Showing posts with label ஹரிணி. Show all posts
Showing posts with label ஹரிணி. Show all posts

Saturday, August 31, 2013

எழுதிய பாடல் 3: பட்டீஸ்வர துர்க்கையே...

பாடியவர்: ஹரிணி
ஆல்பம்: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி
இசை: மண்ணச்சநல்லூர் கிரிதரன்

பள்ளிப் பருவத்தில் பொன்னியின் செல்வன் படித்த நாள் முதலாக, சோழன், அருள்மொழி வர்மன் போன்ற பெயர்களைக் கேட்டாலோ, கும்பகோணம், பழையாறு போன்ற இடங்களுக்குச் சென்றாலோ நம்மையும் ஒரு சோழனாய்க் கற்பித்துக் கொண்டு மனம் கிளர்ச்சியடையும். அதற்கு அமரர் கல்கியின் எழுத்து வன்மையே காரணம்.

அப்படியிருக்க, பழையாறில் சோழன் மாளிகை அரணில் குடிகொண்டிருந்த துர்க்கைக்கு, ராஜராஜன் உட்பட பல சோழ மாமன்னர்கள் காவல் தெய்வமாய் வழிபட்ட துர்க்கைக்குப் பாட்டெழுதத் தொடங்கியபோது மனம் கொண்ட உணர்ச்சிகளை, சொந்த அனுபவங்களை வரிகளாய் வடித்து விட்டேன்.

துர்க்கையை ஏன் காவல் தெய்வமாய் வழிபடுகிறார்கள்?

துர்கம் என்பது மலை, அரண், மலைக் கோட்டை, அகழி என்றெல்லாம் பொருள் தரும். பகைவனிடமிருந்து காக்கும் இதற்கு சக்தி வடிவம் கொடுக்க அது துர்க்கை தெய்வமானது. காளியும் அது போலவே. ஆனால் அவள் அமர்ந்த நிலையிலிருப்பாள். துர்க்கை நின்ற நிலையிலிருப்பாள்.

இந்த துர்க்கை, வழக்கமான உக்கிர வடிவிலிருந்து வேறுபட்டு, சாந்த சொரூபியாக காட்சியளிக்கிறாள். சோழர் காலத்திற்குப் பின், தஞ்சை நாயக்கர்கள், பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர் சிவாலய வளாகத்தில் அழகிய யாளி தூண்களுடன் தனிக் கோவில் அமைத்து அங்கே இத்த துர்க்கையைப் பிரதிஷ்டை செய்தனர்.

பாடலை எழுதி முடித்த பின், துர்க்கையின் பிற பெயர்களை சரிபார்க்க நவதுர்க்கை என்ற புத்தகத்தைப் பிரித்தேன். துர்க்கைக்கு வடமொழி பதம் துர்கா. அதை த + உ + ர + க + ஆ பிரித்து பொருள் விளக்கப்பட்டிருந்தது.

த - அசுரர்களை (அ) அசுர எண்ணங்களை அழித்தல்
உ - இடையூறுகளைப் போக்குதல்
ர - வியாதிகளை நிவர்த்தி செய்தல்
க - பாவங்களை நசிக்கச் செய்தல்
ஆ - பயம் மற்றும் சத்ருக்களை அழித்தல்

பாடலின் சரணங்கள், கிட்டதட்ட இதே அர்த்தத்தில், இதே வரிசையில் அமைந்ததைக் கண்டு திகைத்தேன். பின் உணர்ந்தேன். என் கையைப் பிடித்து எழுதியது துர்க்கை.

