Showing posts with label ராஜேந்திர சோழன். Show all posts
Showing posts with label ராஜேந்திர சோழன். Show all posts

Wednesday, October 28, 2015

பாலகுமாரனின் ஒரு காதல் நிவந்தம் - விமர்சனம்

தந்தையின் புத்தக அலமாரி.

ஒரு புத்தகத்தைத் தேடும் போது, கண்ணில் பட்டது பாலகுமாரனின் மாத நாவல் ‘ஒரு காதல் நிவந்தம்’. படித்ததில்லை. ஆனால் அது இராஜேந்திரனைப் பற்றியது எனத் தெரியும். அழகிய தலைப்பு சொல்லியது, இது இராஜேந்திரனுக்கும், அவனது அனுக்கி நக்கன் பரவைக்கும் உள்ள பிணைப்பு என்று. படிக்கும் ஆசை வர, உடன் தயக்கமும் ஒட்டிக் கொண்டது.

உடையார், கங்கை கொண்ட சோழன் தந்த பிம்பத்தை, உணர்ச்சிகளை இது கலைத்து விடுமோ? 12 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. சம்பவங்கள் மாறியிருக்கும். பாத்திரங்களின் பிம்பங்கள் கூட உருமாறியிருக்கும்.

நாவல் கடிகை ஞாபகத்திற்கு வந்தது. அதில் ஆதித்த கரிகாலனைக் கொன்ற ரவிதாஸன், பரமேஸ்வரனே கதா நாயகர்கள்.

இருப்பினும் மனம் உந்த, படித்தேன்.

ஆம், சம்பவங்கள் மாறியே இருந்தன. கங்கை வரை வென்ற பிறகும், கங்கை கொண்ட சோழபுரத்திற்குச் சுவடே இல்லை. இராஜராஜ சோழனின் அனுக்கி பஞ்சவன் மாதேவி இன்னமும் நலமுடன் இருக்கிறாள். கங்கைக்கு முன் சாளுக்கிய தேசத்தை நோக்கிய படையெடுப்பின் போதே, இராஜேந்திரனின் மகன்கள், சேர, பாண்டிய, ஈழ தேசங்களை ஆளத் தொடங்கியிருப்பார்கள். இங்கே இவர்கள் சிறுவராய்த் தெரிகிறார்கள். உடையாரில் தந்தையுடனான நீண்ட உரையாடலில் பலதும் உணர்ந்திடும் இராஜேந்திரன், இங்கே இன்னமும் பக்குவப்படவில்லை. நக்கன் பரவையின் அறிமுகமே இனிதான் நடக்கிறது. இப்படிச் சில.

ஆனாலும் பாதகமில்லை. கதையின் கரு அட்டகாசம். கடந்த விமர்சனத்தில் எழுதியிருந்தேன்.

இராஜேந்திரன் வென்ற தேசத்தவனாய் நினைக்கையில் குலை நடுங்குகிறது. கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ஜிம்பாப்வேயை அடித்து நொறுக்குவதைப் போலத்தான், பல இலட்சம் வீரர்களுடன் சென்று... மேலைச் சாளுக்கியம், தட்சிணலாடம், உத்திரலாடம்... பல தேசங்களைத் துவம்சம் செய்திருக்கிறான். 

யுத்ததின் வலியை, அதன் நாசம் பெண்களிடம் விதைக்கும் வேதனையை குந்தவை, பரவை மூலம் இராஜேந்திரனுக்கு உணர்த்த முயல்வதே களம்.

பலதும் அறிந்திருந்தும், ஒப்பற்ற நிர்வாகத் திறமையிருந்தும், வெற்றி மட்டுமே கண்டவனெனினும், அவன் செயல்களுக்கு வேறொரு கோணத்தில் பாதக முகமுண்டு என்பதை இராஜேந்திரனுக்கு மட்டுமல்ல, படிப்பவருக்கும் புரியவைக்கிறார் பாலகுமாரன். கூடவே சில பாடங்களும் நயமாகக் கிடைக்கின்றன.

மூன்று சோழ அரசர்களுக்கு முதல் அமைச்சராய், சேனாதிபதியாய் இருப்பவர், கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர். சபையில் தன் வருகைக்கு எழுந்திருக்க வேண்டாமே என இராஜேந்திரன் வேண்ட...

