Wednesday, December 2, 2020

பாம்பும் பூனையும்

சட்டென்று அந்தப் பாம்பு தோட்டத்தின் புற்களிடையே சீறி எழுந்து படமெடுத்து நிற்க, அதனுடன் சண்டைக்குச் சென்ற பூனை ஓரடி பின்வாங்கி நிற்க... ஆஹா, இன்று இவைகளின் சண்டையைப் படமெடுத்து விடலாம் என்று மொபைல் போனை எடுத்து வர வீட்டினுள் ஓடினேன்.

இந்த கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலையென்பதால், உறவினரின் கிராமத்திற்குச் சென்று விட்டேன். மழைக்காலம் தொடங்கியதில் பல ஜீவராசிகள் தத்தம் இடங்களிலிருந்து வெளியே வந்து சுற்றிக் கொண்டிருந்தன. ஒரு சிறு முதலை அளவிற்கு ஒரு உடும்பு தோட்டத்துப் பக்கம் வந்து சென்றது. சைனாவிலிருந்தே வந்து விட்டனவோ என அஞ்சும்படி இருபது வௌவ்வால்கள் கூட பெரும் சப்தம் எழுப்பிப் பறந்தன. ஆனால் அதிகப்படியாக சுற்றுவது என்னவோ பாம்புகள்தாம். 

வீட்டு வாசற் பகுதியில், ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் நிலத்தடி குழாய் வேலையாய் ஊராட்சி பள்ளம் தோண்ட, பூமியினுள் நாகலோகம் திறந்து கொண்டதோ என்னமோ?!, அப்பள்ளத்தின் வழியே பாம்புகள் வெளிவந்து செல்வதும் சகஜமானது. ஒரு முறை டூ-வீலர் ஸ்டேண்டின் மீது நான் கால் வைக்க, வெகு அருகில், வண்டியின் அடியிலிருந்து ஒரு பாம்பார் எட்டிப் பார்த்து, தன் பிளவுபட்ட நாக்கு நுனியை, வெளியே உள்ளேயென சிலமுறை நீட்டி இழுத்து காட்சி தந்தபின் சென்றுவிட்டார். நாம் அதை அடிக்க முயலாமல் சிவனே என்று இருந்தால், அவைகளும் அதே சிவனே என்று போய்விடுகிறன. 

ஆனால் இங்கே நான்கு பூனைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவைகளுக்கு அக்கம்பக்கத்து வீடுகள் எதுவும் ஒரு எல்லையில்லை.  எந்தச் சுவர்களும் ஒரு தடையுமில்லை. வீட்டுக்கு வீடு சுவரேறிச் சென்று, சமையல் அறை சன்னல் வழியே உள்ளே நுழைந்து பாலைக் குடித்துவிட்டு, வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியரிடம் கொஞ்சிக் குலவிவிட்டுச் சுற்றிக் கொண்டிருக்கும். 

பாரதியார் பாடியதுபோல சாம்பல் நிறத்தில் ஒரு பூனை, வெள்ளைப் பாலின் நிறத்தில் ஒன்று, பாம்பின் நிறத்தில் ஒன்று... அட விடுங்க... பாம்பின் நிறத்தில் பூனை இருப்பதெல்லாம் தேவையில்லை. இவை நாலுமே, பாம்பைக் கண்டால் சண்டைக்கு வந்து விடுகின்றன. ஏரியா பிரித்து, உனக்கு அந்தப் பாம்பு எனக்கு இந்தப் பாம்பு என்றெல்லாம் பங்கு பிரித்து சண்டைக்கு வருகின்றன.

டூ-வீலரின் அடியே ஓய்வெடுக்கும் பாம்பை ஒரு பூனை தாவி அதன் தலையருகே கவ்விப் பிடிக்க, பாம்பு சடசடவென தன் உடலை பூனையின் கழுத்தை சுற்றி இறுக்க முயல... இவைகளின் சண்டையின் களம், தெருவுக்கு மாறி, பின் பள்ளத்தினுள் விழுந்து புரண்டு, மறுபடியும் மேலேறி, ஒரு புதரினுள் சென்று மறைந்து விட்டன. கிளைமாக்ஸ் தெரிய  இரண்டு நாட்கள் ஆனது. எதற்கும் பாதிப்பில்லை. மறுபடியும் டூ-வீலரின் அடியே பாம்பார் ஓய்வெடுக்க வந்தார். பூனையார் வழக்கம் போல் தோட்டத்துப் பக்கம் சுற்றித் திரியத் தொடங்கினார்.

