Thursday, July 8, 2010

பிரெஞ்சுப் புரட்சி

நாங்கள் படித்த யுனிவெர்சிட்டியில் பல வசதிகள். ஒரே சமயத்தில் இரண்டு மூன்று கோர்ஸ்கள் படிக்கலாம். அல்லது குறைந்த பட்சம் மற்ற டிபார்ட்மெண்ட்களுக்குச் சென்று பிடித்தமான பேப்பர்களைத் தேர்ந்தெடுத்தும் படிக்கலாம்.

படிக்கும் ஐ.டி துறைமூலம் விரைவிலேயே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து, உலகம் சுற்றும் வாலிபர்களாகப் போகிறோம் என்ற கனவில் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்ததால், லிங்குஸ்டிக் டிபார்ட்மெண்ட் சென்று ஒவ்வொரு செமஸ்டரிலும் ஒரு உலக மொழியைக் கற்கலாம் என்று முடிவெடுத்தோம்.

கடைசி செமஸ்டரில் கேம்பஸ் இண்டர்வியுவிற்கு வரும் முதல் கம்பெனிக்கு ஜப்பானில் கிளை இருப்பதால் முதலில் ஜப்பானிய மொழியைத் தேர்ந்தெடுத்தோம்.

எங்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்... ஸாரி... ஜப்பானிய ஆசிரியை மிக அழகாக அம்மொழியைக் கற்றுக் கொடுத்தார்.

போஸ்ட் கிராஜுவேட் படிக்கும் வயதில் கிள்ளை பிள்ளைகளாட்டம் ”எ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பனானா” என்ற ரீதியில் கோரஸாகப் படிப்பதும், முதன் முதலாக ஸ்லேட்டில் பலப்பம் பிடித்து எழுதுவது போல மொழியின் எழுத்துக்களை வரைவதும் (அம்மொழியின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு பூச்சியின் படம் போல வேறு இருந்தது) தமாஷாக இருந்தது.

எனக்கு மட்டும் ஒரு சின்ன வருத்தம். அவருக்கு ’ர’ உச்சரிப்பு வராமல், என்னை ”லகுலாம், லகுலாம்” என்று அழைத்துக் கொண்டிருந்தார்.

(ஆனால், கணையாழியின் கடைசி பக்கங்களில் தன் ஜப்பானிய பயண அனுபவத்தைச் சொல்லும் சுஜாதா, அவர்களுக்கு ’ல’ க்கு பதில் ’ர’ தான் வருகிறது என்கிறார். “புர்ரட் ட்ரெயின், புர்ரட் ட்ரெயின்” என்று அவர்கள் சொன்னது “புல்லட் ட்ரெயின்” என்று வெகு நேரத்திற்குப் பின்பே தனக்கு புரிந்தது என்றும் சொல்கிறார். ஒரு வேளை அந்த ஆசிரியை இந்தியா வந்துவிட்டதால் லகரமும், ரகரமும் இடமாறிவிட்டதோ?!)

சின்னஞ்சிறு கண்களுடன், எப்போதும் சிந்தும் புன்னகையுடன், ஒரு குழந்தைக்கு கற்றுத் தரும் கனிவுடன் அவர் பாடம் நடத்தியவிதம் எங்களை பிரைமரி ஸ்கூலின் கபடமற்ற நினைவுகளில் தாலாட்டியது.

நான்கு ஜப்பானிய வார்த்தைகள் கற்றுக் கொண்ட குஷியில், ‘அனதாவா ஜென்கி தேசுகா (நீங்கள் சௌக்கியமா)?, சயோனாரா மாதாஆய் மாசோ (டாடா பை பை) ’ என்றெல்லாம் எதிர்பட்டவர்களிடம் பேசி, அவர்கள் முகம் வெளிர வைத்தோம்!

ஒரு மொழியைக் கற்கும்போது பரிசயமற்ற உச்சரிப்புகளில் நா பிறழ்வதும், புதிய புதிய வார்த்தைகளின் நளினத்தில் மனம் புரள்வதும் ஒரு சுகானுபவம்.