பல்லவி:
பட்டீஸ்வர துர்க்கையே பட்டத்துன்பம் போதுமே
மனதினில் நீயே குடிகொண்டாயே கருணை செய்வாய் தாயே

சரணம் 1: 
சந்தன ருபீ நீயம்மா என் நொந்திடும் மனதை பாரம்மா
அக்கிரமங்கள் எங்கும்மா உன் சாந்தத்த கலைச்சு காக்கணும்மா
பராசக்தி நீ மகிஷமர்த்தினீ சோழனின் வீரத் தாய் நீ
சிவனின் கோபம் காட்டி பகைவன் போக்க வேண்டும் (மனதினில்)

ராகுவின் தேவி நீயம்மா எனை பிடித்திடும் தோஷம் நீக்கம்மா
அங்காரகனோ தொடருதம்மா உன் சூலத்த வளைச்சு விரட்டம்மா
பஞ்சசக்தி நீ விந்தியவாசினீ கண்ணனின் நாபித் தாய் நீ
விஷ்ணுவின் பாசம் கூட்டி நல்வினை காக்க வேண்டும் (மனதினில்)

சரணம் 2:
கௌசிகன் திரியை போலம்மா என் வெந்திடும் தேகம் ஆற்றம்மா
மருத்துவங்கள் இனி இல்லையம்மா என் நாடிய புடிச்சு காக்கணும்மா
மூலசக்தி நீ சிம்மவாகினீ உயிரின் தீபத் தாய் நீ
எமனின் வாசம் ஓட்டி செய்வினை போக்க வேண்டும் (மனதினில்)

அரக்கனின் கைதி போலம்மா எனை வாட்டிடும் துன்பம் ஏனம்மா
துர்கணங்கள் எனை தொடருதம்மா உன் நெஞ்சில் அணைச்சு காக்கணும்மா
ஆதிசக்தி நீ துர்கநாசினீ தேவர்கள் காவல் தாய் நீ
துர்க்கன் நாசம் காட்டி தீவினை போக்க வேண்டும் (மனதினில்)

ராகாவில் இந்த ஆல்பத்தின் சுட்டி: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி

Tuesday, December 11, 2012

எழுதிய பாடல் 2: மாங்காடு காமாட்சி


பாடல்: மாங்காட்டில் வாழும் எங்கம்மா
பாடுபொருள்: மாங்காடு காமாட்சி
பாடியவர்: உண்ணி கிருஷ்ணன், ஹரிணி
ஆல்பம்: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி
இசை: மண்ணச்சநல்லூர் கிரிதரன்

கணவன் சீரியசாக ஒன்றைச் செய்யும் போது, மனைவி விளையாட்டாய், ஆசையாய்க் குறுக்கிட, அது சண்டையில் முடியாத வீடுண்டா? வீட்டுக்கு வீடு வாசற்படிதான். கயிலை வீட்டுக்கும் வாசற்படிதான்.

உலக காரியத்தில் இருந்த சிவனின் கண்களை, பார்வதி விளையாட்டாய் மூட, அது சண்டையாகி, பின் சாபமாகி பார்வதியைப் பிரிக்கிறது.

மீண்டும் சிவகரம் பிடிக்க, மாங்காட்டில் காமாட்சியாய் தீ குண்டங்களின் நடுவே, ஒற்றைக் காலில் நின்று கடும் தவமிருக்கிறாள் பார்வதி.

சிவன் கோபமிளகிப் புறப்பட, ஹையா... தங்கைக்குக் கல்யாணம் என விஷ்ணுவும் கணையாழியை சீதனமாய் எடுத்துக் கொண்டு புறப்பட கதையில் டிவிஸ்ட்.

இழந்த பார்வையைக் கேட்டு சுக்ராச்சாரியாரும் (வெள்ளி) மாங்காட்டில் சிவனை நோக்கித் தவமிருக்கிறார் (பார்வை இழந்தது தனி கிளைக் கதை). பத்தினியைவிட எனக்கு பக்தனே முக்கியம் என வெள்ளிக்கு அருளி வெள்ளீஸ்வரர் ஆகிறார் சிவன். பார்வதியை காஞ்சிக்குச் சென்று தவத்தைத் தொடரப் பணிக்கிறார்.

ஏமாந்து, வைகுண்டம் திரும்ப நினைத்த பெருமாளை, அங்கேயே தங்கும்படி மார்க்கண்டேயன் வேண்ட, அவரும் பக்த பக்திக்கு உருகி கணையாழியைக் கையில் பிடித்தபடியே அங்கு படுத்துக் கொள்கிறார். சிவன் பிற்பாடு, ஏகாம்பரநாதனாய், ஏகனாய் காஞ்சியில் காமாட்சியைக் கரம் பிடிக்கிறார்.