நான் பெரும்பாலும் தோட்டத்தின் அருகேதான் லேப்டாப்பில் பணிசெய்து கொண்டிருக்கிறேன். வெள்ளைப் பூனை மெல்ல ஓட்டின் மேலே பதுங்கிப் பதுக்கி முன் நகர்வது ஓரக் கண்ணில் தெரிய திரும்பியவன் திகைத்தேன். இதுவரைக் கண்ட பாம்புகள் எல்லாம் இரண்டு முதல் இரண்டரை அடி நீளம் மட்டுமே இருந்தன. ஆனால் இப்போது கண்டதோ ஆறடிக்கும் மேலான நீளத்தோடு மிரள வைக்கும் தேகவனப்போடு ஒரு பாம்பு. மெல்ல ஓட்டின் மீதிருந்து, தூணின் வழியே கீழே இறங்கிக் கொண்டிருந்த இதன் வாலைப் பிடிக்கத்தான், பூனையார் பதுங்கி வந்து கொண்டிருந்தார்.

எனக்கும் தூணுக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் நாலைந்து அடிதான். பூனை, பாம்பின் வாலைப் பிடித்து இழுத்து, இது சீறி எழுந்தால், என்பக்கம் வந்து விழும் வாய்ப்பு அதிகம்,. சுதாரித்து நான் எழுவதற்குள். பூனை தாவிப் பிடிக்க, அதன் விரல் நகங்களுக்கிடையே, மாட்டிக் கொள்ளாமல், பாம்பின் வால் வழுக்கிச் செல்ல, பாம்பு காம்பவுண்ட் சுவர் ஓரமாய் பல மாதமாய் கிடக்கும் கட்டைகளுக்கிடையே சென்று மறைந்து விட்டது. அவ்வப்போது வெளியே வந்து ஓட்டின் மேலேறி, இரைதேடித் திரும்புவது இதன் வாடிக்கையானது.

எந்தக் காட்சியும் இமைபொழுதில் மறைந்து விடுகின்றன. ஒருமுறைகூட படம் எடுக்க முடிந்ததில்லை. இந்த ஆறடிப் பாம்பும் வெள்ளைப் பூனையும்தான் இப்போது நேருக்கு நேர் போர் முரசு கொட்டின.

சிறு வயதில் Snake in the monkey's shadow என்றொரு குங்ஃபூ படம் பார்த்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.  பாம்பின் ஸ்டைலில் சண்டை போட்டு பலரை வீழ்த்தும் வில்லன்கள் இருவரை வெல்ல முடியாமல் திணறும் நாயகன், காட்டில் பாம்புடன் சண்டையிட்டு ஜெயிக்கும் குரங்கைக் கண்டு, பின் அதைப் போலவே சண்டையிட்டு வெல்கிறான். அந்த பாம்பும் ஆறடிக்கு மேல் நீளமிருந்ததும் நினைவுக்கு வந்தது. அது போல ஒரு சண்டையை நாம் இப்போது படமெடுக்கப் போகிறோம்... அட மொபைலில்தாங்க... என்று எண்ணிக் கொண்டே, கேமிராவை ஆன் செய்து கொண்டே விரைந்து திரும்பினேன்.

பூனை அப்படியே அசையாமல் கூர்மையான பார்வையோடு நின்று கொண்டிருந்தது. ஆனால் பாம்பைக் காணோம். புற்களிடையே ஏதாவது சலசலப்பு தெரிகிறதா எனப் பார்த்தேன். ம்ஹூம். பாம்பிருக்கும் சுவடே இல்லை. அதுவரை வீரச் சவால் நாயகனாய் நின்றிருந்த பூனை என்னை திரும்பிப் பார்த்து விட்டு அதுவும் சிவனே என்று சென்று விட்டது. 

சை... இன்றும் படமெடுக்க முடியவில்லை என சலித்து, கேமராவை அணைக்கும் போது, யூ.டியூப் ஆப் மீது விரல் பட்டுவிட்டது. ஆப் திறந்து கொள்ள... ரஜினி, குஷ்பு, பாம்பு என அண்ணாமலை படத்தின் பாம்புக் காட்சி முதலாவதாய் வந்து நின்றது. என்ன டிசைனோ!