அந்த அனுபவம் தந்த உற்சாகத்தில், அடுத்த செமஸ்டரில் எந்த மொழியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று, நண்பர்கள் ஒன்று கூடி விவாதித்தோம். அப்போது, என்னுடைய ஐ.பி.எல் பதிவின் நாயகன் கிருஷ்ணன் எங்கள் முன் தோன்றி, பிரெஞ்சு மொழியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று ஆலோசனை கூறினார். தான் பிளஸ்ஒன் முதலே அதைப் படித்ததாகச் சொல்லி, அம்மொழியின் அருமை பெருமைகளையெல்லாம் சிலாகித்துச் சொன்னார்.

ஆஹா, பிரெஞ்சு மொழியைக் கற்று, அப்படியே கன்கார்ட் விமானத்தில் லண்டனிலிருந்து பாரிஸூக்குப் பறந்து, ஈஃபிள் டவர் அருகே நின்று எதிர்ப்படுபவர்களிடம் ”மான்சியூர்” சொல்லி போட்டோவெல்லாம் எடுத்துக் கொள்ளலாம் எனக் கனவு கண்டோம்.

முதல் நாள் வகுப்பு. பிரெஞ்சு ஆசிரியையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால் வந்ததோ ஒரு உள்ளூர் ஆசாமி. சிரிப்பை பாதாள லோகத்தில் புதைத்து விட்டார் போல; சுரத்தே இல்லாமல் வகுப்பெடுத்தார்.

ஜப்பானிய பாஷை கடினமாக இருந்தாலும் கற்க முடிந்தது. ஆனால் பிரெஞ்சு பாஷை ரெண்டுங்கெட்டானாக இருந்தது. சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் ரொம்பவே மெனக்கெட வேண்டியிருந்தது. எண்ணிக்கையைச் சொல்ல இருபதுக்கு மேல் வார்த்தைகளே இல்லை. உதாரணமாக 97 என்பதை ‘குவாதர் வான் திசெப்ட்” என்று சொல்ல வேண்டும். குவாதர் என்றால் நான்கு, வான் என்றால் இருபது, திசெப்ட் என்றால் பதினேழு. அதாவது நான்கு இருபது பதினேழு என்று சொல்ல வேண்டும். என்ன கொ. சரவணா இது?!

இதைவிடக் கொடுமை, எழுத்துக்கள் ஆங்கிலம் போன்றே இருந்தாலும், உச்சரிப்பிற்கும் ஸ்பெல்லிங்கிற்கும் சம்பந்தமே இல்லை. இந்த வான்-னுக்கான ஸ்பெல்லிங் Vingt. பொதுவாக எழுத்தைக் கூட்டி படிக்கச் சொல்வார்கள். இங்கே சில எழுத்துக்களை கழித்துப் படித்தாலும் உச்சரிப்பு வரவில்லை. உச்சரிப்பைப் படித்தால் தியரி எக்ஸாமிலும், ஸ்பெல்லிங்கைப் படித்தால் வைவாவிலும் பெயிலாகி அழ வேண்டியதுதான்.

எங்களை பெயிலின் பாதைக்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணனை பார்க்கும் போதெல்லாம் காது புகைந்தது. பரீட்சையும் வந்து விட்டது. முதலில் வருவது தியரியாதலால், டைப்ரைட்டிங் கிளாசில் ஆங்கிலமே தெரியாமல் ஒவ்வொரு எழுத்தாக டைப் அடித்தது போல, உருப்போட்டு மனனம் செய்து பரீட்சையை எழுதிவிட்டேன்.

