இன்று காலை நான் வேலை செய்யும் ஐ.டி பார்க்கினுள் நுழையும் போது, எதிரில் வந்தவர் பலமாக இடித்து விட்டார். தினமும் ஒரு நூறு பஸ்கி எடுப்பார் போல. அவரின் ”திண்”ணென்ற தோள் இடித்ததில் எனக்கு ”விண்”ணென்று வலித்தது. ஆனால் அவரோ, எதையும் சட்டை செய்யாமல், தன் பாட்டுக்கு ஏதோவொரு கனவுலகில் சஞ்சரித்தபடி சென்று விட்டார்.
கடந்த பத்து நாட்களில், இந்த ஐ.டி பார்க்கினுள்ளேயே நான் படும் மூன்றாவது இடி இது. நான்கு நாட்களுக்கு முன், லிஃப்டில் தரை தளத்திற்கு வந்து கொண்டிருந்தேன். அருகில் யாருமில்லாததால், ஹாயாக நின்று கொண்டு,
அடடா மழடா... அட மழடா...
என்று சன்னமான குரலில் முணுமுணுக்க, தரை தளத்தில் லிஃப்ட் திறந்தது. ஒரு பத்து பேர், தரையையே பார்த்தபடி ஒருவரை ஒருவர் முண்டிக் கொண்டு, என்னையும் முட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தனர். கர்ச்சீப் போட்டு சீட்டா பிடிக்கப் போகிறார்கள்? அட! ஒருவர் கூட நான் வெளியே போக வழியே விடவில்லை!
ஆபீஸாக இருந்தாலும் சரி, ஹாஸ்பிட்டலாக இருந்தாலும் சரி, சொல்லி வைத்தது மாதிரி, வெளியே போக வழி விடாமல், டவுன் பஸ்ஸில் ஏறுவது போலத்தான், பெரும்பாலானவர்கள் லிஃப்டினுள் நுழைகிறார்கள். ஒரு பக்கம் வழி விட்டபடியாவது நுழையலாம்! இந்த அடிப்படை யோசனை கூட இல்லாமல் ஏதோ கோட்டையைப் பிடிப்பது போல வாயிலை அடைத்தபடி நுழைகிறார்கள்.
ஒரு வழியாக வெளியே வந்து பெருமூச்சு விட்டேன். கதவு மூடிக் கொள்வதற்குள் நுழைந்து விட, மேலும் இரண்டு பேர் வேகமாக ஓடி வந்து, Y ஷேப்பில் பிரிந்து, என் இரு தோள்களையும் ஆளுக்கு ஒன்றாக இடித்துத் தள்ளி, லிஃப்டினுள் பாய்ந்து விட்டனர். அவர்களை பிடித்து சண்டை போடுவதற்குள், லிஃப்ட் மூடிக் கொண்டது. லிஃப்ட் மீண்டும் வர அரை மணியா ஆகப் போகிறது? ஏன் இந்த அவசரம்!? என்ன மனிதர்கள் இவர்கள் என நொந்தபடி நடக்க, ஈனமான குரலில் உதடு முணுமுணுத்தது...
அடடா இடிடா... இடி மழடா...
இதெல்லாம் பரவாயில்லை. முதல் இடிதான்... இல்லை மிதிதான் ரொம்ப மோசம். என் ஆபீஸுக்குள்ளேயே நடந்தது. ஆபீஸ் வளாகம் என்ற இங்கிதம் கூட இல்லாமல், இரண்டு பேர் சத்தம் போட்டு அட்டகாசமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர், மானாட மயிலாட எல்லாம் தோற்கும்படி கை காலை உதைத்தபடி தன்னிலை மறந்து பேசிக் கொண்டிருந்தார்.
நான் சற்று எச்சரிக்கையாகத்தான் அவர்களை கடந்தேன். இருந்தும் அந்த மானானவர் பின்னாலே ஆடி நகர்ந்ததில் ஓங்கி என் காலை மிதித்து விட்டார். என் ஷூவையும் மீறி, சுண்டு விரல் எறும்பாய் நசுங்கிவிட்டது. வலி பொறுக்காமல் ஷூவைக் கழற்றி, சாக்ஸைக் கழற்றி விரலை தேய்த்துவிட்டேன்.
ஒரு நிமிடம் கழித்துதான், அந்த மானுக்கு தான் உதைத்தது தரையல்ல என உறைத்திருக்கிறது. திரும்பி பார்த்து விட்டார். ஸாரி கேட்கப் போகிறார் போல! வலியையும் மீறி பரவாயில்லை என்று சொல்ல என்னை திடப்படுத்திக் கொண்டேன்.
ஆனால் அவரோ, என்னை ஒரு அப்பிராணியாய்ப் பார்த்துவிட்டு, தன் மானாட்டத்தை செவ்வனே தொடர்ந்தார். தலையிலடித்துக் கொண்டேன்.
