு செய்யப்பட்ட, மாளிகை மேட்டை, நான் சரியாக மாலை 4-மணிக்கு அடைய, வாத்திய ஒலிகளுடன் விழா துவங்கியது.

பாலகுமாரன் மற்றும் இராஜேந்திரனைப் பற்றி எழுதிய, ஆராய்ச்சி செய்த குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற அறிஞர்களுக்கெல்லாம், மரியாதை செய்து, மலர்க் கிரீடம் அணிவித்து, அவர்களை ரதம் போன்ற வண்டியில் அமர்த்தி, யானைகள் முன் செல்ல, இராஜேந்திரன் கட்டிய கோவிலுக்கு (இதுவும் பிரகதீஸ்வரர் கோவில்தான்) அழைத்துச் சென்றனர்.

அனைவரும் அகன்ற பின், அவ்விடத்தில் காற்று மட்டும் துணையிருக்க, அகழாய்ந்த பள்ளத்தில், அரண்மனைச் சுவர்களின் அடித்தளத்தின் மேல் இருந்த, ஓரடி சதுர கல்லின் மேல் அமர்ந்தேன். மூடிய கண்முன் சோழனின் கலம் ஓடிய காலம் விரிந்தது.

ஒரு மனிதனின் சொல்லுக்கு ஒன்பது லட்சம் வீரர்கள் அசைந்திருக்கிறார்கள்.

கீழைத் தேசங்களையும் உள்ளடக்கி, பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தை, பிரமிக்க வைக்கும் நிர்வாகத்தை, பொருளாதார விருத்தியை, நாகரிக மேன்மையை, அனைத்து தரப்பு மக்களும் இணைந்து உயர்ந்த நிலையை... இதோ இந்த இடத்திலிருந்து நிகழ்த்தியிருக்கிறான் இராஜேந்திரன்.

இவன் வம்சம் மேலும் தொடர்ந்து 280+ ஆண்டுகளுக்கு கோலோச்சியிருக்கிறது. இச் சாதனைகள் எல்லாம் நமக்கு பெரும் பாடங்கள்.

எந்த வளர்ச்சியும், விருத்தியும், விஸ்தரிப்பும் ஒரு நாள் ஒடுங்கும். பிரம்மாண்ட கோட்டை கொத்தளங்களும், ராஜ வீதிகளும், மாட மாளிகைகளெல்லாம் மண் மேடாகி, ஒரு சில சுவடுகள் மட்டும், இன்று இங்கு எஞ்சியிருப்பதும் நமக்கு பாடமே.

ஊர்வலம் கோயிலை அடைந்த சமயத்தில் அதனுடன் இணைந்தேன். பெரும் கூட்டம் கூடியிருந்தது. ஆயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டன.

விழா மேடையில் நாட்டியாஞ்சலிக்குப் பின் அறிஞர்கள் பேசினார்கள். முனைவர் பொற்கோ தொடங்கிட, பின் பாலகுமாரன் தொடர்ந்தார். ‘இராஜேந்திரனைப் பற்றிப் பேசும் முன் இப்படி ஒரு அற்புத விழாவை ஒருங்கிணைந்து முனைந்து நடந்திய இராஜாராம் கோமகனைப் பற்றி நாலு வார்த்தையாவது பேச வேண்டாமா? எனக் கேட்டு அவரைச் சிறப்பித்துச் சொல்ல அதை மேடை ஓரத்தில், சிறு புன்னகையுடன், தன்னடக்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் கோமகன்.

எந்த நேரத்தில் எந்தத் தகவலைக் கேட்டாலும் அள்ளிக் கொடுத்த குடவாயில் பாலசுப்ரமணியன், முனைவர் இராஜேந்திரன்... இவர்களின் உதவியால்தான் என்னால் நாவல்களைப் படைக்க முடிந்தது என அவர்களுக்குத் தன் நன்றியைத் தெரிவித்தார்.

உங்கள் பிள்ளைகளை ஊட்டி, ஏற்காட்டிற்கு அழைத்துச் செல்வது போல, தஞ்சைக்கும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கும் அழைத்து வாருங்கள். இக் கோவில்களின் மேன்மைகளை அவர்களுக்குச் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுங்கள் எனக் கேட்டுக் கொண்டு பேச்சை முடித்தார்.