மறுநாள் வைவா. ஹாஸ்டலில் கிருஷ்ணன் மடையான தண்ணி குடித்து சொல்லிக் கொடுத்தார். மற்றவர்களெல்லாம் தட்டுத்தடுமாறி கற்க, நம்ம மூளைக்கு உச்சரிப்பு ஏறவே இல்லை. இரண்டாவது பக்கத்தை படிக்கும் முன்பே முதல் பக்கம் அடியோடு மறந்து போனது. ”போடா, நீயும் உன் பிரெஞ்சும்” என்று சலித்துக் கொண்டு தூங்கச் சென்றேன். “டேய், பொறுப்பில்லாமல் படுக்காதே, நிச்சயம் பெயிலாயிடுவே” என்று அவர் திட்டிக் கொண்டிருக்க, அதை சட்டை செய்யாமல் தூங்கியே விட்டேன்.

விடிந்தது வைவா தினம். முதலில் சென்றுவந்த நண்பன், ”நமது பிரெஞ்சு புத்தகத்திலிருந்து ரேண்டமாக ஒரு பக்கத்தைப் பிரித்து, அதைப் படித்து அர்த்தமும் சொல்லச் சொல்கிறார்கள்” என்றான். அட அவ்வளவுதானா... ஒரு சுலபமான பக்கத்தை தேர்ந்தெடுத்து, அதை சொல்லிக் கொடுக்க கிருஷ்ணனை விளித்தேன். “இத மட்டும் படிச்சு என்னடா பண்ணபோற?” எனப் புலம்பிக் கொண்டே சொல்லிக் கொடுத்தார். அந்த பக்கத்தை ஒரு பத்து தடவை நன்றாக படித்துக் கொண்டேன்.

என் திட்டம் இதுதான். சுண்டு விரலை புக்மார்க்காக வைத்து புத்தகத்தை மூடிக் கொள்வது. எப்பக்கத்தைக் கேட்டாலும், இப்பக்கத்தை தற்செயலாக திறப்பது போல் நடித்து படிக்கத் தொடங்கிவிடுவது. பிறகு நடப்பது அந்த சாட்சாத் கிருஷ்ணன் விட்ட வழி (வேறு என்னதான் செய்ய?!).

என் முறை வர உள்ளே சென்றேன். அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வருவது அதுதானோ? நான் படித்த இருபத்தி ஏழாவது பக்கத்தைதான் எக்ஸ்டர்னல் திறந்து வைத்தார். அதை ஓரக் கண்ணால் கவனித்துவிட்ட நான், டக்கென சுண்டுவிரலை எடுத்து விட்டு, நிதானமாக அமர்ந்து...

’வார்ம் கீரீட்டிங்ஸ் இன் திஸ் பிளசண்ட் மானிங்’ என்றேன்.

“ஹொ... வெல்கம்.. யு லுக் ஸோ ரிலாக்ஸ்ட்” என்றார். (பின்னே இருக்காதா?)

’வாட்ஸ் தி பேஜ் நம்பர் சார், ஈஸ் ட் ட்வெண்டி செவன்? ஜஸ்ட் எ செகண்ட்’... அப்பக்கத்தை புரட்டி, நெப்போலியன் பூமியில் பிறந்தவன் போல் மடமடவென படித்து அர்த்தத்துடன் அடுக்க...

”ஹோ.. ஹவ் ஃபுலூயண்ட் யு ஆர்... தட்ஸ் இனஃப்” என்றார்.

”தட் ஈஸ் யுவர் ஜெனராசிட்டி, அதர்வைஸ் வாட் ஆம் ஐ?” என்று நன்றி கூறி, ‘கிருஷ்ணா, இதுவல்லவோ உன் லீலா’ என்று புல்லரித்தபடி வந்து விட்டேன்.

அடுத்தது நண்பர் கிருஷ்ணனின் முறை. அவருக்கு மிகக் கடுமையான பகுதி வர, அவர் தன் புலமையைக் காட்டப் போக, ஏதோ களேபரம் ஆகியிருக்கிறது.

ரிசல்டைப் பார்த்தால், ஐந்து வருடம் படித்த அவருக்கு C கிரேடும், ஐந்து நிமிடம் படித்த எனக்கு B கிரேடும் கிடைத்திருந்தன.

