Friday, July 27, 2012

ஓம் நவ சக்தி ஜெய ஜெய சக்தி


1992

‘ரகு... நீ பாடினது போதும். முடிச்சுக்கோ’

நான் இன்னும் முதல் சரணமே முடிக்கவில்லை. அதற்குள் பாட்டுப் போட்டியின் நடுவர்தான் இப்படிச் சொல்லி விட்டார். மற்றொரு நடுவர் உணர்ச்சியற்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார்.

நான் பாடினால் கர்ண கொடூரமாக இருக்கிறதென பள்ளி நண்பர்கள் கிண்டலடிக்க, ஒரு வீம்புக்காக பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டதில் மூக்குடைபட்டது.

அன்றுடன் பாத்ரூமில் பாடுவதையும் நிறுத்திக் கொண்டேன்.

-- கட் --

2012

‘ரகு... வீட்டுக்கு வா’

நான் முன்பு பணிபுரிந்த IT கம்பெனியின் நிறுவனர் கிரிதரன் போனில் அழைத்தார். சென்றேன்.

கீ-போர்டில் சில டியூன்களை வாசித்துக் காண்பித்தார்.

அவர் SSI, Radiant, Lambent, Elmaq, Onspec கம்பெனிகளை நடத்தியவர். தற்போது EdServ-ஐ நடத்திக் கொண்டிருப்பவர். இசைத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர். சில மாதங்களுக்கு முன் அவரே இசையமைத்து, பாட்டெழுதி, உண்ணி கிருஷ்ணன் பாட, ஒரு ஐயப்பன் இசை ஆல்பத்தை - அய்யன் மலை எங்கள் மலை - வெளியிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆல்பத்திற்கான டியூன்கள் இவையெனப் புரிந்தது.

‘இதெல்லாம் அம்மன் பாடல்களுக்கான டியூன்கள். ஆடியில் ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன்’

‘ரொம்ப நல்லா இருக்கு சார்’

அடுத்து அவர் சொன்னது, டெரர் கிளப்பியது.

‘இந்தவாட்டி பாட்ட நீ எழுது’

‘ஐயோ, பாட்டு எனக்கு ஒத்துக்காத விஷயம்னு உங்களுக்கே தெரியும். நீங்க தானா தானான்னு எதையாவது சொன்னீங்கனா, நான் வாணா வாணானு ஓடிடுவேன்’

‘அதெல்லாம் எனக்குத் தெரியும். உனக்காக சில டம்மி லைன்ஸ் போட்டு வெச்சுருக்கேன்”.

அதை அவர் பாட, எனக்கு டெரர் டபுளானது. அவையே அற்புதமாக இருந்தன.

‘இதுவே சூப்பரா இருக்கே. நான் என்னத எழுதறது’

‘சரியா பாரு. இது சந்தம் மட்டுமே. அர்த்தம் இல்லை. கிளம்பு. மூணு நாள்ல முதல் பாட்டோட வா’.

சரி. நமக்கு பாடத்தானே வராது. எழுதித்தான் பார்ப்போமே. எழுதிட்டா ரொம்ப வசதி. நம்ம பாட்டையே பாடும்போது யாரும் கிண்டலடிக்க மாட்டாங்களே!.

சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பாடல்.

    அம்மா... மாரியம்மா...
    
    சமயபுரத்தாயி நீ அபய கரம் தாயேன் மாயி
    பெருவளை வாய்க்காலில் நீ இருக்கிறாயே தீர்த்தமாயி (அம்மா)
    
    சர்ப்பக் குடை ஆட்சிகள் கண்ணபுரக் காட்சிகள்
    அன்னை மாரி தந்த தரிசனம்
    
    வெப்பம் பொங்க தவிக்கிறேன் நோயும் அண்ட அழுகிறேன்
    வேப்பந் தரித்துக் கேட்கிறேன் அம்மை தடுத்து காக்க வேணும் (அம்மா)

சந்தம் கச்சிதமாகப் பொருந்த, வேர் விட்ட நம்பிக்கையில் முழுப் பாடலும் வளர்ந்தது. பிற பாடல்களும் கனிந்தது.