“ஒரு நாள் உமது மகன் ராஜாதிராஜன் அரியணை ஏறி சபை வரினும் நாம் எழுந்து நிற்போம். அரசனை அதிகாரி மதிக்கவில்லையெனில் அதிகாரியை குடி படை மதிக்காது. வளையாத மூங்கில் வில்லாகாது”

அதைப் போல தளிச்சேரிப் பெண் சரபை. “உண்பதும் உடுப்பதும் சோழர் சொத்து, எனக்கும் நன்றிக் கடன் உண்டல்லவா?” எனத் தாமாக அரச குடும்பச் சிக்கலுக்கு உதவ முன் வருகிறாள்.

ம்ம், பணிவும், மரியாதையும், நன்றிக் கடனும் இருப்பின் சாம்ராஜ்யமே சீராக இயங்கும். இவை நீர்ப்பின், ஒரு வீட்டின் இயக்கம் கூட ஸ்தம்பிக்கும்.

- எவன் மனதிற்குள் சஞ்சலமின்றி அமைதியோடு இருக்கிறானோ அவனே வீரன்

- ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி எதற்கெல்லாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது

- கோபத்தை விட கேடான விஷயம் எதுவுமில்லை

- தான் என்ற அகம்பாவம் அற்றவர், கற்றல் எளிது

- கூட்டமின்றி, கோலாகலமின்றி, சாமானியனாய் இருப்பது விடுதலையாய் இருக்கிறது

- வளர்ச்சியைச் சொல்வதே ஆன்றோர் புத்தி

இப்படி பல ஒற்றை வரிகள் நாவலில் பளிச்சிடுகின்றன. ஆசிரியரின் அனுமானங்களும் முறுவலைத் தருகின்றன.

மனைவிக்குப் பயந்து, அலுவலகத்தில் நடுநிசி வரை உழைக்கும் (நெட்டில் படம் பார்ப்பதுதான்) கணவர்கள் இன்று சகஜம்தானே. மனைவிகளின், சிற்றனைகளின் இம்சையைத் தவிர்க்கத்தான் இராஜேந்திரன் கங்கைவரை சென்று விட்டானாம் :)

பரவை, ‘அற்றைத் திங்கள், அவ்வெண்ணிலவில் யாம் எந்தையும் உடையோம்..’ என பாரி மகளிரின் கவிதையைச் சொல்லி, போரின் கொடுமையை விளக்க, படிக்கும் நமக்கும், எதற்கு இந்தச் சண்டை என்ற எண்ணம் வரத்தான் செய்கிறது.

இந்த நாவலில் ஒரே ஒரு பிழை. திருவாரூரில் இராஜராஜனும், அவன் சேனாதிபதி அருண்மொழியும் மாறு வேடத்தில், பரஞ்சோதி, நம்பி என்ற மாற்றுப் பெயர்களில் இருக்கிறார்கள். இது தனக்கு தெரியாது என்றே பரவை இராஜேந்திரனிடம் பழகுகிறாள். மன்னராய் வெளிப்படும் முந்தின தினமே அருண்மொழி என்ற பெயரை இருவருமே பயன்படுத்தி விட்டார்கள்!

திருவாரூரில் பெரும் வெள்ளம் ஏற்பட, கடைசி பகுதியை அற்புதமாய் முடித்திருக்கிறார் பாலகுமாரன். இது படித்து உணர வேண்டிய அனுபவம். செங்கல் தளியாய் இருக்கும், வீதி விடங்கர், தியாகேசர் கோவில் கற்றளியாய் மாற்றும் உபயம் இங்குதான் பரவையால் விதைக்கப்படுகிறது. முடிவில் அவள் இராஜேந்திரனிடம் சொல்லும் ஒரு வாக்கியம்...

‘நீங்கள் தூசு ஒட்டிக் கிடந்த மாணிக்கம். சற்று துடைத்தேன். மாணிக்கம் தானாய் பிரகாசிக்கிறது’

உடையார், கங்கை கொண்ட சோழன் பிரம்மாண்ட கதைகளுக்கு, இந்நாவல் ஒரு டீஸர்.

நன்றி ஐயா (பாலகுமாரன்).