Friday, June 25, 2010

ட்விட்டருக்கு ஆபத்து?


உலக கோப்பை கால்பந்தாட்ட ஜூரத்தின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், அதன் ரசிகர்கள் எழுதும் ட்வீட்ஸ் (Tweets)-களின் எண்ணிக்கையை தாக்குப் பிடிக்க முடியாமல் ட்விட்டர் நிலைகுலையக் கூடும் என்று சில மென்பொருள் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதைப் படிக்கையில் எனக்கு சிரிப்புதான் வந்தது. ஏனென்றால், "எத்தனை கோடி டேட்டா (data) தந்தாய் உலகே" என்று ஜாலியாகப் பாடிக் கொண்டிருக்கும் ட்விட்டர், இன்னும் எத்தனை கோடி டேட்டா தந்தாலும், இது எனக்கு கவுரவப் பிரசாதம் என்று ஸ்வாஹா செய்து விடும். காரணம் அது ட்வீட்ஸ்களை சேமிக்கும் டேட்டாபேஸ் (Database)-ஐ கட்டிக் காப்பது சர்வ வல்லமை பொருந்திய இளவரசி காசண்ட்ரா (Cassandra).

பண்டைய துருக்கி நாட்டின் புகழ்பெற்ற ட்ராய் (Troy) நகரின் இளவரசி காசண்ட்ராவிற்கும் ட்விட்டருக்கும் என்ன சம்பந்தம்? இதன் நதிமூலம் கூகுள். அங்கிருந்தே விளக்குகிறேன்.

இன்று இன்டர்நெட்டின் மொத்த ட்ராஃபிக்-இல் 45 சதவீதம் கூகுளை நோக்கியே. கூகுள் எப்படி இதைத் தாக்கு பிடிக்கிறது? அது எப்படி அதன் டேட்டாவை சேமித்து வைக்கிறது? எதைக் கேட்டாலும் எப்படி அதனால் உடனே தர முடிகிறது என்றெல்லாம் யோசித்ததுண்டா?

ஒன்று வாங்கினால் இன்னொன்று ஃப்ரீ, மாடு வாங்கினால் ஆடு ஃப்ரீ, ஆடு வாங்கினால் வாத்து ஃப்ரீ என்ற ரீதியில் மற்ற நிறுவனங்களெல்லாம் செயல்பட, நீ எதுவுமே வாங்க வேண்டாம் ராசா, உனக்கு எல்லாமே ஃப்ரீ என்று எப்படி கூகுளால் தர முடிகிறது என்றாவது யோசித்ததுண்டா?

பொதுவாக பெருமளவு டேட்டாவை சேமிக்க பெரிய பெரிய ஹார்ட்வேர் (hardware), டேட்டாபேஸ் சர்வர்கள் (database servers), சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றில் மில்லியன் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் கூகுள் தனக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இதற்கு வீணடிக்காமல் மாத்தியோசித்தது.

டேட்டா தின்று கொட்டை போட்ட Oracle, SQL Server ஆகியவற்றை ஒதுக்கித்தள்ளி பிக் டேபிள் (Big Table) என்ற புதிய டேட்டாபேஸ்-ஐ உருவாக்கிக் களமிறக்கியது. இது மின்னல் வேகத்தில் செயல்படக் கூடியது. ஆனால் இதனை சாதாரண கம்ப்யூட்டரில் கூட நிறுவ முடியும். மலிவான சிறிய சிறிய கம்ப்யூட்டர்களை பிக் டேபிளுடன் உலகெங்கும் நிறுவி அவற்றை மேகம் போன்ற ஒரு நெட்வொர்க்-கில் இணைத்தது.  இதற்கு க்ளவுட் கம்யூட்டிங் (Cloud Computing) என்று பெயர்.