காமாட்சி, வெள்ளீஸ்வரர், வைகுண்ட பெருமாள்... மூவருக்கும் தனித்தனி கோயில்கள் மாங்காட்டில் அருகருகே. இளங்காலையில் இங்கு சென்று வருவதே ரம்மியமான அனுபவம்.

காமாட்சியின் கருவறையில், ஆதி சங்கரர் ஸ்தாபித்த மகாமேருவே இங்கு பிரதானம். மூல விக்கிரகத்தின் முன் ஒளிரும் விளக்கே காமாட்சி விளக்கு.

இங்கு வேண்டுதல் நிறைவேற, எலுமிச்சையுடன் ஆறுவாரங்கள் வழிபடுகிறார்கள்.

இத்தல வரலாற்றைப் பாடி, காதல் மனங்களாய் திருமணம் வேண்டி, பின் தம்பதியாய் நல்மகவை வேண்டுவது போல பாடலை வடித்திருக்கிறேன்.

முதல் சரணத்தை உண்ணி தொடங்கி ஹரிணி தொடர, அடுத்த சரணத்தை ஹரிணி தொடங்கி, உண்ணி தொடர... இது ஒரு பக்தி டூயட்!

கோரஸ்:
எங்கம்மா மாதங்கி
என்றும் நீ தாதங்கி
விரும்பி விரும்பிதான்
கொடுப்பாய் நீயே வா வா வா வா

பல்லவி:
மாங்காட்டில் வாழும் எங்கம்மா - நீ
பூங்காட்டின் வாசம் தெய்வம்மா

அனுபல்லவி:
ஆடிப் பொன் மாதம்தான் கூடிக் கூழ் சாதம்தான்
பந்தல் தச்சி பந்தி வெச்சுத்தான் கும்பிட்டேன் (மாங்காட்டில்)

சரணம் 1:
ஆதிகாமாட்சி தாயே அக்கினி் தவசியே
ஏகனின் காதலும் நீயே

வைகுண்ட வாசனின் கணையாழி காக்கும்
தீகுண்ட வரத்தை காஞ்சியில் பார்க்கும்

சிவமண தவத்தை நான் பாடி
திருமண வரத்தை நான் நாடி

ஆறு வாரந் தோறும் எலுமிச்சை கொண்டும்
மஞ்சள் கட்டி மேரு சுத்தித்தான் கும்பிட்டேன் (மாங்காட்டில்)

சரணம் 2:
வெள்ளீஸ்வரனின் தேவி ஒற்றைக்காலில் நின்றாய் நீ
ஏழையின் காவலும் நீ

கிளி உந்தன் கையில் உன்னருள் பேசும்
அளி எந்தன் பிள்ளை என்மனம் பொங்கும்

காமாட்சி விளக்கொளியை தேடி
என் மனவொளி வேண்டி தேவி

ஆடி வெள்ளி தோறும் செவ்வரளி கோத்தும்
தொட்டில் கட்டி மேரு ஒத்தித்தான் கும்பிட்டேன்  (மாங்காட்டில்)

ராகாவில் இந்த ஆல்பத்தின் சுட்டி: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி
ஹரிணி Solo-வாகவும் பாடியிருக்கிறார்.

Friday, December 7, 2012

எழுதிய பாடல் - 1: சமயபுர மாரியம்மன்

சமீபத்தில் சென்னை வந்திருந்த எழுத்தாளர் என். சொக்கனைச் சந்தித்தேன்.

‘நீங்கள் எழுதிய பாடல்களை, அதன் குறிப்புடன் ஒவ்வொன்றாகப் பதிவிடலாமே...’

கம்ப ராஜனை, இளையராஜாவைப் பற்றி தொடர்ந்து எழுதும் இவர், இப்படிச் சொல்லி என்னை ஊக்கிவிட..