பின் தொடர்ந்த முனைவர் இராஜேந்திரன் (ஆணையர், வேளாண் துறை) மன்னனைப் பற்றிய பல அரிய தகவல்களைத் தொகுத்துப் பேசினார். வெட்டனும், நட்டனும், கட்டனும்... இம்மூன்றையும் சிறப்பாகச் செய்தவன் இராஜேந்திரன் என்று நயமாகச் சொன்னார். அதாவது, குளங்கள் வெட்டனும், வெற்றிக் கொடி நட்டனும், கோவில் கட்டனும். இவன் மட்டும் கிழக்கே செல்லாமல், மேற்கே தன் படைகளைத் திருப்பியிருந்தால்... கஜினி முகமது முறியடிக்கப்பட்டிருப்பான். ஆப்கானின் ஊடுருவல்கள் தடுக்கப்பட்டிருக்கும். இந்தியாவின் சரித்திரம் மாறியிருக்கும் என தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார். இருப்பினும் கிழக்கே தமிழர்கள் பரந்ததற்கு, மலேசியாவில் தை பூசத்திற்கு தேசிய விடுமுறை விடுவதற்கெல்லாம் இவனே காரணம் என்றார்.

மற்றவரும் தொடர்ந்து பேச விழா நடந்தது. ஒவ்வொருவரின் பேச்சையும், கலையாமல், ஆவலாகக் கேட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு மகிழ்ந்தேன். பெரும்பாலும் சுற்றுப்புற மக்கள். கோவிலுக்கு வெளியே வெகுவாய் நீண்டிருந்த கார்களின் வரிசை பலரின் வருகையையும் சொல்லியது.

குடும்பமாக வந்திருந்த கூட்டத்தினரிடம் இருந்த மலர்ச்சி என்னையும் பற்றிக் கொண்டது. எந்த அவசரமும் இன்றி, தன் வீட்டு விழா போல், தன்னை அலங்கரித்துப் பங்கெடுத்து, தீபமேற்றி, அமைதியாய் தாமே வரிசையில் நின்று, உள்ளே இறையை தரிசித்து, விழா மேடைமுன் குழுமியதை நான் பார்த்தது, அங்கு பரந்திருந்த பசும் புல் தரையைவிட எனக்கு இதமாக இருந்தது.

மன்னா, இராஜேந்திரா உன் ஆன்மா இன்னமும் இங்கு உலவுவதை உணர்கிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் இங்கே மகிழ்ச்சியைத் தழைக்க வைக்கிறாய். மக்களை உன் பெயரால் ஒருங்கிணைக்கிறாய். குழுவாய்ச் செயல்பட்டு மேம்படவும் வழி நடத்துகிறாய். வணங்குகிறேன். உன் கீர்த்தி ஓங்குக.

இரவு கும்பகோணத்தில் தங்கினேன். இம்மண்ணின் மக்களுக்கு, விழாவின் நாயகர்களுக்கு, குறிப்பாக கோமகனுக்கு மானசீகமாய் நன்றி சொல்லி மன நிறைவுடன் படுத்தேன்.

மோசமான உடல் நிலையிலும் தன் உயிரைப் பயணம் வைத்து, மருத்துவர் துணையுடன் கங்கைவரை பயணம் செய்து, சோழன் சென்ற பாதைகளை கவனித்து, ஆயிரமாண்டிற்கு முந்தைய சோழ சாம்ராஜ்யத்தை நமக்கு எழுத்து மூலம் மீட்டுக் காட்டிய எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் நாவல் காட்சிகள் என்னைத் தாலாட்டி உறங்க வைத்தன.

Wednesday, March 26, 2014

சென்னையில் எச்சரிக்கை!

ஆஹா, வானில் கதிரவன் இன்னும் ஜொலிக்குதே! மனம் வேறேதோ கிரகத்தில் இருப்பதாய் நினைத்துக் குதிக்குதே.

பின்னே என்ன சார்? இந்த ஐ.டி கம்பெனி மேஸ்-ஸிற்குள்ளே (Maze) காலையில் நுழைந்து விட்டால், வேளை மாற்றம் புரியாமல் சீட்டிலேயே சாப்பிட்டு, மவுஸை இயக்கியே கை சோர்ந்த பின் (ஃபேஸ்-புக்கையே பார்த்தாலும் லைக் பண்ணணுமே சார்) வெளிவரும் போது, சூரியக் கணவனோடு சண்டை போட்டு ஒன் எய்ட்டி டிகிரி முகம் திருப்பியிருப்பாள் பூமி. அப்படியிருக்க இன்று நாலு மணிக்கே வீட்டிற்குக் கிளம்பினால் (கண்ணு போடாதீங்க சார்) மனம் குதிக்காதா?