இந்தக் க்ளவுடில் இருக்கும் கம்ப்யூட்டர்கள், "என்கிட்ட இது இருக்கு, உன்கிட்ட என்ன இருக்கு, நீ இத வச்சுக்கோ, நான் இத வச்சுக்கிறேன்" என்றெல்லாம் வளவள லொடலொட எனப் பேசி டேட்டாவை பண்டமாற்றிக் கொள்ளும். இதற்கு காஸிப் ப்ரோட்டோகால் (Gossip Protocol) என்று பெயர். இதன் மூலம் இந்த நெட்வொர்க்கில் ஒரு கோடியில் நுழையும் டேட்டாவானது சில நிமிடங்களிலேயே மேகமாக ஆனால் சற்று வேகமாக நகர்ந்து, வழியெங்கும் பிரதி (copy) எடுத்தபடியே, மறு கோடிக்குச் சென்று விடும். இதனால், உலகின் எந்த மூலையிலிருந்து கேட்டாலும், உங்களுக்கு அருகிலுள்ள கூகுளின் கம்யூட்டர் "இதானே கேட்டீங்க, இந்தாங்க வெச்சுக்கோங்க" என உடனே கொடுத்துவிடும். இதுவே கூகுள் வெற்றியின் ரகசியம்.

கூகுள் தன் பிக் டேபிளின் சூட்சுமங்களை வெளி உலகிற்குக் கோடிட்டுக்காட்ட, அதை வைத்து ஃபேஸ்புக் (Facebook), கணினிச் செம்மொழியான ஜாவாவைப் (Java) பயன்படுத்தி, பிக் டேபிள் என்ற சக்ரவர்த்திக்கு மகளாக ஒரு புதிய டேட்டாபேஸ்-ஐ உருவாக்கியது. அதற்கு காசண்ட்ரா என்ற நாமகரணமும் சூட்டியது. ஆக துருக்கி தேச இளவரசி, இப்பிறவியில் டேட்டாபேஸ்-ஆக அவதரித்து விட்டாள். ஆனால் ஃபேஸ்புக்கில் அவள் வளர போதுமான வசதிகளில்லை.  Apache.org என்ற ஓபன் ஸோர்ஸ் (Open Source) அரண்மனைக்கு அவள் அனுப்பப்பட்டாள். அங்கே அவள் சகல வித்தைகளையும் கற்று, யௌவனங்கள் நிறைந்த அரசிளங்குமரியாய்த் திரும்பி ஃபேஸ்புக்கில் அரியணை ஏறினாள்.  அன்று முதல் ஃபேஸ்புக்கின் முகம் மேலும் பிரகாசிக்கத் தொடங்கியது.

காசண்ட்ராவின் கொடியிடை அழகிலும் (Smallest Database), ஆட்சித் திறத்திலும் (Replicating the database), மாட்சித் திறத்திலும் (Maintaining the database) மயங்கிய ட்விட்டர் அவள் தலைமையை ஏற்றது (அப்பாடா!! கூகுளில் தொடங்கி ஃபேஸ்புக் வழியாக ட்விட்டரில் முடித்து விட்டேன்!). Digg.com, Outbrain.com போன்ற ஜாம்பவான்களும் தங்களை காசண்ட்ராவுடன் இணைத்துக் கொண்டன.

காசண்ட்ராவின் ஆட்சி விரியத் தொடங்கியது. அவள் சாம்ராஜ்யத்தில் கால்பந்தாட்ட மைதானங்களெல்லாம் கால் தூசிற்குச் சமம். இப்போது நான் சிரித்ததன் அர்த்தம் புரிகிறதா?!!

பெரும் ராஜ்ஜியங்களைப் பிடித்தபின், குழந்தையிடம் விளையாட வருவது போல் காசண்ட்ரா இப்போது என்னிடம் வந்துள்ளாள். டெரா பைட்ஸ் (Tera Bytes) கணக்கில் டெட்டா புரளும் என் ப்ராஜெக்ட்-ன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நான் பணிபுரியும் கம்பெனியில் இளவரசியை களமிறக்கிக் கொண்டிருக்கிறேன்.