இதோ எனது பாடல்களின் பதிவு வரிசை.

பாடல்: அம்மா... மாரியம்மா...
பாடுபொருள்: சமயபுர மாரியம்மன்
பாடியவர்: ஹரிணி, மண்ணச்சநல்லூர் கிரிதரன், குழுவினர்
ஆல்பம்: ஓம் நவசக்தி ஜெய ஜெய சக்தி
இசை: மண்ணச்சநல்லூர் கிரிதரன்

ஆடி சமயத்தில், சமயப் பாடல்களை எனக்கு அருளியவள் சமயபுர மாரியே.

திருச்சி பெருவளை வாய்க்கால் கரையோரம், கண்ணபுரம் என்றழைக்கப்பட்ட சமயபுரத்தில் கொலு வீற்றிருந்து, குழந்தைகளை அம்மை நோயிலிருந்து காக்க, தானே கடும் விரதமிருக்கும் பெருந்தகை அவள்.

அவள் தலைமேல் ஐந்து தலை நாகம் குடை விரிக்க, அதுவே சொற்பதமாகி முதல் சரணம் துவங்கியது...

    சர்ப்பக் குடை ஆட்சிகள் கண்ணபுரக் காட்சிகள்
    அன்னை மாரி தந்த தரிசனம்...

அவளிடம் சரணடையும் விதமாக, ஹரிணி சரணங்களைப் பாட, சரணத்தின் இடையிரு வரிகளை சிலிர்க்க வைக்கும் குரலில் கிரிதரன் பாடியிருக்கிறார்.

பல்லவி:
அம்மா... மாரியம்மா...

சமயபுரத்தாயி நீ அபய கரம் தாயேன் மாயி
பெருவளை வாய்க்காலில் நீ இருக்கிறாயே தீர்த்தமாயி (அம்மா)

சரணம்:
சர்ப்பக் குடை ஆட்சிகள் கண்ணபுரக் காட்சிகள்
அன்னை மாரி தந்த தரிசனம்

வெப்பம் பொங்க தவிக்கிறேன் நோயும் அண்ட அழுகிறேன்
வேப்பந் தரித்துக் கேட்கிறேன் அம்மை தடுத்து காக்க வேணும் (அம்மா)

புள்ள பெத்த ஆத்தா சிரிச்சா
விரதம் கொண்டு நோயுந் தீர்த்தா

மகத்துவமே... மகத்துவமே...
மருத்துவமே... மருத்துவமே...

மகத்துவம் எங்களுக்கு பொங்கலுக்கு வந்து உண்ணு (அம்மா)

சரணம்:
தீ மிதிக்கும் அங்கங்கள் அலகு தாங்கும் உள்ளங்கள்
அன்னை மாயி காக்கும் கரிசனம்

சேறு பூசிக் கொள்கிறேன் சோறு மண்ணில் உண்கிறேன்
பாதம் அண்டி கேட்கிறேன் சொந்தங் கொஞ்சங் காக்க வேணும் (அம்மா)

ஏழு உலகை ஆத்தா படைச்சா
ஏழை உறவை காத்து அணைச்சா

பரவசமே... பரவசமே...
பரிமளமே... பரிமளமே...

பரவசம் எங்களுக்கு பந்தலுக்கு வந்து உண்ணு (அம்மா)

சரணம்:
மாயன் தந்த ஆடைகள் ஈசன் தந்த மாலைகள்
மங்கை மாயி கொண்ட சீதனம்

பூவை சிரசில் கொட்டுறேன் பாதம் அலம்பிக் கேட்கிறேன்
அங்கம் புரண்டு வேண்டுறேன் தாலி காத்து அருள வேணும் (அம்மா)

ஆதி பீட ஆத்தா உதிச்சா
வீடு வந்து சோகம் துடைச்சா

கற்பகமே... கற்பகமே...
அட்சயமே... அட்சயமே...

கற்பகம் எங்களுக்கு திங்களுக்கும் இங்கு தங்கு (அம்மா)

ராகாவில் பாடல்: அம்மா... மாரியம்மா...