சாலையில் கானல்நீர் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது. திணறடிக்கும் நச்சுப் புகை வர, இன்னும் இரு மணி நேரம் இருப்பதால், காற்று சுத்தமாய், சுதந்திரமாய், சந்தோஷமாய் உலாவிக் கொண்டிருந்தது.

சன்னமாக விசிலடித்தபடி, ஒரு பாட்டை முணுமுணுத்தபடி, ஆபீஸ் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன்.

ஒரு கை விரல் எண்ணிக்கையில் மட்டுமே சிலர் பஸ்ஸிற்காகக் காத்திருந்தார்கள்.

என்னே பாக்கியம்!! ஆனந்திக்கும்போதே, தோளருகே யாரோ நகர, சுரீர்ரென உள்ளுணர்வு எச்சரிக்கை செய்ய, சட்டென ஓரடி நகர்ந்து திரும்பினேன்.

என் சட்டை பாக்கெட்டை எட்டிப் பார்த்து நகர்ந்த அவன், என்னைப் பார்த்து பகபகவென படு கேவலமாகச் சிரித்தான்.

ஜிம் பாடியை இறுக்கியபடி பழைய டி-சர்ட், ஜீன்ஸ். பரட்டைத் தலை. அவன் தோற்றம் அபாய மணி அடித்தது.

சில அடி தூரத்தில், ஒரு நிழல் நகர, திரும்பினால், அங்கேயும் ஒருவன் இதே போல் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.

என்னமோ நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த, பிற பயணிகள், பேருந்து நிறுத்தத்தை விட்டு நகர, நான் தனித்து விடப்பட்டேன்.

படு வேகமாய் மனசில் எண்ணங்கள் ஓடத் தொடங்கின.

ஒருவனைச் சமாளிக்கவே என்னிடம் பலமில்லை. ஓடித் தப்பிப்பது சுலபம். ஆனால் எதற்காக என்னை குறி வைக்கிறார்கள்?

ஒரு வேளை, ஆபீஸ் வளாகத்தினுள் இருக்கும் ஏ.டி.எம்-இல் செக்கை டிராப் செய்ய நான் சென்று வந்ததை, பெருமளவு பணம் எடுத்ததாக நினைத்து அதைக் களவாட வருகிறார்களோ?

ம்ஹூம். இவ்விடம் வரும் வரை யாரும் என்னை ஃபாலோ செய்யவில்லை.

ஒருவன் என் சட்டை பாக்கெட்டையே வெறித்துப் பார்த்தான். அடுத்தவன் என் ஷூவைப் பார்த்து,  தன் முகத்தை  ஙே-வென வைத்துக் கொண்டு  பகபகவெனச் சிரித்தான்.

இருவரும் என்னை நோக்கி வர, ஓடத் தயாரானேன்.

இரு இரு... மனம் கட்டளைகளை ட்வீட்டுக்களாய் வீசியது.

இது உன் ஏரியா.

(அதாவது சுற்றுப்புறம் உனக்குப் பரிச்சயம். இண்டு இடுக்குகளில் புகுந்து ஓடி விடலாம்.)

800-மீட்டர் ரன்னிங் ரேஸில் கலந்து கொண்டு நீ பாய்ந்து ஓடிய பள்ளி நாட்களை நினைத்துப் பார்.

நீ கடைசியாகத்தான் வந்தாய். உன் ஓட்டம் தண்டம்தான். ஆனால் இந்த ஜிம்காரர்களை விட நீ  ஜம்மென்று ஓடலாம்.

ஜாக்கிச்சானை, துரோணராய், மானசீக குருவாய் பாவித்து, ஹாய் ஊய் என்று கொஞ்ச காலம் கராத்தேவெல்லாம் கற்றாயே. அவர்கள் அடித்தால் இரண்டு அடிகளைத் தடுக்கலாம். அவ்வளவுதான். திருப்பி அடிப்பதெல்லாம் கீ-போர்ட் தட்டும் விரல் முஷ்டிகளால் முடியாது.

தப்பிப்பது முக்கியம். ஆனால் அவர்களின் நோக்கத்தை அறிவது அதைவிட முக்கியம்.

பதட்டப் படாதே. குறைந்தபட்சம் பதட்டத்தை வெளிக் காட்டாதே. ஆபத்து இன்னும் நெருங்கவில்லை. அசராதது போல் நடி.