Saturday, June 12, 2010

பேர் சொல்லாத பிள்ளை

மறதி ஒரு வரப்பிரசாதம். சிலவற்றை மறக்க முடிவதால்தான் வாழ்க்கை தொடர்கிறது. ஆனால், இதெல்லாம் மறக்கும், இப்படியெல்லாம் மறக்கும் என்ற நிலைகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, மறக்கவே கூடாத, மறக்கவே முடியாததை நான் மறந்திருக்கிறேன். குழம்புகிறதா? சொல்கிறேன்!

அப்போது நான் ஏழாங் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். வேறொரு பள்ளியில் கட்டுரை போட்டி. அப்பள்ளியின் பி.டி மாஸ்டர் தான் போட்டிக்குச் சூப்பர்வைசர். அவர் மிலிட்டரியிலிருந்து ரிடையர் ஆனவராம். இன்னமும் அதே மிடுக்குடன் அறிவித்தார்.

"போட்டி நேரம் இருபது நிமிடம் மட்டுமே. அதற்குள் கண்டிப்பாக எழுதி முடித்து விட வேண்டும்" என கட்டளையிட்டு விசிலடித்தார்.

என்னுடைய கட்டுரைக்கு இருபது நிமிடம் ரொம்ப குறைவு என்பதால், உடனடியாக பரபரவென எழுதத் தொடங்கினேன். மிலிட்டரி அடுத்த அறிவிப்பை செய்திருக்கிறார். “இப்பொழுதே உங்கள் பெயர், வகுப்பு, பள்ளி ஆகியவற்றை, பேப்பரின் வலது ஓரத்தில் எழுதி வைத்து விட வேண்டும்.” இருபது நிமிடம் முடிந்த உடனேயே பேப்பரை வாங்கி விடுவேன் என சொல்லியிருக்கிறார். ஆனால் எழுதும் மும்முரத்தில் அதை நான் கவனிக்கத் தவறியிருந்தேன்.

இரண்டொரு முறைதான் கண் சிமிட்டியிருப்பேன். அதற்குள் இருபது நிமிடம் கரைந்து விட்டது. மிலிட்டரி மீண்டும் விசிலடித்து "ஸ்டாப்... ஸ்டாப்..." என கத்தியதோடு மட்டுமில்லாமல் எல்லோரிடமிருந்து பேப்பரை பிடுங்கவும் தொடங்கியிருந்தார்.

இன்னும் ஒரு பத்தி மட்டுமே பாக்கி. எப்படியாவது முடித்து விட பெஞ்ச் அதிர எழுதிக் கொண்டிருந்தேன். அதற்குள் என் பேப்பரை பிடுங்கி விட்டார்.

”சார்.. சார்.. பேர் எழுதல.... ”

பளார்!!!!!!

”எழுதுடா... எழுத சொன்னபோது என்ன பண்ணிட்டிருந்த” என கர்ஜித்தார்...

வாங்கிய அறையில் உடம்பு நடுங்கியது... கன்னம் ஜிவுஜிவுத்தது... கையில் உதறல் எடுக்க, பேனா பூரானாய் நெளிந்தது... பெயரெழுத முனைந்தேன்... ர... ர... ர.... அதற்கு மேல் எழுத்து வரவில்லை... விழி பிதுங்கியது... மூச்சு ஸ்தம்பித்தது... ஐயோ கடவுளே...

”டேய், சீக்கரம் எழுதுடா...”

”சார்... சார்... பேர் மறந்து போச்சு சார்....”

”என்னது??” மீண்டும் அவர் உறும எனக்கு அழுகையே வந்து விட்டது...

அதற்குள் பின்னாலிருந்த பையன் இன்னமும் எழுதிக் கொண்டிருக்க அவனை நோக்கி பாய்ந்துவிட்டார். நின்ற மூச்சு வந்தது. ஆனால் போன பெயர்தான் நினைவிற்கு வரவில்லை.