Friday, July 27, 2012

ஓம் நவ சக்தி ஜெய ஜெய சக்தி


1992

‘ரகு... நீ பாடினது போதும். முடிச்சுக்கோ’

நான் இன்னும் முதல் சரணமே முடிக்கவில்லை. அதற்குள் பாட்டுப் போட்டியின் நடுவர்தான் இப்படிச் சொல்லி விட்டார். மற்றொரு நடுவர் உணர்ச்சியற்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார்.

நான் பாடினால் கர்ண கொடூரமாக இருக்கிறதென பள்ளி நண்பர்கள் கிண்டலடிக்க, ஒரு வீம்புக்காக பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டதில் மூக்குடைபட்டது.

அன்றுடன் பாத்ரூமில் பாடுவதையும் நிறுத்திக் கொண்டேன்.

-- கட் --

2012

‘ரகு... வீட்டுக்கு வா’

நான் முன்பு பணிபுரிந்த IT கம்பெனியின் நிறுவனர் கிரிதரன் போனில் அழைத்தார். சென்றேன்.

கீ-போர்டில் சில டியூன்களை வாசித்துக் காண்பித்தார்.

அவர் SSI, Radiant, Lambent, Elmaq, Onspec கம்பெனிகளை நடத்தியவர். தற்போது EdServ-ஐ நடத்திக் கொண்டிருப்பவர். இசைத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர். சில மாதங்களுக்கு முன் அவரே இசையமைத்து, பாட்டெழுதி, உண்ணி கிருஷ்ணன் பாட, ஒரு ஐயப்பன் இசை ஆல்பத்தை - அய்யன் மலை எங்கள் மலை - வெளியிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆல்பத்திற்கான டியூன்கள் இவையெனப் புரிந்தது.

‘இதெல்லாம் அம்மன் பாடல்களுக்கான டியூன்கள். ஆடியில் ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன்’

‘ரொம்ப நல்லா இருக்கு சார்’

அடுத்து அவர் சொன்னது, டெரர் கிளப்பியது.

‘இந்தவாட்டி பாட்ட நீ எழுது’

‘ஐயோ, பாட்டு எனக்கு ஒத்துக்காத விஷயம்னு உங்களுக்கே தெரியும். நீங்க தானா தானான்னு எதையாவது சொன்னீங்கனா, நான் வாணா வாணானு ஓடிடுவேன்’

‘அதெல்லாம் எனக்குத் தெரியும். உனக்காக சில டம்மி லைன்ஸ் போட்டு வெச்சுருக்கேன்”.

அதை அவர் பாட, எனக்கு டெரர் டபுளானது. அவையே அற்புதமாக இருந்தன.

‘இதுவே சூப்பரா இருக்கே. நான் என்னத எழுதறது’

‘சரியா பாரு. இது சந்தம் மட்டுமே. அர்த்தம் இல்லை. கிளம்பு. மூணு நாள்ல முதல் பாட்டோட வா’.

சரி. நமக்கு பாடத்தானே வராது. எழுதித்தான் பார்ப்போமே. எழுதிட்டா ரொம்ப வசதி. நம்ம பாட்டையே பாடும்போது யாரும் கிண்டலடிக்க மாட்டாங்களே!.

சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பாடல்.

    அம்மா... மாரியம்மா...
    
    சமயபுரத்தாயி நீ அபய கரம் தாயேன் மாயி
    பெருவளை வாய்க்காலில் நீ இருக்கிறாயே தீர்த்தமாயி (அம்மா)
    
    சர்ப்பக் குடை ஆட்சிகள் கண்ணபுரக் காட்சிகள்
    அன்னை மாரி தந்த தரிசனம்
    
    வெப்பம் பொங்க தவிக்கிறேன் நோயும் அண்ட அழுகிறேன்
    வேப்பந் தரித்துக் கேட்கிறேன் அம்மை தடுத்து காக்க வேணும் (அம்மா)

சந்தம் கச்சிதமாகப் பொருந்த, வேர் விட்ட நம்பிக்கையில் முழுப் பாடலும் வளர்ந்தது. பிற பாடல்களும் கனிந்தது.