டை கட்டினாலும் சரி, நிஜாரின் மேல் கைலி கட்டினாலும் சரி. ஐ.டி பார்க்கானாலும் சரி, பேட்டையானலும் சரி. பெரும்பாலானவர்களுக்கு மற்றவரைப் பற்றி அக்கறையில்லை. தங்களால் மற்றவருக்கு ஏற்படும் இடைஞ்சல்கள் பற்றியோ, துன்பங்கள் பற்றியோ அணுவளவும் கவலையில்லை.
இந்த கசப்பான உண்மையை நினைத்த போது, இருபது வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் படித்த ஜோக் ஞாபகத்திற்கு வந்தது.
முதலாமவர்: ஸாரி சார், கவனிக்காம இடிச்சுட்டேன்.
இரண்டாமவர்: நீங்க ஊருக்கு புதுசா?
முதலாமவர்: அட, எப்படி கண்டுபிடிச்சீங்க?
இரண்டாமவர்: ஹிஹி... நாங்கெல்லாம் இடிச்சுட்டா, ஸாரியெல்லாம் சொல்லிக்கிறதில்லை...
ஓ அப்பவே சென்னை இப்படித்தானா?
Tuesday, June 8, 2010
Tuesday, June 1, 2010
முனியின் செமினார்
போர் அடிக்காமல் இருக்க, ஜோக்குகள், சிறு கதைகள், கிளைக் கதைகள் எல்லாம் சொல்லி, அதிலிருந்து டெக்னிகல் சமாச்சாரத்திற்குத் தாவி செமினார் எடுத்து வந்தேன்
எப்படிப்பட்ட கல்லூரியாக இருந்தாலும், வம்பு செய்வதற்கென்றே சில மாணவர்கள் இருப்பதுதானே விதி. இவர்கள் செய்த அலம்பலில் செமினார் அடிக்கடி தடைபட்டது.
இவர்களை வழிக்கு கொண்டுவர ஒரு டெக்னிக்கை கையாண்டேன். ராஜேஷ்குமார் கதைகளில், விவேக் கேள்வி கேட்கும்போது மாட்டிக் கொண்ட குற்றவாளிக்கு அந்த ஏசியிலும் வியர்க்குமே! அது மாதிரி சுலபமான, ஆனால் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்டு அவர்களை வியர்க்க வைத்தேன். அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று, அன்னியோன்னியமாக அவர்களின் தோளில் கைபோட்டு, நடு சந்திக்கு இழுத்துவிட்டு, கேள்வியைக் கேட்டு, பதில் சொல்ல அவர்கள் கையில் மைக்கையும் திணித்து விடுவேன்.
தங்கள் அபிமான ஃபிகர்கள் மத்தியில், மானம் பறிபோவதால், அந்த மாணவர்கள் கப்சிப்பென அடங்கினர். மேடையிலேயே நிற்காமல், ஹால் முழுக்க ரவுண்ட் அடித்தபடியே செமினார் எடுத்ததால், கேள்விக்கு பயந்து, சலசலப்புகள் தானே அடங்கின.
ஒரு முறை ஒரு பெரிய கல்லூரியில் செமினார் எடுக்க வேண்டியிருந்தது. ஒட்டுமொத்த ஐ.டி டிபார்டிமெண்டும் பங்கு பெற்றதால், எண்ணிக்கை 400-ஐ தாண்டியிருந்தது. ஒரு ஜோக்குடன் துவங்கினேன்.
“இப்படித்தான், ஒரு மத்யான நேரம். எல்லாரும் வயிறுமுட்ட சாப்ட்ட பிறகு செமினாருக்கு வந்தாங்க. ஆரம்பிக்கிறதுக்குள்ளயே முதல் ரோல டொபுக்-னு ஒரு தல சாஞ்சு விழுந்துச்சு. பயந்து வேற பக்கம் போனா, அங்க கொர்ர்ர்ர்...னு சத்தம். உடனே பக்கத்திலிருந்த பையனுக்கு செம கோவம் வந்துடுச்சு. அவன் சொன்னான்.. டேய்... எவ்ளோ பெரிய செமினார் நடக்குது. நீ இவ்ளோ சத்தம் போட்டு குறட்ட உட்ற... நாங்கெல்லாம் தூங்க வேணா...?
அரங்கம் கலகலக்க, செமினார் துவங்கியது.