முழு அர்ப்பணிப்புடன் இறையுடன் கலந்துவிட்டால், மாற்றமும் சாந்தமும் மனதில் தானாகவே குடிகொள்கின்றன. பட்டீஸ்வர துர்க்கையிடம் நெருக்கத்தையும், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் வருடலையும் உணர்ந்தேன்.

உண்ணி கிருஷ்ணன், ஹரிணியின் அற்புதக் குரல்களுடன் பாடல்கள் இசையரங்கேறின. கிரிதரனும் பாடியிருக்கிறார். 

இது கானாஞ்சலியின் “ஓம் நவ சக்தி, ஜெய ஜெய சக்தி” இசை ஆல்பமாய் வெளிவந்திருக்கிறது.


பாடல் குறிப்புகள்:

அம்மா மாரியம்மா - சமயபுரத்தாளை பெருவளை வாய்க்காலின் தீர்த்தமாகவும், பிள்ளைகளை அம்மை நோயிலிருந்து விடுவிப்பவளாகவும், தாலி காக்கும் ஆத்தாளாகவும் சித்தரிக்கிறது.

மாங்காட்டில் வாழும் எங்கம்மா - தீயின் நடுவே ஒற்றைக் காலில் தவம் புரிந்து சிவனை மணந்த காமாட்சியைப் பாடி, இருமனங்களாய் திருமண வரமும், தம்பதியாய் குழந்தை பாக்கியத்தையும் வேண்டுகிறது.

பட்டீஸ்வர துர்கையே - அனைத்திற்கும் மூல சக்தியான பராசக்தி துர்கையின் வடிவங்களைப் பாடி, அக்கிரமங்களை போக்கவும், தோஷங்களை நீக்கவும், மருத்துவம் கைவிட்ட நோய்களிலிருந்து காக்கவும், தொடரும் துர்கணங்களை விரட்டவும் மன்றாடுகிறது.

வருவாய் அருள்வாய் - வடபழனி சாந்தநாயகியை குலதெய்வமாக, அலைபாய்ந்த மனதில் வந்தமர்ந்து, அச்சத்தைத் தீர்த்து அமைதியைத் தந்த தேவியாகப் பாடுகிறது.

அகிலாண்டேஸ்வரி மாதா ஜனனி - யானையும் சிலந்தியும் பூஜித்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரனின் பாகமாய் இருப்பவளை, சிவனடியார் பெண்ணாய் வேடம் தரிப்பவளை அடைத்து, காலடியில் அழுது, தாய்மடி கேட்கிறது.

தேர் திருவிழா - மலையனின் பெண்ணாய், மதுரை வம்சியாய் உதித்து, பாண்டி நாட்டை ஆண்ட மீனாட்சியின் அழகை, சாம்பல் பித்தனின் மாலை கண்ட விதத்தைப் பாடுகிறது.

அகிலலோக ஜகந்நாயகி - சர்வ சங்கடங்களுக்கும் நிவாரணியாக இருக்கும் சோழங்கநல்லூர் ப்ரத்யங்கரா தேவியின் பஞ்சகம் இசையுடன் பாடலாய் கலந்திருக்கிறது.

இன்னமும் பாரா முகம் - நடிப்பிசைப் புலவர் (அமரர்) கே.ஆர். ராமசாமியின் பழமையான பாடல், புதிய இசையில் மீண்டும் ஒலிக்கிறது.

உண்ணா முலையம்மனே - தந்தனும் கந்தனும் உண்ணா முலையம்மனை, திருவண்ணாமலையாளும் தேவியை, பெண்களை அண்டும் முலையின் நோய்களிடமிருந்து காப்பவளாய் வரித்து, அவள் ஜோதியிடம் தஞ்சமடைகிறது.

பாடல்களை galatta.com-ல் கேட்கலாம், வாங்கலாம். இசையும் பாடலும் உங்கள் மன அழுத்தங்களை இளகச் செய்தால், அதுவே எங்கள் பாக்கியம்.

Wednesday, January 11, 2012

ஐ.டி கம்பெனியில் வர்ணாஸ்ரமம்

பண்புடன் - இணைய இதழில் வெளியான எனது கட்டுரை...

“நீ என்ன ஜாதி தம்பி?”

அந்த முதியவர் கேட்ட போது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பள்ளத்தில் சைக்கிள் இறங்கியதால் விழுந்துவிட்டவரை தூக்கி உட்கார வைத்திருக்கிறேன். அவருக்காக ஹேண்டில் பாரை சரி செய்த போதுதான் அக்கேள்வியைக் கேட்டார்.