முழு அர்ப்பணிப்புடன் இறையுடன் கலந்துவிட்டால், மாற்றமும் சாந்தமும் மனதில் தானாகவே குடிகொள்கின்றன. பட்டீஸ்வர துர்க்கையிடம் நெருக்கத்தையும், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் வருடலையும் உணர்ந்தேன்.

உண்ணி கிருஷ்ணன், ஹரிணியின் அற்புதக் குரல்களுடன் பாடல்கள் இசையரங்கேறின. கிரிதரனும் பாடியிருக்கிறார். 

இது கானாஞ்சலியின் “ஓம் நவ சக்தி, ஜெய ஜெய சக்தி” இசை ஆல்பமாய் வெளிவந்திருக்கிறது.


பாடல் குறிப்புகள்:

அம்மா மாரியம்மா - சமயபுரத்தாளை பெருவளை வாய்க்காலின் தீர்த்தமாகவும், பிள்ளைகளை அம்மை நோயிலிருந்து விடுவிப்பவளாகவும், தாலி காக்கும் ஆத்தாளாகவும் சித்தரிக்கிறது.

மாங்காட்டில் வாழும் எங்கம்மா - தீயின் நடுவே ஒற்றைக் காலில் தவம் புரிந்து சிவனை மணந்த காமாட்சியைப் பாடி, இருமனங்களாய் திருமண வரமும், தம்பதியாய் குழந்தை பாக்கியத்தையும் வேண்டுகிறது.

பட்டீஸ்வர துர்கையே - அனைத்திற்கும் மூல சக்தியான பராசக்தி துர்கையின் வடிவங்களைப் பாடி, அக்கிரமங்களை போக்கவும், தோஷங்களை நீக்கவும், மருத்துவம் கைவிட்ட நோய்களிலிருந்து காக்கவும், தொடரும் துர்கணங்களை விரட்டவும் மன்றாடுகிறது.

வருவாய் அருள்வாய் - வடபழனி சாந்தநாயகியை குலதெய்வமாக, அலைபாய்ந்த மனதில் வந்தமர்ந்து, அச்சத்தைத் தீர்த்து அமைதியைத் தந்த தேவியாகப் பாடுகிறது.

அகிலாண்டேஸ்வரி மாதா ஜனனி - யானையும் சிலந்தியும் பூஜித்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரனின் பாகமாய் இருப்பவளை, சிவனடியார் பெண்ணாய் வேடம் தரிப்பவளை அடைத்து, காலடியில் அழுது, தாய்மடி கேட்கிறது.

தேர் திருவிழா - மலையனின் பெண்ணாய், மதுரை வம்சியாய் உதித்து, பாண்டி நாட்டை ஆண்ட மீனாட்சியின் அழகை, சாம்பல் பித்தனின் மாலை கண்ட விதத்தைப் பாடுகிறது.

அகிலலோக ஜகந்நாயகி - சர்வ சங்கடங்களுக்கும் நிவாரணியாக இருக்கும் சோழங்கநல்லூர் ப்ரத்யங்கரா தேவியின் பஞ்சகம் இசையுடன் பாடலாய் கலந்திருக்கிறது.

இன்னமும் பாரா முகம் - நடிப்பிசைப் புலவர் (அமரர்) கே.ஆர். ராமசாமியின் பழமையான பாடல், புதிய இசையில் மீண்டும் ஒலிக்கிறது.

உண்ணா முலையம்மனே - தந்தனும் கந்தனும் உண்ணா முலையம்மனை, திருவண்ணாமலையாளும் தேவியை, பெண்களை அண்டும் முலையின் நோய்களிடமிருந்து காப்பவளாய் வரித்து, அவள் ஜோதியிடம் தஞ்சமடைகிறது.

பாடல்களை galatta.com-ல் கேட்கலாம், வாங்கலாம். இசையும் பாடலும் உங்கள் மன அழுத்தங்களை இளகச் செய்தால், அதுவே எங்கள் பாக்கியம்.