செங்கல்பட்டு பஸ் நிலையத்தில், மாமல்லபுரம் செல்லும் பஸ்ஸூக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது சற்றுத் தள்ளி இரண்டு வெள்ளைக்காரிகள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்நிய நாட்டினரைப் பார்த்தால் சிறு வயது முதல் ஏற்படும் சுவாரஸ்யத்துடன் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சரியம்!
ப்ளாட்பாரத்தில், தனக்கே உரிய பாணியில் அமர்ந்திருந்த நரிக்குறவர்களுடன் அவர்கள் வெகு சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். குறவர்களின் தலைவன் - தலைவி போன்று தெரிந்தவர்கள், இவர்களிடம் எந்த அந்நியமும் பார்க்காமல், தங்கள் கூட்டதின் அங்கமாகவே கருதிப் பேசிக் கொண்டிருந்தது எனக்கு படா படா ஆச்சரியம்!
(இவர்களில் ஒருவரை எமி என்றும், மற்றொருவரை லிண்டா என்றும், இப்பதிவின் வசதிக்காக அழைக்கப் போகிறேன்!... சரிதானே!...)
எமியும், லிண்டாவும் மாமல்லபுரத்திற்கு வந்த டூரிஸ்ட் என்பதும், அங்கே இந்தக் குறவர்களுடன் எப்படியோ நட்பு ஏற்பட்டு, அவர்களுடன் செங்கல்பட்டிற்கு வந்து, இப்போது திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்கு ஒருவாறு புரிந்தது.
அப்போது ஒரு பஸ், நிலையத்தினுள் நுழைய, லிண்டா என்னிடம் வந்து...
“டஸ் இட் கோ டு மாமல்லபுரம்?” என வினவினாள்.
நான் “எஸ்” என்றதுதான் தாமதம்... தன் இருகைகளையும் தன் உதட்டருகே குவித்து...
“எவ்ரூரூரூ...... ப...ஸ்...” என்று குறவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே கூவ, நான் அசந்து போனேன்.
பஸ் வளைவில் திரும்பிக் கொண்டு வரும்போதே ரன்னிங்கில் ஏறினால்தான் இடம் கிடைக்கும். ஓடத் தயாரான நான் ஸ்தம்பித்து நின்றேன். என்னை முந்திக்கொண்டு, பஸ்ஸில் இடம் பிடிக்க அதிவேகமாகப் பாய்ந்தாள் லிண்டா. அவள் சற்று வாட்டசாட்டமாக இருந்தாள். வாலிபால் எல்லாம் ஆடுவாள் போல! பஸ்ஸைத் தாவிப் பிடித்த கையில் உறுதி தெரிந்தது.
வேட்டியை மடித்துக்கட்டி பஸ்ஸில் ஏற முற்பட்ட உள்ளூர் வீரர்கள் சற்று சோப்ளாங்கிகள். லிண்டாவிடம் இடிபட்டதில், நிலை தடுமாறி தொபுக்கடீரென கீழே விழுந்து விழி பிதுங்கினர்.
பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட ஒருவர் ”ஏம்மா, இப்டி முட்ற” என்று கத்த...
“எலே... கோ...” என லிண்டா பதில் சவுண்ட் விட, அவர் அரண்டு போய்...
“அம்மா.. தாயீ... ஆள வுடு” என கும்பிடுபோட்டு நகர, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
ஒருவழியாக நானும் பஸ்ஸில் ஏறினேன். ஒரு மூன்றுபேர் சீட்டைப் பிடித்திருந்தாள் லிண்டா. ஆனால்...
அடடா... நம்ப ஊர் டெக்னிக் முழுமையாக அவருக்குத் தெரியவில்லை. சன்னல் வழியாக கூடையைப் போட்டு அதில் ஒரு சீட்டைப் பிடித்திருந்த நபர், அங்கே வந்து கூடையைக் காட்டி, “அது என் சீட்” என்று அங்கலாய்த்தார்.
“ஓ, இட் ஈஸ் யுவர் பேக்?” என்று லிண்டா கூடையை எடுத்து அவரிடம் கொடுக்க, அந்த இடமே ஏக ரகளையானது.