பிளாட்ஃபார்மிலிருக்கும் கைப்பிடியில், இரு கைகளையும் பின்புறமாய் ஊன்றி சாய்ந்து நில். வெளிப் பார்வைக்கு நீ அலட்சியமாக இருப்பதாகத் தெரியும்.

ஆனால் கைகளை அழுத்தி ஜம்ப் செய்தால், முதல் தாவலிலேயே ஆறடி தாண்டி ஓடத் தொடங்கலாம்.

(மனக் கட்டளைகளை மெனக்கெட்டுச் செய்யத் தொடங்கினேன்)

இருவரும் கிட்டதட்ட நெருங்கி விட்டார்கள்.

சீக்கிரம் கண்களைச் சுழற்றிக் கவனி. மேலும் ஆட்கள் இருக்கலாம்.

பெல்ட்டை இறுக்கிக் கொண்டே, மெல்ல உடலைத் திருப்பியபடி, நான்முகனாய் திசைகளைப் பார்த்தேன்.

வலப்பக்கம்... சற்றுத் தொலைவில்... அங்கே... டாடா-சுமோ... அதனுள் மேலும் இரண்டு தலைகள் தென்பட...

அவர்கள் கையில் ஏதோ கருப்பாய், உருளையாய், சற்று நீளமாய்...

ஐயோ ஆபத்து வந்தே விட்டது ஓடு...

பாய முனைந்த கால்கள், அப்படியே சடன்-பிரேக் அடித்து நிற்க, இதழ் முறுவலிக்க, முகத்தில் மந்தகாசம் பரவியது.

அஹ்ஹஹ்ஹஹ்ஹா... வாய்விட்டுச் சிரித்தபடி, நெருங்கி விட்ட இருவரையும், இரு கைகளால் பிடித்து, அப்படியே டாடா-சுமோவை நோக்கி அவர்களைத் திருப்பி, கைகளை உயர்த்தி தம்ஸ்-அப் காட்டினேன்.

சற்றே அசட்டுச் சிரிப்புடன், என் கைகளைக் குலுக்கி, ஒரே குரலில் சொன்னார்கள்... தேங்க்யூ சார்.

Pogo சானலில், சோட்டா-பீமிற்கு முன் கொடிகட்டிப் பறந்த Just For Laugh-ஐ போல் எதையோ ஒரு லோக்கல் தமிழ் சானல், Candid Camera ப்ரோக்ராமுக்காக​ எடுத்துக் கொண்டிருந்தது!


Wednesday, March 5, 2014

என். சொக்கனின் ‘மொஸாட்’

மொஸாட். பெயரைக் கேட்ட கணமே ஒரு திரில்லைத் தரும் இஸ்ரேலிய உளவுத் துறை.

தன்னைச் சுற்றி எந்தச் சுவருமின்றி, தரையில் எந்தச் சுகமுமின்றி, எந்நேரமும் உயிர் குடிக்கப் பாயும் விலங்கை எதிர்ப்பார்த்தே துயிலும் காட்டு மனிதனின் உணர்வுகளே மொஸாட்டிற்கு அடிப்படை.

சின்னஞ்சிறு இஸ்ரேல் நாட்டை, விட்டமாய் வளைத்திருக்கும் பகை நாடுகளிடமிருந்து தற்காக்கவும், சதியை மோப்பம் பிடிக்கவும், தானே சதியை முறியடிப்பதோ அல்லது தாக்குதலுக்கு தன்னாட்டு ராணுவத்திற்குத் திட்டமிட்டுக் கொடுப்பதோ மொஸாட்டின் பிரதான வேலைகள்.

மொஸாட் விதைந்து வளர்ந்ததை, செயல்பட்டதை, சாதித்ததை... எளிமையாய், அழகாய், கோர்வையாய், கதை சொல்லியாய் ‘மொஸாட்’ புத்தகத்தில் விளக்குகிறார் ஆசிரியர் என். சொக்கன்.

72-ல் ஜெர்மனியின் மியூனிக் நகரில், ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும், இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் படுகொலை செய்யப்படும் பரபரப்புடன் புத்தகத்தைத் துவங்குகிறார். கொதித்தெழுந்த இஸ்ரேலியப் பிரதமர், இதற்கு காரணமானவர்களை வேட்டையாட முடிவெடுக்க, மொஸாட் அறிமுகம்.