இப்போது அவருக்குப் பிடித்த ஜாதியில் நான் இல்லாவிட்டால் மீண்டும் ஹேண்டில் பாரை திருகிக் கொண்டு விழுந்துவிடவா போகிறார்?

“உங்களுக்கு உதவின ஜாதி... பாத்து போங்க...” அனுப்பி விட்டு நடையைத் தொடர்ந்தேன்.

பெற்ற உதவிக்குக் கூட ஜாதி பார்த்துதான் நன்றி சொல்வார்களா? மக்களின் பாதுகாப்பும், வாழ்க்கைத் தரமும் உயர வகுக்கப்பட்ட வர்ணாஸ்ரமம் கால மாற்றத்தில் இந்தளவிற்குத் திரிந்துவிட்டது வேதனை. இதன் நோக்கத்தை ஐ.டி துறையைக் கொண்டு விளக்குகிறேன்.

நான் பணிபுரியும் ஐ.டி கம்பெனியுடன் வியாபார ரீதியாக தொடர்பிலிருக்கும் கம்பெனிகளுக்கு,  புதிய ப்ராஜெக்டை ஆரம்பித்து வைக்க அல்லது இயங்கிக் கொண்டிருக்கும் ப்ராஜெக்டில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க நான் செல்வதுண்டு. அந்தக் கம்பெனிகள் எனக்கென பிரத்யேகமாக அடையாள அட்டையைத் தரும். அது அவர்களுடைய வழக்கமான அட்டையைப் போலவே இருந்தாலும், வேறு நிறத்தில் இருக்கும்.

ஒருநாள் ஒரு கம்பெனியில் தீவிர விவாதத்தில் இருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில், ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மேல் விவாதத்தைத் தொடர்ந்திருக்கிறேன். அந்த நேரத்தில் அந்த அறையை ரிசர்வ் செய்திருந்த நபர், பொறுமையிழந்து கத்திக் கொண்டே, என்னைத் திட்டிக் கொண்டே வந்தார். உடன் இருந்தவர்கள் குறுக்கிடக் காட்டிய தயக்கம், அவரின் பதவியை உணர்த்தியது.

“என்ன பிரச்சனை சார்?” எழுந்தபடி கேட்டேன். என் அடையாள அட்டையின் நிறம் அவர் கண்ணில் பட, சட்டென நிதானத்திற்கு வந்தார். 

அது வேறு கம்பெனியிலிருந்து வரும் டொமெய்ன் எக்ஸ்பர்ட்டை (Domain Expert) குறிக்கும் முதல் வர்ணம்.

“இங்கே ஒரு முக்கிய மீட்டிங் நடத்த வேண்டியிருக்கிறது. உங்களுடையது எப்போ முடியும்?”. இப்போது அவர் குரலில் கண்ணியம் தெரிந்தது. இந்த வர்ண ஜாலம்தான் வர்ணாஸ்ரமத்தின் அடிப்படை.

எந்த ஐ.டி ப்ராஜெக்டாக இருந்தாலும் நான்கு குழுவினர்களின் பணி முக்கியமானவை.

1. ப்ராஜெக்ட் சம்பந்தமான அறிவியல் அனுபவத்துடன் ப்ராஜெக்டை வடிவமைத்துத் தரும் குழு - டொமெய்ன் எக்ஸ்பர்ட்ஸ் (Domain Experts).

2. முதல் குழுவின் வழி காட்டுதலின் படி Java, .Net போன்ற கணினி மொழிகளைப் பயன்படுத்தி ப்ராஜெக்டை உருவாக்கும் குழு - டெவலப்பர்ஸ் (Developers).

3. உருவாக்கப்பட்டதை விற்பனை செய்யும் குழு - சேல்ஸ் (Sales).

4. ப்ராஜெக்ட் நிறுவப்படும் இடங்களில் அதை இயங்க வைக்கும் குழு - ஆபரேஷன்ஸ் (Operations).