நான் குறுக்கிட்டு விளக்க, “ஓ சாரி, டேக் யுவர் சீட்” என்று பார்டிக்குப் பெருந்தன்மையுடன் வழிவிட்டார். எமியும், குறவர்களும் வந்து சேர்ந்தனர். முதல் சீட்டில் எமி அமர, லிண்டா குறவப் பெண்ணின் குழந்தையை வாங்கி, வாஞ்சையோடு அதன் தலையைக் கோதி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.
சன்-சில்க் காணா கேசங்களும், ரின் காணா உடைகளும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மதர் தெரசாவைப் படித்திருப்பார்களோ?! பெரிய விஷயம்.
பஸ் புறப்படத் தாமதமாக, உள்ளே கூட்ட நெரிசலால் புழுங்கத் தொடங்கியது. எமியின் டி-சர்ட் வேர்வையில் நனைந்தது. அருகில் நின்று கொண்டிருந்த குறவப் பெண், எமியின் டி-சர்டின் முதுகுப்பகுதி U-கட்டை லேசாக இழுத்து (லேசாகத்தான்) உள்ளே பூ... பூ... என்று ஊதத் தொடங்கினாள். எமியின் முகமும் வேர்க்கத் தொடங்க, குறவப் பெண் தன் முந்தானையால் விசிறவும் செய்தாள். இப்போது எமியின் முகத்தில் வேர்வைக்குப் பதில் கொள்ளை சந்தோசம். இந்த அபூர்வக் காட்சியில் என் மனம் லயித்தது. (விசிறியதில் எனக்குக் கூட கொஞ்சம் காற்று வந்தது!).
பஸ் புறப்பட இருவரும் பள்ளித் தோழிகள் போல அன்னியோன்யமாய்ப் பேசத் தொடங்கினர். எமி ஆங்கிலத்தில் எதையோ கேட்க, குறவப் பெண் அதற்கு தமிழில் பதில் கூறித் தன்பங்குக்கு எதையோ கேட்க அதற்கு எமி ஆங்கிலத்தில் பதில் சொல்ல, எனக்கு மண்டை கிறுகிறுத்தது.
எமியின் ஆக்சென்ட் எனக்கு பிடிபடவில்லை. குறவப் பெண்ணின் தமிழ் உச்சரிப்பும் என் செவிக்குள் நுழையவே இல்லை. இருவரும் கேட்டுக்கேட்டு, கூறிக்கூறி, மாறிமாறிப் பேசியதில் எனக்கு மயக்கமே வந்தது. என்னத்தான் பேசுகிறார்கள்?! எப்படித்தான் இது சாத்தியம்?!...
மெல்ல உண்மை புரியத் தொடங்கியது.
வார்த்தைகள் உச்சரிக்கவே தெரியாத குழந்தைப் பருவத்தில், நாம் தாயிடம் இப்படித்தானே பேசினோம்!
இரண்டு கள்ளமற்ற மனங்களின் உணர்வுகள் ஒன்றிவிட்டால், அது அன்பினில் நிறைந்து விட்டால், மொழிகளுக்கிடையே பேதமில்லை. வார்த்தைகளினூடே அர்த்தங்கள் இல்லை. நயன பாஷை, மெளன பாஷை, டெலிபதி ஆகியவை இதன் அடுத்தடுத்த நிலைகளே.
நிறம், மொழி, மதம், நாடு கடந்து அவர்கள் கொண்ட நட்பை மானசீகமாய்க் கைகூப்பி வணங்கினேன்.
என் ஊர் வந்துவிட, படியில் இறங்கிக் கொண்டே அவர்களை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். குறவப் பெண்ணின் குழந்தை, தன் தாய்மடி எனக் கருதியே, லிண்டாவின் மடியில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.
Monday, September 6, 2010
Tuesday, August 24, 2010
சமஸ்கிருதமும் ஜாவாவும், தமிழும் டாட்நெட்டும்
கோவில்களில் சமஸ்கிருதமா தமிழா என்ற சர்ச்சை பல நாட்களாகத் தொடர்கிறது. என்னைப் பொருத்தவரை இரண்டையும் சமவிகிதத்தில் பயன்படுத்தலாம் என்றே நினைக்கிறேன். இதை, கணினி மொழிகளான ஜாவா (Java) மற்றும் டாட்நெட்டைக் (.Net) கொண்டு விளக்குகிறேன்.