பக்கத்தில் நிதானமாக கிளம்பிக் கொண்டிருந்த நண்பனை அழைத்து கேட்டேன்... ”டேய்.. என் பேர் என்னடா?”

அவன் என்னை வினோதமாக பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் சென்று விட்டான்.

'ஐயோ.. என்பேர் என்ன?'.. மண்டை கிறுகிறுத்தது... ஏதாவது ஒரு பாட புத்தகம் எடுத்துப் போயிருந்தால் லேபிள் பார்த்துக் கண்டுபிடித்திருக்கலாம்.

அப்போது எனக்காக வாயிலில் காத்துக் கொண்டிருந்த மற்றொரு நண்பன் சொன்னான்...

"டேய் ரகு, என் அப்பா வந்துட்டார்... நான் கிளப்பறேன்..."

'ஆங்.. ரகு...' எழுதி விட்டேன்.

'ஐயோ, இது பாதி பேர் தானே... மீதி பேர் என்ன?'

அதற்குள் மிலிட்டரி திரும்பி வர இன்னொரு அறைக்கு பயந்து பேப்பரை மடித்துக் கொடுத்து விட்டு திரும்பி பார்க்காமல் வெளியே ஓட்டமாய் ஓடி வந்து விட்டேன்.

தெருவில் பாதி பெயர் கொண்ட பையனாய் நடந்து கொண்டிருந்தேன். கன்னம் இன்னமும் வலித்துக் கொண்டிருந்தது. அதைவிட பெயரைத் தேடி மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. ஐயோ.. நான் யாரு, எனக்கு வைத்த பெயர் யாது? என்றெல்லாம் எழுதலாம் தான். ஆனால், அந்த வயதில் கவிதையாவது, மோனையாவது... என் பெயரில் யாராவது கடை வைத்திருக்கிறார்களா என்று ஒவ்வொரு கடையின் பெயர் பலகையை படித்துக் கொண்டே நடந்தேன்.

அப்போது என் பக்கத்து வீட்டுக்காரர் எதிரே வந்தார். அவருக்கு நான் போட்டிக்குச் சென்றது தெரியும். அவரிடம் என் மீதிப் பெயரை கேட்கலாமா என யோசித்தேன். எப்படி கேட்பது என தயங்கினேன். ஆனால் அவரோ நிலைமை தெரியாமல் திருவிளையாடல் படத்தில் சிவபெருமான் தருமியிடம் கேட்பது போல..

”தம்பியே.. பரிசு கிடைத்ததா..?” என்று கேட்டார்.

”அறை ஒண்ணுதான் கெடச்சுது...” என கடுப்பில் முணுமுணுத்துவிட்டு நகர்ந்தேன்.

சிறிது தூரத்தில் கோதண்ட ராமர் பஜனை கோயிலை கடந்தேன். 'ராமா... இது என்ன சோத... ஹாங்... ராமன்...'

“யுரேகாஆஆஆ... கண்டு பிடிச்சிட்டேன்... கண்டு பிடிச்சிட்டேன்... நான் ராமன்.. ரகுராமன்...” என கத்தியபடியே ஓடி என் வீட்டுக் கண்ணாடி முன் மூச்சிறைக்க நின்றேன்.

‘ரகுராமா... கொஞ்ச நேரம் காணாம போய்ட்டியேப்பா’ என சந்தோசத்தில் கதறினேன். உற்றுப் பார்த்தால், மிலிட்டரியின் மூன்று விரல்கள், செவ்வரிகளாய் என் கன்னத்தில் பதிந்திருந்தன.

ஹூம், அந்த ராமன் பரிவுடன் தடவியதில், அணிலுக்கு மூன்று கோடு விழுந்ததாம். என் கன்னத்தில் விழுந்த மூன்று கோடுகளை ரகுராமனாகிய நான் பரிவுடன் வெகுநேரம் தடவிக்கொண்டிருந்தேன்.