இந்தக் குழுக்கள், அதனதன் பணியைச் சரியாகச் செய்தால்தான் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக இயங்கும். இவர்களிடையே அனுசரணையும் முக்கியம். சேல்ஸ் குழுவின் மூலம் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, ஆபரேஷன்ஸ் குழுவின் மூலம் நடைமுறை சிக்கல்களை அறிந்து, டொமெய்ன் எக்ஸ்பர்ட்ஸ் குழு மேலும் வழிகாட்டுவதை டெவலப்பர்ஸ் கடைபிடித்தால்தான் ப்ராஜெக்ட் மேற்கொண்டு வளரும்.

ப்ராஜெக்டை இப்படி வளர்ப்பதைப் போலவே, சமுதாயத்தை வளர்க்க, ப்ராஜெக்ட் குழுக்களைப் போலவே நான்கு குழுக்கள் அன்றைய நாளில் நியமிக்கப்பட்டன. அறம் வளர்ப்பவர், அதன்படி நாட்டை நடத்திக் காப்பவர், வருவாய் ஈட்டுபவர், இயக்கத்திற்கு உழைப்பவர்.

சில ஐ.டி கம்மெனிகள் அவுட் சோர்சிங் (Out Sourcing) முறை மூலம் வேறு கம்பெனிகளிலிருந்து இக்குழு நபர்களை வருவிக்கும் போது, அவர்களின் பணியை மற்றவர் உணர்ந்து நடந்து கொள்ள வர்ண அடையாள அட்டைகளைத் தருகிறது.

அன்றைய நாளில்,  போட்டோ அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு பந்தா காட்டுவது கண்டுபிடிக்கப் படாததால், வண்ணத் துணிகளை தலையில் பாகையாக, இடையில் கச்சையாக, தோளில் பட்டையாகக் கட்டிக் கொண்டார்கள் என நினைக்கிறேன். வெள்ளை, சிவப்பு, பச்சை, கறுப்பு போன்ற நிறங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும்.

கல்லூரி முடித்து மாணவர்கள் கம்பெனியில் சேரும்போது, முதலில் அனைவருக்கும் பொதுவான பயிற்சி அளித்து, அதில் அவர்களின் தேர்ச்சியை, திறமையை வைத்து, நான்கு குழுக்களுக்குள் ஒன்றை ஒதுக்கி, அதற்கான பிரத்யேக பயிற்சிக்குப்பின் அவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

இப்படித்தான் வர்ணாஸ்ரமமும் தகுதியின் அடிப்படையில் நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் தோன்றியதே. வனப் பகுதியிலிருந்து, வளப் பகுதிக்கு நகர்ந்த மனிதனுக்கு ஜாதி ஏது?

ஒரு நோக்கம் நிறைவேறியபின் அதற்கான முனைப்புகள் அர்த்தம் இழக்கின்றன.

இயங்கத் தொடங்கிய ப்ராஜெக்ட் மேலும் விஸ்தரியும் போது, அதன் குழுக்களில் புதிய நபர்கள் சேர்கிறார்கள். பழையவர் வேறு கம்பெனிக்குத் தாவுகிறார்கள். சிபாரிசில் சிலர் நுழைகிறார்கள். இவர்கள் அடிப்படையையும், நோக்கத்தையும் தெரிந்து கொள்ள முயலாமல், எதையாவது செய்து ப்ராஜெக்டை சொதப்புகிறார்கள். பிரச்சனைகள் முளைக்கத் தொடங்குகின்றன. பழியை ஒருவர் மீது  ஒருவர் சுமத்த சண்டைகள் ஆரம்பம். இன்று இந்த நான்கு குழுக்களும் அடித்துக் கொள்ளாத ஐ.டி கம்பெனிகளே இல்லை.

வர்ணாஸ்ரமமும் சந்ததி வளர்ச்சியில், மதங்களாகி, ஜாதிகளாகி சில சாரார் மட்டுமே உயர, பல இடங்களில் எப்போதும் கலவர நிலவரம். 

ஐ.டி கம்பெனிகளெல்லாம், செலவுகளைக் குறைக்க, ஆட்களைக் குறைக்க க்ளவுட் கம்யூட்டிங் (Cloud Computing) என்ற அடுத்த கட்ட டெக்னாலஜியை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன.


இது ஐ.டி குழுக்களின் உட்பிரிவுகளை கணிச்சமாகக் குறைக்கும். அது போல ஜாதிகளும் குறைந்தால் சரி.