ஒரு கட்டத்தில் செமினார் மந்த நிலைக்கு வர, கேள்வி பாணிக்குத் தாவினேன். இரண்டாவது வரிசையில் இருந்த ஒரு மாணவரை கேள்வி கேட்க, அவர் மலங்க மலங்க முழித்தபடி தப்பாக பதிலளிக்க, ஒட்டு மொத்த அரங்கமும் சுவாரஸ்யமானது. தூக்கம் கலைந்து அனைவரும் சடுதியில் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். இதைக் கவனித்துவிட்ட நான், அந்த மாணவரையே குறிவைத்து அடிக்கடி கேள்விகளைக் கேட்க, ஒவ்வொருமுறையும் அவர் சொதப்ப செமினார் டாப் கியரில் சென்றது.
கடைசியாக ஒரு படு சுலபமான கேள்வியைக் கேட்க, அதற்கு அவர் சரியான விடையளித்துவிட, “அப்பாடா, ஃபைனலி ஐ காட் எ ரைட் ஆன்ஸர் ஃப்ரம் யு” என்று நான் அவரை பாராட்ட அரங்கமே அதிர்ந்தது.
செமினார் இனிதே முடிந்தது. முதல்வர் அறையில் (அட, பிரின்சிபால் ரூமுங்க) டீ பார்ட்டி. ஹாலில் இருந்த கேமிரா மூலம், தன் இடத்திலேயே செமினாரைப் பார்த்திருந்த முதல்வர் என்னை பெரிதும் பாராட்டினார் (பாராட்டு விழாவெல்லாம் இல்லீங்க). “படு ஜோவியலாகவும், டெக்னிக்கலாகவும் நடத்தினீர்கள். அதைவிட எங்கள் ஸ்டூடண்ட்சை கட்டுக் கோப்பாக வைத்திருந்தீர்கள். நீங்க அடிக்கடி வந்து செமினார் எடுக்கணும்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது, ஹெச்.ஓ.டி என் காதருகே கிசுகிசுத்தார். “சார், எல்லாம் பிரமாதம். ஆனா ஒரு சின்ன வருத்தம்”.
“ஐயோ, என்னாச்சு சார்?”
“நீங்க கேள்வி கேட்டு தெணறடிச்சது ஸ்டூடண்ட் இல்ல சார், எங்க டிபார்ட்மெண்டில் ஒரு புரொபசர். அங்க பாருங்க முனி அடிச்சதுபோல நிக்கறாரு” என்றார்.
அடப் பாவமே!
Monday, May 24, 2010
தீக்குச்சியுடன் ஓர் இரவு...
என் பேச்சுலர் பருவத்தில் அவ்வவப்போது நானே சமைத்துக் கொள்வேன். ஒரு முறை, வீடு மாற வேண்டியிருந்தது. உறவினர் ஒருவர் அவர் வீட்டுக்கு எதிர் வீடு காலியாக இருப்பதைச் சொல்ல, எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு அந்த வீட்டுக்கு வந்து விட்டேன். ஆபிஸிலிருந்து இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்பிக் கொண்டிருந்ததால், எந்த மூட்டையையும் பிரிக்காமல் இரண்டு மாதத்திற்கு அப்படியே கிடப்பில் போட்டிருந்தேன்.
சமையல் எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். முதலில் இரவு (முதலிரவு என்று படிக்காதீர்கள்!) குடிப்பதற்கும், மறு நாள் காலை காப்பிக்கும் பால் வாங்கிக் காய்ச்சலாம் என முடிவெடுத்து, கியாஸ் ஸ்டவ்வையும் சிலிண்டரையும் செட் பண்ணி வைத்தேன். ஆனால் கியாஸ் பற்ற வைக்கும் லைட்டரைக் காணவில்லை. இரண்டு நாட்கள் ஒவ்வொரு மூட்டையாகத் தேடினேன். ம்ஹும், கிடைக்கவில்லை. சே! கியாஸ் ஸ்டவ்வோடு லைட்டரையும் சேர்த்துக் கட்டி வைத்திருக்கலாம்.
எல்லா மூட்டையையும் பிரித்து விட்டதால், ஒவ்வொரு பொருளுக்கும் புதுவீட்டில் இடமறிந்து அடுக்கி வைத்தேன். இந்த லைட்டர் புண்ணியத்தில் வீட்டை செட் பண்ணி விட்டேன். ஆனால் லைட்டர்தான் கிடைத்தபாடில்லை. சரி, நாளைக்கு தீப்பெட்டி வாங்கிக் கொள்ளலாம் என நினைத்தேன்.
மறுநாள் இரவு, வழக்கமான மெஸ்ஸில் உணவை முடித்துக் கொண்டு ஒரு பாக்கெட் ஆவின் பால் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன். பதினோரு மணிவரை, நண்பர்களிடம் செல்போனில் பேசிவிட்டு, பால் காய்ச்ச முனைந்தபோதுதான் தீப்பெட்டி வாங்க மறந்து போனதை உணர்ந்தேன். சே! இந்த கியாஸை பற்ற வைப்பதற்குள் மறதி என்னமாய்ப் படுத்துகிறது என சலித்துக் கொண்டேன். சரி, எதிர் வீட்டு உறவினரிடம் வாங்கலாம் என நினைத்து வெளியே வந்தேன்.