நான் கல்லூரிகளுக்குச் செமினார் எடுக்கச் செல்லும்போது (அதைப்பற்றி ஒரு நகைச்சுவைப் பதிவு: முனியின் செமினார்) மாணவக் கண்மணிகள் (இருபாலரையும் குறிப்பிட இதுதான் வசதியாக இருக்கிறது!) என்முன் வைக்கும் பிரதான கேள்வி: ஜாவா, டாட்நெட் இந்த இரண்டில் எதைப் படிப்பது?
இதில் எந்த மொழியில் ப்ரோக்ராம் எழுதினாலும் அவை ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ள மொழி கடந்த ப்ரோட்டோகால்கள் (Protocol) வந்து விட்ட நிலையில், நான் இரண்டையுமே படிக்கச் சொல்கிறேன்.
இப்போதெல்லாம் எந்த ப்ராஜெக்ட்டானாலும் சர்வர் கம்ப்யூட்டரில் (Server Computer) இயங்கும் ப்ரோக்ராம்களும், க்ளையண்ட் கம்ப்யூட்டரில் (Client Computer) இயங்கும் ப்ரோக்ராம்களும் எழுதி அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் வகையில் வடிவமைக்க வேண்டியிருக்கிறது. (Web ப்ராஜெக்ட்கள் விதிவிலக்கு).
பெரும்பாலான க்ளையண்ட் கம்ப்யூட்டர்கள் விண்டோஸில்தான் இயங்குகின்றன. இதில் நாம் பயன்படுத்துவதற்கு வசதியாக ப்ரோக்ராம் எழுத டாட்நெட் சிறப்பாக இருக்கிறது.
சர்வர் கம்ப்யூட்டர்களை இன்விசிபிள் (Invisible) கம்ப்யூட்டர் என்றும் சொல்வார்கள். எங்கே இருக்கின்றன, எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்க முடியாது. அவற்றின் பெயர் கொண்டு (உதா: yahoo.com) தொடர்பு கொள்ளலாம். அவை நீங்கள் கேட்கும் சர்வீஸைத் தரும். உதா: இமெயில்.
இந்த சர்வர்கள், இதில் பயன்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டம், கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும். அதனால் அனைத்திலும் இயங்கும்படி சர்வீஸ் ப்ரோக்ராம்களை வடிவமைக்க வேண்டியிருக்கிறது. இதற்கு ஜாவா சிறப்பாக உதவுகிறது.
ஆக, நான் கையாளும் ப்ராஜெக்ட்களில் இரண்டையுமே பாகுபாடின்றி சரியான விகிதத்தில் பயன்படுத்துகிறேன். அவை வெற்றியும் கண்டு கோலோச்சுகின்றன.
சரி, கோவிலுக்கு வருகிறேன். இங்கே இறைவன்தான் சர்வர். இவரும் கண்ணுக்குத் தெரிய மாட்டார். எப்படி இருப்பார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. நாம் கேட்கும் வரத்தை சர்வ் செய்வதால் இறைவனும் சர்வரே.
எங்கும் நீக்கமற இருக்கும், சர்வ வல்லமை படைத்த, உருவம் கடந்த பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட சக்தியாக சிவனாகவோ, விஷ்ணுவாகவோ (yahoo, google மாதிரி), ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் டியூன் செய்ய சமஸ்கிருதம் சிறப்பாக இருக்கிறது. இங்கே செய்யப்படும் ப்ரோக்ராம்கள்தான் யாகங்கள், யக்ஞங்கள், குடமுழுக்குகள். இவை சமஸ்கிருததில் இருக்கலாம் என்பது என் கருத்து.
பக்தர்களான நாம்தான் க்ளையண்ட். நம் சார்பில் செய்யப்படும் அர்ச்சனைகள், பூசைகள் தமிழில் நடந்தால் அது நமக்கு ரொம்ப வசதி.
தன்னிலை மறந்து மனமுருகிச் செய்யும் மொழி கடந்த பிரார்த்தனையே, நம்மையும் இறைவனையும் இணைக்கும் ப்ரோட்டோகால்.