Wednesday, December 28, 2011

இலவச இணைப்பு


‘கடக்காரன் உங்கள நல்லா ஏமாத்திட்டான்பா’

“என்னடா சொல்ற”

‘பின்ன என்னப்பா. இந்த புத்தகத்தோட ஃப்ளாப்பி ஃப்ரீனு சொன்னான்னு நீங்களும் எனக்காக வாங்கி வந்துட்டீங்க... ஃப்ளாப்பி கறுப்பா சதுரமாத்தான் இருக்கும்... இது என்னமோ வட்டமா கலர் கலரா மின்னுது... இது வெறும் பிளாஸ்டிக்ப்பா’ என்று சொல்லி அதை அலட்சியமாக டைனிங் டேபிளின் மேல் வீசி விட்டு, கல்லூரிக்குக் கிளம்பினேன்.

வருடம் 1994.

அரையடி சதுரத்திற்கு 1.2 MB கொள்ளளவுடன் இருந்த ஃப்ளாப்பி டிஸ்க்குகளே பிரதானமாக புழக்கத்தில் இருந்தன. ஒன்றின் விலை 40 ரூபாய். கல்லூரி எங்கள் வகுப்பில் ஆளுக்கு ஒரு ஃப்ளாப்பியை வாங்கிக் கொடுத்திருந்தது. அதை லேப் பீரோவிலேயே பாதுகாக்கவும் செய்தது! லேபினுள் நுழையும் போது, பெயர்களின் அகர வரிசைப்படி லைனில் நிற்போம். இரண்டு பூட்டுக்கள் கொண்ட பீரோவிலிருந்து, எங்கள் ரோல் நம்பர் எழுதப்பட்ட ஃப்ளாப்பியை எடுத்துத் தருவார்கள். கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம்கள் எழுதிவிட்டு அதை ஃப்ளாப்பியில் சேமித்தபின் கண்ணில் ஒற்றிக் கொண்டு அங்கேயே ஒப்படைத்துவிட்டு வருவோம்.

இரண்டு ஆண்டுகளாக Basic, FORTRAN, COBOL, Pascal ஆகிய கம்ப்யூட்டர் மொழிகளில் மாய்ந்து மாய்ந்து ப்ரோக்ராம் எழுதியும் பாதி ஃப்ளாப்பிதான் நிரம்பியிருந்தது.

ஃப்ளாப்பி டெக்னாலஜியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு 1.44 MB-களுடன் கையடக்கமாக ஃப்ளாப்பிகள் வெளிவரத் தொடங்க, அதில் ஒன்றையாவது வாங்கி, C மொழியில் ப்ரோக்ராம் எழுதி நிரப்பி விட வேண்டும் என்பதே, என் அப்போதைய வாழ்நாள் லட்சியம்.

நிலைமை இப்படி இருக்க, தந்தையார் ஏதோ ஒரு பிளாஸ்டிக்கை ஃப்ளாப்பி என்று வாங்கி வந்து விட்டாரே என்று வருத்தப்பட்டேன்.

வகுப்பில் நுழைந்தால், நண்பன் சீனுவாசனைச் சுற்றி அனைவரும் ஏதோ வைரப் புதையலைக் கண்டவர் போல வாய் பிளந்து நிற்க, அவன் கையில் தந்தை வாங்கிய PC-Quest மாத இதழ் + அந்த பிளாஸ்டிக்.

“டேய் ரகு, விஷயம் தெரியுமா... இதோட பேர் காம்பாக்ட் டிஸ்க்காம். இதோட கப்பாஸிடி.... கப்பாஸிடி... அவனுக்கு மூச்சு வாங்கியது... அறுநூத்து ஐம்பது MB-யாம்டா...”

‘என்னாது... அறுநூத்து ஐம்பதா’... ஒரு நொடி கண்ணிருட்டி மயக்கம் வந்து தெளிந்தது.

“PC-Quest-இன் 25 ஆவது இஷ்யுவை கொண்டாட இத ஃப்ரீயா குடுத்திருக்காங்கடா...”