பதினோரு மணி ஆகிவிட்டதால், வீட்டுக்காரர் கேட்டை பூட்டிவிட்டிருந்தார். எதிர் வீட்டு கேட்டும் பூட்டப்பட்டிருந்தது. என்ன செய்வது, பால் கெட்டுவிடுமே! கேட் ஏறிக் குதித்தேன். என்னை திருடன் என்று யாரவது பிடிக்கிறார்களா என நிதானித்தேன். வீதி வெறிசோடி இருந்தது. அப்பாடா! எதிர் வீட்டு கேட்டையும் தாண்டிக் குதித்து, காலிங் பெல் அழுத்தி தீப்பெட்டியை வாங்கி விட்டேன்.
சிறு வயதில், ஜாக்கிச்சான் படத்தில், அவர் அனாயசமாக கேட் தாண்டுவதை பிரமிப்புடன் பார்த்தது ஞாபகதிற்கு வர, அது மாதிரி செய்து பார்க்கும் ஆசையும் வந்து தொலைத்தது.
இரண்டடி பின்னோக்கி, ஒரு ஜம்ப் செய்து, இடது காலை கேட்டில் ஊன்றி, அலேக்காக தாவி தெருவில் குதித்தேன். ஆஹா! நாம் ஜாக்கிச்சானின் சீடனாகி விட்டோம் என்று சிலாகித்தபோதுதான் அதன் விபரீதம் புரிந்தது. நான் முன்பு கேட் தாண்டியதை மோப்பம் பிடித்துவிட்ட தெரு நாய்கள், ஒன்று கூடி எனக்காக காத்துக் கொண்டிருந்தன.
ஒரு கணம் அதிர்ந்தேன். அவை என்னை நோக்கி முன்னேற, சட்டென்று சுதாரித்து படக்கென்று ஒரு தீக்குச்சியை பற்ற வைத்துக் காண்பித்தேன். என்னவோ ஏதோ என்று பயந்த நாய்ப் படை சற்று பின் வாங்கியது.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று சும்மாவா சொன்னார்கள். எப்படி நமது சமயோசித்தம் என்று எனை நானே மெச்சிக் கொள்வதற்க்குள் தீக்குச்சி அணைந்து போனது. நாய்ப் படை மீண்டும் முன்னேற, அவசர அவசரமாய் இன்னொரு குச்சியைப் பற்ற வைத்தேன்.
நாமெல்லாம் தீபாவளியன்று, ஒரு மத்தாப்பிலிருந்து வரிசையாக பல மத்தாப்புகளை பற்ற வைத்த டெக்னிக் ஞாபகத்திற்கு வர, அது போல தீக்குச்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக பற்ற வைத்து, என்னைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் ஏற்படுத்திக் கொண்டு நாய்களை பயமுறுத்தி என் வீட்டு கேட் ஏறி உள்ளே குதித்து விட்டேன். ஏமாந்து நின்ற நாய்களைப் பார்த்து “இப்ப இன்னா பண்ணுவ! இப்ப இன்னா பண்ணுவ!“ என்று கத்தி விட்டு, என்னை யாரும் பார்த்து பைத்தியமென்று நினைக்கவில்லை என உறுதி படுத்திக்கொண்டு வீட்டினுள் நுழைந்தேன்.
தீப்பெட்டி கணிசமாக காலியாகியிருந்தது. நாளை அதை திருப்பிக் கொடுக்கும் போது, சே! ஒரு கியாஸ் பத்த வைக்க இத்தனை குச்சி செலவழித்திருக்கிறானே! இவன் எதற்கும் உருப்படமாட்டான் என்று உறவினர் நினைப்பாரே எனத் தோன்றியது. நாய் கடிக்கும், நாய் கடி ஊசிக்கும் இது பரவாயில்லை என தேற்றிக் கொண்டேன்.
மீண்டும் ஒரு குச்சியைப் பற்ற வைத்து, இடது கையால் ஸ்டவ் நாப்-பை திறந்தேன். திறந்ததுதான் தாமதம்; டப்-பென்ற ஒலியுடன் ஸ்டவ் தானாகவே ஜிகுஜிகுவென எரியத் தொடங்கியது.
அட தேவுடா!
என் ஸ்டவ் ஆட்டோமேட்டிக் என்பதும், நான் லைட்டரே வாங்கவில்லை (தேவையில்லாததால்) என்பதும் அப்போதுதான் என் மண்டையில் உறைத்தது.
கொள்-ளென்று நாயின் சப்தம் வேளியே கேட்டது.
Subscribe to:
Posts (Atom)