படுகொலையை நிகழ்த்திய பாலஸ்தீன தீவிரவாதிகளை லிஸ்ட் எடுத்து போட்டுத் தள்ளுகிறது மொஸாட்.

இதென்ன பிரமாதம் என்கிறீர்களா? சொக்கனும் நம்மை இப்படிக் கேட்க வைத்து, இத்தாலி, பிரான்ஸ், ஏன் பாலஸ்தீனர்களின் கோட்டையான லெபனான் ஆகிய நாடுகளில் மொஸாட் எப்படி வேட்டையாடியது என்பதை, புத்தகத்தின் முதல் அத்தியாயங்களில், ஒன்-டே மேட்ச்சின் முதல் பவர்-பிளேயைப் போல விறுவிறுவெனச் சொல்கிறார்.

முதல் சம்பவத்தின் வேட்டை முடிந்தபோது, உலகில் எந்த மூலையிலும் யூதனுக்கு ஒரு பிரச்சினை என்றால் மொஸாட் பாய்வதைச் சொன்ன சொக்கனின் அடுத்த ஜம்ப் -  அடால்ப் ஐக்மென்.

ஹிட்லர் தலைமையில் யூதர்களை இலட்சக் கணக்கில், கர்ண கொடூரமாய்க் கொன்று குவித்த தளபதி. இவரையும் அர்ஜெண்டினாவில் தேடிக் கண்டுபிடித்து போட்டுத் தள்ளுகிறது மொஸாட்.

இப்போது மொஸாட்டின் நதிமூலத்தைக் காட்ட வருகிறார் சொக்கன். அரேபியர்களின் தேசமான பாலஸ்தீனத்தில் மைனாரிட்டியான யூதர்களின் பாதுகாப்பின்மையே மொஸாட்டிற்குப் பிள்ளையார் சுழி.

இந்தக் காலக் கட்டம், இஸ்ரேல் உருவானதற்கு முன்பா, பின்பா என்று வாசகனுக்கு குழப்பம் வருகிறது.

அத்தியாயம் 7. யூதர்களை ஹிட்லரின் நாஜிப் படைகள் கொன்று குவித்த இனப் படுகொலை. அப்போது யூதர்களுக்குத் தனி தேசம் எதுவும் இல்லை.

இந்த ஒரு வரி, 11-ஆம் (நதிமூல) அத்தியாயம் படிக்கும்போது நினைவில் இல்லாவிட்டால், அதுவும் இனப் படுகொலையின் கால கட்டத்தை, வாசகன் அனுமானிக்காவிட்டால், குழப்பம் மிஞ்சும். எப்போதும் இணைப்புகளைச் சரியாக முடிச்சிடும் சொக்கன் இங்கே சற்றே அசந்து விட்டார்.

புத்தகத்தின் பிற்பாதியை படுவேகமாக நகர்த்துகிறார் சொக்கன். மிக், 200 டன் யுரேனியம், போர்ப் படகுகள் ஆகியவற்றை ஈராக், பெல்ஜீயம், பிரான்ஸ் நாடுகளிடமிருந்து மொஸாட் கடத்தும் ’அட்றா சக்க..’ சம்பவங்கள். எகிப்து, ஈராக் மீது விமானத் தாக்குதல்கள். இவற்றைப் படிக்கும் போது மொஸாட்டின் மீது பிரமிப்பும், மரியாதையும் வருகிறது.

உடனே மொஸாட் பல்பு வாங்கிய சம்பவங்களையும் புன்னகைக்கும் விதமாய் சொக்கன் தருகிறார்.

மொஸாட்டின் உளவாளிகளாகட்டும், அல்லது அவ்வமைப்பிற்கோ, யூதர்களுக்கோ உதவும் எவரையும், மொஸாட் காக்கவும், கௌரவப்படுத்தவும் முயலும் என்பதை, ஷூலா என்ற பெண்மணியின் நெகிழ்வான சம்பவம் மூலம் விளக்குகிறார். இந்த அத்தியாயத்தை புத்தகத்தின் கடைசி பகுதியில் வைத்திருந்தால் இன்னும் நெகிழ்வாக முடிந்திருக்கும்.

இருப்பினும், புத்தகத்தைப் படித்து முடித்தபோது, ஒரு நல்ல திருப்தி. நன்றி சொக்கன்.

வெளியீடு: மதி நிலையம்
முகவரி: மதி நிலையம், 2/3, 4வது தெரு, கோபாலபுரம், சென்னை 600 086. தொலைபேசி : 044-2811 1506.