மேற்கொண்டு அவன் சொன்னது எதுவும் காதில் ஏறவே இல்லை. எங்கள் கல்லூரியின் லேப்பில் இருக்கும் கம்ப்யூட்டர்களின் ஹார்ட்-டிஸ்கின் அதிகபட்ச கொள்ளளவே 16 MB-தான். பாதி கம்ப்யூட்டர்களுக்கு ஹார்ட்-டிஸ்கே கிடையாது. அவைகளில் இரண்டு ஃப்ளாப்பி டிரைவ்கள் இருக்கும். Command.com என்ற பைலைக் கொண்ட ஒரு ஃப்ளாப்பியை முதல் டிரைவில் நுழைத்து பூட் செய்து கொள்ள வேண்டும். இரண்டாம் டிரைவில் நுழைக்கப்படும் ஃப்ளாப்பிதான் அந்தக் கம்ப்யூட்டரின் ஹார்ட்-டிஸ்க். லேப்பில் இருக்கும் அனைத்து கம்ப்யூட்டர் ஹார்ட்-டிஸ்குகளின் கொள்ளளவைக் கூட்டினாலும் 100 MB தேறாது. இதனால் அறுநூத்து ஐம்பதைக் கேட்ட காதில் இடி இறங்க, இயல்பு நிலைக்கு மீள முடியாமல் இயந்திர கதியில் நடந்து என் சீட்டில் அமர்ந்தேன்.

ஆங்கில ப்ரொஃபஸர் நுழைய வகுப்பு துவங்கியது. ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் ஸீசர் நாடக பாடத்தை நடத்தத் தொடங்கினார். மனம் அதில் லயிக்காமல் தருமி போல் புலம்பத் தொடங்கியது. “ஒரு MB-யா ரெண்டு MB-யா... அறுநூத்து ஐம்பது MB ஆச்சே.... அறுநூத்து ஐம்பது MB ஆச்சே....”

ப்ரொஃபஸர், சீசரைப் போல பாடி-லாங்வேஜூடன் எதையோ சொல்ல, அவர் ஜோக் அடித்துவிட்டதாக நினைத்து, ஹஹ்ஹஹ்ஹா என்று வாய்விட்டு சிரித்தேன்.

அந்தோ பரிதாபம். அறுபது பேர் இருந்த வகுப்பில் நான் மட்டுமே சிரித்திருக்கிறேன். இதனால் அடுத்த நொடியே ஒட்டு மொத்த வகுப்பும் சிரித்து அதிர்ந்து அடங்கியது.

“என்னாச்சு”

‘ஒண்ணுமில்ல சார். கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன்”

அவர் பாடத்தைத் தொடர, மனம் மீண்டும் அரற்றியது.

“ஐயோ, அந்த டிஸ்கை விசிறிய வேகத்தில், அது டேபிளிலிருந்து கீழே விழுந்திருந்தால், துப்புரவு செய்பவர் தூக்கி போட்டிருப்பார்களே!”

அதற்கு மேல் நிலை கொள்ள முடியாமல், அடுத்த வகுப்புகளை கட் அடித்துவிட்டு சைக்கிளில் வீட்டிற்குப் பறந்தேன். என் வேகத்தில் வழியில் இருக்கும் மயான பூமிக்கடியில் இருப்பவர்களின் நீடு துயில் கூட சற்றுக் கலைந்திருக்கும்.

‘டைனிங் டேபிளில் டிஸ்கைக் காணோம்’

தரையில் லேசாக பினாயில் நெடி அடிக்க... போச்சு... போச்சு, வீட்டை பெருக்கி துடைத்தாகிவிட்டது. டிஸ்க்கை தூக்கி போட்டிருப்பார்கள். ஒரு நப்பாசையுடன் ஹாலின் இண்டு இடுக்கிலெல்லாம் தேடினேன். ம்ஹூம் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரம் துக்கம் தாங்கவில்லை. சரி, கல்லூரிக்குக் கிளம்ப வேண்டியதுதான் என நினைத்து சாப்பிட டைனிங் டேபிளை நெருங்க, துள்ளிக் குதித்தேன்.

வெளியே கிளம்பும் அவசரத்தில், சரியான தட்டு கிடைக்காததால் ஈய சொம்பின் வாய் விட்டத்திற்குச் சரியாக இருந்ததால், டிஸ்க்கினால் அதை மூடிவிட்டுச் சென்றிருக்கிறார் என் அன்னை.

ரச நீர் ஆவியில் குளித்தபடி MB-களைச் சிமிட்டியது, நான் கண்ட முதல் சி.டி.