ஆக, கடவுளென்றாலும் கணினியென்றாலும் எச்செம்மொழியும் நமக்குச் சம்மதமே.

Monday, August 16, 2010
என். சொக்கனின் ‘முத்தொள்ளாயிரம்’
மதராசபட்டினம் ஒரு கவிதையாய் நம்பளை அறுபது வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்லுமென்றால், செம்மொழிக் கவிதைகள் ஆயிரம் வருடங்கள் கூட பின்னோக்கி அழைத்துச் செல்லும். அப்படி சங்ககாலத்திற்கு அழைத்துச் செல்ல என்.சொக்கன் பயன்படுத்தியிருக்கும் காலயந்திரம் முத்தொள்ளாயிரம்.
சேர சோழ பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே முத்தொள்ளாயிரம். இலக்கியச் சுவை மிகுந்த இந்த நூலை, எஸ்.எம்.எஸ் மட்டுமே படிக்கும் இந்த தலைமுறைக்கும் புரியும்படி மறுபிறப்பெடுக்க வைத்திருக்கிறார் சொக்கன்.
”ஐயோ, வெண்பாவா? அதெல்லாம் நமக்கு ஒவ்வா!” என அலறி ஓடும் தமிழ்தாசர்களை நிறுத்தி, படித்துதான் பாரேன் எனச் சவால் விடுகிறது சொக்கனின் எளிய தமிழ் நடை.
பாடல்களின் மையக்கருத்தினைக் குழைத்து ஓரிரு வார்த்தைகளில் சுவாரஸ்யமாக இவர் வைத்திருக்கும் தலைப்புகளே இச்சவாலுக்கான அறைகூவல். உதாரணங்கள்: தீப்பிடித்த தண்ணீர், தரையில் வானவில், யானையின் வெட்கம், சிலந்தி (க)வலை, கவிதை எழுதும் யானைகள், சாவித்துளைக்கு நன்றி!
இதைத் தொடர்ந்து உடனடியாக பாடலுக்குச் சென்றுவிடாமல், ஒரு பக்கக் கதைகளைப் புனைந்திருக்கிறார். சங்கப் புலவர்களின் கற்பனைகளை சிறிதும் காயப்படுத்திவிடாமல், பாடல்களின் ஓட்டத்திலேயே தனது கற்பனை, நகைச்சுவை மற்றும் தற்கால மேற்கோள்களையும் அளவாக பதமாகக் கலந்து கதைகளை/விளக்கங்களை புனைந்திருக்கிறார்.
புலவர்களிடம் கற்பனை வளம் செழித்திருந்திருக்கிறது. அதில் சில புன்னகைக்க வைக்கின்றன. சில ”அட!” போட வைக்கின்றன. சில ”வாவ்!” சொல்ல வைக்கின்றன. அத்தனைக்கும் அடித்தளமமைப்பது சொக்கனின் விளக்கக் கதை.
உதாரணமாக இமையார் என்று தேவர்களைக் குறிப்பதை, எந்நேரமும் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை என்று பேரழகிகளைப் பார்த்துப் பழகியதாலோ என்னவோ, தேவர்களின் கண்கள் எப்போதும் இமைப்பதில்லை என்று சுவையாக விரித்திருக்கிறார் (ஏனோ மேனகையை டீலில் விட்டுவிட்டார்).
கதையைத் தொடர்ந்து பாடலையும், அதன் பின் சில சொற்களுக்கான அர்த்தங்களை குட்டி டிக்ஸனரி போலவும் கொடுத்திருக்கிறார்.
சுவையான விளக்கத்தை படித்தபின் பாடலைப் படிக்கும்போது, அது தெளிவாகப் புரிகிறது. அறியாத சொற்களின் அர்த்தத்தையும் ஊகிக்க முடிகிறது. பின்தொடரும் டிக்ஸனரியில் அதைச் சரிபார்க்கும்போது, அட நமக்கும் தமிழ்ப்புலமை கிட்டுகிறதோ என்று துள்ளிக் குதிக்கத் தோன்றுகிறது. நன்றி சொக்கன். நிச்சயம், பாடலெழுதிய புலவர்களின் ஆன்மா தங்களை வாழ்த்தும்.
இப்புத்தகத்தைப் படிக்க தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. விளக்கங்கள் ஜெட் வேகத்தில் பறப்பதால் கிடைக்கும் ஐந்து நிமிட அவகாசத்திலும் ஒரு பாடலைப் படித்துவிடலாம். சொக்கனின் கைவண்ணத்தில்... ஸாரி... எழுத்து வண்ணத்தில் பாடலின் நல்ல சொற்றொடர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. சமயத்தில் அவை பயன்படும்.
உதாரணமாக, உங்கள் மனைவி பொட்டிட்டு வருகையில், “திலகம் கிடந்த நல்நுதலாய்” எனக்கொஞ்சி செல்லமாகக் குட்டு வாங்கலாம். (மாறாக, “ஐயோ என் புருஷனுக்கு கிறுக்கு புடிச்சிடுச்சு” என்று உங்கள் அன்பு நாயகி அலறினால் அதற்கு சொக்கனோ, நானோ பொறுப்பல்ல!)
அனைத்து பாடல்களும் நான்கடி (நான்கு வரிகள்) கொண்ட பாக்கள். ஆனால் பல பாடல்களில் கருத்து இரண்டு அடிகளிலேயே முடிந்து விடுகிறது. ஓரடி மன்னனை, தேர்ந்தெடுத்த மலர்மாலையை அணிந்தவனே, ஆய்ந்தெடுத்த மணிகளைச் சூடியவனே, கடல்சூழ் உலகை ஆள்பவனே என்றெல்லாம் புகழ்ந்து பாராட்டவும் (சேனைத் தலைவனுக்குப் பாராட்டு விழா!) அடுத்த அடி இணைப்புச் சங்கிலியாகவும் செலவிடப்பட்டிருக்கிறது. இத்தகைய குறுகிய பாடல்களை ஒரு பக்கக் கதைகளாக வடித்திருப்பது சொக்கனின் தனித்திறமை. வணக்கங்கள் சொக்கன்.
இக்கதைகள் குழந்தைகளுக்குச் சொல்ல பெரிதும் பயன்படும். அன்றைய அன்னை குழந்தைக்கு வீரம் ஊட்டினாள். இன்றோ செரிலாக்தான் ஊட்டுகிறாள். நாம் குறைந்த பட்சம் வீரக் கதைகளைச் சொல்லி சோறும் உடன் கொஞ்சம் தமிழையும் ஊட்டலாம் (பசலை படியும், சங்கு வளையல்கள் கழன்று விழும் காதல் கதைகள் சொல்வதற்கில்லை, அவை நமக்கு மட்டும்!) .
இவ்வளவு பயனுடன் எளிமையாக சொக்கன் எழுதினாலும், அவரது பணி எளிமையானதல்ல என உணரமுடிகிறது. ஒவ்வொரு பாடலையும் தீவிரமாகப் படித்து அலசியிருக்கிறார். காதல் பாடல்களுக்கு, திருக்குறள் கா. பாலிலிருந்து வரும் மேற்கோள்களும், ஓரிடத்தில் வரும் குறுந்தொகை, கலிங்கத்துப்பரணி மேற்கோள்களும் அவரது உழைப்பை பளிச்சிடுகின்றன. வாழ்த்துக்கள் சொக்கன்.
சேரனைவிட (கோதை) சோழனிடத்திலும் (கிள்ளி), சோழனைவிட பாண்டியனிடத்திலும் (மாறன்) பலவகைகளில் பாடல்கள் இருக்கின்றன. அவற்றை ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.
முடித்தபோது சந்தோஷத்துடன் ஒரு ஏக்கமும் இணைந்தது. மூன்று தொள்ளாயிரம் பாடல்களில் வெறும் 108 மட்டுமே கிடைத்திருக்கிறதாம். அவையே இவ்வளவு சுவையென்றால்....
மற்ற பாடல்களில் சில நூறாவது கிடைக்க காலமும், அவற்றை சொக்கன் எழுத தமிழன்னையும் அருள வேண்டுகிறேன் தொழுது.
Subscribe to:
Posts (Atom)